மக்களை மதம், இனம், ஜாதி, நிறம் என்னும் பெயர்களால் சிலர் பிரித்தாளும் நிலை பரவலாகக் காணப்படுகிறது. மக்களும் வேறுபாடுகளைப் புறந்தள்ளி இணக்கமாக வாழ முன்வரும் நிலை பெரும்பாலும் இல்லை. அப்படிப்பட்ட நிலையில், தங்களிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக வாழும் ஊர் தமிழ்நாட்டில் உள்ள கொடிக்குளம்.
தமிழ்நாடு அரசு இந்த ஊருக்கு, இந்த ஆண்டு ரூ.10 இலட்சம் பரிசாக அளித்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில், உசிலம்பட்டி தாலூகா, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இவ்வூர் உள்ளது.
சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளைக் கொண்டுள்ள இந்தக் கொடிக்குளம் ஊராட்சியில் சுமார் 15க்கும் அதிகமான சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் முன்னோர்கள் காலம் தொட்டு அவர்களின் வழிவழியே பல ஆண்டுகளாக அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் இணக்கமாய் வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் காவல்துறை இணைந்து ஒவ்வொரு பகுதியிலும் தீண்டாமையைக் கடைப்பிடிக்காத, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடிக்கும் ஊர்களைத் தேர்வு செய்ததில் அனைவராலும் கொடிக்குளம் என்னும் ஊர் பெருமைக்குரியதாகத் தேர்வு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த ஊருக்கு ரூ.10 இலட்சமும், ஊராட்சியில் உள்ள 100 பெண்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வூதம் மகளிர் சுயஉதவிக் கடனையும் பரிசாக வழங்கியுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர். “ஜாதி, மத வேறுபாடு இல்லாத மாவட்டமாக மதுரை மாவட்டத்தை உருவாக்க இந்த ஊர் ஓர் எடுத்துக்காட்டாக இருப்பதை எண்ணிப் பெருமை அடைகிறோம்’’ என்றார்.
ஊராட்சி மன்றத் தலைவர் வனிதாராமன் கூறுகையில், “தொடர்ந்து எங்கள் ஒற்றுமைக்கு வழங்கப்பட்ட இந்த பரிசுத் தொகை எங்களை பெருமைப்படுத்துகிறது. எங்கள் ஊரைப் போலவே, இதே ஒற்றுமையை மற்ற ஊர்களும் கடைப்பிடித்து மாவட்டத்தை இந்திய அளவில் உயர்த்த வேண்டும்’’ என பெருமையோடு கூறினார். அனைத்துக் கிராமங்களும் இதைப் பின்பற்றி மாவட்டத்தை இந்திய அளவில் உயர்த்த வேண்டும்’’ என பெருமையோடு கூறினார்.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த தாரணி, சித்ரா, ரேகா ஆகியோர் கூறும்போது, “இந்த ஒற்றுமை பல ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கின்ற ஒன்று. ஆதிதிராவிடர்களுக்கான தனித் தொகுதி என்ற போதும், அத்தனை தரப்பினரின் ஒத்துழைப்போடு, வேறுபாடு காணாமல் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவது, மிகவும் பெருமையாக உள்ளது. காலம்தோறும் இந்தச் சமுதாய ஒற்றுமையைக் காப்போம்’’ என அகமகிழ உறுதி கூறினார்.ஸீ