கேரளாவின் எல்லைக்குள் முல்லைப் பெரியாறு அணை இருப்பதால் அணையை உடைத்துவிட்டு புதிய அணை கட்ட கேரளாவுக்கு உரிமை உண்டு என்று ஜனவரி 12 அன்று அய்வர் குழுவிடம் கேரளா மனு தாக்கல் செய்துள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் மீதான விசாரணை பிப்ரவரி 1 அன்று தொடங்க உள்ளதாக டில்லி உயர் நீதிமன்றம் ஜனவரி 13 அன்று அறிவித்தது. சுரேஷ் கல்மாடிக்கு ஜனவரி 19 அன்று ஜாமீன் வழங்கப்பட்டது.
சென்னை, சேப்பாக்கம் பகுதியில் அரசு அலுவலகங்கள் செயல்படும் எழிலகம் வளாகத்தில் ஜனவரி 15 அன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்த மனுவினைத் திரும்பப் பெறுவதாக ஜனவரி 16 அன்று அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் ஜனவரி 23 அன்று தீர்ப்புக் கூறியுள்ளது.
லைபீரியா நாட்டின் முதல் பெண் அதிபராக எலன் ஜான்சன் சிர்லீஃப் ஜனவரி 16 அன்று பொறுப் பேற்றுள்ளார்.
சுற்றுச்சூழல் பாதிப்புத் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தூத் ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு நடத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் ஜனவரி 17 அன்று ஆணையிட்டது.
அமெரிக்க காங்கிரசில் தாக்கலாக உள்ள இணையதள ஊடக உரிமையைக் கட்டுப்படுத்தும் 2 சட்ட முன்வரைவுகளை எதிர்த்து இணைய கலைக்களஞ்சியமான விக்கிபீடியா ஜனவரி 18 அன்று வேலைநிறுத்தம் செய்தது.
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி 19 அன்று ஆஜரானார்.
குஜராத்தில் லோக் அயுக்தா தலைவரை ஆளுநர் நியமித்தது செல்லும் என குஜராத் உயர் நீதிமன்றம் ஜனவரி 18 அன்று தீர்ப்பளித்ததையடுத்து, தீர்ப்பை ரத்து செய்ய குஜராத் அரசு சார்பில் ஜனவரி 19 அன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னையில் கலைஞர் அரசால் கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை மாற்றம் செய்வதற்கு ஜனவரி 20 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
ரஷ்யாவின் நெர்பா என்னும் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் 10 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் ஜனவரி 23 அன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப் பட்டது.