கலைஞர் மு.கருணாநிதி
அழகான பெண், ஒளிமுகம் படைத்த உருக்குலையா மங்கை. வெள்ளை உடையால் அவள் அன்ன நடைக்கு அழகு சேர்க்கிறார். சிவந்த கழுத்திலே ஒரு கருப்பு மணி மாலை. அந்தக் கோதி முடித்த கூந்தலையுடைய கோதை _ தலையிலே ஒரு கூடையுடன் தெருவிலே போகிறாள். அப்பழுக்கற்ற யவ்வனத்தின் தனித்தன்மை வாய்ந்த அழகு ஊர்வலம்! இருள் படிந்த தெருவிலே அவள் நடந்து செல்வது _ வையத்து மண்ணுக்கு வர விழைந்த வானத்துத் தாரகைதான் வந்துற்றதோ என எண்ணத் தோன்றியது!
அந்த ஜோதி மழை பொழியும் சொர்ணச் சிலையின் தலையிலே கூடை, கூடையிலோ துர்வாடை! ஆமாம் அழகியின் தலையில் ஓர் அழுகிய உருவம். கூடையின் அடிப்புறத்தைத் தாங்கியிருக்கும் அவள் இளங்கரங்கள் சுமை தாங்காமல் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் அந்தச் சுந்தரவல்லி சுமந்து போய்க் கொண்டுதானிருக்கிறாள். சோகத்திலும் ஒரு சோபிதம் இருக்கிறது என்பதை அவளது எழில் வதனம் கவிஞர்கட்குக் காட்சியாக்கிக் கொண்டிருக்கிறது. கூடையிலே அமர்ந்துள்ள அழுகிய உருவமோ புன்னகை புரிந்த வண்ணமிருக்கிறது.
அந்தப் புன்னகை எதையோ ஓர் இன்பத்தை எதிர்பார்த்து மலரும் புன்னகை. புன்னகையில் விசாரத்தைக் காண வேண்டுமா? ஆசைப் படுவோர் அந்த உருவத்தின் இனிப்பைப் பார்த்துக் கொள்ளலாம். கூடையிலே இருந்த அந்த உருவம் ஆண், தனக்கென உரிய உடலில் கால் பாகத்துக்கு மேல் இழந்து விட்ட மனிதன், மகரிஷி! மவுத்கல்யர் என்னும் பெயருடைய மகான்.
“பெரிய மனுஷன், பெரிய ஆள், பெரிய செல்வந்தன், “பெரிய’ பண்ணையார் என்பது போலப் ‘பெரிய’ வியாதி என்று ஒன்று உண்டே! அந்தப் பெருவியாதியால் பீடிக்கப்பட்டவர் அந்தப் பெரிய மகான். அவர்தான் தன்னுடைய அழகான மனைவியின் தலையில் ஏறிக்கொண்டு தெருவில் போகிறார்.
“போடி, வேகமாக!’’
“போய்க்கொண்டுதானேயிருக்கிறேன், பிராணபதி!’’
“நளாயினி நட வேகமாக! அதற்காக என்னைக் கீழே போட்டுவிடாதே! நீ விழுந்தாலும் பரவாயில்லை!’’
“என் தெய்வமே! என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்கள்? என் கூடுவிட்டு ஆவி போனாலும் கூடையைக் கீழே போட மாட்டேன், கூடையிலென்ன வியாபாரப் பொருளா இருக்கிறது? வீட்டுச் சாமானா தூக்கிச் செல்கிறேன்? விலைமதிக்கவொண்ணா என் ரத்தினமல்லவா தாங்கள்! தங்களையா கீழே போட்டு விடுவேன்? அபச்சாரம்! அபச்சாரம்!’’
குஷ்டரோகக் கணவனைக் கூடையிலே சுமந்து _ கோமளத் தாமரையெனும் முகத்திலே சோகத்தைச் சுமந்து _ அந்த நடக்கும் பொன்வண்டு நளாயினி போய்க் கொண்டிருக்கிறாள். எங்கே போகிறாள்?’ தீர்த்தமாடவும், க்ஷேத்ராடனம் செய்யவும் கணவன் விரும்புகிறான், அந்தப் பக்திப் பசியைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காகவா அந்த ஏந்திழையாள் _ இந்த வேலையை மேற்கொண்டிருக்கிறாள்? இல்லை! இல்லை! பின் என்ன? பர்ணசாலையை விட்டுப் பர்ணசாலைக்கு மாறுவதற்காகவா அந்தப் பயணம் நடைபெறுகிறது _ பாவையை வாகனமாகக் கொண்டு? அதுவும் இல்லை! பின் எங்கேதான் போகிறார்கள்? தவம் புரியவுமல்ல! தலம் காணவுமல்ல! பிறகு எங்கே போகிறார் தபோதனர்? தாசி வீட்டுக்குப் போகிறார்! ஏன்? “வேசித் தொழில் கூடாது! காசிநாதனைத் தொழு! என்று போதனை புரிவதற்காகவா? அதற்காகவும் செல்லவில்லை, அந்தக் குஷ்டரோகி. பரத்தையின் வீட்டை பக்திக் கூடமாக்க அல்ல! பகவான் பற்றிய விளக்கமுரைக்க அல்ல! கமண்டல-மேந்தியார் செல்வது கணிகையின் கட்டிலறைக்கு! முனிவரின் மோகம் முக்கண்ணனைக் காண அல்ல! நான்கு கண்களும் சந்திக்க _ அந்த நயன வதனத்தை வந்திக்க!
பொருளுக்குச் சுகம் வழங்குவாளின் அகம் நாடிப் புருஷனைக் கொண்டு செல்லும் நளாயினி _ பூத்திருக்கும் ரோஜா! அந்த ரோஜா, அழுகிப்போன வண்டை கருகிப் போன ஒரு மலரிடம் எடுத்துச் செல்கிறது! அதோ கணிகையர் தெருவும் வந்துவிட்டது! நளாயினியின் உடல் வலியும் தீர்ந்தது. அவள் கணவனின் உள்ள வெறியும் கொஞ்சம் அடங்கியது. தேடிய இடத்துக்கு வந்து விட்டனர். கூடையை இறக்கி வைத்தாள். வலிமிகுந்த உடம்பை ஒரு முறை நெளித்து வளைத்துக் கொண்டாள்.
“வான்வில்லோ! என்பர் _ வர்ணனையாளர் அருகே இருந்தால்! மான் துள்ளுமா இப்படி! என்பர் ஏடெழுதுவோர்!
“ஒரு விநாடி அப்படியே வளைந்து நில், போதும்! உலகை விலையாகக் கேட்கும் ஓவியம் தீட்டுகிறேன்’’ என்பான் _ சித்திரக்காரன் அருகே நின்றால்! அத்தகைய தோகை மயிலாள், தன் துணைவனுக்கு இரவுத் துணை தேடி வந்து எழுந்து-விட்டாள் இழிமகளின் இல்லத்துக்கு.
அலங்காரக் கரங்களால் அந்த வீட்டின் கதவைத் தட்டினாள். தட்டுவதற்கு முன் திறக்கப்பட்டது. வீடு திறப்பதற்கு முன் எட்டிப் பார்த்தது ஒரு முகம். அந்த முகம் கண்டார், மவுத்கல்யர், “சுகம் கண்டேன்! சுகம் கண்டேன்?’’ என்று சுருதிவிட்ட வித்வான் போல் கூவினார். சுருக்கம் விழுந்த முகத்திலே பயங்கரமான ஒளி! ரத்தங் கசியும் கன்னங்களிலே புன்னகை உண்டாக்கிய ஆழமான பள்ளம்! கீறிக் கிடக்கும் உதடுகளிலேயே காமக்கிறுக்கு வெளிப்பட்டது. விரலற்ற கரம் நீட்டி அந்த வேசிப் பெண்ணை ஆசையுடன் வாழ்த்தினார். குஷ்டரோகியின் கும்மாளங்கண்ட இல்லத்துக்காரி “விஷயம் என்ன? என்றாள். “எல்லாம் நம் சொந்த விஷயமே?’’ என்றார் ரிஷீஸ்வரர்.
நளாயினி பேச ஆரம்பித்தாள்.
பெண் பாவாய்! இவர் என் கணவர். நான் பதி சொல் தவறாத பாவை. உன்னகம் நாடி வரவேண்டுமென்றார். அவர் மனங் கோணாமல் நடந்து கொள்ளடி மாதரசி!”
தாசிப்பெண், நளாயினியின் வார்த்தை கேட்டுத் திடுக்கிட்டாள். ‘கணவனைத் தாசி வீட்டுக்கு அழைத்து வரும் மனைவியை இன்றுதான் முதன்முதலாகப் பார்க்கிறேன்!’ என்று தனக்குத்தானே ஆச்சரியப்பட்டுக் கொண்டாள். அந்த அதிசயத்துடனே அந்தக் குஷ்டரோகியின் அவலட்சணமான முகத்தை வெறுப்புடன் ஏறிட்டுப் பார்த்தாள். அவள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே, நளாயினி ஒரு பொன் முடிப்பை அவள் முன்னே நீட்டினாள். சம்மதம் என்று தாசி மகளும் கண்ஜாடை காட்டினாள். கூடையிலிருந்த குஷ்டரோக மகானைத் தாசிப்பெண் அன்போடு அணைத்தெடுத்து அம்சதூளிகா மஞ்சத்துக்குப் போய்விட்டாள்.
பெருமூச்சுடன் அந்த வீட்டைவிட்டுக் கிளம்பினாள் நளாயினி. கையிலேயிருந்த கூடையை வாசலிலே வைத்து விட்டுக் “காலையிலே வருகிறேன்” என்று காவலாளியிடம் கூறிவிட்டுப் போய்விட்டாள்.
புழுதி படிந்த பூச்செண்டு போல் போகும் நளாயினியை ஒரு குரல் தடுத்து நிறுத்துகிறது. “நளாயினி! அன்புள்ள தோழி! கொஞ்சம் நில்லேன்!’’ என்று கூறியபடி ஒரு பெண்மணி ஓடி வருகிறாள். பக்கத்து ஆசிரமத்தில் உள்ளவள் அந்த அழகி. “உலகா! நீயா? இந்நேரத்தில் எங்கேயடி வந்தாய்?” என்று வழியும் கண்ணீரைத் துடைத்தபடி கேட்கிறாள் நளாயினி. “சோலைப் பக்கம் போனேன் _ நீ வருவதைப் பார்த்ததும் வந்தேன்; ஆமாம், நளாயினி! உன்னை ஒன்று கேட்கிறேன். கோபித்துக் கொள்ள மாட்டாயே!’’ பீடிகையுடன் ஆரம்பிக்கிறாள் உலகா. “என்னடி உலகா! தாராளமாகக் கேள்’’ என்று சிரிப்பை வரவழைக்க முயல்கிறாள் நளாயினி.
“எவ்வளவுதான் புருஷனிடத்தில் அன்பும் பக்தியும் இருந்தாலும், அவனைத் தாசி வீட்டுக்குக் கொண்டுபோய் நீயே விட்டுவருவது என்பது … எனக்கு அவ்வளவாக …”
“உலகா! போதும் நிறுத்து! பெண்களுக்குக் கணவனே தெய்வம். கணவரின் ஆசைகளை நிறைவேற்றுவதே கற்புக்கரசியின் லட்சணம். என் கண்ணாளர் பிணி கொண்டவரா யிருக்கலாம். ஆனால், அவர் எனக்குத் தேன்கனி, தெரியுமா உனக்கு! புருஷனிடம் எப்படி நடக்க வேண்டும் என்று நீ எனக்குப் புத்தி சொல்லாதே; என்னைப் பார்த்து நீயும் திருந்திக்கொள்.”
“நளாயினி! என்னை மன்னித்துவிடு! உன்னுடைய அன்பையும் _ பதி பக்தியையும் தவறாக நினைத்து விட்டேன். க்ஷமித்துவிடு நளாயினி! உன்போன்ற வைராக்யமுள்ள புண்யவதியையும் _ பத்தினியையும் ஈரேழு பதினாலு உலகிலும் காண முடியாது. நீ பத்தினி! நீ பத்தினி!”
“உலகா, நீ என்னை உணர்ந்து கொண்டால் போதும்; நான் உன்னை மன்னிக்க வேண்டாம். நீ என்போல் கற்புக்கரசியாக இரு! என் போன்ற பத்தினிகளைப் பின்பற்று! நான் வருகிறேன்.’’
இதைச் சொல்லிவிட்டு நளாயினி தன் ஆசிரமம் நோக்கிப் போனாள். உலகாவும் தன் தவற்றை உணர்ந்து “நளாயினி பத்தினி’’ என்று தோத்திரம் செய்தவாறு அதை விட்டு நகருகிறாள். அப்போது ஒரு வாலிபன் ஓடி வந்து உலகாவின் கண்களைப் பொத்துகிறான். இருவரும் அங்குள்ள சோலைப் பக்கம் போய் விடுகிறார்கள், சிரிப்பைக் கொட்டியபடியே!
விம்மி விம்மி அழுதபடியே ஆசிரமத்துக்-குள்ளே நுழைந்து தரையில் குப்புற விழுகிறாள் நளாயினி. அவளது நீலத் திருவிழிகளிலே-யிருந்து நீர்வீழ்ச்சிகள் புறப்படுகின்றன. முழு நிலவை மறைக்கும் முகிலென அவள் முகத்தை மறைக்கிறது விரிந்து கிடக்கும் கருங்கூந்தல்.
சோலையின் பக்கமிருந்து ஒரு கீதம் ஆசிரமத்துக்குள்ளே கேட்கிறது. அழுது கொண்டேயிருக்கும் நளாயினி அந்தக் கீதத்தைக் கவனிக்கிறாள். ஆம் உலகாவின் குரல் அது! அதோடு இன்னொரு ஆண்குரலும் கீதமிசைக்கிறது ‘என்னைப் பத்தினியென ஒத்துக்கொண்டு என் கரங்களைக் கண்ணிலே ஒத்திக்கொண்ட உலகா தன் காதலனுடன் _ கள்ளக் காதலுடன் கனி மரச் சோலையில் இன்ப கீதம் பாடுகிறாள். என் வயதுதான் அவளுக்கும், அவளைவிட அழகி நான். நானோ இங்கே நாதியற்றுக் கிடக்கிறேன். “தேனே! மானே!” என்று அவளை வர்ணித்துக் கொண்டிருப்பான் அவள் காதலன்
இப்படி எண்ணாததெல்லாம் எண்ணு-கிறாள் நளாயினி, மீண்டும் அழுகிறாள். ஆசிரமத்துக் கதவு திறக்கப்படுகிறது. அழுகையை நிறுத்தினாள். ஆனால் கண்களைத் துடைக்கவில்லை; கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண் உள்ளே வருகிறாள். ஏறத்தாழ நளாயினியும் அவளும் ஒரே மாதிரி காணப்படுகிறார்கள். இருவரும் சேர்ந்து நின்றால், “யார் நளாயினி?” என்று கண்டு-பிடிப்பதே கஷ்டமாகிவிடும். வந்த பெண், நளாயினி அருகில் உட்காருகிறாள். நளாயினியும் எழுந்து உட்காருகிறாள். “வா இதயா வா!’’ என்று தேம்பியபடி வரவேற்கிறாள் நளாயினி.
”நளா! ஏனம்மா இப்படி எப்போதும் அழுது கொண்டேயிருக்கிறாய்?”
“காரணமா கேட்கிறாய்; இதயா! தணலிற் புழுவாய்த் தவிக்கிறேன் நான் என்பதை நீ அறிய மாட்டாயா? அதோ ஜோடியாகக் கூவும் பறவைகளின் சங்கீதத்தைக் கேட்கிறாயா நீயும்! சோலைப்புறமிருந்து காதலர் மீட்டும் வீணாகானம் எத்தகைய விரகதாபத்தை ஒரு பருவ மங்கைக்கு எழுப்பும் என்பதை நீ அறிய மாட்டாயா! அறிவாய் இதயா! அனைத்தும் அறிவாய்! அறிந்தும் எனக்கு ஆறுதல் கூறுவதற்காக இப்படி மவுனம் சாதிக்கிறாய், இல்லையா!”
“உண்மைதான் நளாயினி! உலகா உன்னைப் பத்தினி என வாழ்த்தினாள்; அதையும் மறைந்து நின்று கேட்டேன். அந்தப் புகழ் வெளிச்சம் மட்டுமே போதுமென்று திருப்தி அடைய வேண்டியதுதான்.”
“இதயா! உண்மையைச் சொல்! நான் பத்தினியா? எப்படி? எப்படி?’’
“ஆமாம்! குஷ்டரோகம் பிடித்த கணவனைத் தாசி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறாயே!’’
“கிண்டல் செய்யாதே _ இதயா! குஷ்டரோகம் பிடித்தவனோடு கூடிக் கிடக்க எனக்கு விருப்பமில்லை. அவனோ என்னை ஆசையோடு அழைக்கிறான். அணைக்கவோ என் கை நடுங்குகிறது. ஆகவே தான் அவனைத் தாசி வீட்டுக்கு அனுப்பினேன். என் அழகுக்கு ஆபத்து வராமல் அவன் ஆவல் தீர்ந்தால் சரியென்று எண்ணினேன். இந்தத் தந்திரம் உனக்குத் தெரியாதா, இதயா!”
“நானறியாதது ஒன்றுண்டா நளாயினி! ஆனாலும், உலகா நம்பியிருக்கிறாள், உன் பதிபக்தியை! குஷ்ட ரோகியைத் தாசி வீட்டுக்குத் தலையிலே தூக்கிக்கொண்டு போனதைப் பெரிய பதிபக்தி என உலகா எண்ணுகிறாள்.’’
“தலையில் தூக்கிக்கொண்டு போனேன் என்கிறாயே… நீயும்! திருத்திக்கொள்! கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக்கொண்டு போனேன். குஷ்டரோகியைக் கையால் தொட்டுத் தலையில் தூக்கிப்போக எனக்-கென்ன பைத்தியமா? அதெல்லாம் ஜாக்கிரதையாகக் கூடையில் வைத்துத்தான் கொண்டு போனேன்.”
“நளா! உன் கணவன் எவ்வளவு சுடுமொழிகளைக் கூறினாலும் _ எதிர்த்து ஒரு சொல் கூறாத கற்பரசி என நேற்றுக் கூட உலகா என்னிடம் உன்னைப் புகழ்ந்தாள்.”
“கணவன் திட்டினான் _ நான் மறுமொழி பேசவில்லை; உண்மைதான். குஷ்டரோகிதானே திட்டுகிறான் என்று அலட்சியப் படுத்தினேன். நானும் அவனுடன் பேசினால் பேச்சு வளரும். அந்த வாதத்தின் காரணமாக அவனோடு நெருங்கி நின்று வார்த்தையாட வேண்டும். அதற்காகத்தானடி, அந்தக் குட்டம் பிடித்தவன் குரைத்துக் கொண்டிருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்!”
“உம் . . . எப்படியோ பத்தினி என்று பட்டம் பெற்றுவிட்டாய்! பார் புகழும் பதிவிரதை _ பதிபக்தி மிகுந்தவள் என்றெல்லாம் உலகா புகழ்ந்துவிட்டாள் உன்னை!”
“உலகாவுக்கு என்னடி தெரியும் என் உள்ளத்தில் இருக்கும் எரிமலை? பத்தினிப் பட்டம் போதுமா பருவக் களை சொட்டும் இந்தப் பரிதாபத்துக்குரியவளுக்கு! சொல்லடி இதயா! சொல்லு! சுகவாழ்வுக்கு வழி சொல்லு!”
“வழி சொல்கிறேன் _ நளாயினி! நான் ஒரு புதிய வரம் தருகிறேன். இந்த ஜென்மத்தைச் சீக்கிரம் கழித்து விட்டு விரைவில் அடுத்த ஜென்மம் எடு! அந்த ஜென்மத்தில் நீ திரவுபதியாகப் பிறக்கப் போகிறாய்! ஒரு கணவன் இருந்தும் உனக்கு உற்சாகமில்லை, உல்லாசமில்லை. உள்ளமோ வேதனைக் களமாயிருக்கிறது உனக்கு! ஆகவே, அடுத்த பிறப்பில் அய்ந்து கணவரோடு ஆனந்த வாழ்வு வாழ அருமையான வரம் தருகிறேன்.’’
“இதயா! இது உண்மையா!’’
“பொய் இல்லை! புது வாழ்வு ஆரம்பமாகிறது உனக்கு! புது வாழ்வு, – புனர் ஜென்மம் – இரண்டும் பொருளில் ஒன்றுதான்! அதைப் புரிந்து கொள்ளடி, என் தோழி.’’
“புரிந்துகொண்டேன்!” என்று பூரிப்புடன் துள்ளியபடி நளாயினி, இதயாவைத் தழுவிக் கொள்கிறாள். சோகக் கண்ணீர், ஆனந்தக் கண்ணீராக மாறிவிட்டது அவளுக்கு! அந்த ஆசிரமத்தில் இன்பகீதம் ஆரம்பமாயிற்று!
குறிப்பு: புராணக் கதைப்படி நளாயினிதான் திரவுபதியாகப் பிறந்திருக்கிறாளாம்.