நாட்டில் எல்லாத் திக்குகளிலும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பணியை நாம் இனி தீவிரமாக முடுக்கிவிட வேண்டும் எனத் தீரிமானித்துள்ளோம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தீவிர மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பெரும்பணியை நாமே முன்னின்று துவக்கி வைத்து, அனைத்து ஒன்றியங்களிலும் இந்த மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பெருவிழா, அறிவியல் அறிவுப் பிரச்சாரத் திருவிழாவாக, பெருவிழாவாக நடத்திடத் திட்டமிட்டுள்ளோம்.
பிறகு பல மாவட்டங்களில் இந்தப் பணி, அரசியல் கலவாத அறிவியல் பரப்புரைப் பயணமாக நடத்தப்படக் கூடும்!
பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள், எக்கட்சி, எம்மதம், எச்சாதியினராக இருப்பினும் அரசியல் சட்டம் 51கி(லீ) அறிவியல் மனப்பாங்கு உருவாக்கல், கேள்வி கேட்டு ஆராயும் திறன் வளர்ப்பு, மனிதநேயம், சீர்திருத்தம் _ இவற்றை அடிப்படைக் கடமைகளாகத் தெரிவித்திருந்தும், நடைமுறையில் இது செயல்படுத்தப்படாததால் ஏமாற்றுகிறவர்களும் ஏமாறும் அப்பாவி ஏழை, எளிய, பாமர மக்களும் மிக அதிகமாகி வருகிறார்கள்.
பக்தி, கடவுள், மதப் போர்வையில் இந்த மோசடிகளை காவி வேடமிட்ட பலரும் தந்திரக்காரர்களும் அதே விஞ்ஞான உத்திகளைக் கொண்டே மக்களை ஏமாற்றுவதற்கு மூலக் கருவியாகவும் பயன்படுத்துவது இன்னும் பல மடங்கு நம்மை வேதனையடையச் செய்கிறது!
எடுத்துக்காட்டாக இதோ 23.5.2022 நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி:
10 ரூபாய் எலுமிச்சம் பழத்தை பறக்கவிட்டு
ரூ.81,000 மோசடி: மூன்று சாமியார்கள் கைது
புதுக்கோட்டையில் 10 ரூபாய் எலுமிச்சம் பழத்தைப் பறக்கவிட்டு புதையல் எடுத்துத் தருவதாக 81,000 ரூபாயைப் பறித்துச் சென்ற மோசடிக் கும்பல் சிக்கியது.
மணி, முருகேசன், ராசு ஆகிய மூன்று போலிச் சாமியார்களைக் கைது செய்த காவலர்கள், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் இருந்து 23 பித்தளைச் சிலைகள், ரூ.81,000 ரொக்கம், இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. தனது குடும்பத்தில் உயிரிழப்பு, தொடர் பிரச்சினைகள் நிலவியதால் கடந்த பிப்ரவரி மாதத்தில் விராலிமலை அருகே வசித்து வரும் சாமியாடி ராசுவிடம் குறி கேட்கச் சென்றுள்ளார்.
அப்போது சாமியாடிக்கொண்டே குறி சொன்ன ராசு, வீட்டில் புதையல் உள்ளதாகவும் அதை எடுத்து வழிபட்டால் சிரமங்கள் அனைத்தும் நீங்கும் என்றும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய முத்துலட்சுமி குடும்பத்தினர், ஆங்காங்கே கடன் வாங்கி ரூ.75,000 கொடுத்து புதையலை எடுக்க ஏற்பாடுகளைச் செய்தனர். பூசைச் செலவுக்கும் ரூ.6,000 கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, ஓர் இரவு நேரத்தில் ராசுவின் நண்பர்களான மணியும் முருகேசனும் புதையல் எடுப்பதற்கு முன்பு பூசைகள் செய்தனர்.
அப்போது, முகம் முழுவதையும் துணியால் மறைத்துக்கொண்டு எலுமிச்சம் பழத்தை அந்தரத்தில் பறக்கவிட்டும், பழத்தை மேலே கீழே எனப் போகவைத்தும் தன்னை சக்தி வாய்ந்த சாமியாராக மணி நம்ப வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, முத்துலட்சுமியின் வீட்டின் பின்புறம் 5 அடி அளவில் பள்ளம் தோண்டிய அவர்கள், தாங்கள் கொண்டுவந்த சிறிய சிலைகள், செம்பு நாணயங்களைக் குழிக்குள் இருந்து எடுத்ததாகக் கூறி முத்துலட்சுமி குடும்பத்தினரிடம் கொடுத்தனர்.
அவர்கள் கூறியபடி, இரண்டு மாதத்திற்கு சாணம், களிமண்ணிற்குள் மூடிவைத்து தங்கச் சிலைகளை வழிபட்டு வந்த முத்துலட்சுமி, ஒருநாள் சோதித்துப் பார்த்த போது, அனைத்தும் பித்தளை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
எலுமிச்சம் பழத்திற்குள் பாதரசத்தைச் செலுத்தி குலுக்கி தரையில் போட்டால் நகரும் என்று அவர்கள் காவலர்களிடம் கூறியதாகவும் தகவல்.
புதுக்கோட்டை மாவட்ட கிராமப் பகுதிகளில் நரபலி உள்பட, கடந்த இரண்டாண்டுகளில் வெளிவந்துள்ள செய்திகள் ஏராளம்! ஏராளம்!!
இதை ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டும் பாராமல், அறிவியல் சிந்தனை தேவைப்படும் சமூகநலப் பிரச்சினையாகப் பார்க்க ‘மந்திரமல்ல; தந்திரமே’ என்று விளக்கிடும் நிகழ்ச்சிகளும் விளக்கவுரைகளும், விழிப்புணர்வுக் கூட்டங்களும் நடத்துவதே உடனடியான மனநல சிகிச்சையும், தீர்வும் ஆகும்.
புதுக்கோட்டை கிராமங்களில் பகுத்தறிவுப் பரப்புரை தேவை! (நன்றி: ‘விடுதலை’)
– கி.வீரமணி,
ஆசிரியர்