நூல்: இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? (தொகுதி 2)
நூல் ஆசிரியர்: ப. திருமாவேலன்
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம்,
6/84, மல்லன் பொன்னப்பன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5
தொலைபேசி: 94861 77208, 044-2848 2818.
பக்கங்கள்: 816
விலை: இரு தொகுதிகளும் சேர்த்து ரூ 1800/-
நூல் மதிப்புரை:
பொ.நாகராஜன்
பெரியாரிய ஆய்வாளர்
* இந்த நூலின் முதல் தொகுதியை _ இது என்னுரை 107 ஆக _ அறிமுகம் செய்திருந்தேன்! முதல் தொகுதி 816 பக்கங்களைக் கொண்டது _ ஏன் இந்த வேண்டாத வேலை, பெரியார், தமிழர் தலைவர் ஆனது, தமிழ்ப் புலவர்களும் தந்தை பெரியாரும், தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற ஆறு முக்கிய பகுதிகளாகவும், ஆணித்தரமான வாதங்களாகவும், ப.திருமாவேலனால் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளது!
* இந்த இரண்டாம் தொகுதியின் பகுதிகள் _ மூவரைப் புரிதல்: 1) ம.பொ.சி. _ இந்துத்துவ தமிழ்த் தேசியம். 2) குணா _ கிறிஸ்வ இறையியல் தமிழ்த் தேசியம். 3) பெ.மணியரசன் _ நிலப்பிரபுத்துவ பழைமைவாத தமிழ்த் தேசியம் _ பெரியார் திராவிடம்: 1) திராவிடம் என்ற சொல். 2) திராவிடம் எனும் கல் _ பெரியாரின் தமிழியம் _ தமிழ் ஈழமும் தந்தை பெரியாரும் _ அடிப்படை ஆவணங்கள், நூல்கள், இதழ்கள், அகராதிகள் _ என தனது 20 ஆண்டுகால ஆராய்ச்சியின் ஆதாரங்களை நூலுக்காக அணி வகுத்துள்ளார்! நூலுக்கு அணி சேர்த்துள்ளார்!!
* தமிழ் தேசிய மூலவராகக் கருதப்படும் ம.பொ.சி _ இந்திய தேசியராய் இருந்து, திராவிட இயக்க எதிர்ப்பாளராக உருவாகி, தமிழ் தேசியராக உருமாறி பின்னர் திராவிட இயக்கத்தோடு ஒட்டி உறவாடி முடிந்து போனவர். குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்தவர். இந்தி மொழிக்கு ஆதரவு தந்தவர். சமஸ்கிருத அடிமை. தமிழன் என்பதை விட இந்து என்பதில் லாபம் என்றவர்.
*பெரியாரின் கொள்கைக்கு விரோதமாகவும், பெரியாரை தமிழர்களுக்கு எதிரியாகவும் சித்திரித்ததில் முன்னோடி! “ம.பொ.சி. பத்து பார்ப்பானுக்குச் சமம்!”.. என பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். இவரைத் தலைவராகக் கொண்டாடும் தமிழ் தேசியர்கள் தான் _ பெரியாரை தமிழர் இல்லை என கட்டமைக்கிறார்கள்!
* அன்று பண்டிதர்களும், புலவர்களும் தமிழில் பாடல்கள் புனைவதிலும், அர்த்தம் சொல்வதிலும் கவனமாக இருந்த போது, ‘ தமிழர்களுக்கு ஆரியம் கலவாதது எது?’ என பெரியார் மட்டும் தானே கேட்டார்?
* “உனது மொழியில் ஆரியம் புகுந்து விட்டது. உனது இலக்கியத்தில் ஆரியம் புகுந்து விட்டது. பண்பாட்டில் ஆரியம் புகுந்து விட்டது. உனது வாழ்க்கையில் ஆரியம் புகுந்து விட்டது. உனது கல்வி, உணவு, ,உடை, பழக்க வழக்கங்களில் ஆரியம் புகுந்து விட்டது ! தமிழர்களுக்கு ஆரியம் கலவாதது எது?”… என எந்தத் தமிழறிஞனும் கேட்கத் துணியாத கேள்வியைக் கேட்ட பெரியார் _ தமிழர் இல்லை என்றால் வேறு எவர் தமிழராம்?
* தமிழ்த் தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யரின் (உ.வே.சா.) சமஸ்கிருதப் பற்றையும், தமிழ் மீது அவர் கொண்டிருந்த ‘மாற்றாந்தாய் மனப் பான்மையையும்’ ஆதாரத்தோடு தோலுரித்திருக்கிறார், திருமாவேலன்!
* உ.வே.சா, தனது நூல்களில் எல்லாம் தமிழ் பாஷை என்று எழுதுவாரேயன்றி, தமிழ் மொழி என எழுதவே மாட்டார். நூல்களை புஸ்தகமென்றும், பூக்களை புஸ்பங்க ளென்றும் எழுதுவார். வணக்கம் என்று சொல்பவருக்கு நமஸ்காரம் என்று பதில் சொன்னவர்தான் தமிழ்த் தாத்தா! எல்லாவற்றிற்கும் மேலாக, சமஸ்கிருதத்தின் துணையின்றி தமிழ் இயங்காது என வலியுறுத்தும் வகையில் இவரது செயல்கள் இருந்தனவாம்! உ.வே.சா. தமிழராம்; ஆனால், பெரியார் தமிழர் இல்லையாம்!
* பிராமணர்கள் தமிழர்களா என்ற கேள்விக்கு, பெரியார் தனது ‘குடிஅரசு’ இதழில் அன்று (22.01.1939) எழுதியுள்ளது இன்றும் பொருந்துவதாக உள்ளது.
* “பிராமணர் மெய்யாகவே தமிழர்களானால் _ நடை, உடை, பாவனைகளில் அவர்கள் தமிழராக வேண்டும். முதலில் பூணூலை அறுத்தெறிய வேண்டும். எல்லாத் துறைகளிலும் தமிழரைப் போல நடக்க வேண்டும். தமிழ் நூல்களையே தனது முதல் நூலாகக் கொள்ள வேண்டும். தமிழே தனது குலமொழி, கோத்திர மொழியென ஒத்துக் கொள்ள வேண்டும்.
சமஸ்கிருதம் தமிழைவிட உயர்ந்தது என்ற தப்பெண்ணத்தை விட வேண்டும். நடை, உடை, பாவனைகளில், பழக்க வழக்கங்களில், மதாச்சாரங்களில் அந்நியர் எனக் காட்டிக் கொள்ளும் பிராமணர் _ விவாதத்திற்காக மட்டுமே தமிழர் எனக் கூறிக் கொள்வது, சுத்த அசட்டுத்தனம்!” .. இப்படி அதிரவிட்டவர் பெரியார்! அதனால்தான் அவரையே தமிழர் இல்லை என்று நிறுவப் பார்க்கிறார்கள்!
* தமிழ் தேசியம் பேசுவோர், பக்தி இலக்கியங்களைச் சார்ந்ததுதான் மெய்யியல் (தத்துவம்) என்று நினைக்கிறார்கள். ஆன்மிகம், கோவில் இடம் பெற்றால்தான், அது ‘மெய்யியல்’ என உருவகப் படுத்துகிறார்கள்.
* பெரியாரின் மெய்யியல் என்பது _ புத்தர், வள்ளுவர், அவ்வை, சித்தர்கள், வள்ளலார், அயோத்திதாசர் ஆகியோரின் நீட்சியாகும். ஜாதி, மத பேதமற்ற, எல்லார்க்கும் எல்லாம் என்ற, பொதுவுடைமை கூட்டுறவுச் சமூகமாக, நாம் தொடக்கக் காலத்தில் இருந்தோம். அதை மீண்டும் உருவாக்க நினைப்பதே பெரியாரியம்! அதுதான் பெரியாரின் மெய்யியல் அல்லது பெரியாரின் தத்துவம்!
* பெரியாரின் மெய்யியலில் தலையாய கொள்கைகளில் ஒன்று _ “கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியாகட்டும், மோட்சமா-கட்டும் எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய சொத்து. உலகத்துக்கு பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் ஆகியவைதான் பொதுச் சொத்து. மனித சமுதாயத்திலே இது கேடாக இருந்தால் _ சமுதாயத்திற்குக் கேடு!”… எனச் சொன்ன தத்துவ ஞானிதான் தந்தை பெரியார்! இவரைத்தான் தமிழர்களுக்கு எதிரியாக சித்திரிக்கின்றார்கள்!
* பெரியாரைப்பற்றி, இரண்டு தொகுதி-களையும் உள்ளடக்கிய, மொத்தம் 1579 பக்கங்களைக் கொண்ட இந்தப் பெரிய நூல் _ ஊடகவியலாளர் திரு.ப.திருமா வேலனின், கடும் உழைப்பினாலும், அயராத முயற்சியாலும், ஆணித்தரமாகப் பெரியாரை நம்பியதாலும், உருவான, ப.திருமாவேலனின் தலைசிறந்த படைப்பு(Masterpiece). அவருக்கு எனது வாழ்த்துகளும் வணக்கங்களும்! அவரது வார்த்தை-களிலேயே இந்த அறிமுகவுரையை நிறைவு செய்கிறேன்!
* “தமிழின எதிரிகள் அனைவரையும் எதிர்த்து நின்ற மாவீரர் யார்? வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, மறைந்து அரை நூற்றாண்டு ஆனபிறகும், சிம்ம சொப்பனமாக இருப்பவர் யார்? இன்றும் எதிரிகளையும், துரோகிகளையும் அடையாளம் காணச் செய்யும் சரியான கண்ணாடி அவருடையது தானே?” “அவர் நம் தலைவர் தானே ? அவரையே தமிழர் இல்லை என்போர், தமிழ்த் துரோகிகள் தானே? இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?”ஸீ