காடுகளை அழிக்கலாமா? – திரு.வி.க

ஜனவரி 16-31

ண்டை நாளில், தாழ்ந்த வகுப்பார் என்று சொல்லப்படுவோர், பெரிதும் விவசாயத்தில் தம் வாழ்க்கையை நடாத்தி வந்தனர். இவர்க்கு வாழ்வை நல்கவல்ல விவசாயத்துக்கெனச் சிறப்பாக என்னென்ன முயற்சிகள் இப்பொழுது செய்யப்படுகின்றன? தொழில் இலாக்காவாலும், விவசாய இலாக்காவாலும், விவசாயக் கல்லூரிகளாலும் விவசாயம் வளம்பெற்று விடுமோ? அவைகளால் ஏழை மக்கள் குறைகள் நீங்கிவிடுமோ? விவசாயத்துக்கு இன்றியமையாதன காடுகளும், கால்நடைகளும், பிறவுமாம்.

காடுகளுக்குற்ற கட்டுப்பாட்டை நான் விரித்துக்கூற வேண்டுவதில்லை. காடுகளுக்குக் கட்டுப்பாடு விதித்து விட்டால், அவை நாடுகளுக்கு – விவசாயி களுக்கு _ எவ்வாறு பயன் படும்? காடுகளுக்குக் கட்டுப்பாடில்லாவிடின், எத்தனையோ ஏழைகள் வருத்தமின்றி வாழ்வார் கள். காடுகளின் கட்டுப் பாட்டால் கால்நடைகளும் வருந்துகின்றன. மேலும் அவை பலர் வயிற்றுக்கும் கால்களுக்கும் பயன்படும் ஊழை இந்நாளில் பெற்றிருக்கின்றன.

இயல்பாகக் காடுகள் வளரவேண்டிய இடங்களில் காப்பியும் டீயும் பயிரிடப்படுகின்றன. தீர்வை ஒரு பக்கம் விவசாயிகளை வருத்துகிறது. உழவுத் தொழிலாளர் வாழும் வீடுகள், அவர் உண்ணும் உணவு, அவர் உடுக்கும் உடை முதலியவற்றை நினைக்குந்தோறும் நினைக்குந் தோறும் கண்ணீர் பெருகுகிறது.

விவசாயத் தொழிலாளர் நிலையை வளம்படுத்த ஏதாயினும் சட்டம் உண்டா? விவசாய வளம் சுருங்கினதால் அத்தொழிலாளர்க்குத் துன்பம் பெருகலா யிற்று. இந்நிலையில் ஏழைகள் நிலையைச் செழுமைப்படுத்த ஜனப் பொறுப்பாட்சி வேண்டுமா வேண்டாமா? ஆதித் திராவிடரே! ஏனையோரே! ஓர்மின் ஓர்மின்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *