பனிக்கட்டிகளுக்கு அடியில் மலைகள்
உலகின் துருவப் பகுதியில் அமைந்துள்ள அண்டார்டிகா குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இதில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரோலண்ட் வார்னர் தலைமையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழுவினர் ஆய்வு நடத்தி புதிய தகவல்களைச் சேகரித்து “பெட்மேப்-2” என்ற வரைபடத்தை வெளியிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அண்டார்டிகாவில் சுமார் 1,000 மீட்டர் ஆழத்திற்குப் பனிக்கட்டி குவிந்து கிடக்கிறது என்றும், அதற்கு அடியில் மலைத்தொடர்ச்சி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். இந்த மலைத்தொடர்ச்சி கடல் மட்டத்திற்கும் கீழ் சுமார் 3 மீட்டர் உயரத்திற்கும், 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் நீளத்திற்கும் அமைந்திருக்கிறது. இந்த வரைபடம் வருங்கால ஆராய்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ரோலண்ட் வார்னர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், `ராடர் மூலம் துளை போட்டுச் சோதனை நடத்தியபோது கிடைத்த எதிரொலியைக் கொண்டு இதைக் கண்டுபிடித்து இருக்கிறோம்’ என்று கூறினார்.
2013-ல் விண்வெளியிலிருந்து ரசிக்கலாம் பூமியை
விண்வெளியில் பறந்து பூமிக்கு மேல் தொங்கிக் கொண்டு உலகக் காட்சிகளைப் பார்ப்பது என்பது சிலிர்க்க வைக்கும் சாகசமாக இருக்கும். இந்த வித்தியாசமான பயணத்திற்கு ஆகும் செலவு 5 மணி நேரத்திற்கு 90 ஆயிரம் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. பூமியின் கடைசி வளைவுப் பகுதியை ஹீலியம் நிரப்பப்பட்ட பலூனிலிருந்து பார்த்து ரசிக்கலாம். இப்படிப் பயணம் செய்பவர்கள் சூரிய உதயத்தைப் பார்க்கும் முதல் மனிதர்களாகவும் இருப்பார்கள். அப்படி ஒரு ஹீலியம் பலூன் விண்கலத்தை ஸ்பெயின் ஜோஸ் மரியானோ லோபஸ் என்ற தொழிலதிபர் உருவாக்கி உள்ளார்.
பூமியின் தரைமட்டத்திற்கு மேல் 22 மைல் பயணம் செய்பவர்கள் செல்லும் கலம் 2 பைலட்டுகள் மற்றும் 4 பயணிகள் அமரும் வகையில் உள்ளது. இந்த விண்கலத்துடன் 423 அடி விட்டம் கொண்ட ஹீலியம் பலூனும் இணைக்கப்பட்டு இருக்கும். ஹீலியம் வாயு எந்த ஒரு பொருளையும் உயரத்தில் கொண்டு செல்லக்கூடிய தன்மை படைத்தது. இந்தக் கலம் விண்வெளிப் பகுதியை அடைய சுமார் ஒரு மணி நேரம் ஆகும். அதன் பின்னர் 3 மணி நேரம் பூமிக்கு மேல் பயணம் செய்த பின்னர் மீண்டும் பூமிக்குத் திரும்பும்.
– அ.இ.தமிழர் தலைவர், சேலம்