வரலாற்றுச் சுவடு : நாகம்மையாரும் வைக்கம் போராட்டமும்

மே 1-15,2022

(அன்னை நாகம்மையார் நினைவு நாள் 11.5.1933)

1924ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பங்குபெற, நாகம்மையார் தோழர் எஸ்.இராமநாதன் அவர்களுடன் தமிழகத்துப் பெண்களைச் சேர்த்துக் கொண்டு ஈரோட்டில் இருந்து வைக்கம் வந்து சேர்ந்தார். வைக்கம் என்பது ஒன்றும் ஈரோட்டின் அருகே உள்ள ஊர் அல்ல. எர்ணாகுளம் வந்து வைக்கம் செல்ல வேண்டும். அன்றைய நாளில் இன்று போல் போக்குவரத்து வசதிகள் அவ்வளவு அதிகம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், கேரள மாநிலத்து வைக்கம் அந்நிய நாடு போல. மொழி, உணவு, உடை அத்தனையிலும் வேறுபட்ட பகுதி. திருவாங்கூர் அரசரின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதி. பெரியாருக்கு என்று உறவினர் எவரும் அங்கு இல்லை.

நாகம்மையார், எஸ்.ஆர்.கண்ணம்மாள், திருமதி நாயுடு, திருமதி சாணார், திருமதி தாணுமலைப் பெருமாள் பிள்ளை ஆகியோர் தடையை மீறி சத்தியாக்கிரகத்தில் கலந்துகொள்ளப் புறப்பட்டுச் சென்றனர். தடையை அகற்ற முயன்ற நேரத்தில் இன்ஸ்பெக்டர் சர்மா, பெரியாரின் துணைவியாரிடம் நீங்கள் எந்த ஜாதி என்று கேட்டார். இந்தப் போராட்ட அணிக்குத் தலைமை தாங்கிய பெரியாரின் துணைவியார் நாகம்மையார் “எங்களில் யார் எந்த ஜாதி என்று பார்த்து தாழ்த்தப்பட்ட ஜாதியினரை மட்டும் அறிந்து அனுமதி மறுக்கலாம் என்று பார்க்கிறீர்களா? நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை. எல்லோரும் இந்த வீதிகளில் செல்ல அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

தந்தை பெரியார் திரு.வி.க.வினால் ‘வைக்கம் வீரர்’ எனப் பெயர் பெற்றார் எனில் இதன் பின்னணியில் ஊக்க சக்தியாகத் திகழ்ந்தவர் நாகம்மையார் என்பதை மறந்துவிட முடியாது.

“இந்தியாவிலேயே முதன்முதலில் அரசியல் போராட்டக் களத்தில் குதித்துச் சிறைவாசம் ஏற்ற முதல் பெண்மணி நாகம்மையாரே ஆவர். கஸ்தூரிபா காந்திக்கும் இப்பெரும் புகழ் கிட்டியது கிடையாது. புறநானூற்று வீரத்தாய்மார்களுக்கு ஏற்றிச் சிறப்பிக்கப் பெறும் அத்தனை உயர் பண்புகளும் அம்மையாரிடம் நிறைந்து காணப்பட்டன. கற்ற கல்வி சொற்பமானாலும், கணவர் வழி நின்று கற்றுக் கொண்டது ஏராளம். தொடக்கத்தில் எல்லாப் பெண்களையும் போல் பண்டைய வழிமுறைகளையே பின்பற்றி வந்த நாகம்மையார் அவையெல்லாம் தம் கணவருக்கும் பிடிக்காதவை என்பதைப் படிப்படியே உணர்ந்து தாமே நிறுத்திக் கொண்டார். சமுதாயக் கொள்கைகளில் மட்டுமின்றி, அரசியல் கொள்கைகளிலும் கணவரையே அடியொற்றி நடைபோட்டார்.’’

[தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு, கருணானந்தம் தமிழ்க் குடிஅரசு பதிப்பகம், பதிப்பு 2007, பக்கம் 2]

«««

1924ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கத்தில் போராட்டம் நடத்தி அந்த சமஸ்தான ஆட்சியிலும் திரு.ராமசாமி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது நாகம்மையார் அவர்கள் திருவாங்கூர் சமஸ்தானம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம், ஒரு சிறிதும் பின்வாங்காது பிரச்சாரம் செய்து பொதுமக்களின் உணர்வைத் தட்டி எழுப்பினார் அப்போது அவர்,

“என் கணவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இந்த மாதம் முதல் தேதி திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையானார். இன்று காலை 10:00 மணிக்கு (11.9.1924) மறுபடியும் இராஜத் துரோகக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பாட்டிருக்கின்றார். இரண்டு வருஷத்திற்குக் குறைவில்லாத காலம் தண்டனை கிடைக்கக் கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்பதாய்ச் சொல்ல என்னிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுவிட்டார்.

அவர் திரும்பத் திரும்பத் தேச ஊழியத்தின் பொருட்டுச் சிறைக்குப் போகும் பாக்கியம் பெற வேண்டுமென்றும், அதற்காக அவருக்கு ஆயுள் வளர வேண்டும் என்றும் கடவுளையும், மகாத்துமா காந்தியையும் பிரார்த்திக்கின்றேன்.

அவர் பாக்கியில் வைத்துவிட்டுப் போவதாக நினைத்துக்கொண்டு போகிற வைக்கம் சத்தியாக்கிரக விஷயத்தில் வேண்டிய முயற்சிகள் எடுத்து அதைச் சரிவர அகிம்சா தருமத்துடன் நடத்த அனுகூலமான முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமாய் என் கணவரிடம் அபிமானமும், அன்பும் கொண்ட தலைவர்களையும், தொண்டர்களையும் பக்தியோடு பிரார்த்தித்துக் கொள்கின்றேன்’’ என்றார்.

 – நாகம்மாள்

[ ‘நவசக்தி’, 12.9.1924, பக்கம் 8, ஈரோடு]

எனவே, வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டத்தில் பெண்களை வழிநடத்திச் சென்று, பெரியார் மேற்கொண்ட அறப்போரை, வெற்றி பெறச் செய்தவர் அன்னை. அவர் ஏற்றிய போராட்ட தீபம் அணையாமல் தொடர்ந்து ஒளிவீசச் செய்தவர் நாகம்மையார்.

காங்கிரசு இயக்கத்தில் தந்தை பெரியார் அன்று இருந்த வேளையில் அன்னை நாகம்மையார் வைக்கம் கோவிலுக்கு உள்ளே நுழையக் கூடாது என்று தேவஸ்தானத்தவர் விதித்த தடையை மீறி பெண் தொண்டர்களுடன் நுழைந்த துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அன்னை நாகம்மையாரின் இந்த அறப்போர் பங்கேற்பும், மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது. ‘மனிதனை நினை’ என்ற பெரியாரின் கொள்கையின் செயல் வடிவம் இது.

பெரியார் ‘வைக்கம் வீரர்’ என்று சிறப்பிக்கப் பெற்றார் என்றால், ஒவ்வொரு ஆண் மகனின் வெற்றிக்குப் பின்னும் பெண் ஒருத்தி இருப்பாள் எனும் வாசகம் இந்த வைக்கம் வீரரைப் பொருத்தமட்டில் நிறைவேறச் செய்த வைக்கம்  வீராங்கனை நாகம்மையார் ஆவார். நாகம்மையாரின் பணிகளில் உழைப்பின் மேன்மை, அச்சமின்மை, விடாமுயற்சி ஆகியன எதிரொலிப்பதைக் காண்கிறோம்.

அரசியலில் சமத்துவமும், பொருளாதார விடுதலையும் இணைந்து வரும்போதுதான் தீண்டாமை அடியோடு ஒழியும் என்பது பெரியாரின் கொள்கைச் சிந்தனை. 20 மாதங்கள் ஏறக்குறைய நடைபெற்ற வைக்கம் அறப்போரில் வெற்றி முகட்டை நோக்கி இடையறாது ஏறிப் பயணம் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் தந்தை பெரியார் மட்டுமல்லாது அவருடைய வாழ்விணையர் வீரத்தாய் நாகம்மையாரும் ஆவார்.

எனவேதான் பெரியார், “நாகம்மாள் நான் காங்கிரசிலிருக்கும்போது மறியல் விஷயங்களிலும், வைக்கம் சத்தியாக்கிரக விஷயத்திலும் சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்” என்று ஒரே வரியில் கூறிவிட்டார்.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *