தந்தை பெரியார்
சுயமரியாதை இயக்கமோ அல்லது திராவிடர் கழகமோ ஆற்றும் பொதுத் தொண்டுக்கு ஏதாவது முக்கியமிருப்பின், அது பாடுபட்டுழைத்துப் பலனறியாது தவிக்கும் ஏமாந்து வாழும் தொழிலாளிகளுக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் நல்வாழ்வை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை எடுத்துக்காட்ட-வேயாகும்.
இதைத் தவிர, எங்களுக்குப் பட்டம், பதவி, தேர்தல், ஓட்டு முதலியவைகளில் கவலையும் கருத்தும் வைத்து அதற்காகத் தொழிலாளர் தயவைப் பெற அவர்களிடத்திலே வீண் படாடோப வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி, கட்சியின் அரசியல் ஆதிக்கத்துக்காக அவர்களது சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் சூதோ, சூழ்ச்சியோ எங்களிடத்தில் கிடையாது.
பொதுவாக தொழிலாளர்களும் அவ்வித ஏமாற்று வலைகளில் சிக்கி மயங்கி தம் வாழ்வைக் கெடுத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்களேயன்றி, சிறிதாவது அறிவு வளர்ச்சி பெற்றவர்களாக ஆவதற்கு முயற்சி செய்வது கிடையாது. தொழிலாளர் அவ்வித அறிவு பெற்றுவிட்டால், எந்த அரசியல் கட்சிக்காரர்தான் அவர்களை ஏமாற்ற முடியுமென்று கேட்கிறேன். உங்களது ஒன்றுபட்ட சக்தியை நீங்கள் உணர்ந்து விட்டால் உங்களை எதிர்க்க யாரால் முடியும்? ஆனால் இன்று தொழிலாளர்களாகிய நீங்கள் அரசியலின்பேரால் பலவிதப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒற்றுமையின்றி வாழ்கின்றீர்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சோசியலிஸ்ட், தீவிரவாதி என்று இவ்வாறாகப் பிரிக்கப்பட்டு உங்களுக்குள்ளாகவே ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கொள்வதும், அடிதடிகளில் இறங்குவதும், போட்டிச் சங்கங்கள் அமைப்பதும், காட்டிக்கொடுப்பதும் ஆன காரியங்கள்தான் இன்றைய தொழிலாளர் இயக்கமாக இருந்துவருகிறது.
இன்றைய தொழிலாளர் தலைவர்கள் எனப்படுவோரின் தொண்டும், இப்படியாகக் கட்சிப் பிரிவினைகளை உண்டாக்கித், தமது சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதாக இருக்கிறதேயன்றி, இதுவரை இவ்விதக் கட்சிப் போட்டிகளால் தொழிலாளர்களுக்கு இம்மியளவாவது பயனேற்பட்டதென்று எவராவது கூற முடியுமா? என்று கேட்கிறேன். இவ்வளவுக்கும் காரணம் தொழிலாளர்கள் அறிவு வளர்ச்சி பெறாததேயாகும். எனவேதான் திராவிடர் கழகத்தாராகிய நாங்கள், அரசியலில் வீணாகக் காலங்கழிப்பதைவிட மக்களுக்கு வேண்டிய அறிவுத் துறையிலே பாடுபட்டு வருவதன் கருத்தாகும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பாடுபட்டுழைத்தும் பலனறியாத பாட்டாளி மக்களுக்கும் பொதுவாக நம் நாட்டு மக்களுக்கு அறிவு, மானம், ரோஷம், உண்டாக்கும் ஸ்தாபனந்தான் திராவிடர் கழகமென்பதும், அதன் வேலைத் திட்டங்-களுமாகும்.
சமுதாயத்திலே புகுத்தப்பட்டு வேரூன்றியுள்ள பார்ப்பனிய மூடப்பழக்க வழக்கங்களுக்கு நீங்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியைப் பாழாக்குகின்றீர்களே? இதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டாமா? இதைத்தான் திராவிடர் கழகம் கூறுகிறது. சமுதாய அமைப்பிலே புதியதோர் மாற்றம் வேண்டும். அந்த மாறுதலை அடிப்படையாகக் கொண்ட நல்லாட்சி வகுக்க வேண்டும்.
சமுதாய அமைப்புப் பற்றி நம் மக்களுக்குச் சற்றாவது தெளிவு உண்டா? பாமர மக்களை நான் கூறவில்லை. பெரிய பெரிய பண்டிதர்கள், புலவர்கள், ராஜ தந்திரிகள் முதல் பண்டார சன்னதிகள் வரைதான் தெரியுமா? _ சமுதாய அமைப்பு எப்படியிருக்க வேண்டுமென்று.
ஒருவன் பறையனாகவும், ஒருவன் சூத்திரனாகவும், ஒருவன் பார்ப்பனனாகவும் இருக்க வேண்டுவதும், இதன் காரணமாய் ஒரு கூட்டம் மட்டும் பாடுபடாமல் உல்லாச வாழ்வு வாழ்வதும் சரியான சமுதாய அமைப்பு என்று எவராவது கூறமுடியுமா? கூறமுடிய-வில்லை என்றால், அந்த அமைப்பை மாற்றியமைக்க வேண்டுவதுதானே இன்றைய முக்கியப் பொதுப் பணியாகும்? அதிலே நாம் கவலை செலுத்தாமல், பதவி, -பட்டம், ஓட்டுகளில் மட்டும் பாடுபடுவது மானரோஷமுள்ள காரியமாகுமா?
சமுதாயம் வேறு; அரசியல் வேறு என்று கூறுவது தவறாகும். சமுதாய அமைப்பைச் சரிவர நடத்துவதுதானே அரசாங்கத்தின் கடமையாகும். சமுதாய அமைப்புக்கு வழிவகை அமைப்பதே மதத்தின் தத்துவமாகும். முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் தங்களது மதத்தை அவ்விதமே கையாண்டு வருகின்றனர். ஆனால், நமது மதமிருக்கிறதே, அது நமது சமுதாய அமைப்பின் முன்னேற்றத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாயிருக்கிறது. நம் அரசாங்கம் என்பதோ மக்களுக்காக அல்லாமல், அரசாங்கத்தாருக்காக மக்கள் வாழவேண்டிய தலைகீழ் தத்துவத்தில் நாம் உழன்று வருகிறோம். எனவே, நாமும் நமது நாடும் முன்னேற வேண்டுமானால் சமுதாயத் துறையிலே பெரும் மாறுதலை உண்டாக்க வேண்டும். அதன் பின்னரே நல்ல ஆட்சியும் ஏற்படுத்த முடியும். அவ்வாறில்லாது இன்றைய சமுதாய அமைப்பைக் கொண்டே, யார் ஆட்சிசெய்தாலும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகள் ஒரு சிறிதும் நீங்குவதற்கு வழிவகையிருக்க முடியாது.
இவ்வித சமுதாயப் புரட்சியை உண்டாக்கு வதில் தீவிரப் பங்கு கொள்ள வேண்டியவர்கள் வாலிபர்களேயாகும். அவ்விதத் தன்மையில் பொன்மலை திராவிடர் வாலிபர் கழகத்தார் மேலும் தமது தொண்டினை ஆற்ற வேண்டும். அதற்கு இங்குள்ள தொழிலாளர்கள் பெரிதும் ஆதரவு தரவேண்டும். கம்யூனிஸ்ட்களும், சோஷியலிஸ்ட்களும் மறைமுகமாகப் பார்ப்பனியத்துக்கு ஆதரவு தரும் சூழ்ச்சியை விட்டொழிக்க வேண்டும். கழகக் கொள்கைக் கிணங்க அதாவது பார்ப்பனியத்தை, மூடப் பழக்க வழக்கங்களை தொழிலாளர் இடையேயிருந்து அகற்றுதல் என்பதை விட்டுவிட்டு, வேறு என்னதான் தலைகீழாக நின்றாலும் அவர்களுக்கு நிரந்தர உரிமை ஏற்படாது. வேண்டுமானால் தொழிலாளர் பேரால் சுயநல வேட்டையும் அல்லது தத்தமது அரசியல் ஆதிக்க வேட்கையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியுமேயல்லாது பயன் ஒன்றும் காணமுடியாது. இதை இனியாவது கம்யூனிஸ்ட்களும், சோசியலிஸ்ட்களும், தீவிரவாதிகள் எனப்படுவோரும் உணர வேண்டும்.
தொழிலாளரும் இவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அரசியல் கட்சிக்காரர்களுக்குத் தொழிலாளர்கள் தங்கள் சக்தியை வீணாக்குவதிலும், குறிப்பாகத் தேசியத்தின்பேரால் ஏமாறுவதிலும் நீங்கள் உஷாராயிருக்க வேண்டும். இல்லையேல் தொழிலாளத் தோழர்களே! எதிர்காலத்தில் மேலும் மேலும் நீங்கள் பலவிதத் தொல்லைகளுக்கு உள்ளாக நேரிடும். தவிர, இனிப் பொதுத் தொண்டில் கூட நமக்குள் கட்சி பிரதிகட்சி, வீண் எதிர்ப்புகள் இருத்தல் கூடாது. சகோதரத்துவ முறையிலேயே தொண்டாற்ற வேண்டும். என்னைக் கேட்டால் ஒரே மேடையில் ஒரு ராமாயணக்காரரும், ஒரு பெரிய புராணக்காரரும், காங்கிரஸ்காரரும், நாமும் கலந்து பேசவேண்டும். பார்ப்பனரும் நம் மேடையில் பேசவேண்டும் அவரவர்கள் கருத்தை எடுத்துக் கூறவேண்டும். மக்கள் அதைக் கேட்கவேண்டும். சிந்தித்து அவரவர்களின் முடிவுக்குச் செயலாற்ற வேண்டும். அந்த அளவுக்கு மக்களிடத்திலே மனமாறுதல் ஏற்பட வேண்டுமென்பதே எனது எண்ணம்.
(22.5.1949ஆம் நாளில் பொன்மலை திராவிடர் கழக 8ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய பேருரையிலிருந்து…)