மதத்திற்கு எதிராகக் கருத்து சொன்ன பகத்சிங், தீண்டாமை மற்றும் ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராகவும், தெளிவான திட்டவட்டமான கருத்துகளைச் சொன்னார். 1928-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கீர்த்தி இதழில் ஒரு கட்டுரையில் இவற்றை நுட்பமாகச் சொல்லி உள்ளார்.
1917-ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் ரஷ்யாவில் சமத்துவம் வந்துவிட்டது. பிரெஞ்சுப் புரட்சி மற்றும் அமெரிக்கப் புரட்சியின் மூலம் அங்கும் சமத்துவம் என்று அறிவிக்கப்-பட்டுவிட்டது. ஆனால் நாமோ, காலமெல்லாம் ஆத்மா, பரமாத்மா ஆராய்ச்சியில் மூழ்கி, தீண்டத்தகாதார் பூணூல் போடலாமா? படிக்கலாமா? என்பன போன்ற அற்பமான விவாதங்களை இன்னும் நடத்திக் கொண்டிருக்-கிறோம்.
பிரிட்டிஷ் அரசாங்கம் நம்மைச் சமமாக நடத்தவில்லை என்று நாம் குற்றம் சாட்டு-கிறோம். ஆனால், நாம் நம் மக்களைச் சமமாக நடத்துகின்றோமா?
மக்கள் மதம் மாறும்போது ஆத்திரப்-படுகிறார்கள். அவர்களை நீங்கள் விலங்குகளை விடக் கேவலமாக நடத்தினால், அவர்கள் எங்கு மனிதர்களாக மதிக்கப்படுகிறார்களோ அந்த மதத்திற்குப் போகத்தானே செய்வார்கள்?
நாம் ஒரு நாயைக் கட்டியணைக்கலாம். அது எவ்விதத் தடையுமின்றி நம் சமையலறை வரையில் வரலாம். ஆனால், ஒரு மனிதன் நம்மைத் தொட்டு விட்டால், நமது மதத்தின் புனிதம் கெட்டு விடுகிறது.
மாளவியா போன்ற இக்கால சீர்திருத்தவாதி-களுக்குத் தீண்டத்தகாதவர்கள் மீது திடீரென்று பாசம் பிறந்துள்ளது. அவர் ஒரு துப்புரவுத் தொழிலாளி அணிவிக்கும் மாலையை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், தன் ஆடைகளோடு குளித்து முடிக்கும் வரை தன்மீது தீட்டு உள்ளதாகவே அவர் உணர்கிறார்! என்ன ஒரு தந்திரமான ஏமாற்று வேலை! அனைவரையும் நேசிப்பவர் என்று நம்பப்படும் கடவுளை வழிபடுவதற்காகக் கோயில்கள் கட்டப்-படுகின்றன. ஆனால், அவற்றுள் தீண்டத்தகாத-வர்கள் நுழைந்துவிட்டால், புனிதத் தன்மை அங்கே போய்விட்டது என்கிறார்கள்!
கீழான வேலைகள் அனைத்தையும் செய்து, நமது வாழ்க்கையை எளிதாக்க உதவியவர்களை இகழ்ந்து ஒதுக்கி வருகிறோம். விலங்குகளை வணங்குகிறோம். ஆனால், நம்முடன் உள்ள மனிதர்களை நம்மோடு உட்கார வைக்க மறுக்கிறோம்!
தீண்டத் தகாதவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க மதங்கள் போட்டி போடுகின்றன. தீண்டாமையைப் போதிக்கும் _ கடைப்பிடிக்கும் மதம் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. இதனால் மோதல்.
இவைகளுக்கு என்ன தீர்வு?
அனைத்து மக்களும் சமம் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்தவொரு நபரும் அவரது பிறப்பின் அடிப்படையிலோ அல்லது அவர் செய்யும் தொழிலின் அடிப்படையிலோ சமமற்றவராகக் கருதப்படக்கூடாது. துப்புரவு செய்யும் ஜாதியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்து விட்டதற்காக, ஒருவர் தன் வாழ்நாள் முழுக்க கழிவுகளைச் சுத்தம் செய்து கொண்டேயிருக்க வேண்டும்; வாழ்க்கையில் முன்னேறக்கூடிய வேறெந்த தொழிலையும் அவர் செய்யக்கூடாது என்று சொல்வது முட்டாள்தனமானது. நமது ஆரிய முன்னோர்கள் அவர்களுக்கு அநீதி இழைத்துவிட்டனர். கீழான வேலைகளைச் செய்வதற்கு அவர்களைக் கட்டாயப்படுத்தி வைத்துவிட்டனர். இவர்கள் விழிப்புற்று போராடிவிடக் கூடாது என்பதற்காக, பூர்வஜென்மம், மறுஜென்மம் பற்றிப் போதித்து வருகின்றனர். இப்பிறவி இழிவுக்குப் போன பிறவி பாவம் என்கின்ற மோசடிக்கு மாற்று வழி உண்டா?
எனவே, நாம் தீண்டாதவர்களாக அவர்களை நடத்த மாட்டோம் என்று உறுதி ஏற்க வேண்டும். இன்று வரையில் தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்-பட்டவர்களிடம், அவ்வாறு அவர்களை நடத்தியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும். இனி அவர்களைச் சரி நிகர் சமானமாக நடத்த வேண்டும். அவர்கள் தரும் தண்ணீர், உணவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தீண்டத்தகாதவர்கள் சுத்தமில்லாமல் இருக்கிறார்கள் என்று எப்போதும் வாதிடப்படுகிறது. இதற்கான பதில் மிகவும் எளிமையானது – அவர்கள் ஏழைகளாய் இருக்கிறார்கள். அவர்களின் ஏழ்மையைப் போக்குங்கள். உயர் ஜாதி ஏழைகளும் இவர்களைப் போல் சுத்தமில்லாமல்தான் உள்ளனர்.
கீழ் வேலையைச் செய்வதால் ஒருவன் கீழானவன் அல்ல. குழந்தையின் மலத்தைத் தாய் அள்ளுகிறாள். அதற்காக அவளைக் கீழாகவோ, தீண்டத்தகாதவளாகவோ நடத்தவில்லையே?
பள்ளிகள், கல்லூரிகள், கிணறுகள் மற்றும் சாலைகளைத் தீண்டத்தகாதார் பயன்படுத்த முழு உரிமை வழங்கப்பட வேண்டும். உதட்டளவில் அல்ல. உளப்பூர்வமாக நடைமுறையில் செய்யப்பட வேண்டும்.
தீண்டத்தகாதவர்கள் தங்களின் உரிமை-களுக்காகப் போராட, தங்களின் சொந்தப் பிரதிநிதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
விழித்தெழுங்கள்! உங்கள் வலிமையைத் தெரிந்து கொள்ளுங்கள். அணி திரளுங்கள். யாருக்கு விடுதலை வேண்டுமோ அவர்களே தங்கள் விலங்குகளை உடைக்க வேண்டும்… என்று செல்வி மேயோ கூறுவதைப் பின்பற்றுங்கள்.
அதிகார வர்க்கத்திடம் எச்சரிக்கையாய் இருங்கள். அவர்கள் உங்களுக்கு ஒருபோதும் உதவ மாட்டார்கள். உங்களைப் பகடைக்கா-யாகப் பயன்படுத்துவார்கள். நீங்கள் சுதந்திர-மில்லாமல் இருப்பதற்கும், உங்கள் வறுமைக்கும் மூலகாரணம் இந்த ஆதிக்க வர்க்கமும், அதிகார வர்க்கமும் முதலாளி வர்க்கமும்தான்! எனவே, அவர்களை ஒருபோதும் நம்பாதீர்கள்!
நீங்களே உண்மையான பாட்டாளி வர்க்கம். உங்களிடம் இழப்பதற்கு அடிமை விலங்கைத் தவிர வேறொன்றும் இல்லை. தற்போது நிலவும் சமுதாய அமைப்பிற்கு எதிராகப் புரட்சி செய்யுங்கள். மெல்ல வரும் சீர்திருத்தங்கள் உங்களுக்குப் பயன்படாது. மக்களின் பேரியக்கம் மூலம் புரட்சியை வளர்த்தெடுங்கள். அரசியல் – பொருளாதாரப் புரட்சிக்குத் தயாராய் இருங்கள். நீங்களே நாட்டின் உண்மையான முதுகெலும்பு. நீங்களே நாட்டின் உண்மையான வலிமை. உறங்கிக் கொண்டிருக்கும் சிங்கங்களே விழித்தெழுங்கள்! புரட்சி செய்யுங்கள்!
«««
மதமும் தேசிய அரசியலும்
இருபத்து நான்கு வயதுக்குள்ளாகவே பகத்சிங் எல்லா சிக்கல்கள் குறித்தும் நுட்பமாகச் சிந்தித்துக் கருத்துகளைக் கூறி உள்ளார். அதே வகையில் மதமும் அரசியலும் குறித்தும் விரிவாக 1928 மே மாத ‘கீர்த்தி’ இதழில் எழுதியுள்ளார்.
மதம் மக்களிடையே கெட்ட இரத்தத்தைப் பாய்ச்சவில்லையா? முழுமையான சுதந்திரத்தை நோக்கி நாம் போவதை மதம் தடுக்கவில்லையா?
எல்லாம் வல்லவர் கடவுள் என்றும், நாம் ஒன்றுமில்லையென்றும் குழந்தைகளிடம் சொல்லப்படுவது அவர்களைப் பலவீன-மாக்குமல்லவா? அதன் மூலம், அவர்களின் தன்னம்பிக்கை கெடும் அல்லவா? என்று அறிவுசார்ந்த வினாக்களை எழுப்பினார்.
மதம் நம்முடைய பாதையில் தடைக்-கல்லாகவே உள்ளது. நமது மக்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள் அல்ல. அனைவரும் சமமாக இருக்க விரும்புகிறோம். தீண்டாமை கூடாது; உயர்வு தாழ்வு கூடாது என்று விரும்புகிறோம். இதற்கு மதம் ஒத்து வருகிறதா? இந்து மதம் வேறுபாடுகளைக் கற்பிக்கிறது.
சுவாமி தயானந்தர் தீண்டாமையைப் பற்றி பேசுகிறார். ஆனால், அவரும் நான்கு வர்ணங்களைத் தாண்டிச் செல்லவில்லை.
குருத்வாராக்களில் சீக்கியர்கள் கல்சா ராஜ்யத்தைப் பற்றி பேசுகின்றனர். வெளியே வரும்போது அவர்கள் பஞ்சாயத்து ராஜ்யத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர். இந்த இரு பார்வைக் கோளாறுகளுக்கு இடையில் எப்படி நாம் இணக்கம் காண முடியும்?
இஸ்லாத்தின்மீது நம்பிக்கையில்லாதவர்-களை (கபீர்) கொன்றுவிடு என்று மதம் சொல்கிறது. ஆனால், நீங்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறீர்கள்!
மதம் என்னும் மலை நம் பாதையைத் தடுத்துக் கொண்டிருக்கிறது.
இரண்டு இராணுவங்களும் ஒன்றுக்கொன்று எதிர் எதிராக நின்று போர் துவங்கும் நேரத்தில், முகமது கோரியின் கதையில் வருவது போல, யாராவது பசுக்கள், பன்றிகள், கிரந்தம், வேதங்கள், குரான் முதலானவற்றை நம் முன்னால் கொண்டு வந்தால், நாம் உண்மையான மதவாதிகளாய் இருந்தால், பின்வாங்கி வீட்டிற்குப் போய்விடுவோம்.
ஹிந்துக்களால் ஒரு பசுவைச் சுட முடியாது; முஸ்லிம்களாலும், சீக்கியர்களாலும் ஒரு பன்றியைச் சுட முடியாது. இதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்? மதத்திற்கு எதிராகச் சிந்திப்பதற்கு நாம் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளோம் என்பதுதானே அந்த முடிவு? மதக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்-பட்டாக வேண்டும் என்பதுதானே உண்மை?
மதம் இல்லாவிட்டால் உலகத்தில் கேடுகள் குழப்பங்கள் மலியும் என்கின்றனர். ஆனால், உண்மையில் கேடுகளும், குழப்பங்களும் மதங்களாலேயே உருவாகின்றன.
இந்துவும் இஸ்லாமியரும் பிரச்சினைகளை விவாதிக்கும்போது, கோபத்தோடும், வேகத்-தோடும் மோதிக் கொள்கின்றனர். இரண்டு தரப்பினரும் தங்களது அறிவுக்-கூர்மையையும், புரிந்துகொள்ளும் திறனையும் வீட்டில் பூட்டி வைத்து-விட்டுத்தான், விவாதத்திற்கே வருகின்றனர்.
ஒரு மசூதியின் முன்பாக இசை முழங்கப்-படக்கூடாது என்று இஸ்லாமில் இருக்கிறது. நாம் என்ன செய்வது? இசை முழக்கத்துடன் அப்பாதையைக் கடந்து செல்ல மக்களுக்கு உரிமையுள்ளது. ஆனால், மதம் கூடாது என்கிறது.
ஒரு மதத்தில் பசுவைப் பலியிடுவது முக்கியம். இன்னொரு மதம் கூடாது என்கிறது; பசுவை வணங்குகிறது. இதற்கு என்ன செய்யலாம்?
மதத் தத்துவங்களும், சடங்குகளுமே நாட்டின் ஒற்றுமையையும், ஒன்றுபட்ட தேச விடுதலைக்கான போராட்டத்தையும் சீர்குலைக்-கின்றன.
வேற்றுமையையும், குழப்பத்தையும், குருட்டு நம்பிக்கையையும் வளர்ப்பதுதான் மதம் என்றால் அந்த மதம் எதற்கு?
இந்த நாட்டின் விடுதலைக்கு ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்றாலும், முதலாளி-களின் ஆதிக்கத்திற்கு எதிராக தொழிலாளர்-கள் திரண்டெழுந்து சமதர்ம நிலையை, சம உரிமை நிலையைப் பெற வேண்டும் என்றாலும், மதத் தடைகளைத் தகர்த்தெறிந்து, அறிவுப்பூர்வமான மனிதப்பற்றுடன் கூடிய சிந்தனை மற்றும் செயல்பாடுகளுமே கட்டாயம்! என்று தனது அறிவுப்பூர்வமான தீர்வுகளைச் சொன்னார்.