ஆறு.கலைச்செல்வன்
தான் இருபது ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய ஊருக்கு வந்தார் இராமசாமி.
அந்த ஊரின் பெயர் இராசபுரம். இராமசாமியின் சொந்த ஊரிலிருந்து சுமார் நானூறு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மிகச் சிறிய அழகிய கிராமம்.
அந்தக் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இருபது ஆண்டுகளுக்கு முன் கணக்கு ஆசிரியராகப் பணியாற்றினார் இராமசாமி. சில ஆண்டுகள் மட்டுமே அங்கு பணியாற்றிய இராமசாமி அந்த ஊர் மக்கள் கல்வி அதிகாரிகளிடம் அளித்த புகாரின் அடிப்படையில் தண்டனை பெற்று மாறுதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.
அதற்குப் பிறகு இராமசாமி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று தற்போது பணி ஓய்வும் பெற்றுவிட்டார்.
இராசபுரம் வந்தடைந்தவர், தான் பணிபுரிந்த பள்ளியின் விளையாட்டுத் திடலை அடைந்தார். அங்கு தழைத்து வளர்ந்திருந்த ஒரு புங்க மரத்தைப் பார்த்தார்.
அந்த மரத்தருகே சென்று அதை ஏறிட்டு நோக்கினார் இராமசாமி. 20 ஆண்டுகளுக்கு முன் அவர் நட்ட மரம் அது. அப்போது கடும் வெயில். மரத்தின் நிழலில் சற்று இளைப்பாற நினைத்தார் இராமசாமி. அதன் அடியில் அமர்ந்த அவர் அம்மரத்தின் பயன்களையும் சற்றே எண்ணிப் பார்த்தார்.
புங்க மரம் வெப்பத்தைத் தணிக்கவல்லது. மாசையும் கட்டுப்படுத்தும். இந்த மரத்தின் இலைகள், பட்டைகள் மருத்துவ குணம் வாய்ந்தவை… என்று நினைத்துப் பார்த்தபடி அந்த மரத்தடியில் அமர்ந்து சற்றே ஓய்வெடுத்தார் இராமசாமி. அப்போது அந்த மரத்தில் ஒரு சிறிய பலகை பொருத்தப்-பட்டிருந்ததைப் பார்த்தார். அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. ஆனால், அது அழிந்த நிலையில் காணப்பட்டது. எழுந்து நின்று அதை உற்றுக் கவனித்துப் படித்துப் பார்த்தார் இராமசாமி. “இந்த மரத்தை வைத்தவர் திரு.இராமசாமி, கணக்காசிரியர்’’ என அதில் எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்து மிகவும் வியப்படைந்தார் இராமசாமி. அவர் வியப்புக்குக் காரணம் உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன் அவர் அந்தப் பள்ளியில் பணி செய்தபோது நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தார்.
சரஸ்வதி பூசைக்கு முதல் நாள். பள்ளிக்கூடம் ஆரவாரமாகக் காணப்பட்டது. ஒவ்வொரு வகுப்பறையிலும் பல வண்ணங்களில் காகிதக் கொடிகளும், மாவிலைகளும் கட்டப்பட்டன. சரஸ்வதி படத்திற்கு மாலை போடப்பட்டு பூசைகள் செய்து படைக்க அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் ஆயத்தமாகினர். ஆனால், இராமசாமி வகுப்பாசிரியராக உள்ள வகுப்பறை மட்டும் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாகக் காணப்பட்டது. ஒவ்வொரு வகுப்பறையாகப் பார்வையிட்டுக் கொண்டு வந்த தலைமை ஆசிரியர் கோவிந்தன் இவரது வகுப்பறையைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனே இராமசாமியை அழைத்து வரச் சொன்னார். அவர் வந்தவுடன் கோபத்துடன் பேசினார்.
“என்ன இராமசாமி சார், “நாளை சரஸ்வதி பூசை. நாளை லீவாக இருக்கிறதால் இன்னைக்கே நாம் நம் பள்ளியில் கொண்டாடுகிறோம. எல்லா அறைகளும் அலங்காரம் செய்யப்பட்டிருக்கு. உங்க வகுப்பறை மட்டும் ஏன் இப்படி?’’ என்று கத்தினார்.
“எதுக்காக அலங்காரம் செய்யணும்? என்ன விசேஷம்?’’ என்று அமைதியாகக் கேட்டார் இராமசாமி.
“என்ன விசேஷமா? நாளைக்கு சரஸ்வதி பூசை கொண்டாடியாகணும். இது உங்களுக்குத் தெரியாதா? உங்க கொள்கையையெல்லாம் இங்கே திணிக்கக் கூடாது. எல்லார் கூடவும் சேர்ந்து வேலை செய்யுங்க என்று கண்டிப்புடன் கூறினார் கோவிந்தன்.
“சார், யார் சார் அந்த சரஸ்வதி?’’ என்று மீண்டும் அமைதியாகக் கேட்டார் இராமசாமி.
“என்ன சார் தெரியாதது மாதிரி கேட்கறீங்க. சரஸ்வதிதானே கல்விக்கு அதிபதி!’’
“நம்ம நாட்டுக்கு மட்டுமா? உலகக் கல்விக்கே அவதான் அதிபதியா?’’
“இடக்கு முடக்கா பேசாதீங்க சார். நம்ம நாட்டில் கொண்டாடுறோம். அவ்வளவுதான்.’’
இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது மாணவர்கள் பலரும் அங்கே கூடிவிட்டனர். மாணவர்களை அழைத்துச் செல்ல வந்த ஒரு சில பெற்றோர்களும் அங்கு வந்துவிட்டனர். மற்ற ஆசிரியர்களும் குழுமிவிட்டனர். அவர்கள் இராமசாமி கூறுவதைக் கேட்க ஆர்வம் காட்டினர்.
“சரஸ்வதியைப் பத்தி நான் சொல்றேன். கேளுங்க.’’ என்று பேச ஆரம்பித்தார் இராமசாமி. தனது பேச்சு நிறைய பேரை சென்றடைய வேண்டும் என விரும்பினார் அவர்.
“அதாவது சரஸ்வதி என்பவள் பிரம்மனுடைய உடம்பிலிருந்து உண்டாக்கப் பட்டவளாம். அவளை உண்டாக்கிய பிரம்மன் அவள் அழகைக் கண்டு காம வயப்பட்டு அவளை மனைவியாக்க நினைத்தான். தகப்பனே தன்னை மனைவி ஆக்கிட நினைத்ததைக் கண்ட சரஸ்வதி பெண்மான் உருவம் எடுத்து ஓடினாள். ஆனால், பிரம்மனும் ஆண்மான் உருவம் எடுத்து பெண்மான் உருவம் கொண்ட சரஸ்வதியைத் துரத்தினான்.
இதைக் கண்ட சிவபெருமான் இந்தப் பிரச்சினை கண்டு வருந்தி இதைத் தீர்க்க முற்பட்டான். உடன் சிவபெருமான் தானும் ஒரு வேடன் உருவம் கொண்டு ஆன்மானைத் துரத்தி அதைக் கொன்றுவிட்டான். ஆனால், தகப்பன் இறந்ததைக் கண்ட சரஸ்வதி அழுதுபுரண்டாள். அவள் புலம்பி அழுத காட்சியைக் கண்ட சிவன் மனமிரங்கி பிரம்மனை உயிர்த்தெழச் செய்தான். அதற்குப் பிறகு சரஸ்வதி பிரம்மனுக்கு மனைவியாகிடச் சம்மதித்தாளாம். இதுதான் சரஸ்வதியோட கதை. இதை நாம் நம்பி அவளைக் கொண்டாட வேண்டுமா?’’
இப்படிப் பேசிய ஆசிரியர் இராமசாமியைப் பலரும் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் மேலும் பேசினார் இராமசாமி.
“சரஸ்வதி குடிகொண்டுள்ள நமது நாட்டில்தான் கல்வி அறிவு குறைவாக உள்ளது. கல்விக்குக் கடவுள் பெண் என்கிறீர்கள். ஆனால், நமது நாட்டில் அறுபத்து அய்ந்து சதவிகிதம் பெண்கள்தான் கல்வி அறிவு பெற்றவர்கள். யுனெஸ்கோவின் அறிக்கை-யின்படி நமது நாட்டில்தான் படிப்பறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.’’
இதைக் கேட்ட தலைமை ஆசிரியர் கோவிந்தனின் கண்கள் சிவந்தன. அவர் ஒரு தீவிர பக்திமான் ஆயிற்றே!
“அப்படின்னா, ஆயுத பூசை, சரஸ்வதி பூசை எதுவும் நம்ம பள்ளியில் கொண்டாட வேண்டாம் என்கிறீர்களா?
“ஆமாம் சார்! கொண்டாடக் கூடாது! இது ஒரு மதச்சார்பற்ற நாடு. மதப் பண்டிகைகளை அரசு அலுவலகங்களில் கொண்டாடுவது சரியல்ல! பேரறிஞர் அண்ணாவின் 1968ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியிட்ட அரசாணையின்படி அரசு அலுவலகங்களில் கடவுள்கள், சாமியார்கள் படங்கள் இருந்தால் அவற்றை அகற்றிவிட வேண்டும். அந்த அரசாணையின்படி இந்த சரஸ்வதி படத்தையும் அகற்ற வேண்டும். உலகின் தலைசிறந்த அறிவியலாளர் அய்ன்ஸ்டீன் கடவுள் நம்பிக்கை குழந்தைத்தனமானது. புரியாத வயதில் எளிதில் எதையும் நம்புவது போன்றது என்றார். புரியாத வயதில் இந்த மாணவர்களின் மனதில் விஷவிதைகளை விதைக்கக் கூடாது.’’
இப்படியாக இராமசாமி கூறக் கேட்டதும் அனைவரும் கோபமும் அதிர்ச்சியும் அடைந்தனர். அந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் அந்த ஊர்ப் பூசாரியின் மகன் மோகனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “கணக்காசிரியர் ஒழிக’’ என்று உரத்த குரலில் கத்த ஆரம்பித்தான். பிறகு தலைமை ஆசிரியர் கோவிந்தன் அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். மோகனைத் தவிர மற்ற மாணவர்கள் அமைதி காத்தனர். காரணம், அவர் மிகச் சிறந்த ஆசிரியர் என்பதை அனைத்து மாணவர்களும் உணர்ந்திருந்தனர்.
அடுத்த சில நாள்களில் ஊர்மக்கள் அந்த ஊர் பூசாரியின் தலைமையில் ஆசிரியர் இராமசாமி மீது புகார் மனு தயாரித்து அந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் அளித்தனர். அவரை மாற்ற வேண்டும் என வற்புறுத்தினர். அவரது கற்பித்தல் பணியைப் பற்றி வந்தவர்களிடம் கேட்டார் கல்வி அலுவலர். அவரது கல்விப் பணி பற்றி யாரும் குறை சொல்ல முன்வரவில்லை. அவர் ஒரு சிறப்பான ஆசிரியர் என்பதை உணர்ந்தார் கல்வி அலுவலர். பிறகு ஒரு நல்ல முடிவுக்கும் வந்தார். சில நாள்களில் இராமசாமிக்கு அவர் சொந்த ஊருக்கே மாற்றல் ஆணை வந்து சேர்ந்தது. பகுத்தறிவு எண்ணம் அந்த ஊருக்குத் தேவை என கல்வி அலுவலர் எண்ணி இருப்பார் போலும்!
* * *
புங்க மர நிழலில் அமர்ந்தபடியே இவற்றை நினைத்துப் பார்த்தார் இராமசாமி. பலமுறை அவர் இடமாறுதலுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் கிடைக்கவில்லை. அந்தக் கல்வி அலுவலரும் பகுத்தறிவுவாதியாக இருந்திருப்பார் போலும்! சொந்த ஊருக்கே மாறுதல் கொடுத்துவிட்டார்.
அதனால் வயதான தாய், தந்தையை சொந்த ஊரில் கவனித்துக் கொள்ளும் வாய்ப்பினையும் அவர் பெற்றார்.
மெதுவாக எழுந்து பள்ளியை நோக்கி நடந்தார். பள்ளியருகே பெரியார் சிலை அமைக்கப்பட்டிருந்தது. பள்ளியின் சுவர்களில் பெரியாரின் பொன்மொழிகள் எழுதப்பட்டிருந்தன. அவை கண்டு வியப்பு அடைந்தார் இராமசாமி.
அப்போது அந்த வழியாக வந்த ஓர் இளைஞன் அவரை அடையாளம் கண்டு கொண்டு அவர் அருகே வந்தான்.
“அய்யா! வாங்க அய்யா! வாங்க அய்யா!’’ என்று அவரை வரவேற்றான்.
இராசாமி அவரை உற்றுப் பார்த்தார்.
“அய்யா! என்னைத் தெரியலையா? நான்தான் அய்யா மோகன். உங்கள் மாணவன்’’ என்றான்.
“மோகனா? பூசாரி மகனா? நல்லாயிருக்கியா மோகன்? அப்பா நல்லா இருக்காங்களா?’’ என்று நலம் விசாரித்தார் இராமசாமி.
“அப்பா ஒரு விபத்தில் இறந்துட்டாங்க அய்யா! நான் இப்ப பொறியாளரா வேலை செஞ்சிகிட்டு இருக்கேன் அய்யா; உங்களால் நான் பகுத்தறிவாதியாக மாறிட்டேன் அய்யா; பகுத்தறிவாளர் கழகத்திலும் சேர்ந்துட்டேன்’’ உணர்ச்சி மேலிடப் பேசினான் மோகன். அவனது தந்தை மறைவுக்கு வருத்தம் தெரிவித்தார் இராமசாமி.
“அய்யா, உங்களை நாங்க ரொம்பவும் துன்பப்படுத்திட்டோம். நீங்க சொன்ன அறிவுரைகளை அப்போ நாங்க ஏற்கலை. ஆனால், பிற்பாடு உணர்ந்திட்டோம். “மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்’’ அப்படின்னு நீங்க அடிக்கடி சொல்வீங்க. அது உண்மைதான் அய்யா.’’
இவ்வாறு மோகன் சொல்லிக் கொண்டிருக்கும்போது வேறு பல முன்னாள் மாணவர்களும் பொதுமக்களும் அங்கே வந்து கூடிவிட்டனர். அனைவரும் இராமசாமியை அடையாளம் கண்டு கொண்டு அவரை அன்புடன் வரவேற்றனர். அவரைப் பற்றி புகார் கொடுத்த ஒரு சிலரும் குற்ற உணர்வுடன் அங்கே குறுகி நின்று கொண்டிருந்தனர்.