‘துக்ளக்கை’ நடத்துவது வயிற்றுப் பிழைப்புக்கே! – சொன்னது ‘சோ’ ராமசாமி
மின்சாரம்
கேள்வி: கோயில்களுக்குச் சொந்தமான 2043 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்ரமிப்பு நிலங்கள் குறுகிய காலத்தில் மீட்கப்பட்டுள்ள விஷயத்திற்காகவாவது தி.மு.க. அரசைப் பாராட்டுவீர்களா, மாட்டீர்களா?
பதில்: மீட்ட நிலங்களை தி.மு.க. என்ன செய்கிறது என்று பொறுத்துப் பார்த்துப் பாராட்டலாம் என்று காத்திருக்கிறேன்.
– ‘துக்ளக்’ 9.3.2022
கோயில் நிலங்களை மீட்டது பற்றி துக்ளக்குக்கு மகிழ்ச்சியா இல்லையா என்பதற்குப் பதில் சொல்லக் கூட மனம் இல்லை. இதுதான் பார்ப்பனப் புத்தி என்பது.
«««
கேள்வி: வேட்பாளர்கள் தோசை வார்ப்பது, டீ போடுவது வெற்றிக்கு வழி வகுக்குமா?
பதில்: வெற்றிக்கு வழி வகுக்குமோ _ இல்லையோ, பெண் வேட்பாளர்கள் அரசியலுக்கு வந்த பிறகு, ஆண் வேட்பாளர்கள்கூட தோசை வார்த்து, டீ போட வேண்டியது வந்துவிட்டது. இதனால் ஆண் வேட்பாளர்களின் தரம் இறங்கியதா, அல்லது ஆண்களும், பெண்களும் சமமானவர்களா என்பது தெரியவில்லை.
– ‘துக்ளக்’, 9.3.2022
ஆண்கள் டீ போடக் கூடாதா? (இப்பொழுது தேனீர்க் கடைகளில் டீ போடுவது யார்?)
பெண்கள்தான் தோசை சுட வேண்டுமா? ஆண்கள் தோசை சுடக் கூடாதா? (இப்பொழுது உணவு விடுதிகளில் என்ன நடக்கிறது?)
தோசை சுடுவது, டீ போடுவது போன்ற வேலைகளில் ஆண்கள் இறங்கினால் அவர்களின் தரம் இறங்கிவிட்டதாக சுற்றி வளைத்துச் சொல்லும் இதற்குப் பெயர்தான் பார்ப்பன மனுதர்மப் புத்தி என்பது.
«««
கேள்வி: கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது தவறு என்றால், சீக்கிய மாணவர்கள் டர்பன் அணிவதைத் தடை செய்ய இயலுமா?
பதில்: கர்நாடகத்தில் சில பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிவது _ 300 ஆண்டுகளுக்கு முன் அவர்களுக்குக் குரு கோவிந்த் சிங் அளித்த அடையாளம்.
– ‘துக்ளக்’ 9.3.2022
சீக்கியர்கள் டர்பன் அணிவது 300 ஆண்டுகள் என்று சொல்லும் ‘துக்ளக்’ முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது எத்தனை ஆண்டுகள் என்று ஏன் சொல்ல முன்வர-வில்லை?
இது ஆண்டுகள் பிரச்சினையா? மத தொடர்பான பிரச்சினையா?
சீக்கியர்கள் மீது கைவைத்தால் அவர்களின் கத்தி பேசுமே!
«««
கேள்வி: தி.மு.க.வின் சுயமரியாதை, சமூகநீதி, சகோதரத்துவம் இவற்றுக்கு உங்கள் பாணியில் விளக்கம் தர முடியுமா?
பதில்: தலைமைக் குடும்பத்துக்கு அளிக்கும் மரியாதை _ சுயமரியாதை; அந்தக் குடும்பத்துக்கும், கட்சிக்கும் இடையே நிலவுவது _ ‘சகோதரத்துவம்’; அந்தக் குடும்பத்தை ஆட்சியில் அமர்த்துவது சமூகநீதி.
– ‘துக்ளக்’, 9.3.2022
சுயமரியாதை என்பது தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட தத்துவம். சமூகநீதி என்பது நீதிக்கட்சியிலிருந்தும், காங்கிரசுக்குள்ளிருந்து கொண்டே தந்தை பெரியாரிடத்திலிருந்தும் முகிழ்த்து எழுந்தவை. இதனை ஒரு குடும்பத்தோடு தொடர்புபடுத்துவது சரியா?
இந்த மூன்றுக்கும் தங்களுக்கும் சம்பந்த-மில்லை என்று பார்ப்பனர்கள் ஒப்புக் கொண்டதுவரை சரி.
«««
கேள்வி: கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில் நீங்கள் ‘சோ’வை மிஞ்சி விட்டதாகச் சொல்கிறார்கள் _ குருவை மிஞ்சிய சிஷ்யரா?
பதில்: ஆசிரியர் பொறுப்பு கிடைத்து, கேள்வி _ பதில் பகுதியைத் துவக்கும்போது, நான் ‘சோ’வை நினைத்து, என் பதில்களைப் படிக்காதீர்கள்’ என்று வாசகர்களை வேண்டியது, அவரைப்போல என்னால் மட்டுமல்ல, யாராலும் பதில் தர முடியாது என்பதால்தான். எனவே, சோவை மிஞ்ச என்னால் மட்டுமல்ல, யாராலும் முடியாது. இப்படிக் கேள்விகள் கேட்டு, என் தலையில் அய்ஸ் வைக்க முடியாது. அதனால் கிறுகிறுக்கும் வயதும் தாண்டிவிட்டது எனக்கு.
– ‘துக்ளக்’ 9.3.2022
ஆ-மாம். சோவைப் போல் யாரும் பதில் சொல்ல முடியாது என்பது உண்மைதான்!
«««
கேள்வி: அரசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? ஆன்மிகவாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்?
சோவின் பதில்: அரசியல்வாதி ஆவதற்கு பொய் சொல்லத் தெரிய வேண்டும். ஆன்மிகவாதி ஆவதற்குப் பொய்யை அருள்வாக்காக மாற்றத் தெரிந்திருக்க வேண்டும்.
– ‘துக்ளக்’ 26.10.2016, பக்கம் 23
என்ன குருமூர்த்தியாரே சோவின் இந்தப் பதிலை ஏற்றுக்கொள்கிறீர்களா?
* * *
அரசியலில் நான் தரகு வேலை செய்கிறேன்.
– சோ (ஆனந்தவிகடன், 1.3.2012)
என் ஆலோசனையைக் கேட்டு யாருமே உருப்பட்டதில்லை. என்னிடம் ஆலோசனை கேட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று உங்களுக்குத் தெரியும். “The name is Rajive Gandhi” நூல் வெளியீட்டு விழாவில். – சோ (2008 மார்ச்)
«««
நான் பிராமணன் _ அதுவும் இன்றைய பிராமணன்; அசல் பிராமணன் இல்லை.
– சோ (ஆனந்தவிகடன், 1.2.2012)
குருமூர்த்தியாரே குருமூர்த்தியாரே! உங்களின் குருநாதர் திருவாளர் ‘சோ’வின் பதில்கள் இவை. இதில் நீங்கள் அவரை மிஞ்சியவரா _ கெஞ்சியவரா?
«««
“Brahmins are not wanted in Tamilnadu, beyond that I do not want to comment.”
(‘The Times of India’, 28.8.2010)
தமிழ்நாட்டுக்குப் பிராமணர்கள் தேவையில்லை. இதற்கு மேல் எதையும் சொல்ல நான் விரும்பவில்லை என்றாரே, சோ. அதுபற்றி குருமூர்த்தி என்ன சொல்லப்போகிறார்?
«««
கேள்வி: துக்ளக்கை 35 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியும் எந்தப் பலனும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று என்றாவது நீங்கள் விரக்தி அடைந்ததுண்டா?
பதில்: எந்தப் பலனும் இல்லை என்று எப்படிச் சொல்லுவது? எனக்குப் பிழைப்பு நடக்கிறதே?
– ‘துக்ளக்’ 24.10.2005, பக்கம் 26)
ஆக, வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் ‘துக்ளக்’ நடத்தப்படுகிறது _ ஏற்றுக் கொள்வாரா குருமூர்த்தி அய்யர்வாள்?ஸீ