வசந்திதேவி, கல்வியாளர்
“ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பிலும், பன்னிரண்டாம் வகுப்பிலும் மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதமும் மதிப்பெண்ணும் மாணவர்களைவிடக் கூடுதலாக இருப்பதா-லேயே, பெண் கல்வி முன்னேறிவிட்டது என்று நம்பிவிடுகிறோம். ஆனால், அது உண்மையல்ல.
பெண்ணைப் படிக்க வைப்பதாலும், அவள் வேலைக்குச் செல்வதாலும் வரதட்சணையில் சற்று தள்ளுபடி கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில்தான், பெண் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டுமென்கிற நோக்கில் பெரும்பாலான பெற்றோர்கள் சிந்திக்கிறார்கள். ஆனால், இன்று வரதட்சணையின் நிலைமை என்ன என்பதை சமூகத்தின் மனசாட்சிக்கே விட்டுவிடுவோம்.
ஆண் குழந்தைக்கு அவனது எதிர்காலத்தை மட்டுமே கருத்தில்கொண்டு கல்வி வழங்கு-வதைப் போல பெண் குழந்தைக்கும் வழங்க வேண்டும். இது நிகழ்ந்தால் மட்டுமே, பெண் குழந்தைகளின் பள்ளி இடைநிற்றலை முழுமையாகத் தடுத்து நிறுத்தி அவர்களை உயர்கல்வி தொடர அனுப்ப முடியும்.
பள்ளிப் பொதுத் தேர்வுகளில் மாணவர்-களைவிடக் கூடுதலான மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற மாணவிகள், உயர்கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் எங்கே காணாமல் போகிறார்கள்?
‘பொண்ணு ப்ளஸ் டூ பாஸாயிடுச்சு. மேலே படிக்கிறதுக்குச் செலவு பண்ற காசுல அவ கல்யாணத்தை முடிச்சிடலாம்’ என்கிற பெற்றோரின் மனப்பான்மை மாற வேண்டு-மென்றால், பெண் கல்வி இலவசமாக்கப்பட வேண்டும்.
‘அதிகமாக படிச்சா மாப்பிள்ளை கிடைக்க மாட்டான்’ என்கிற எண்ணம், கல்விக் கட்டணங்கள் இவற்றையெல்லாம் தாண்டி இன்னும் பல மாணவிகளால் கல்விக் கோட்டை எட்ட முடியவில்லை. இந்நிலை மாற இலவசப் பெண் கல்வி வேண்டும், பெண்ணைத் திருமணத்துக்கென்றே வளர்த்தெடுக்கும் நம் இந்திய மனப்பான்மை மாற வேண்டும்.’’
(நன்றி: ‘அவள் விகடன்’, 23.1.2021)