தலையங்கம் : ஹிந்து என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறும் புது வியாக்கியானம்

மார்ச் 1-15 2022

மக்களைக் குழப்புவதே ஆர்.எஸ்.எஸ். வஞ்சகம் – ஒடுக்கப்பட்டோரே, இவர்களைப் புரிந்துகொள்வீர்!

அறிஞர் அண்ணா ‘ஆரிய மாயை’பற்றி பிரெஞ்ச் அறிஞர் பல நூற்றாண்டுகட்கு முன்பு இங்கே வந்து தங்கி, ஆரியத்தை நன்கு புரிந்து எழுதிய நூலை வைத்து மிக அருமையான நூலை வடித்துக் கொடுத்தார்.

‘தந்திர மூர்த்தி போற்றி

தாசர்தம் தலைவா போற்றி’

என்று தொடங்கும் போற்றி அகவல் எப்படிப்பட்ட மறுக்க இயலாத மாசு மருவற்ற உண்மை என்பதைப் புரிந்துகொள்ளாதவர்கள் புரிந்துகொள்ள, வேறு எங்கும் போகவேண்டாம்; எதையும் தேடவேண்டாம்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்  கூறுவது என்ன?

ஆர்.எஸ்.எஸ். என்ற ஆரிய வஞ்சகத்தின் வார்ப்பட அமைப்பின் தலைவர்கள் _ அன்று முதல் இன்றுவரை _ பேச்சுகள், எழுத்துகள், தந்திரோபாயங்கள் _ இவற்றைப் படித்தாலே போதும்!

சில நாள்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பீடத்தில் நடைபெற்ற அவர்களது கலந்துரையாடல் கூட்டத்தில், இன்றைய அதன் தலைவரான மோகன் பாகவத் என்ற (பார்ப்பன) தலைவர் புதிய ‘ஹிந்து லா’வை உருவாக்குவதுபோல, ‘இந்தியா _ ஹிந்து நாடே’ என்று அதன் பன்முகக் கலாச்சார, மொழி, மத, பண்பாட்டு உண்மையை அடியோடு மாற்றி, “இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் ஹிந்துக்களே’’ என்று கூறுங்கள் என்று தன் சீட கோடிகளுக்குப் புதிய ஆணை பிறப்பித்ததோடு, “இனிமேல் முன்பு கூறி வந்த அஹிந்து (Ahindu) (ஹிந்து அல்லாதவர் என்பதைக் குறிக்கும்) என்று குறிப்பிடாதீர்கள். எல்லோரையும் ஒரே குடைக்குள் கொண்டுவர இந்த மாற்று (தந்திரம்) பயன்படட்டும்’’ என்று கூறினார் என்ற செய்திகள் வந்துள்ளன!

மோகன் பாகவத் கூற்றுப்படி

ஹிந்து என்று ஏற்காதவர்களே நான்கில் மூன்று பாகம்!

மோகன் பாகவத் ஒரு வகை பழைய நால்வருணப் பிரிவுபோல், புதிய நான்கு வகையான ஹிந்துக்கள்தான் இந்தியாவில் வாழுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த (புதிய) நான்கு வகையினர் யார் தெரியுமா?

1. பெருமையோடு கூறிக்கொள்ளும் ஹிந்து (Proud Hindu)

2. ஹிந்து என்று அழைக்கத் தயங்கும் ஹிந்து (Reluctant Hindu)

3. நட்புடன் இல்லாத ஹிந்து (Unfriendly Hindu)

4. அறியாமையில் உள்ள ஹிந்து (Ignorant Hindu)

மேற்காட்டிய இவரது புதுவகைப் பிரிவில் ஹிந்து என்பதை ஏற்காதவர்களே நான்கில் மூன்று பாகம் _ பெரும்பான்மையினராக உள்ளவர் என்பதை அவரை அறியாமலேயே அவர் ஒப்புக்கொள்ளும் உண்மையாக வெளியே தெரிகிறது _ அது ஒருபுறமிருக்கட்டும்!

ஹிந்து லா என்ன கூறுகிறது?

‘ஹிந்து லா’ (Hindu Law) வின்படி _ ஹிந்து என்பவருக்கு சட்டப்படி என்ன வரைமுறை (Legal Definition) என்றால், ‘’எவர் முகமதியர் அல்லவோ, யார் கிறித்துவர் அல்லாதவரோ அவர் எல்லாம் ஹிந்து’’ என்ற எதிர்மறை (Negative Definition) தான்.

அதோடு மேலும் விரிவாக்கியே அந்த விளக்கத்தை,

இரண்டு ஹிந்துப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர் (பிறப்பு அடிப்படையில்) (இதில் ஒருவர் பவுத்த, ஜைன, சீக்கியராக இருந்தாலும் பரவாயில்லை) அவர் ஹிந்துவாகவே பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவராகவும் இருக்கவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் முரண்

இதன்படி,

1. ஹிந்து என்பவர் பிறப்பின் அடிப்-படையில்-தான் ஹிந்து; அதை எளிதில் மாற்ற முடியாது!

இதுதானே ஹிந்து சட்டம்? அப்படி இருக்கையில், ‘’இந்திய நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையும் ஹிந்துக்களே’’ என்று மோகன் பாகவத் கூறுவது, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான _ முரணான விளக்கம் அல்லவா?

2.  எல்லோரும் நான்கு வகையில் ஹிந்துக்களே என்பது இவரது வாதமானால், பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏன் மதமாற்றம்பற்றிப் பதறவேண்டும் _ கதற-வேண்டும்? நம்மைப் பொறுத்தவரை, எம்மதத்தையும் ஏற்காதவர்கள் பகுத்தறிவு-வாதிகள் _ மனிதநேயர்கள்!

ஆர்.எஸ்.எஸின் வஞ்சகம்

ஆர்.எஸ்.எஸ். வித்தைகள் அவ்வப்போது இப்படி மக்களைக் குழப்புவது, தாங்கள் ஏதோ லட்சியத்தில் வெற்றி பெற்றவர்கள்போல காட்டிக் கொள்ளும் வஞ்சகத் தன்மையே!

ஒடுக்கப்பட்டோரே, இவர்களைப் புரிந்துகொள்ளுங்கள்!

– கி.வீரமணி,

ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *