தகவல்கள்

பிப்ரவரி 16-28,2022

இந்தியப் பெண்ணால் மாறிய அயர்லாந்தின் கருக்கலைப்புச் சட்டம்!

அயர்லாந்தில், கருக்கலைப்புக்கு அனுமதிக்காததால் ஓர் இந்தியப் பெண் உயிரிழந்த சம்பவம், அந்நாட்டின் பல்லாண்டு கால சட்டத்தையே மாற்றி அமைத்தது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல் மருத்துவரான சவிதாவும் பொறியாளரான அவரின் கணவரும் அயர்லாந்தில் பணியாற்றி வந்தனர். சவிதா 17 வார கர்ப்பிணியாக இருந்த நிலையில் கருச்சிதைவு ஏற்படவே, கருவைக் கலைக்க மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டனர் அந்தத் தம்பதி. அந்நாட்டுச் சட்டப்படி கருவிலுள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு இருக்கும் பட்சத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாது என்பதால், கருவின் இதயத்துடிப்பு நிற்கும் வரை சில நாள்கள் காத்திருக்க வேண்டியிருந்தது சவிதா; அதற்குப் பிறகு மருத்துவமனையில் இறந்த கருவை வெளியே எடுத்தனர். அதற்குள் அவருக்குத் தீவிரமான தொற்று பாதித்து, ரத்தத்தில் நச்சேற்றம் ஏற்பட்டு அடுத்த நாளே பரிதாபமாக உயிரிழந்தார் சவிதா.

கருக்கலைப்பு தொடர்பான சட்டத்தின் காரணமாக ஏற்பட்ட குழப்பம்தான் சவிதாவின் உயிரிழப்புக்குக் காரணம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணையில் தெரிவிக்க, சவிதாவின் மரணத்தை அயர்லாந்தின் கருக்கலைப்புச் சட்டத்துக்கு எதிரான நீண்ட காலப் போராட்டத்துக்கான நிகழ்கால ஆயுதமாக்கிப் போராடினார்கள் சமூக ஆர்வலர்கள். அது ஏற்படுத்திய அதிர்வலை யால் 12 வாரத்துக்குட்பட்ட கர்ப்பம் என்றால் மருத்துவரின் அனுமதியுடன் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் என்றும், ஒரு பெண்ணுக்கு பிரசவம் தொடர்பான பிரச்சினைகள் அல்லது தீவிர மருத்துவுப் பிரச்சினைகள் இருந்தால் இரண்டு மருத்துவர்களிடம் அனுமதி பெற்று 12 முதல் 24 வார கர்ப்பத்தையும் கருக்கலைப்பு செய்யலாம் என்றும் அயர்லாந்தின் கருக்கலைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. சட்டம் திருத்தப் படாத நாடுகளில் எத்தனை சவிதாக்கள் இறந்துகொண்டிருக்கிறார்களோ?!                                 (4.1.2022 – அவள் விகடன்)


‘நீட்’டை எதிர்த்தவர்தான் நரேந்திர மோடி

மருத்துவக் கழகத்துக்கு (விசிமி) மோடி ஆண்ட குஜராத் மாநில அரசு எழுதிய கடிதம் என்ன?

இதோ… கண்களைக் கொஞ்சம் விளக்கிக் கொண்டு பார்க்கட்டும்.

மாநில அரசு ‘நீட்’ தேர்வை அனுமதிக்காது என்று குஜராத் அரசு மருத்துவக் கழகத்திடம் வலியுறுத்தி உள்ளது.

குஜராத்தி மொழியில் நீட் தேர்வு இல்லை; அதேபோல் மாநிலப் பாடத்திட்டத்திலும் கேள்விகள் இல்லை என்பதால் குஜராத் மாநிலத்தின் பல பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பொதுநல வழக்கை குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது குஜராத் அரசின் சார்பில் நீதிமன்றத்தில் பதில் கூறிய குஜராத் மாநில முதன்மை சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் கிஷோர் மாணவர்களின் நலன் கருதி மருத்துவக் கழகம் நல்ல முடிவு எடுக்கும் என்று நினைக்கிறேன். அதுவரை குஜராத்தில் நீட்டை அனுமதிக்க முடியாது என்று மருத்துவக் கழகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்று கூறி அக்கடிதத்தின் நகலை விசாரணையின் போது நீதிபதிகளிடம் கொடுத்தார். (23.1.2013)


தமிழ்நாடு இரண்டாம் இடம்

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதார அறிக்கையின்படி, 2019_2020ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் கேரள மாநிலம் முதல் இடத்தையும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. மேலும், உத்தரப்பிரதேசம் கடைசி இடத்தையும் பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடைசிக்கு முந்திய இரு இடங்களையும் பிடித்துள்ளன.


 

துணுக்குகள்

* ஆண்டொன்றுக்கு ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மின்னல்கள் பூமியைத் தாக்குகின்றன.

* உயிரினங்களிலேயே மனிதர்கள் மட்டும்தான் தூக்கத்தைத் தள்ளிப் போடுகிறார்கள்.

* பிரேசில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள், ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தால் அவர்களின் தண்டனைக் காலத்தில் 4 நாள்கள் குறைக்கப்படும்.


குருமூர்த்திக்கு ‘சோ’ ராமசாமியின் பதில்!

கேள்வி: இலவசங்களின் முன்னோடி யார்?

பதில்: ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என்ற கோஷத்தை கை கழுவிவிட்டு, ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி தருகிறோம் என்று கூறி, ஓட்டு வாங்கி -1967 தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.தான் அதன் துவக்கம். (‘துக்ளக்’, 9.2.2022, பக்கம் 11)

இது துக்ளக்’கின் இன்றைய ஆசிரியர் குருமூர்த்தியின் பதில்.

குருமூர்த்தியின் குருநாதர் ‘சோ’ ராமசாமி என்ன கூறுகிறார்?

இதோ:

கேள்வி: இலவசங்களைக் கொடுத்து வாங்கிவிடலாம் என்ற அரிய தத்துவத்தை முதலில் கண்டுபிடித்த ஜீனியஸ் காங்கிரஸா _ தி.மு.க.வா?

சோ.வின் பதில்: இவர்கள் யாரும் இல்லை. ‘விபூதி, குங்குமத்தோடு நிற்காமல், புளியோதரை, வெண்பொங்கல்னு இலவசமா கொடுத்தா பக்தர்கள் வருவார்கள்னு கண்டுபிடிச்ச கோயில்கள்தான். (‘துக்ளக்’, 20.6.2012)

இதில் யார் சொல்லுவது சரி?

‘சோ’ கூறுவதா?

குருமூர்த்தி சொல்லுவதா?

இலவசம், இலஞ்சம் தொடங்கியது கோவிலில் என்கிறார் ‘சோ’ அய்யர். இல்லை, அரசியலில் தொடங்கியது” என்கிறாரே குருமூர்த்தி அய்யர்!

குடுமிக் கூட்டத்திலேயே குழப்பமா?

‘சோ’ படத்தின்முன் குருமூர்த்தி தோப்புக்-கரணம் போடுவாரோ!ஸீ

– கலி.பூங்குன்றன்


 

‘நீட்’ தேர்வு ஊழல்கள்

2018ஆம் ஆண்டு ‘நீட்’ தேர்வில் அகில இந்திய அளவில் 691 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பெற்றவர் பிகாரைச் சேர்ந்த கல்பனா குமாரி. பிகாரில் படித்த அந்த மாணவி குறைந்த அளவு வருகைப் பதிவுகூட இல்லாத நிலையில், நீட்டுக்காக டில்லியில் இரண்டாண்டுகள் தங்கிப் படித்துத் தம்மை தயார்படுத்திக் கொண்டுள்ளார்.

வருகைப் பதிவு பற்றி பிரச்சினை எழுந்தபோது பிகார் மாநிலக் கல்வி அமைச்சர் கிருஷ்ணானந்த் என்பவர் என்ன சொன்னார் தெரியுமா?

பிகாரைச் சேர்ந்த கல்பனா குமாரி ‘நீட்’ தேர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடித்து பிகார் மாநிலத்துக்கு பெரிய அளவில் பெருமை சேர்த்துள்ளார். அதைப் பாராட்டுவதற்குப் பதிலாக அவரது வருகைப் பதிவு குறித்த சர்ச்சை எழுப்புவது தேவையில்லாதது என்று சொன்னாரே பார்க்கலாம்! கல்பனாவின் தந்தை பிகார் மாநிலத்தில் பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சியளிக்கும் பேராசிரியர் குழுவின் தலைவராம். எப்படிப் போகிறது பார்த்தீர்களா? பார்ப்பன குலத்தில் பிறந்த பெண்ணாயிற்றே – சட்டம் வளைந்து கொடுக்காதா? மற்றவர்களுக்கு இந்த வாய்ப்புக் கிட்டுமா? கிடைக்கத்தான் விடுவார்களா?


 

நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பார்வையில் நீட் பாதிப்புகள்

2019_2020இல் ‘நீட்’ தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடம் பெற்ற மாணவி கண்டேல்வால். இவரின் தந்தை, தாய், அண்ணன் மூவரும் டாக்டர்கள். அலைன் ‘நீட்’ பயிற்சி வகுப்பில் படித்தவர்.

இரண்டாம் இடம் பிடித்தவர் யார்? பாவிக். தந்தை டில்லி மாநிலக் கல்வித் துறையில் பெரிய அதிகாரி. தாயார் இயற்பியல் பேராசிரியர். இம்மாணவி 2019ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பிறகு ஆகாஷ் ‘நீட்’ தனிப் பயிற்சியில் சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்றவர்.

மூன்றாம் இடத்தைப் பிடித்தவர். சுருதி என்ற மாணவி. பெற்றோர் இருவரும் டாக்டர்களே. இவரும் தனியார் பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்தான்.

டாக்டர் ஏ.கே.ராஜன் அவர்களின் ஆணையம் என்ன கூறுகிறது? 71 விழுக்காட்டினர் ஒரு முறைக்கு மேல் ‘நீட்’ தேர்வு எழுதியவர்கள்தாம்.

ஆகாஷ் என்ற ‘நீட்’ பயிற்சி நிறுவனம் ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 8 லட்சம், அலைன் நிறுவனம் ரூ.5 லட்சம் முதல் 7 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றன.

இதன் பொருள் என்ன? பெற்றோர்கள் நன்கு படித்திருக்க வேண்டும் _ லட்சக்கணக்கில் செலவு செய்து பயிற்சி பெறும் வசதி இருக்க வேண்டும் என்பதுதானே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *