மிகு இரத்த அழுத்தம்
(HYPER TENSION)
மரு.இரா.கவுதமன்
நோய்க் காரணிகள்:
முதன்மை மிகு இரத்த அழுத்தம்:
மரபணு இந்நோய்க்கு ஒரு காரணியாக அறியப்பட்டுள்ளது. மரபணு ஆய்வில் 35 வகை மரபணுக்கள் மிகு இரத்த அழுத்தத்திற்குக் காரணியாக அறியப்பட்டுள்ளன.
வயது மூப்பின் காரணமாக மிகு இரத்த அழுத்தம் ஏற்படலாம். மேற்கத்திய உணவு வகைகள் (Western Diet), வாழ்க்கை முறைகள் நாளடைவில், மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.
அதிக பருமன் உடையவர்களுக்கு மிகு இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
உடற் பயிற்சிகள் இல்லாத சோம்பல் வாழ்க்கை (Sedentary Life) மிகு இரத்த அழுத்தம் ஏற்பட ஒரு காரணியாக அமையும். “காஃபின்’’ (Caffeine) பயன்பாடு (Caffine consumption), வைட்டமின் டி குறைபாடு (Vitamin D Deficiency), இன்சுலின் எதிர்ப்பு நிலை (Insulin Resistance) ஆகியவை உடல் பருமனை அதிகமாக்கும். அது மிகு இரத்த அழுத்தம் உண்டாக்கும்.
வளர்சிதை மாற்ற நோய் கூட்டறிகுறிகள் (Metabolic Syndrome) கூட முதன்மை மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம்:
இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம், உடலில் வேறு நோய்களின் விளைவாக ஏற்படும்.
சிறுநீரக நோய்கள் மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.
நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கக் குறைபாடு இந்நோய்க்கு ஒரு முக்கிய காரணியாக அமையும்.
சிறுநீரகத் தமனிகள் குறுகல் மிகு இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். பருமன் உடல் உள்ளவர்களுக்கு இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். உறக்கத்தில் மூச்சுத் திணறல் (Sleep Apnea).
மகளிர்க்கு மகப்பேறு காலத்தில் இந்நோய் உண்டாகலாம்.
மகா தமனியில் சுருக்கம் (Coarctation of Aorta) மிகு இரத்த அழுத்தம் உண்டாக்கும்.
மதுப் பழக்கம், புகைப் பிடித்தல் தொடர்ச்சியாகவும், நீண்ட நாள்கள் நீடித்தலும் இந்நோயை ஏற்படுத்தும்.
சில வகை மருந்துகள் (Certain Medicines),
நாட்டு மருந்துகள் (Herbal remedies),
‘கொக்கைன்’ (Cocaine) போன்ற போதை மருந்துகள்,
‘ஆர்சனிக்’ (Arsenic) புழக்கம் போன்றவை இரத்த அழுத்தத்தைக் கூட்டிவிடும்.
தனிமையும்கூட சிலருக்கு இந்நோயை ஏற்படுத்தக் கூடும். மன அழுத்தம் (Stress) பலருக்கு மிகு இரத்த அழுத்தத்தை எற்படுத்தும்.
நோய்க் கூறியல் (Pathology):
மிகு இரத்த அழுத்தம் இதயத்தில் இருந்து வெளியேறும் இரத்தத்தின் அளவு இயல்பான நிலையில் இருக்கும். இரத்தக் குழாயில் இரத்தத்தின் அளவு அதே அளவு இருக்கும். ஆனால், இரத்தக் குழாய் சுருக்கத்தால் இரத்த அழுத்தம் அதிகமாகும் (Total Peripheral Resistance). சில நோயாளிகளின், இதய இரத்த வெளியேற்றம் அதிகமாகவும், இரத்தக் குழாய் அழுத்தம் இயல்பாகவும் இருக்கும். பெரும்-பாலும் இந்நிலை மிகு இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முன்னிலை (Pre hypertension) யாக இருக்கும். இவர்கள் வயது மூப்பாகும்பொழுது மிகு இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவர். அந்த நிலையில் இதய இரத்த வெளியேற்றம் (Cardiac Output) இயல்பானதாகவும், இரத்தக் குழாய் அழுத்தம் மிகுந்தும் மாறிவிடும். இதுவே இவர்களுக்கு மிகு இரத்த அழுத்தம் ஏற்படக் காரணமாகும். இரத்தக் குழாய் அழுத்தம், தந்துகிகளின் (Capillaries) சுவர்கள் குறுகலால்தான் அடிப்படையில் ஏற்படுகிறது. நாளடைவில் சிறு தமனிகள் குறுகலாகிவிடும்.
தந்துகிகள் அடர்த்தி குறைபாட்டால் கூட மிகு இரத்த அழுத்தம் ஏற்படும். பொதுவாக தந்துகிகள், தமனிகள் இவற்றின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் (Narrowing) மிகு இரத்த அழுத்தம் ஏற்படுத்தும். மிகு இரத்த அழுத்தம் சிரைகளின் தந்துகிகளில் தேக்கம் (Peripheral Venous Compliance), இதயத்தில் இரத்தம் தேங்கத் துவங்கும். இது இதய விரிவாக்க செயல்-பாட்டைப் (Diastalic Dysfunction) பாதிக்கும். முதியவர்களுக்கு நாடி அழுத்தம் (Pulse Pressure) மிகு இரத்த அழுத்தம் உள்ள நிலையில் உண்டாகும். இவர்களுக்கு இதய சுருக்கழுத்தம் (Systolic) மிகவும் அதிகமாகவும், இதய விரிவழுத்தம் (Diastolic) இயல்பு நிலையிலோ அல்லது குறைவாகவோ இருக்கும். இது “மிகு சுருக்கத்தழுத்தம்’’ (Systolic Hypertension) என்று அழைக்கப்படுகிறது. முதியவர்களுக்கு இரத்தக் குழாய்கள் கெட்டிப்பட்டு (Vascular Stiffness), சுருங்கி, விரியும் தன்மை குறைந்துவிடும். இதன் விளைவாகவே நாடி அழுத்தமும், மிகு சுருக்கழுத்தமும் ஏற்படும். சிறுநீரக நோய் மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். சிறுநீரகங்கள் உப்பையும், நீர் அளவுகளையும் சீராக வைத்துக் கொள்ளும். சிறுநீரக நோய்கள் இந்த நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். ரெனின் ஊக்கி நீர், சுரப்பு அதிகரிக்கும் நிலை, சிறுநீரகங்களில் நோய் ஏற்படுத்தும். இதனால் இரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகமாகும் (Renin-Angiotension System). இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தானியங்கி உணர்ச்சி நரம்பு மண்டலத்தில் (Autonomous nervous system – Sympathetic nervous system) ஏற்படும் குறைபாடுகள் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட ஒரு காரணமாக அமையும். இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழற்சி (Inflammation of vessels) மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.
அதிக அளவு சோடியம், பொட்டாசியம் உடலில் சேர்வதால், மிகு இரத்த அழுத்தம் ஏற்படும். அடிப்படையில் இரத்தக் குழாய் நோய்கள், சிறுநீரக நோய்கள், பருத்த உடல், இதய நோய்கள் போன்றவையும், உணவுப் பழக்கங்களும், உடற்பயிற்சியற்ற சோம்பல் வாழ்க்கை முறையும் இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம் ஏற்பட காரணிகளாக அமைகின்றன.
(தொடரும்…)