முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
பேராசிரியர், திராவிட இயக்க ஆராய்ச்சி மய்யம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை – 600 005
வாக்கு அரசியல் வேண்டாம் என இவர் ஒதுங்கியதுபோல், வாழவைப்போம் உழவர்-களை, எஞ்சிய நிலத்தைப் பெற்றுக் கஞ்சியின்றி வயிறு காய்ந்தவருக்கு பூதானம், கிராமதானம் என்று நேர்வழி நேர்மை வழியாகக் கண்டவர் வினோபா. அதற்கும் மேலே ஜாதி ஒழிய வேண்டும் என்று தந்தை பெரியாரின் தன்னிகரில்லாக் கொள்கையைப் பேசியும் வந்தவர்.
அவர் போலவே வாக்கு வங்கியைத் தேடிச் செல்லாத, காந்தியின் அடிப்படைக் கோட்பாடு-களாம் தன்மதிப்பு எனும் சுயமரியாதை, அகிம்சை எனும் வன்முறையற்ற புரட்சி இரண்டையும் இறுகப் பற்றிக் கொண்ட முரட்டு காந்தி பக்தர் தந்தை பெரியார்.
எண்ணிப் பார்த்தால், இப்படி ஓர் அற்புதத் தலைவரா! என தந்தை பெரியாரை வியக்கிறோம். எத்தனை எத்தனை போராட்டங்கள், எத்தனை முறை சிறைக்கொட்டடி!
1957லே நடத்தினாரே மாபெரும் ஜாதி ஒழிப்பு அறப்போர். நாலாயிரம் பேர் குறைந்தது மூன்று மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறையேகினரே! பதினெட்டு இன்னுயிர்கள் பலியாகினவே!
காந்தியின் சீடர் வினோபா தமிழ்நாட்டுக்கு வந்தார். திருச்சியில் தேசியக் கல்லூரியில் தங்கியிருந்தார். தந்தை பெரியாரைச் சந்திக்க விழைந்தார். சங்கராச்சாரியார் அழைத்தும் செல்லாத தந்தை பெரியார், தானே வந்து சந்திக்கிறேன் என்று புறப்பட்டார். காரணம், தந்தை பெரியார் காலமெல்லாம் வலியுறுத்தி வந்த ஜாதி ஒழிப்பை ஆச்சாரியார் _ அன்பு நண்பர் ஏற்காத போதும், இந்த ‘ஆச்சாரியா’ என அழைக்கப்பெற்ற வினோபாவோ ஜாதி ஒழிப்புக் கொள்கையைக் கொண்டவர். அதனால்தான் தந்தை பெரியார் தானே சென்று அவரைச் சந்தித்தார்.
“விமானங்களும் மற்றைய போக்குவரத்துச் சாதனங்களும் தேவைதான். ஆனால், மனிதனுக்குக் கால்கள்தான் முக்கியம்’’ என்று சொன்னதோடு 14 ஆண்டுகள் 70,000 கிலோ மீட்டர் நடந்து, 42 லட்சம் ஏக்கர் நிலத்தை நிலவுடைமையாளர்களிடமிருந்து பெற்று, நிலம் இல்லாதவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். 1940இல் காந்தி தனிநபர் அறப்போர் நடத்தியபோது அதில் முதல் அறப்போர் மறவர் வினோபா பாவே. தந்தை பெரியார் போலவே ஏறக்குறைய 97 ஆண்டுகள் வாழ்ந்தவர். காந்தி சொன்ன ‘பயமின்மை இல்லாவிடில் அகிம்சை இருக்க முடியாது’ என்பது வினோபா பாவை ஈர்த்தது போல் தந்தை பெரியாரையும் ஈர்த்ததால் மதம், ஜாதி, பணம், செல்வாக்கு எதைக் கண்டும் அஞ்சவில்லை. ஆனால், ஒரே ஒரு வேறுபாடு _ வினோபா பார்ப்பனர்; தந்தை பெரியார் பார்ப்பனரல்லாதார்.
19.1.1957 காலை 10:00 மணிக்கு பூமிதானக் குழு அமைப்பாளர் பழனிச்சாமி, திருச்சி மாளிகைக்கு ஜீப் கொண்டு வந்து தந்தை பெரியாரை அழைத்துச் செல்ல வந்தார். தந்தை பெரியார் தனது வாகனத்திலேயே வருவதாகக் கூறி தனது ஊர்தியிலேயே சென்றார். அன்னை மணியம்மையாரும் உடன் சென்றார். குறித்த நேரத்தில் தந்தை பெரியார் திருச்சி தேசியக் கல்லூரி சேர்ந்தார். வினோபா, தயிர் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர், தந்தை பெரியாரை மகிழ்ச்சியுடன வரவேற்றார்.
வினோபா வேட்டி மட்டும் அணிந்திருந்தார். அவரைப் பார்த்ததும், “வணக்கம்’’ என்று தந்தை பெரியார் சொன்னார். வினோபா பாவே கைகளைக் கூப்பிப் பதில் வணக்கம் தெரிவித்தார்.
“இவர்தான் பெரியாரின் மனைவி மணியம்மை’’ என்று பூமிதானப் பணியாளர்கள் அன்னையாரை அறிமுகம் செய்து வைத்தனர்.
மணியம்மையாரை அமரும்படி வினோபா கேட்டுக் கொண்டார்.
“உங்களுக்கு எத்தனை வயது ஆகிறது?’’ என்று தந்தை பெரியாரிடம் இந்தியில் வினோபா கேட்டார்.
அதை மொழிபெயர்ப்பாளர் தமிழில் சொன்னதும், “எனக்கு 78 வயது’’ எனத் தமிழில் பதில் கூறினார்.
78 வயது என அய்யா சொன்னதும், “அப்படியா! நூறுக்கு இன்னும் 22 பாக்கி’’ என பாவே சொன்னார்.
இச்சந்திப்பு இப்படி நிகழ்ந்தது.
சந்திக்கும் செய்தியறிந்து ஆயிரக்கணக்கான பொதுமக்களும், திராவிடர் கழகத் தோழர்களும், ஊடக நண்பர்களும் வந்திருந்தனர்.
தந்தை பெரியார் வினோபா பாவேயுடன் உட்கார்ந்ததும் புகைப்படக் கலைஞர்கள் சூழ்ந்து கொண்டு பல கோணங்களில் நிழல்படம் எடுத்துத் தள்ளினர்.
கல்லூரி மாடியில் இருவரும் உரையாடினர். உரையாடலின்போது பத்திரிகை நிருபர்களும் மற்றவர்களும் அருகிலிருக்க அனுமதிக்கப்பட-வில்லை. வினோபா பாவே, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், மொழி-பெயர்ப்பாளர் ஆக நால்வர் மட்டுமே.
காலை 10:40 மணிக்குத் தொடங்கி பகல் 12:30 மணி வரையில் சுமார் 2 மணி நேரம் இருவரும் மனம் விட்டுச் சுமுகமான சூழலில் உரையாடினர்.
பிறகு தந்தை பெரியாரும் மணியம்மையாரும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டனர்.
“என்ன பேசினீர்கள்?’’ என்று பெரியாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “எல்லாம் அப்புறம்’’ என்று மட்டும் கூறிக் கொண்டே தந்தை பெரியார் மணியம்மையுடன் காரில் ஏறிப் புறப்பட்டார்.
“ஈ.வெ.ரா. பெரியாருடன் பேசியது பற்றி ஏதாவது கூற விரும்புகிறீர்களா?’’ என்று வினோபாவிடம் நிருபர்கள் கேட்டனர்.
“ஒன்றும் இல்லை’’ என்ற வினோபா தலையை ஆட்டினார்.
இருவரும் என்ன பேசினார்கள் என்பது ஒன்றும் ரகசியமாக இல்லை. ஆனால், 19.1.1957 ‘விடுதலை’யில்,
“திராவிடர் தலைவர் பெரியாரும், ஆச்சார்யா வினோபா பாவேயும் சந்தித்தனர்’’
“ஜாதியொழிப்புப் பணியில் மனமொத்த பேச்சு!
புராண இதிகாசங்களைப் பற்றிச் சுவைமிக்க உரையாடல்
திருச்சி கல்லூரியில் இருவரும் தனித்து அளவளாவினர்’’
என்று முழுச் செய்தியும் வெளிவந்தது.
வினோபா பாவேவுக்குத் தமிழ் தெரியு-மென்றாலும் அவ்வளவு தெளிவாகப் பேச வராது என்பதால் அவர் இந்தியில் பேசினார். இருவருக்குமிடையேயான உரையாடலை ஒருவர் மொழிபெயர்த்துச் சொன்னார்.
வினோபா பாவே, “ஜாதி ஒழிப்பு என்னுடைய முக்கியக் கொள்கையில் ஒன்று. தேர்தல் சண்டையில் கலந்து கொள்ளாமல் நீங்கள் சமுதாயப் பணி செய்து வருவதைப் பாராட்டுகிறேன்’’ என்றார்.
இராமாயணத்தைப் பற்றிப் பேசியவர், “நான் எந்த நூலையும் பிரமாதமாகக் கொள்வதில்லை. தவறான கருத்துகள் இருந்தால் ஒரு சில நல்ல கருத்துகளும் இருக்கின்றன. தவறான கருத்துகளை விட்டுவிட்டு நல்ல கருத்துகளை எடுத்துக் கொள்ளலாம்’’ என்றார்.
மேலும் அவர் இராமாயணத்தைப் பற்றி, “ராமாயணத்தை நான் சாதாரண நீதி நூலாகவே கருதுகிறேன். ஜாதியை ஒழிக்கும் பணியில் உள்ளவர்கள், இதுபோன்ற நூல்-களையும், கடவுள்களையும் ஒழிக்கிறேன் என்கிறீர்கள். நமக்கு முக்கியமான கருத்துகளை மட்டும் வற்புறுத்தி மற்றவைகளில் தளர்த்திக் கொடுப்பதன் மூலம் அதிகக் கூட்டமான மக்கள் நம் பக்கம் திரும்பக் கூடும். நமது குறிக்கோள் ஜாதியை ஒழிப்பது. அதை மாத்திரம் வற்புறுத்தினால் போதும். கடவுள்-களையும் புராண ஆதாரங்களையும் ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்காக ஒழிக்கக் கிளம்பினால், புராண ஒழிப்பு, கடவுள் ஒழிப்பு வேலையாகவே-தான் இருக்க வேண்டும். புராண, இதிகாசங்களில் உள்ள நல்ல கருத்துகளை வைத்துக் கொண்டே ஜாதியை ஒழிக்கலாம்’’ என்றார் வினோபா பாவே-.
மேலே கண்ட வினோபாவின் கருத்திலிருந்து ஜாதியை ஒழிக்க வேண்டும் எனும் கருத்தில் மாற்றமில்லை.
எனவே, வினோபா பாவேக்குத் தக்க பதில் தரவேண்டியவரானார் தந்தை பெரியார். தம் கருத்தை வெளியிட்டார்.
“இராமாயணம் நீதி நூல் என்பதற்கு அதில் ஒன்றும் இல்லை. நீதி கற்பிக்கக் கூடிய தன்மையில் அதில் ஒன்றுமே கிடையாது. நல்ல கருத்துகள் இருப்பதாக ஒன்றும் இல்லை. இரண்டொருவர்களுக்கு வேண்டுமானால் நல்ல நல்ல கருத்துகள் மாத்திரம் எடுத்துக் கொள்ளலாம். நாம் பொதுமக்கள் என்பவர்-களை மனதில் வைத்துப் பார்க்க வேண்டும்.
விஷத்தின் மீது சர்க்கரை பூசிக் கொடுத்தால் எத்தனை பேருக்கு சர்க்கரையை மட்டும் சப்பி விட்டு விஷத்தைத் துப்பி விடக் கூடிய சக்தி இருக்கும்? மக்களுக்கு நீதி நூல் தேவையென்றால் பாவே போன்றவர்கள் புதிதாக எழுதித் தரலாம். அந்த இதிகாசங்களை எழுதியவர்களும் பாவே போன்ற மனிதர்கள்தானே? அதுவும் அந்தக் காலத்து மனிதர்கள்’’.
ஜாதி ஒழிய வேண்டுமானால் அதற்கு ஆதாரமாக இருக்கின்ற இராமாயணம், பாரதம், மனு போன்ற புராண இதிகாசங்கள், கடவுள் எல்லாம் ஒழிந்தே தீர வேண்டும். ஒரே ஆண்டவன் என்பவன் கூட ஜாதிக்கு ஆதாரமாயிருந்தால் ஒழித்தே தீரவேண்டும்.
இராமாயணம், பாரதம் போன்ற கடவுள்களிடத்திலும் மற்றும் பதிவிரதை என்று சொல்லப்படுகிறவர்களிடத்திலும் கொஞ்சம் கூட யோக்கியத் தன்மையோ, நாணயமோ காணப்படவில்லை. அதைப் படிக்கிற மக்களுக்கும், அதிலிருந்து நாணயமோ, ஒழுக்கமோ வந்ததாகவும் இல்லை. நான் கடவுள் என்று ஒன்று உண்டு என்று புரிந்து-கொள்ளவும், அந்த ஒரு கடவுள் நம்பவும் முடியாவிட்டாலும், இல்லையென்று மறுத்துப் பேச வரவில்லை. ஆனால், ஜாதிக்கு ஆதாரமாக இருக்கிற மனுதர்மம் போன்ற சாஸ்திரங்-களையும் ஜாதிக்கு ஆதாரமாயிருக்கிற சாத்திரங்கள் ஜாதிக்கு ஆதாரமாயிருக்கிற ராமன், கிருஷ்ணன், பிரம்மா, விஷ்ணு போன்ற கடவுள்களையும் வைத்துக் கொண்டு ஜாதியை ஒழிக்க முடியாது. நான் வால்மீகி, கம்ப ராமாயணம் போன்ற நூல்களைப் படித்தே கூறுகிறேன்’’ என நீண்ட பதில் கூறினார்.
இவ்வாறு ராமாயணத்தில் உள்ள ஆதாரங்களைத் தந்தை பெரியார் எடுத்துக் காட்டியபோது, வினோபா பாவே குறுக்கிட்டு, “நான் துளசி ராமாயணமும், மராட்டி ராமாயணமும்தான் படித்திருக்கிறேன். அவற்றில் அப்படியில்லை’’ என்று கூறினார்.
அதற்குத் தந்தை பெரியார், “நீங்கள் ஏழெட்டு மாதங்களாகத் தமிழ்நாட்டில் எனது சமுதாய மக்களுக்கு ஜாதி ஒழிய வேண்டும் என்ற கருத்தைச் சொல்லி வருவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதைப் பத்திரிகைக்காரர்-கள் போடுவதே இல்லை. ஜாதி ஒழிய வேண்டும் என்ற கருத்தை மறைக்கவே பார்க்கிறார்கள். அவரவர்களுக்கு வேண்டிய சங்கதி மாத்திரம் போடுகிறார்கள். நான்தான் எனது பத்திரிகை-யில் நீங்கள் சொல்லும் ஜாதி ஒழிப்பு வேண்டுமென்ற கருத்துகளைப் போடுகிறேன்’’ என்றார்.
வினோபா பாவே, “தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் நீங்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செய்ய வேண்டும். அதிக நிலதானம் கிடைக்க உதவி செய்ய வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்தார்.
அதற்குத் தந்தை பெரியார், “என்னால் கூடுமான உதவிகளைச் செய்கிறேன். நான் கொண்டுள்ள வேலை அதாவது ஜாதி ஒழிப்பு முக்கியமானது.’’
இவை மட்டுமல்லாது கல்வி நிலை குறித்தும், பல்வேறு கருத்துகள் குறித்தும் உரையாடினர்.
உரையாடல் முடிந்ததும் வணக்கம் தெரிவித்து விட்டு, தந்தை பெரியார் புறப்பட்டார்.
தேசியக் கல்லூரி பார்ப்பனர் கல்லூரி என்ற போதிலும் அக்கல்லூரி முதல்வர் வரதாச்சாரி தந்தை பெரியார் தங்கள் கல்லூரிக்கு வருகை புரிந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து, தந்தை பெரியாரை வரவேற்று, தேநீர் அளித்துள்ளார்.
‘தந்தை பெரியார் வாழ்க!’ எனும் பேரொலிக்கிடையே தந்தை பெரியார் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தந்தை பெரியாரைப் பாவே சந்தித்ததன் தாக்கம் 19.1.1957 அன்று மாலையே வெளிப்பட்டதையும் இங்கே பதிவு செய்வோம்.
அன்று மாலை திருவரங்கத்தில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில், “கோயில் தேவஸ்தானங்களின் உடைமையாக ஏராளமாகச் செல்வமிருந்து வருவதை என்னால் ஆதரிக்க முடியாது. இவ்வாறு கோயில்களில் பெருஞ்செல்வம் முடங்கிக் கிடப்பது பக்திப் பிரச்சாரத்திற்கே பெரும் முட்டுக் கட்டையாகும். பண்டரிபுரத்தைப் போல ஸ்ரீரங்கமும் வைணவ ஆச்சாரியார்-களுக்குப் பிறப்பிடமாக விளங்கி வருகிறது. இவ்வாச்சாரியார்களும் இந்து மதத் தலைவர்-களும் தோன்றி எவ்வளவோ உபதேசங்கள் செய்து வந்தும் நாட்டில் இருந்து வரும் கேடுகளை எவராலும் களைய முடியவில்லை. சமூகத்திலுள்ள கேடுகள் அப்படியே இருந்து வருகின்றன’’ என்று பேசியுள்ளார் வினோபா பாவே.
நாட்டிலே நாத்திகம் இவ்வளவு தூரம் பரவி வருவதற்குக் காரணம் ஆத்திகர்களின் ஒழுக்கக் குறைவுதான் என பாவே இடித்துரைத்தார் எனில், உண்மையான காரியங்கள் செய்வதற்குப் பணம் தேவை இல்லையென்றும், பணமில்லாத ராமானுஜர் எவ்வளவு நன்மைகளைச் செய்தார் என்றும், பணம் வைத்துள்ள தேவஸ்தானங்கள் என்ன நன்மை செய்திருக்கின்றன என்றும் கேட்டார்.
அதுபோலவே சங்கராச்சாரியார் மடங்-களால் இன்று என்ன நன்மை செய்ய முடிகிறது? என்று பாவே கேட்டார். கேட்டவர் பெரியார் அல்ல; இறை நம்பிக்கையுடைய பார்ப்பனரான பாவே.
இறுதியாகக் கோயிலைச் சேர்ந்தவர்கள் தங்களைச் சேர்ந்த மக்களிடம் அன்பாகவும் அனுதாபத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுரை கூறவும் தவறவில்லை.