மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (94)

பிப்ரவரி 1-15,2022

மிகு இரத்த அழுத்தம்

(HYPER TENSION)

மரு.இரா.கவுதமன்

இரத்த அழுத்தம்  (Blood Pressure) நம் உடல் இயக்கத்திற்குத் தேவையான ஓர் அடிப்படைச் செயல்பாடு ஆகும். தூய்மைப்படுத்தப்பட்ட இரத்தம் தமனிகள் (Arteries), தந்துகிகள் மூலம் உடலில் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லவும், செலுத்தப்படுவதற்கும், இரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தமே காரணம். இதயத்திலிருந்து, இரத்தம் இந்த அழுத்தத்தின் மூலமே மூளைக்குச் செலுத்தப்படுகிறது. இரத்த அழுத்தம் இல்லாவிடில் மூளைக்குச் செல்லும் இரத்தம் தடைப்பட்டு, மூளையின் செயல்பாட்டை நிறுத்திவிடும். உடல் இயக்கம் நின்று விடும். மரணம் நிகழும்.

‘B.P.’  என்று பொதுவாக நம்மால் சொல்லப்படும் சொல்தான் ‘இரத்த அழுத்தம்’ என்ற செயல்பாடு. இயல்பு நிலையில் நம் உடலில் இரத்த அழுத்தம் 120/80 மி.மீ என்ற அளவில் இருக்கும். இதயம் சுருங்கி, விரியும் நிலையில், இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழுத்தத்தின் அளவீடே இது. இதயம் சுருங்கும்பொழுது (Systolic) அதிக வேகத்தோடு இரத்தக் குழாய்க்குள், இரத்தம் செலுத்தும்-பொழுது அழுத்தம் அதிகளவில் இருக்கும். அதுவே 120 மி.மீ அளவு! இதயம் விரியும்பொழுது (Diastolic), இரத்தக் குழாய்க்குள் அழுத்தம் குறைவாக இருக்கும். அதுவே 80 மி.மீ என்ற அளவில் இருக்கும். நாம் வேகமாகச் செயல்படும்பொழுது, எடுத்துக்காட்டாக, ஓடும்பொழுது, படி ஏறும்பொழுது, கடின உழைப்பின்பொழுது, உடற்பயிற்சியின்போது இதயம் வேகமாகச் செயல்படும். அப்பொழுது “சுருக்க அழுத்தம்’’ (Systolic Pressure) அதிகமாகிவிடும். ஆனால், உடல் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், இரத்த அழுத்தமும் இயல்பாகி விடும். “விரிவு அழுத்தம்’’ (Diastolic Pressure) இந்த நிலைகளில் மாற்றமடையாமல் சீரான அளவில் (80 மி.மீ) இருக்கும். விரிவு அழுத்தம் (இதயம் விரியும் நிலையில்) பெரும்பாலும் மாற்றமடையாமல் சீராக இருக்கும். விரிவு அழுத்தம் குறைவு ஏற்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விரிவு அழுத்தக் குறைவினால் உடலின் கடைசிப் பகுதிக்கு இரத்தம் செல்லுவதில் குறைபாடு ஏற்படும் நிலை உண்டாகும்.

பொதுவாக இரத்த அழுத்தம் சீரான நிலையில் இருப்பதும் நம் உடல் சீராக இருப்பதற்கான ஓர் அறிகுறி! இரத்த அழுத்த மாறுபாடு இரண்டு வகைப்படும். இரத்த அழுத்தம் இயல்பான நிலையான 120/80 மி.மீ இருந்து அதிகமாக இருந்தால் அதை “மிகு இரத்த அழுத்தம்’’ (Hypertension) என்று கூறப்படுகிறது. (பொதுவாக “ஙி.றி. இருக்கிறது’’ என்று பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். மிகு இரத்த அழுத்தத்தையே அப்படி நோயாளிகள் குறிப்பிடுகின்றனர். இரத்த அழுத்தம் குறைவை “குறை இரத்த அழுத்தம்’’ (Hypotension) என்று குறிப்பிடப்படும். இரத்த அழுத்தம் சீராக வைத்துக் கொள்ளுதல் மிகவும் தேவையான ஒன்று. இதைச் சீராக வைத்துக் கொள்ளா-விட்டால், பல தொல்லைகளுக்கு நாளடைவில் வழிவகுக்கும்.

மிகு இரத்த அழுத்தம் (Hypertension)

மிகு இரத்த அழுத்தம், இயல்பான அளவான 120/80 மி.மீ.யை விட அதிகம் இருக்கும் நிலையாகும். மிகு இரத்த அழுத்தம் ஒரு நீண்ட காலம் இருக்கும் நோயாகும். இரத்தக் குழாய்களில் (தமனிகளில்) அழுத்தம் அதிகமாகும் பொழுது மிகு இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. மிகு இரத்த அழுத்தம் எந்தவித அறிகுறிகளும் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கும். அதனால் நோயாளிகள் அதை உணராமலேயே இருக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். ஆனால், நீண்ட நாள்கள் இருக்கும் மிகு இரத்த அழுத்தம், திடீரென ஆபத்தை உண்டாக்கும். பக்கவாதம், மாரடைப்பு போன்றவற்றை உண்டாக்கக் கூடியது மிகு இரத்த அழுத்தம் ஆகும். எந்தவித அறிகுறிகளும் வெளிப்படுத்தாமல், திடீரென உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியதாக மிகு இரத்த அழுத்தம் இருப்பதால் இதனை ‘அமைதியான கொலைகாரன்’’ (Silent Killer) என்று முன்பு குறிப்பிடுவர்.

நீண்ட நாள்களாக இருக்கும் மிகு இரத்த அழுத்தம் உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு மேலும் பல சிக்கல்களையும் ஏற்படுத்தும். இதயச் செயலிழப்பு (Heart Failure), இதய மேலறை நடுக்கம் (Arterial Fibrillation), இரத்தக் குழாய் நோய்கள் (Arterial diseases), பார்வை இழப்பு (Vision loss), சிறு நீரகச் செயலிழப்பு (Kidney Failure) போன்ற ஆபத்துகளும் மிகு இரத்த அழுத்தத்தால் ஏற்படும். மிகு இரத்த அழுத்தம் “முதன்மை மிகு இரத்த அழுத்தம்’’ (Primary (essential) Hypertension) என்றும் “இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம்’’ (Seconday Hypertension) என்றும் இரு வகைப்படும். முதன்மை மிகுஇரத்த அழுத்தம்தான் அதிகளவில் நோயாளிகளிடம் (90%) காணப்படும். வாழ்க்கை முறை (Life Style), மரபியல் (Genetic) காரணங்களால் முதன்மை மிகு இரத்த அழுத்தம் ஏற்படக் கூடும்.

வாழ்வியல் முறைகள் என்பது அதிக உப்புள்ள உணவுகளை உண்ணுதல், அதிக எடை, புகைப்பிடித்தல், மதுப் பழக்கம் போன்றவை மிகு இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். மீதியுள்ள 5 முதல் 10 சதவிகித நோயாளிகள் இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். சிறுநீரகச் செயலிழப்பு, சிறுநீரகத் தமனிகளில் குறுகல் (Narrowing of renal arteries) ஊக்கி நீர்க் குறைபாடுகள் (Hormone imbalance),  கருத்தடை மாத்திரைகள் நீண்ட நாள்கள் பயன்படுத்துதல், இரத்தத் தமனிகள் குறுகல் (Narrowing of arteries) போன்றவை இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

முதன்மை மிகு இரத்த அழுத்தத்தைவிட இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம் ஆபத்தானது. நீண்ட நாள் நோயாகவும் இது இருக்காது. நோய்க்குக் காரணமான மற்ற நோயின் அறிகுறியும் இணைந்தே தெரியும்.

முதன்மை மிகு இரத்த அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றங்களால் சீராக்க முடியாவிட்டால், மருந்துகள் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய நிலை ஏற்படும். மருந்துகள் 90% நோயாளிகளின் இரத்த அழுத்தத்தை முழுமையாகக் கட்டுப்-படுத்திவிடும். உலகில் மிகுஇரத்த அழுத்தத்தால் 16% முதல் 37% பேர்கள் பாதிக்கப்படுவதாகவும், 18% இறப்புகள் மருத்துவம் செய்து கொள்ளப்படாத மிகு இரத்த அழுத்த நோயால் ஏற்படுவதாகவும் ஒரு மருத்துவக் குறிப்பு கூறுகிறது.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *