– கவிக்கோ அப்துல் ரகுமான்
வைகறைப் பொழுதில்
மேலே
அடக்கிய இரவின் கருப்பும்
கீழே
கோபத்தோடு எழுகின்ற
சூரிய ஒளியின் சிவப்புமாய்
வானத்தில்
உன் கொடி ஏறுகிறது.
ஒடுக்கி வைத்திருந்த
இருளை
புரட்சி நெருப்பு
எரிக்கிறது.
இருட்டுக்கு
அபாய அறிவிப்பு.
இருட்டை எதிர்க்கும்
எங்கள் போரில்
சிவப்பு ரத்தம்
சிந்துகிறது.
கிழக்குக் கிளையில்
எங்கள்
வசந்தத்தை அறிவிக்கும்
இரு வண்ணப் பூ
மலருகிறது.
இரு வண்ணக் கொடி
எங்கள்
கண்ணீர் துடைக்க
நீ தந்த கைக்குட்டை.
எங்கள்
காயங்களுக்குக்
கட்டுப் போட
நீ தந்த காரச் சீலை.
எங்கள்
இன மானம் காக்க
நீ தந்த ஆடை.ஸீ
(விதைபோல் விழுந்தவன் தொகுப்பிலிருந்து…)