சிந்தனைக் களம் : அண்ணா நினைவு நாள் (பிப்ரவரி 3)அண்ணா நினைவு நாள் (பிப்ரவரி 3)

பிப்ரவரி 1-15,2022

மனம் அண்ணாவைத் தேடுகிறது…

சூரியா கிருஷ்ணமூர்த்தி

 

டிசம்பர் 3, 2016 அன்று மேனாள் அமைச்சர் கோ.சி.மணி அவர்களின் மறைவையொட்டி, முத்தமிழறிஞர் கலைஞர் நீண்டதொரு இரங்கல் கடிதத்தை எழுதினார். தன் உடன்பிறப்புகளில் ஒருவருக்கு, அவர் எழுதிய கடைசி இரங்கல் கடிதம் அதுதான்.

“ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில், அந்தக் காலத்தில் வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார், பூண்டி வாண்டையார், குன்னியூர் சாம்பசிவம் அய்யர், உக்கடை அப்பாவுத் தேவர், நெடும்பலம் சாமியப்பா போன்ற பெயர்கள் மட்டுமே உடனடியாக நினைவுக்கு  வந்த காலம் போய், மன்னை நாராயணசாமி, ஆடுதுறை கோ.சி மணி, விளநகர் கணேசன், மயிலாடுதுறை கிட்டப்பா, முத்துப்பேட்டை தர்மலிங்கம், தஞ்சை நடராசன், குடந்தை கே.கே. நீலமேகம்,  பேராவூரணி கிருஷ்ணமூர்த்தி, நாடியம் ராமையா, நன்னிலம் நடராஜன் போன்ற தொண்டர்தம் பெருமைப்  பெயர்கள் பேசப்பட்டு, அந்தப் பட்டியலில் மிச்சமிருந்த குடந்தை கோ.சி. மணியையும் இன்று இழந்து விட்டோம்.” என்பதாக தனது அறிக்கையில் கோ.சி.மணியை அடையாளப்படுத்தினார். ஒருவகையில் திராவிட இயக்கத்தின் விளைவுகள் குறித்து, தன் கடைசி கடிதத்தில் கலைஞர் வரைந்து காட்டிய சித்திரம் இது. வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியாரில் தொடங்கி கபிஸ்தலம் கருப்பையா மூப்பனார் வரையில் காவிரிக்கரையின் ஒரு காலத்தின் அடையாளங்கள் அனைத்தும் நிலக்கிழார்-களாலும், நினைத்து பார்க்கவியலாத அளவுக்கு செல்வம் படைத்தவர்களாலும் ஆனது. அவற்றை அடியோடு மாற்றிப்போட்டு சாமானியர்களின் அடையாளத்தை நிரந்தர-மாக்கிய பெருமை திராவிட இயக்கத்தின் அதிகார அரசியலுக்கு உண்டு.

மேற்சொன்ன தஞ்சையின் அடையாள மாற்றத்தை தமிழ்நாட்டின் எல்லைகளுக்கு விரிவாக்கி பார்க்கிறபோது, எத்தனை எளியவர்களால் உருவாகி எழுந்தது இந்த இயக்கம் என்பதும், அது எளியவர்களை அடையாளங்களாக எப்படி மாற்றியது என்பதும் புரியும்.

அதிகாரத்தின் வழியாக நிகழ்ந்த இந்த நிலை மாற்றத்தின் வேர் _- அண்ணா!

கொடுமையான அரசியல் நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்கிறபோதெல்லாம், நிலவுகின்ற அதிகாரத்தின் கொடுங்கோன்மை வீழ்த்தப்படும் என்று உலக உதாரணங்களை முன்னிறுத்தி ஆறுதல் சொல்வோர் அநேகம்.

எனக்கோ உள்ளூரில் இருந்த அண்ணா தான் எப்போதும் நம்பிக்கை அளிக்கிறார்.

நான் மிகச் சாதரணமானவன் என்றார் அவர். அவர் மட்டுமல்ல, அவரது தம்பிகளும் அப்படித்தான்!

அண்ணா அவர்கள், திமுக என்கிற இயக்கத்தை கட்டி, காங்கிரஸ் என்கிற பேரியக்கத்தை வீழ்த்திய கதையை, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் இப்படிச் சொல்வார்:

“வெட்ட வெளியில் கொட்டும் மழையில் தன்னந்தனியாக கையில் காசின்றி மனதில் மாசின்றி இந்தியத் துணைக் கண்டத்தில் ஏகபோக அரசியல் ஆதிக்கமாக விளக்கிய ஒரு மாபெரும் கட்சியை எதிர்த்திட, ஆட்சி பீடத்திலிருந்து அகற்றிட, தம்மையே நம்பி தம்முடன் நின்ற தம்பிமார்களை அணி வகுத்து ஓர் அமைப்பை, இயக்கத்தை உருவாக்கினார்.

அந்த சாமானியர்களின் படை தான், நாடு விடுதலை பெற்ற இருபதே ஆண்டுகளில் காங்கிரஸ் என்கிற பேரியக்கத்தின் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சரித்திரத்தை மாற்றியது. அந்த சரித்திரத்தின் மய்ய இழை அண்ணா!

“இந்தியத் துணைக் கண்டத்தில் ஏகபோக அரசியல் ஆதிக்கமாக விளக்கிய ஒரு மாபெரும் கட்சியை எதிர்த்திட, ஆட்சி பீடத்திலிருந்து அகற்றிட..” – 1960களில் அண்ணா எதிர்த்த காங்கிரஸை இரா.செழியன் இப்படித்தான் வரையறுக்கிறார். இன்றைக்கு சங்க பரிவாரங்-களுக்கு அப்படியே பொருந்துகிறது அல்லவா?. மிகச் சாதாரணனாக, நாட்டின் எதிர்காலத்தை அச்சமூட்டுவதாக மாற்றி வரும் பாஜகவின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வழிகளை நினைக்கும்போது, மனம் அண்ணாவைத் தேடுவது இயல்பு தானே.

இன்றைக்கு இந்தியா சந்தித்து வரும் பிரச்சனைகளை யோசிக்காமல் வரிசைப் படுத்தினால், அதன் பெரும்பாலான பிரச்சனை-களுக்கு அண்ணாவிடம் தீர்வு உண்டு.

1) மதவாத அரசியல்

தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் பட்டை தீட்டப்பட்டவர் அண்ணா, அவர் வாழ்நாளில் ஒருநாளும் தன்னுடைய பகுத்தறிவுக் கொள்கைகளை கைவிடாதவர் என்பதற்கு, அண்ணாவின் இரங்கல் கூட்டத்தில் இராஜகோபாலாச்சாரியாருக்கு பெரியார் அளித்த பதிலே சான்றிதழ்.

இயக்கத்திற்கான கொள்கையாக, ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பதை முன்வைத்-தார். வினோபாவுடனான நேர்காணலில் அதை வரையறுக்கவும் செய்தார். ஆனால், நடை-முறையில் அக்கட்சி கடவுள் குறித்த ‘கவலை’யற்றதாகவே இருந்தது.

“உண்டென்பார் சிலர்

இல்லையென்பார் சிலர்

எனக்கில்லை கடவுள் கவலை”

_- என்று பாவேந்தர் சொன்னது போலத்தான் அண்ணாவின் இயக்கம் செயல்பட்டது.

தனிப்பட்ட கொள்கை, கட்சியின் செயல்-பாடு என்பதையெல்லாம் தாண்டி, அரசு என்று வருகிறபோது உறுதியான வரையறைகளை அவர் முன்வைத்தார்.

அரசுக்கும் மதங்களுக்குமான உறவுகளை ஒரு எல்லையில் நிறுத்தினார், ஒவ்வொரு மதமும் அரசிடமிருந்து சம தொலைவில் இருப்பதை உறுதி செய்தார். ஒரு அரசு மதச்சார்பற்றதாகவே இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தினார்.

இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் (Preamble) ‘மதச்சார்பற்ற’ என்கிற வார்த்தையே, 1976ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட _- நாடாளுமன்ற வரலாற்றில் நீண்ட சட்டதிருத்தம் என்று குறிப்பிடப்படும் 42ஆவது சட்ட திருத்தத்தின் மூலம்தான் சேர்க்கப்படுகிறது.

ஆனால் 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த உடனேயே, மதக்குறியீடுகள் அரசு அலுவலகங்-களில் இடம்பெறக்கூடாது என்று அரசாணை வெளியிட்டவர் அண்ணா!

2) மாநில சுயாட்சி

இந்தியாவைப் பொறுத்தவரை மாநில உரிமை பறிப்பும், அதற்கு எதிரான குரலும் நம் காலத்தில் தொடங்கியவை அல்ல. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே கல்கத்தாவின் மத்திய கவர்னருக்கும், மாகாண கவர்னர்களுக்கும் உரிமைப் பிரச்சனை ஏற்பட்டு, இலண்டன் பாராளுமன்றம் வரை விவாதிக்கப்-பட்ட நிகழ்வெல்லாம் உண்டு.

ஆக நெடிய பாரம்பரியம் கொண்ட மாநில சுயாட்சியின் வரலாற்றில் அண்ணா தனித்துவமானவர்.

அதுவரையில் அதிகார பீடங்களுக்கு இடையேயான உரையாடலாக இருந்த, ‘மாநில சுயாட்சி’க் குரலை மக்களுக்கும் அதிகாரத்திற்கும் இடையேயான உரையாடலாக மாற்றியவர் அண்ணா.

மாநில சுயாட்சியை தேர்தல் முழக்கமாக்கி, அதை வெகுமக்கள் அரசியலாக மாற்றியவர் அவர்.

இறையாண்மை குறித்து கல்விப்புல வாதங்களுக்கு இணையான வாதங்களை முன்வைத்து, பாராளுமன்றத்தில் மாநில உரிமை கேட்டவர் அண்ணா.

The Preamble to the Constitution says that the political sovereignity rests with the people. The legal sovereignity is divided between the Federal Union and the constituent units. Why not you take it that our scheme is to make the States still more effective sovereign units?
– carry on but remember, 25.01.1963

இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில், தேசிய இனங்களின் உரிமைகளை முன்னிறுத்தி, ‘தேசம்’ என்கிற சொல்லை மறுவரையறை செய்யக் கோரியவரும் அண்ணாதான்!

“I would, therefore, say this : let us rethink. We have a Constitution, of course. Stalwarts of this country sat and devised the Constitution. But the time has come for a re-thinking, for a reappraisal, for a re-valuation and for a re-interpretation of the word ‘nation’.
– Launching the Offensive, April 1962

நாடாளுமன்றத்தில் பிறர் வியக்க, கல்விப்புல ஆய்வுகளுக்கு இணையாகப் பேசியவர், எளிய தமிழில் தன் தம்பியிடம் கடிதம் மூலமும் ‘மாநில சுயாட்சியை’ப் பேசினார்.

“உடையார்க்கே, விழாவெல்லாம்; ஏழையர்க்கு ஏது? என்ற கேள்வியிலே தொக்கியுள்ள நியாயத்தை நான் மறுப்பவனல்லன். தமிழக முழுவதும் விழாக்கோலம் கொள்ளக்கூடிய விதமான வளம் கொழித்திட வேண்டும் என்று விரும்புகிறேன்; அதற்கான வழிகள் யாவை என்பதுபற்றி ஆய்வாளர்களிடம் அறிவுரை கேட்டுப் பெறுகிறேன்; திட்டம் பல தீட்டப்படுகின்றன; ஆனால், அவைகளை நிறைவேற்றத் தேவைப்படும் பணம், இந்தியப் பேரரசிடமல்லவா முறையிடவேண்டி இருக்கிறது. முறையிடுகிறேன் _- கனிவும் பணிவும் குறையாமல்; வம்பு வல்லடிப் போக்கு துளியுமின்றி. ஆனால் கிடைக்கிறதா? நிரம்ப காரணங்கள்! நியாயங்கள்! வாதங்கள்! எதற்கு?

இவ்வளவுக்கு மேல் பணம் தருவதற்கு இல்லை என்பதற்கு! என் செய்வேன்? அண்ணன் ஏன் எப்போதும் கவலைப்பட்டபடி இருக்கிறான் என்று சில தம்பிகள் கேட்கவே செய்கிறார்கள். நான் கவலைப்படாமல் எப்படி இருக்க முடியும்?

ஆகவேதான் மாநிலங்கள் அதிக அளவில் அதிகாரங்களைப் பெறத்தக்க விதத்தில் இந்திய அரசியல் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பதுபற்றி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எடுத்துக் கூறி வருகின்றேன்.”

அண்ணாவின் கடைசி பொங்கல் கடிதம், 12 ஜனவரி _- 1969.

ஆக, மாநில சுயாட்சி என்பது அண்ணாவின் இறுதி சாசனம் என்றே கூறத்தக்க அளவுக்கு, அவரது அரசியலின் மய்யமாகிப் போனது.

3) தேர்தல் ஜனநாயகம்

தேர்தல் சீரமைப்பு குறித்து அண்ணாவின் பார்வைகள் விரிவானவை. இன்றைய ஜனநாயக முறையில் 2014இல் 31% மற்றும் 2019இல் 37% பெற்ற பா.ஜ.க, தன் கொள்கைகளை 100% மக்களுக்குமான சட்டமாக மாற்றி வருகிறது.

இந்த முறைக்கு மாற்றாக தான் அண்ணா, விகிதாச்சார பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை கோரினார்.

நாடாளுமன்றத்தில் ஏப்ரல், 1962ஆம் ஆண்டு தனது முதல் பேச்சிலேயே, விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தினார்.

“As far as democracy is concerned, unless we have proportional representation coupled with a system of referendum initiated in a vast sub-continent like this, you cannot have any utility for democracy.”

4) வெறுப்புப் பிரச்சாரம்

இந்தியா சந்தித்து வரும் மிகப் பிரதான பிரச்சனை வெறுப்புப் பிரச்சாரம். அண்ணா வெறுப்புக்கு நேரெதிரானவர்.

‘வசவாளர்களை’ வாழச்சொன்னவர் அவர்.

வன்முறையை முற்றாக எதிர்த்தார். தன்னைப் பலியிட்டுக்கூட போராட்டம் நடத்தலாம், பிறரைத் துன்புறுத்திப் போராடக் கூடாது என்று தன் தம்பிகளுக்குக் கட்டளையிட்டார்.

14.01.1958இல் இலட்சக்கணக்கான கழகத் தொண்டர்கள் முன் ஆற்றிய உரையில்,

“எத்தனையோ அடக்குமுறைகளை நாம் பார்த்திருக்கிறோம். இந்த அடக்கு முறைகளையெல்லாம் கண்டு உள்ளம் வெதும்பிட மாட்டோம். ஆனால், பஸ் வண்டியைக் கொளுத்தினார்கள். கல் வீசினார்கள் என்று ஆட்சியாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அப்படி யாராவது செய்திருந்தால் அவர்கள் கழகத் தோழர்-களாகவும் ஆக மாட்டார்கள். அவர்களை என் தம்பிகளாகவும் மதிக்க மாட்டேன். நம்மிலே பத்துப்பேர் செத்தார்கள் என்பதைக் கேட்டால் என் இதயம் வெடித்து விடாது. சாகத்தான் அழைக்கிறேன் உன்னை! பத்துப் பேர் அடக்கு முறைக்கு ஆளாகித் தாக்கப்பட்டு இறந்தால் அதனால் தமிழ் நாட்டுக்கு இழப்பு ஒன்று-மில்லை. இரத்தம் சிந்தத்தான் நான் உங்களை அழைக்கிறேன். திருப்பித் தாக்குவதற்கில்லை. வன்முறையில் ஈடுபடுவதற்கு அல்ல” என்றார்.

‘சாகத்தான் அழைக்கிறேன் உன்னை’ என்று சொன்ன பிறகும் அவர் பின்னால் அணி அணியாகத் திரண்டவர்கள், இந்த நாட்டிற்குச் சொல்லும் செய்தி மிகப்பெரியது. வெறுப்பையே வாழ்வாக வரித்து வரும் கூட்டத்திற்கு அவை ஒருநாளும் புரியாது.

5) கருத்துரிமை

இன்று கருத்துரிமைக்கு எதிரான கோரத் தாண்டவங்களுக்குச் சாட்சியாகி நிற்கிறோம் நாம். ஆனால், கருத்துரிமைக்காக, இயக்கம் தொடங்கிய மேடையிலேயே போராட்டத்தை அறிவித்தவர் அண்ணா.

தி.மு.க தொடங்கப்பட்ட நாளில், ராபின்சன் பூங்காவில் அண்ணா ஆற்றிய உரையிலேயே, பெரியாரின் வழியில் போராடி சிறை செல்ல, தம்பிகளை அழைத்தார்.

முக்கியமாக, முதல் வேலையாக எழுத்துரிமை, பேச்சுரிமை எதையும் அடக்கும் சர்க்காரின் போக்கை எதிர்த்துப் போரிட திராவிட முன்னேற்றக் கழகம் முன்னணிப் படையாக அமைய வேண்டும். அதில் பங்குகொள்ள அனைவரும் வாரீர்! பெரியார் அவர்களே! நீங்கள் அளித்த பயிற்சியும் பக்குவமும் பெற்ற நாங்கள் உங்கள் வழியே சர்க்காரை எதிர்த்துச் சிறைச்சாலை செல்லத்-தான் இந்த வேண்டுகோள் விடுக்கிறேன் _ துவக்க நாளாகிய இன்றே! இப்படி இன்றைக்கு இந்தியா எதிர்கொண்டு வரும் பிரச்சனை பட்டியலிட, பட்டியலிட அண்ணாவின் சிந்தனையிலும், வாழ்விலும் தீர்வுகள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

அண்ணா எதிர்த்த காங்கிரஸ் இன்றைக்கு, அந்த வலுவுடன் இல்லை. பாஜக அதைவிடவும் தீவிரமான இடத்தில் அமர்ந்திருக்கிறது.

வழிநடத்த அண்ணா இல்லை,

அவர் சிந்தனைகள் இருக்கிறது,

அவர் வழிவந்தவர்கள் இருக்கிறார்கள்.

ஆக, இந்தியாவின் இன்றைய அச்சமிகுந்த நாள்களை விரட்டி, விடிவுக்கு செல்ல அண்ணாவின் சிந்தனைகள் இந்தியாவை ஆள வேண்டும்.

1968ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில், நீதிக்கட்சியின் மூத்த தலைவர் உலக அளவில் புகழ்பெற்ற சர்.ஏ.இராமசாமி அவர்கள், அண்ணா குறித்து இப்படிச் சொன்னார்:

“அண்ணா அவர்கள் உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் தலைவரே! அவருக்கு விதிக்கப்-பட்டுள்ள உயர் நிலையை இன்னும் அவர் அடைந்திட வேண்டும். இந்தியா முழுவதற்கும் தலைமைப் பொறுப்பினை அண்ணா ஏற்றிடும் அந்நாளைக் காண நான் ஆவலுள்ளவனாக இருக்கிறேன்.”

சர்.ஏ.இராமசாமி அவர்களின் அதே ஆவலுடன், பேரறிஞர் அண்ணாவின் சிந்தனைகள் இந்தியாவை ஆளும் நாளுக்காக காத்திருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *