அடுத்த மாதம் (பிப்ரவரி 2022) அய்ந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் அத்தேர்தல்கள் பா.ஜ.க.வுக்கு வெற்றிவாய்ப்பு குறைவாகவே இருக்கும் சோதனைமிக்க தேர்தல்களாக இருப்பதால், உ.பி.யில் _ அங்கேதான் 403 இடங்கள் _ அதிகமான இடங்கள் உள்ள சட்டமன்றம் என்பதால் அதனை ஏழு கட்டங்களாக நடத்திட அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
அது மட்டுமல்ல; இந்த அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் அந்தந்த மாநிலத்தை மட்டும் பொறுத்ததாக அமையாமல், வருகிற ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலிலும், மாநிலங்கள் அவையில் காலியாக இருக்கும் சுமார் 100 இடங்களுக்கான தேர்தலிலும்கூட இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகளால் பாதிப்பு ஏற்படக் கூடும் என்கிற கவலையும் ஆளும் ஒன்றிய பா.ஜ.க. _ ஆர்.எஸ்.எஸ். ஆட்சியாளருக்கு அதிகமாகவே இருக்கிறது.
மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் யோகி ஆதித்யநாத் என்கிற சாமியாரின் ஆட்சி நடைபெறுவது பெரிதும் யதேச்சாதிகார ஆட்சியாகவே நடைபெற்று வருகிறது. பல தரப்பட்ட மக்களிடையே பரவலாக அதிருப்தி காணப்படுகிறது.
பா.ஜ.க.வின் பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமல்ல; அமைச்சர்களும்கூட மூழ்கவிருக்கும் பா.ஜ.க. ஆட்சி என்ற கப்பலிலிருந்து குதித்து ஓடிவரும் காட்சிகள், உ.பி.யில் மோடிஅலையோ, காவிக் கட்சிக்கான ஆதரவு அலையோ அங்கு வீசவில்லை என்பதைக் காட்டுகின்றன.
உ.பி.யில் 2021போல் வளர்ந்திருந்தால், மக்களின் அதிருப்தியை, இராமர் கோயில், ஹிந்துத்துவா போதை மாத்திரை இவற்றின் மூலம் மாற்றி அந்த வாக்கு வங்கியை தேர்தல் சட்டங்களுக்கு விரோதமாகவே ஜாதி, மத உணர்வுகளை வெளிப்படையாகவே தூண்டி லாபம் அடைந்து வெற்றி பெற பா.ஜ.க. திட்டமிட்டிருக்கும்.
வாக்காளர்களில் சுமார் 12 சதவிகித பார்ப்பன வாக்காளர்கள் உள்ள மாநிலம் என்பதால் அவர்களது வாக்குகளைப் பெற போட்டியிடும் பல அரசியல் கட்சிகளும் முயற்சிப்பதும் திட்டமிடுதலும் அங்கே உள்ள வழக்கமான நடைமுறை.
பா.ஜ.க. மீது அவர்களுக்கு யோகி ஆட்சியினால் பயன் ஏதுமில்லை என்ற எரிச்சல்.
இதற்கு முன் இராமர் கோயிலைக் காட்டி, ‘ஹிந்து வாக்கு வாங்கி’ என்ற ஒன்றை உருவாக்கி, எளிதில் வெற்றி பெறத் திட்டமிட்டிருந்த பா.ஜ.க.வின் நம்பிக்கை நாளுக்கு நாள் குலையத் துவங்கியது.
மத பக்திபோதையில் அந்த வாக்கு வங்கியைத் தாங்களும் போட்டி போட்டுப் பங்கிட்டுக்கொள்ள, எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ்,
“கிருஷ்ணன் நாள்தோறும் தன் கனவில் வந்து நீதான் ஆட்சிக்கு வரப் போகிறாய் என்று பேசிக்கொண்டே உள்ளார்’’ என்றார்!
மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரான மாயாவதி அம்மையார் சதீஷ் மிஸ்ரா என்ற வக்கீல் பார்ப்பனரை நம்பி, அவர் மூலம் பிராமண மாநாடுகளை ஏற்பாடு செய்து, (கான்ஷிராம் அவர்களது பகுஜன்சமாஜ் கட்சியை சர்வஜன் கட்சியாக உருமாற்றி) அவர்களது ஆதரவும் தலித் சமுதாய மக்களின் _ குறிப்பாக ஒரு பிரிவினரின் வாக்குகளும் சேர்ந்தால் ஆட்சி அமைக்கலாம் என்று திட்டமிட்டு, “நான் பரசுராம அவதாரத்துக்கு கோயில் கட்டுவேன்’’ என்று கூறி (நாகபுரியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் எடுத்த உறுதி மொழிகளையே மறந்துவிட்டு, கான்ஷிராமின் லட்சியப் பாதையிலிருந்து வெகுதூரம் தள்ளி நடக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது!
பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியில் முன் ஏற்பட்ட குடும்பக் கலகம் பற்றியும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கான கட்சி என்றும் திட்டமிட்டுச் செய்யப்பட்ட பிரச்சாரம் செய்தும், யாதவர் அல்லாத பிற சிறுசிறு இதர பிற்படுத்தப்பட்டோர்களை யெல்லாம் பா.ஜ.க. தனது தந்திர வலைக்குள் இழுத்துப் போட்டும்தான் முந்தைய தேர்தலில் வெற்றி பெற்றது.
இதை நன்குணர்ந்த சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் தனது முந்தைய தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, இம்முறை அவற்றைத் தவிர்க்க நன்கு திட்டமிட்டு, குறிப்பாக யாதவர்களுக்கான ஒதுக்கீடுகளைக் குறைத்து, இதர பிற்படுத்தப்-பட்டவர்களுக்கு உரிய பங்கை அளிக்கவும், ‘யாதவர்_முஸ்லிம் கூட்டு (MY) என்ற முந்தைய முத்திரையை மாற்றிடும் வகையில் ஒரு சக்தி வாய்ந்த கூட்டணியை அமைத்துள்ளதால் பா.ஜ.க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தலைவர்கள், மற்ற கட்சியினர் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாடியை நோக்கி வரத் தொடங்கி, சமூகநீதிக் கொடி ஏந்தி _ மதத்தை 100க்கு 100 முன்னிறுத்தியதிலிருந்து மாறி, பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் இதுதான் வெல்லப்போகும் கூட்டணி என்று நம்பி, ஒடுக்கப்பட்டோரை பா.ஜ.க. எப்படியெல்லாம் வஞ்சித்த கட்சி _ யோகி ஆதித்யநாத் எப்படியெல்லாம் தங்களை அலட்சியப்படுத்தி, ‘டம்மி’யாக்கி, ஒரு நபர் ஆட்சி நடத்தினார் என்று செய்யும் பிரச்சாரம் உ.பி.யில் பெரும்பாலான மக்களிடையே சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.
காங்கிரஸ் கட்சி திருமதி. பிரியங்கா தலைமையில் பலம் பெறத் தொடங்கி-யிருந்தாலும் அது ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பலமாகவில்லை என்பதே யதார்த்த-மாகும். அதனால் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறும் ஆபத்தும் உள்ளது; என்றாலும் அகிலேஷ் தலைமையில் உள்ள பலமான கூட்டணியே நாளும் நம்பிக்கைகயைப் பெருக்கி வருகிறது.
இப்போதுள்ள நிலவரம் மேலும் பெருகினால், பா.ஜ.க. திணறித்தான் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களைப் பெற முடியும். இடையில், “வித்தைகள்’’ ஆளும் பா.ஜ.க.வுக்கு கைவந்த கலை. அதையும் தாண்டி தமிழ்நாடு மாதிரி மக்கள் ஆதரவு வரக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்.
– கி.வீரமணி,
ஆசிரியர்