மஞ்சை வசந்தன்
உலகத் திருக்குறள் மய்யம்
இணைய மாநாட்டில் வாசிக்கப்பட்டது
ஒழுக்கம்:
ஒழுக்கம் மனிதனை மனிதனாகக் காட்டுவது. மனிதனை அடையாளப்-படுத்துவது. ஒருவனுடைய உயர்வும், கீழ்மையும் அவனுடைய ஒழுக்கத்தைப் பொறுத்ததே. இதை வள்ளுவர்,
“ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
னெய்துவ ரெய்தாப் பழி” என்றார். (குறள் – 137)
வள்ளுவரின் இக்கருத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் தந்தை பெரியார்,
மனிதனுடைய ஒழுக்கம், நாணயம், நேர்மை முதலானவை அவற்றை உடைய மனிதனுக்குப் பெருமை அளிப்பது மாத்திரமல்லாமல் அவனைச் சுற்றியுள்ள எல்லா மக்களுக்கும் நன்மையும் அளிக்கும் காரியமாகும் என்கிறார்.
ஒழுக்கக்கேடு என்பது மானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒழுக்க-முள்ளவன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான். (விடுதலை -_ 2.1.1950)
ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும் நடந்தபடி சொல்வதுமே ஒழிய, தனிப்பட்ட குணம் அல்ல. – (குடிஅரசு _- 3.11.1929)
ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங்களெல்லாம் பொதுச் சொத்து. – (விடுதலை -_ 17.12.1964)
பக்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒழுக்கம் வேண்டும். பக்தி தனி மனிதனைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாது ஒருவன் இருந்தால் அது பிறரையும் பாதிக்கும். – (விடுதலை _- 26.9.1956)
படிப்பு ஒருவனுக்கு இருந்தாலும் இல்லை என்றாலும் அது மற்றவனைப் பாதிக்கின்ற – சமுதாயத்தைப் பாதிக்கிற விசயம் இல்லை; ஆனால் ஒழுக்கம் இல்லை என்றால் அது அவனை மட்டும் பாதிப்பதில்லை. மற்றவர்-களையும், சமுதாயத்தையும் பாதிக்கிறதாகையால் படிப்பைவிட ஒழுக்கத்திற்கே முக்கியம் தரவேண்டும். – (விடுதலை _- 15.3.1959)
வாழ்க்கை ஒழுக்கத்திலும் கணவனுக்கு ஒரு சட்டம், மனைவிக்கு வேறு சட்டம் என்று இருக்கக் கூடாது. – (விடுதலை _ -26.6.1950)
ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் யாவரும் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம். ஒழுக்கமென்பதோ, கற்பென்பதோ ஆண் பெண் இரு பாலாருக்கும் சொந்தமானதே யன்றி, பெண்களுக்கு மட்டுமல்ல.
யார் ஒருவர் மக்கள் நன்மைக்குப் பாடுபடுபவராகவும் ஒழுக்கத்தில் சிறந்து தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டும் விளங்கு-கிறாரோ அவர் மற்ற மக்கள் யாவரும் அப் பண்புகளைப் பின்பற்றுவதற்கு எடுத்துக்-காட்டாக இருக்கிறார். அப்பேர்ப்பட்டவரை மக்கள் உணரும்படிச் செய்ய வேண்டும். அவரின் உயரிய பண்புகளையும் சேவை-களையும் மற்ற மக்களும் பின்பற்றி நடக்கும் வண்ணம் செய்ய வேண்டும். அதற்கென்று அவரின் குணங்களை மக்கள் பார்த்துத் தமது வாழ்க்கையில் பின்பற்றி வந்த தகாத காரியங்களை விட்டொழித்துத் திருந்தி வாழ வேண்டும். அதற்காக இவரைப் பார்த்தவுடன் அவரின் உயர்ந்த பண்புகள் யாவும் மனதில் உதித்து அதனைப் பின்பற்றச் செய்ய வேண்டும் என்பதற்காகவே படத் திறப்பும், சிலை திறப்பும் ஆன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
திருவள்ளுவர், ஒருவன் பிறக்கின்ற ஜாதியாலோ, பிறக்கின்ற குடும்பத்தாலோ உயர்வு தாழ்வைப் பெறமுடியாது, அவனது உயர்வுதாழ்வு அவனது ஒழுக்கத்தின் தன்மையைப் பொறுத்ததே என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் (குறள் – 134)
என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். தான் பிறந்த பிறப்பால் பார்ப்பான் உயர்ந்தவனாகிவிட மாட்டான்; ஆகிவிடவும் முடியாது. அவனது நல் ஒழுக்கத்தினாலே அவன் உயர்ந்தவனாக முடியும். அவன் ஒழுக்கம் இல்லாதவனாயின் அவன் தாழ்ந்தவனே என்கிறார்.
இக்கருத்தைத்தான் தந்தை பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்திக் கூறிவந்தார். மனு போன்ற சாஸ்திரங்கள், பார்ப்பான் எவ்வளவு ஒழுக்கக்கேடானவனாக இருந்தாலும் அவன் உயர்ந்தவன்தான். எவ்வளவு ஒழுக்க-முள்ளவனாயினும் கீழ்ஜாதியில் பிறந்தவன் தாழ்ந்தவன்தான் என்று கூறும் நிலையில், வள்ளுவர் மட்டுமே பிறப்பால் அனைவரும் சமம், ஒழுக்கத்தால்தான் உயர்வு-தாழ்வு உண்டு என்று கூறினார். எனவே, வள்ளுவம் பரப்பப்பட வேண்டும், மனுதர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.
ஒருவனுடைய பக்தி, ஓதுதல், ஜெபித்தல் போன்றவை அவனுடைய தனிப்பட்ட வாழ்வினைச் சார்ந்தவை. ஆனால், ஒழுக்கம் என்பது பொதுமக்கள் கூட்டுறவு வாழ்க்கை சார்ந்தது. பக்தியில்லையென்றால் கேடு ஒன்றும் இல்லை. ஆனால், ஒழுக்கம் இல்லையேல் சமுதாயமே பாழ்பட்டு அழியும் என்றார்.
மனிதனுடைய ஒழுக்கம், நாணயம், நேர்மை முதலானவை அவற்றை உடைய மனிதனுக்குப் பெருமை அளிப்பது மாத்திரமல்லாமல் அவனைச் சுற்றியுள்ள எல்லா மக்களுக்கும் நன்மையும் அளிக்கும் காரியமாகும். (விடுதலை -_ 30.7.1969)
நல்லொழுக்கம் உடையவன் எவனோ அவனே உயர்ந்தவன். அவன் கீழ்ஜாதியில், ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவனே மேலானவன். ஒழுக்கம் கெட்டவன் உயர்ஜாதியில் பிறந்தவன் என்றாலும் அவன் கீழான இழிந்தவன்தான். பிறப்பு என்பது இயற்கையாய் அமைவது. ஒருவனது பிறப்பு என்பது முயற்சியால் வருவதல்ல. ஆனால், ஒழுக்கம் என்பது ஒருவனது முயற்சியால் வருவது. இயற்கையாய் அமைவதை வைத்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது மோசடியான செயல். ஒருவனது செயல், உழைப்பு, தொண்டு, நாணயம், தூய்மை, வாய்மை இவற்றை வைத்தே அவன் உயர்ந்தவனா தாழ்ந்தவனா என்று கூற வேண்டும் என்றார் பெரியார்.
இதையே வள்ளுவர்,
“ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்” என்றார். (குறள்: 133)
எனவே, இருவரது கருத்துகளும் இங்கு ஒத்து நிற்கின்றன. ஒழுக்கத்தினாலே உயர்வு தாழ்வு; பிறப்பால் அல்ல என்பதை உறுதியாக உணர்த்துகின்றன.
ஒருவனால், தனக்கு என்னென்ன வசதிகள் பெருமைகள் தேவை என்று கருதப்படுகிறதோ, அவற்றை சமுதாயத்தில் உள்ள அனைவரும் அடையச் செய்யும் வழியில் நடப்பதே உண்மையான நாகரிகம் என்பதாகும் என்கிறார் பெரியார்.
உண்மை அறிதல்
உண்மை அறிதல் என்பதில் (1) எது சரி என்று காணல், (2) எது நல்லது என்று காணல், (3) எது கேடு என்று அறிதல் ஆகியன அடங்கும். உண்மை அறிய பகுத்து ஆய்வு கட்டாயம். பகுத்து ஆய்வதற்கு முன்முடிவுகள் இன்றி உண்மை காண வேண்டும் என்ற முனைப்பு, விருப்பு – வெறுப்பு, வேண்டியது – வேண்டாதது என்ற ஒருநிலைச் சார்பு இன்றி உள்ளதை உள்ளபடி ஆய்வு செய்து அறிதல் வேண்டும். இவ்வாறு பகுத்து அறிவதால் அந்த அறிவு பகுத்தறிவு எனப்படுகிறது.
இதையே வள்ளுவர்,
1. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள் – 423)
2. சென்ற விடத்தான் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு (குறள் – 422)
3. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள் – 355)
என்ற மூன்று குறள்களின் வழி வலியுறுத்தி-யுள்ளார். அதாவது, கருத்துகளில் எது சரி என்று அறிதல், பொருள்களில் எது உண்மையானது என்று அறிதல், எது கேடு எது நல்லது என்று அறிதல் என்ற மூன்று வேலைகளும் அறிவின் முதன்மை வேலைகள் என்கிறார் வள்ளுவர்.
தந்தை பெரியார் அவர்களும் இந்த மூன்று வழியாலும் மெய்யறிய (உண்மை அறிய) வலியுறுத்தி கருத்துகள் கூறியுள்ளார்.
தனக்கு முன் கூறப்பட்ட கருத்துகள் எதுவாயினும் அவற்றுள் எது சரி, எது மனிதர்களின், உலகின் நன்மைக்கு, சமத்துவத்திற்கு, உயர்விற்கு எது உகந்தது, எது உகந்ததல்ல என்று பகுத்துக் காண வேண்டும் என்று கூறியுள்ளார். அவ்வாறு கூறும்போது, தான் கூறும் கருத்துகளையும் அவ்வாறே பகுத்தறிந்து ஏற்கவோ, தள்ளவோ வேண்டும் என்றும் கூறுகிறார்.
அடுத்து, கூறப்படும் பொருளில் எந்தப் பொருள் சரியானது என்பதைக் காண வேண்டும் என்றும், திருக்குறளுக்குப் பொருள் காண்கையில் எது சரியான பொருள் என்ற வகையில் ஆராய்ந்து காண வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மூன்றாவதாக, கூறப்படும் கருத்தாயினும், செய்யப்படும் செயலாயினும், பின்பற்றப்படும் முறையாயினும் அதில் எது நல்லது, எது கெட்டது என்று பகுத்தாய்ந்து பின்பற்ற வேண்டும், செய்ய வேண்டும், ஏற்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.
அறிவு கொண்டு சிந்திப்பதுதான் பகுத்தறிவு. சிந்தனைதான் அறிவை வளர்க்கும்; அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும். -(விடுதலை, 20.6.1973)
எதையும் உங்கள் பகுத்தறிவுக் கண்கொண்டு பாருங்கள். நான் கூறுவதைக் கூட ஏதோ ஒரு ரேடியோ நிகழ்ச்சியைக் கேட்பது போல் கேளுங்கள்; ஆனால் கவனத்தோடு கேளுங்கள்! ஒரு ரேடியோவில் உங்கள் அபிப்பிராயத்திற்கு மாறுபட்ட கருத்து கூறப்படுகிறது என்பதற்காக உடனே ரேடியோவின் மீது ஆத்திரம் கொண்டு அதை உடைத்தெறிய முற்படுவீர்களா? பத்திரிகையில் உங்களுக்குப் பிடிக்காத கருத்து வெளியிடப்பட்டிருப்பதற்காக அதை உடனே கிழித்தெறிந்து விடுவீர்களா? எனவே, நான் கூறுவதையும் ரேடியோவில் கூறப்படுவது போன்றே கேளுங்கள்; பிறகு சிந்தித்து உண்மை உணருங்கள்; கேட்டதை அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டுமென்றோ, கேட்டுத்தான் ஆகவேண்டுமென்றோ, நாங்கள் யாரையும் வற்புறுத்தவில்லை. வற்புறுத்துவதும் எங்கள் கொள்கையல்ல. (விடுதலை, 5.10.1948)
ஒருவன் எப்படிப்பட்ட மனிதனாயினும், மனிதத் தன்மைக்கு மேற்பட்டவன் என்று சொல்லப்படுவானாகிலும் அவனது அபிப்பிராயங்கள் எப்படிப்பட்ட மனிதனாலும் பரிசோதிக்கப்படவும், தர்க்கிக்கப்படவும் தக்கதாகும் என்பதே எனது அபிப்பிராயமாகும். யாருடைய அபிப்பிராயத்தையும் – எந்தவிதமான அபிப்பிராயத்தையும் ஆட்சேபிக்கவும், அடியுடன் மறுத்து எதிர்க்கவும் உரிமையுண்டு என்பது எனது அபிப்பிராயம். (குடிஅரசு, 20.8.1933)
கடவுள் உண்டா? இல்லையா? என்பதை ஆய்வு செய்து உண்மை காணுங்கள். அப்படியே ஏற்காதீர் என்றார் பெரியார்.
விரதம் இருத்தல், பூசை செய்தல், தீ மிதித்தல், அபிஷேகம் செய்தல், மந்திரம் சொல்லி தாலிகட்டித் திருமணம் செய்தல் போன்ற ஒவ்வொரு செயலையும் பகுத்தாய்ந்து சரியா? தவறா? ஏற்படையதா? கேடா? என்று ஆய்வு செய்து அறிந்த பின்னரே பின்பற்ற வேண்டும். முன்னோர் செய்தனர் என்பதற்காக அப்படியே பின்பற்றிச் செய்யக் கூடாது என்றார்.
ஆக, மெய்யறிதல் பற்றிய வள்ளுவர் கருத்துகளும் பெரியார் கருத்துகளும் ஒத்து உள்ளமை இதன் வழி தெளிவாக விளங்குகிறது.
பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது; எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பி விடக் கூடாது; வெகு காலமாக நடந்து வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது; அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக் கூடாது; கடவுளாலோ மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக் கூடாது; ஏதாவது ஒரு விசயம் நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திரச் சக்தி என்றோ நம்பி விடக் கூடாது. எப்படிப்பட்ட விசயமானாலும் நடு நிலைமையில் இருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்க வேண்டும் என்கிறார் பெரியார்.
யார் எந்தக் கருத்தினைச் சொன்னாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது என்றால் மனிதன் வளர்ச்சியடைய மாட்டான். ஆனதால் யார் சொல்வதையும் நீங்கள் கேளுங்கள். பின் உங்கள் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் அறிவிற்குச் சரியென்று பட்டதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள். (விடுதலை 25.7.1968)
ஒன்றையும் வெறுக்க வேண்டாம்; ஒன்றையும் மறுக்க வேண்டாம். அவர் சொல்லிவிட்டார். இவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையும் செய்யாதேயுங்கள். இன்னொருவனுக்கு அடிமையாய் உங்கள் மனச்சாட்சியை விற்றுவிட வேண்டாம். எதையும் அலசிப் பாருங்கள். ஆராயுங்கள். – (குடிஅரசு _- 30.10.1932)
சமுதாயத் துறையில் இன்றுள்ள வேற்றுமை, பகைமை, துவேஷம், இழிவு, தரித்திரம், மடமை முதலிய குணங்கள் மனிதன் அறிவுக் குறைவினால் பகுத்தறிவைச் செவ்வனே பயன்படுத்தாததால் ஏற்பட்டவை என்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய, காலக் கொடுமையாலோ கடவுள் தன்மையாலோ அரசாட்சியாலோ ஏற்பட்டது என்று எவரும் சொல்லிவிட முடியாது. – (குடிஅரசு _- 26.5.1935)
நமது அறிவுக்கு ஒரு காரியம் சரி என்று பட்டாலும் அநேக விசயங்களை உணர்ந்தே அதைப் பிரயோகிக்க வேண்டும். அதாவது பகுத்தறிவைப் பிரயோகிக்கப் பகுத்தறிவு வேண்டும். – (குடிஅரசு _- 10.1.1937)
பகுத்தறிவுவாதிக்குக் கடவுள், மதம், சாத்திரம், முன்னோர்கள் என்பனவற்றிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. எதையும் தன் அறிவைக் கொண்டு ஆராய்ந்து தன் அறிவுக்குச் சரியென்று தோன்றியதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடப்பவனே பகுத்தறிவுவாதியாவான். – (விடுதலை _- 21.4.1968)