சிறந்த தமிழ்ப் படம், சிறந்த தமிழ்ப்பட இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த எழுத்தாளர், பாடலாசிரியர் என்று பல முனைகளில் திரைப்படத்துறையில் ஒவ்வொர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பரிசுகள் வழங்குகிற நிகழ்ச்சியை அண்ணா அவர்கள் உருவாக்கியதை-யொட்டி 1970-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் நடைபெற்ற அந்தப் பரிசளிப்பு விழாவின்போது, இனித் தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் இறை வணக்கம் என்பது தமிழ்த்தாய் வாழ்த்தாக இருக்கு-0மென்றும், “நீராருங் கடலுடுத்த’’ எனும் மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய அந்தப் பாடலே அந்த வாழ்த்தாக அமையுமென்றும் அறிவித்தேன்.
வாழ்த்துப் பாடலுக்கு ஏற்றவகையில் அந்தப் பாட்டை ஓரளவு குறைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை எழுதிய அந்தப் பாடலில், சமஸ்கிருத மொழி உலக வழக்கு ஒழிந்த மொழி என்பதை, “ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா உன்சீரிளமைத் திறம் வியந்து’’ என்று குறித்துத் தமிழ்மொழியைப் புகழ்ந்திருந்தார். அரசு நிகழ்ச்சியில் _- அதுவும் தமிழ்த்தாய் வாழ்த்தில் மற்றொரு மொழியைக் குறைத்தும் பழித்தும் கூறுதல் வேண்டாமென்பதற்காகவும் -”அழிந்து, ஒழிந்து” என்ற சொற்களை ஒரு பகுதியினர் அமங்கலச் சொற்கள் எனக் கருதி முகஞ்சுளிப்பர் என்பதற்காகவும்; அந்த வரியையே அகற்றி விட்டு இசையமைக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக்கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!’’
இவ்வாறு இசைக்கேற்பப் பாடல் ஒழுங்குபடுத்தப்பட்டது.
மெல்லிசை மன்னர் எனப் போற்றப்படும் விசுவநாதன் இசையமைக்க – பின்னணி இசைப்புகழ் மணிகளான சவுந்திரராசன், திருமதி. சுசிலா ஆகியோர் பாடிய அந்த வாழ்த்து இசைத் தட்டுகளாக வெளியிடப்பட்டு, தமிழ்நாடு அரசு விழாக்களில் பயன்-படுத்தப்பட்டன.
அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து என நான் அறிவித்தவுடனே அதற்கும் எதிர்ப்பு கிளம்பிடத் தவறவில்லை!
“ஆனந்த விகடன்’’ இதழில் கருத்துரை தீட்டிய பிரபல எழுத்தாளர் திரு.கி.வா. ஜெகந்நாதன் அவர்கள், தமிழ் ஒரு குட்டி தேவதை என்றும், மொழிவாழ்த்துப் பாடலைக் கடவுள் வாழ்த்துப் பாடலாக மாற்றியது பொருத்தமற்றது என்றும் அதற்குப் பதிலாக “அங்கிங் கெனாதபடி’’ எனத் தொடங்கும் தாயுமானவர் பாடலைப் பாடலாமென்றும் குறிப்பிட்டிருந்தார். ‘மெயில்’ போன்ற வேறு சில ஏடுகளிலும் மறுப்புக் கருத்துகள் வெளிவந்தன.
அப்போது பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் அவர்கள் தமிழ்நாடு அரசு எடுத்த முடிவை வரவேற்று விடுத்த அறிக்கையில், எதிர்க் கருத்தாளர்களுக்குத் தக்க பதில் அளித்திருந்தார். அந்த அறிக்கை மிக முக்கியமானது என்பதால் இங்கே அதனைக் குறிப்பிடுவது பயனுள்ள ஒன்றாகும்.
“தமிழ் இனத்தின் கடவுள் வணக்கப் பாடலாக பேராசிரியர் சுந்தரனாரின் “மனோன்மணீய’’ வணக்கப் பாடலையே பாட வேண்டுமென்ற கருத்து பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டுப் புலவர் குழுவில் தீர்மானமாக வந்தது. அந்தப் பாடலில் சமஸ்கிருதத்தைவிட தமிழுக்கு உயர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதனால் சமஸ்கிருதப் பற்றாளர் சிலர் எதிர்த்தனர்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்றோர் புலவர் குழுவிலிருந்து விலகுவதற்கு இதுவே வழிவகுத்தது. தாயுமானவர் பாடலைப் பாடலாமென்றும் திருக்குறள் முதல் அதிகாரத்தைப் பாடலாமென்றும் இதன்பின் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தாயுமானவர் பாடல், இந்து மதத்தைப் பெரிதும் சார்ந்தது எனப் பிறமதத்தினர் எதிர்த்தனர். திருக்குறள் முதல் அதிகாரத்துக்குக்கூட அது ”தாள்’’ “அடி’’ என்று கூறுவதால் உருவ வணக்கத்தின் சாயலுடையது என்று கிறித்துவ, இஸ்லாமியப் புலவர்கள் சிலர் குறைப்பட்டனர்.
மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளையைவிட இந்து மதத்தைக் கரைத்துக் குடித்தவர், வேதாந்த ஆராய்ச்சியில், கடவுள் ஆராய்ச்சியில் கரைகண்டவர் மிகச் சிலரே இருக்க முடியும்.
அத்தகையவர் இந்து மதத்தையோ, வேறு எந்த மதத்தையோ புண்படுத்தாமல் எல்லா மதத்தினரும் ஒப்புக் கொள்ளத்தக்க விதத்தில் தமிழ் மொழி உருவாகவே பாடிய தேசியக் கடவுள் பாடல்தான் “நீராருங் கடலுடுத்த’’ என்ற பாடலாகும். அந்த வாழ்த்துப் பாடலைத் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தேர்ந்தெடுத்தார் என்றால், அது அவர் கலைப் பண்புக்கு, தமிழன்புக்கு சீரிய சான்றாகும்.’’
பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரின் இந்தக் கருத்தினையொட்டி சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களும் அறிக்கையொன்றினை விடுத்தார்.
“நீராருங் கடலுடுத்த” – என்று தொடங்கும் பாடல் அரசு விழாக்களிலும், அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும் பாடப்பட வேண்டுமென்று கலைஞர் கொடுத்த அறிவிப்பு, தமிழ் மொழிப் பற்றுடைய அனைவர்க்கும் கரும்பாக இனித்திடும்போது -ஏனோ ஆனந்த விகடனுக்கு மட்டும் வேம்பாகக் கசக்கிறது! அரசு விழாக்களில் தமிழைத் தெய்வமாக வழிபடுவோம் எனக் கலைஞர் கூறியிருக்கிறார்.
மொழியைத் தெய்வமாக வழிபடுவது பிழையெனில், இந்தப் பிழையை முதலில் செய்த பெருமை, வடமொழியாளர்க்கே உரிமை! மொழி வாழ்த்தையே கடவுள் வாழ்த்தாகப் பாடுவது பொருத்தமற்றது என்கிறார் கி.வா.ஜ.! “ஓம்” என்ற எழுத்து வடிவம்தான் ஒலி வடிவமாக _- இறை வடிவமாக _- பிரணவ மந்திரமாக வழிபடப்படுகிறது என்பதை அவர் மறந்தார் போலும்!’’
திரு. ம.பொ.சி. அவர்களைத் தொடர்ந்து தமிழ்அறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் “நாடும் மொழியும் ஒருங்கே போற்றப்படும் சிறப்புக்குரிய அந்தப் பாடல் தமிழ்நாட்டு மக்கள் ஏற்கத்தக்க வாழ்த்துப் பாடல்’’ என்று அறிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து இன்றைக்கு தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில் பாடப்படும்பொழுது, அந்தப் பாடல் எத்துணை எதிர்ப்புகளைச் சமாளித்து வெளிவந்துள்ளது என்ற கடந்த காலச் சரித்திரம் பலருக்குத் தெரியாமலே கூட இருக்கலாம்; அதனால்தான் நினைவூட்டினேன்!
– கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ இரண்டாம் பாகம்
– ‘முரசொலி’, 21.12.2021 பக்.10)