மஞ்சை வசந்தன்
இருபெரும் திராவிடர் இயக்க ஆளுமைகள் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களும், நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களும்.
பெரியார், அண்ணா இருவரிடமும் பயின்றவர்கள். திராவிடர் கழகத்திலும், அதன்பின் தி.மு.கழகத்திலும் முதன்மையானவர்-களாகத் திகழ்ந்தவர்கள்.
நாவலர் இறுதிக் காலத்தில் கட்சி மாறினாலும், கொள்கை மாறாதவராகவே இருந்தார். ஆனால், பேராசிரியரோ ஒரே கட்சி ஒரேகொள்கை என்பதில் உறுதியுடன் இருந்தார்.
நாவலர் நகைச்சுவை உணர்வுடன் ஏற்ற இறக்கங்கள் அழுத்தம், இழுத்தல் செய்து பேசவல்லவர். பகுத்தறிவுக் கருத்துகளை அதிகம் பேசிவந்தவர்.
பேராசிரியர், ஆழமான, கொள்கை வயப்பட்ட கருத்துகளை உணர்வுபூர்வமாகப் பேசவல்லவர்.
இருவரும் கல்வி அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் திறம்படப் பணியாற்றியவர்கள்.
இப்படிப்பட்ட இருவருக்கும் இது நூற்றாண்டு என்பது இயல்பாய் அமைந்த வியப்புக்குரிய பொருத்தம்.
பெரியார், அண்ணா இவர்களின் மாணவர்-களாகவும், கலைஞரின் நண்பர்களாகவும் இருந்த இருவரின் நூற்றாண்டையும் சிறப்புடன் கொண்டாடும வாய்ப்பை சமூக நீதி காக்கும் சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றிருப்பது அதனினும் பொருத்தம்.
பேராசிரியர் நூற்றாண்டுத் தொடக்க விழா
இனமானப் பேராசிரியர் மானமிகு க.அன்பழகன் அவர்களின் நூற்றாண்டுத் தொடக்க விழா தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தால் உரிமையோடு நேற்று (20.12.2021) மாலை 7:00 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 12 மணித் துளிகள் காணொலிப் பதிவில், பேராசிரியர் வாழ்க்கையில் முத்திரை பதித்த பல நிகழ்வுகளும், தலைவர்களோடு நெருக்கமாக இருந்த காட்சிகளும், பேராசிரியரின் நறுக்குத் தெறித்த சுருக்க உரைகளும் சிறப்பாக இடம் பெற்றன.
கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரை
இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பேராசிரியருக்கும் பெரியார் திடலுக்கும் உள்ள தொடர்பை -_ பல நிகழ்வுகளை சுட்டிக்காட்டி உணர்வு பொங்க விளக்கினார்.
டாக்டர் வெ. சொக்கலிங்கம்
பேராசிரியரின் மருமகனும், பிரபல இருதய நோய் சிகிச்சை மருத்துவருமான டாக்டர் வெ.சொக்கலிங்கம் அவர்கள் – பெரியார் என்ற மாபெரும் தலைவர் இல்லை என்றால் நாம் எல்லாம் இல்லாதே போயிருப்போம் என்றார்.
சுப.வீரபாண்டியன் உரை
‘‘நான் 10, 15 வயது சிறுவனாக இருந்திருப்பேன். என் அப்பா, கல்யாண-சுந்தரனார் மயிலாடுதுறையில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.
அன்றைக்குப் பெரியார் வந்து பேசுகிறார்; நான் பெரியார் பேச்சை அதற்கு முன்பு கேட்டதில்லை. அன்றைக்கு இப்பொழுது இருப்பதுபோல இந்த ஒலிவாங்கி இல்லை; ஒளிர்கிற விளக்குகள்கூட இல்லை.
ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு; ஒரு மேசை, நான்கைந்து நாற்காலிகள். பெரியாருக்கு எதிரே 20, 30 பேர் அமர்ந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.
ஆனால், பெரியார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசினார்; தொடர்ந்து கேட்டேன்; அதுவரையில் நான் கேட்டறியாத செய்திகளைக் கேட்டேன். அவை எனக்குள் ஒரு சிந்தனையை உருவாக்கிற்று. அன்று இரவு முழுவதும் பெரியாரின் பேச்சே எனக்குள் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அது என் நெஞ்சில் நிலைத்தது. இன்றுவரை அது நிலைத்திருக்கிறது’’ என்று அவர் சொன்னார்’’ என்று பேராசிரியர் கூறினார்.
அப்படி அவர் நெஞ்சுக்குள் விழுந்த அந்த விதை – சாதாரணமாக ராமய்யாவாக இருந்த-வரை, அன்பழகனாக மாற்றி, அன்பழகனாக இருந்தவரை, நம்முடைய இனமானப் பேராசிரியராக இந்த மண்ணில் என்றென்றும் நிலை நிறுத்தியிருக்கிறது.
ஒரு பேராசிரியர் அல்ல; இன்னும் பல இனமானப் பேராசிரியர்கள் இந்த மண்ணுக்குத் தேவை!
எனவே, அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், பேராசிரியர் என்று அத்தனை பேரையும் பெரியார் நமக்கு உருவாக்கித் தந்தார். நமக்குக் கடமை இருக்கிறது-. எத்தனை கலைஞர்களை, எத்தனை பேராசிரியர்களை இந்த மண்ணில் நாமும் உருவாக்கப் போகிறோம் என்கிற அந்தக் கேள்வியை மட்டும் பேராசிரியரின் நூற்றாண்டு விழா தொடக்கத்தில் வைத்து, இன்னும் ஒரு பேராசிரியர் அல்ல, இன்னும் பல இனமானப் பேராசிரியர்கள் இந்த மண்ணுக்குத் தேவை. வாய்ப்புக்கு நன்றி! வணக்கம்!
இவ்வாறு திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரையாற்றினார்.
அமைச்சர் துரைமுருகன் உரை
நம்முடைய பேராசிரியரைப் பொருத்த-வரையில், முதலில் அவர் ஒரு சுயமரியாதைக்-காரர். இரண்டாவது, பகுத்தறிவுவாதி _- இறுதிக் காலம் வரையில் பகுத்தறிவுவாதி. எதைப்-பற்றியும் கவலைப்படாதவர். மூன்றாவது, சமூகப் போராளி.
அப்பழுக்கற்ற அரசியல்வாதி அவர்
அதற்கடுத்து அரசியல்வாதி. அரசியல்வாதி என்றால், ஓர் ஒழுக்கமான அரசியல்வாதி. எந்த இடத்திலும், ஒரு தவறு காணமுடியாத _- அப்பழுக்கற்ற அரசியல்வாதி அவர். தான் செய்வதை சரியாகச் செய்வார். பேராசிரியர் கல்வித் துறையை நிர்வகித்தார்; சுகாதாரத் துறையை நிர்வகித்தார்; நிதித்துறையை நிர்வகித்தார்.
என்னைவிட, கட்சிக்கு பயன்படுபவன் என்றால், அவனை நான் ஏற்றுக்கொள்வேன்!
எங்களிடம் தனியாகச் சொன்னார். -‘‘யோவ், என்னைவிட தாழ்ந்தவனா? உயர்ந்தவனா? என்று நான் பார்க்கமாட்டேன். என்னைவிட, கட்சிக்கு அவன் பயன்படுபவன் என்றால், அவனை நான் ஏற்றுக்கொள்வேன்’’ என்றார்.
அப்படிப்பட்ட மாபெரும் ஒரு தலைவர் நமக்குக் கிடைத்தது நமக்கெல்லாம் பெருமைதான். திராவிட இயக்கத்திலேயே மூத்த தலைவர் மறைந்து போய்விட்டார்.
பெரியார், அண்ணா, கலைஞர், இன்றைக்கு ஸ்டாலின் வரை, நான்கு தலைமுறைகளைக் கண்டவர் பேராசிரியர்.
பேராசிரியருடைய நூற்றாண்டு விழாவில் – ஒரு சபதமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்
இன்றைக்குப் புறப்பட்டு இருக்கின்ற ஆபத்திலிருந்து நாம் மீளாவிட்டால், மீண்டும் அந்த நிலைதான் _- வரலாறு திரும்பிவிடும் என்பதை மட்டும் – பேராசிரியருடைய நூற்றாண்டு விழாவில் – ஒரு சபதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான மாண்புமிகு மானமிகு துரைமுருகன் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் உரை
இனமானப் பேராசிரியர் உரை என்பது தனித் தன்மையுடன், தனிப் பாணியுடனும் வெட்டு ஒன்று துண்டு இரண்டுமாகவே இருக்கும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் அறக்கட்டளை சொற்பொழில்,
“நான் திராவிடன் என்று சொல்கிறபொழுது, பார்ப்பனரை விலக்காதவன் தமிழன்; பார்ப்பனரை விலக்குகிறவன் திராவிடன்’’ என்றார். என்ன ஆழமான தெளிவான, எவருக்கும் புரியும்படியான கருத்து!
“திராவிடன் என்று சொல்வதன் மூலமாகத்தான் தமிழன் முழுமை பெற்றான். நிறைவு பெற்றான்; இன்னும் சொல்லப் போனால் எந்த நோக்கத்திற்காக தமிழன் ஓர் இலட்சியவாதியாக வாழ வேண்டுமோ அந்த நோக்கம் திராவிடன் என்று சொன்னால்தான் நிறைவேறிற்று என்ற காரணத்தாலேதான், அந்தப் பெருமை தமிழ்நாட்டு மக்களுக்கு அய்யா அவர்களாலே கிடைத்தது’’ என்று கூறினார்.
மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அண்ணா அவர்கள் சென்றபோது, தனது கன்னிப் பேச்சில் கூறியது என்ன?
“I Belong to the Dravidian Stock. I am proud to call myself a Dravidian”
“நான் திராவிடன் என்ற மரபைச் சார்ந்தவன். நான் என்னைத் திராவிடர் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்’’ என்று அண்ணா அவர்கள் மாநிலங்களவையில் தனது கன்னிப் பேச்சில் பேசினார். பேராசிரியர் விளக்கத்தையும் அண்ணா அவர்களின் உரையும் இளைஞர்கள் ஒப்பிட்டுத் தெளிவு பெற வேண்டும் என்று தமிழர் தலைவர் உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசின் சிறப்பு மரியாதை
நந்தனம் நிதித்துறை வளாகத்தில் பேராசிரியர் க.அன்பழகன் சிலையைத் திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் அந்த வளாகத்திற்கும் க.அன்பழகன் பெயரைக் சூட்டியுள்ளார். இனமானப் பேராசிரியர் என கலைஞர் அவர்களால் பெருமிதத்தோடும், பேரறிஞர் அண்ணாவால் பேராசிரியர் தம்பி என்று அன்போடும் அழைத்து போற்றப்பட்டவர் க.அன்பழகன். தன்னுடைய கல்விப் பயணத்தின்போது தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளாலும், அண்ணாவின் தமிழ் உணர்வுமிக்க பேச்சாற்றலினாலும் ஈர்க்கப்பட்டு தன்னைப் பொதுவாழ்க்கையில் அர்ப்பணித்துக் கொண்டவர். அண்ணாவின் வேண்டுகோளை ஏற்று 1944ஆம் ஆண்டு முதல் 1957ஆ-ம் ஆண்டு வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் க.அன்பழகன்.
அவரது 100ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு புதியதாக நிறுவப்பட்டுள்ள க.அன்பழகன் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் நந்தனத்தில் செயல்பட்டுவரும் நிதித்துறை வளாகத்திற்கு “பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” என பெயர் சூட்டியுள்ளார்.
இதுமட்டுமின்றி பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் எழுதி நாட்டுடமையாக்கப்பட்ட 42 நூல்களுக்கு மாநில அரசின் ராயல்ட்டி தொகை 25 லட்சம் ரூபாயை அவரது குடும்பத்தாரிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த விழாவில் அமைச்சர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்களும் பங்கு பெற்றனர்.
நூற்றாண்டு காணும்
நாவலர் நெடுஞ்செழியன்
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் 1920ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி ராஜகோபாலனார்- _ மீனாட்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் இரா.நெடுஞ்செழியன் . தமிழ் மொழி மீதான பற்றின் காரணமாக, இரா.நாராயணசாமி என்ற தனது பெயரை இரா.நெடுஞ்செழியன் என்று மாற்றிக்கொண்டார். 1944இல் தன்னுடைய 24ஆம் வயதில் பெரியாருடன் திராவிட இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்.
அரசியல் மற்றும் ஆட்சிப்பணிகளுக்கு இடையிலும், அழகு தமிழில் எழுதும் பழக்கமதை என்றும் கைவிடாத காரணத்தால், இரா.நெடுஞ்செழியன் எண்ணற்ற கதைகள், கட்டுரைகளோடு 30க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
1967 முதல் 1969ஆம் ஆண்டு வரை அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் கல்வி அமைச்சராகவும், 1971 முதல் 1975ஆம் ஆண்டு வரையில் கலைஞர் ஆட்சியில் கல்வி அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டு உணவுத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சராகச் செயலாற்றினார். தமிழகத்தின் இடைக்கால முதலமைச்சராக நாவலர் நெடுஞ்செழியன் 3 முறை பதவி வகித்தவர்.
பெரியார் பாராட்டிய நாவலர்
நாவலர் என்பது திராவிடக் கொள்கைத் தலைமையின் அடையாளம். ‘அய்யா நான் எம்.ஏ. படித்திருக்கிறேன், எனக்கு சம்பளம் வேண்டாம், சோறு மட்டும் போடுங்கள்’ என்று தந்தை பெரியாரிடம் சொல்லி இயக்கத்தில் சேர்ந்தவர். நாவலரும், நாவலர் போன்று என்னிடம் வேலைக்கு என்று சேர்ந்தவர்களும் என்னிடம் வேலை எதுவும் பழகவில்லை, எனக்கே கற்றுத் தரும் அளவுக்கு அவர்கள் இருந்தார்கள். எனக்கே பாடம் கற்றுத்தரும் அளவுக்கு தகுதி படைத்தவர்களாக இருந்தார்கள்” என்று பெரியாரிடம் ஒருவர் பாராட்டு வாங்குவது என்பது சாதாரணமா?
நாவலருக்கும் கலைஞருக்குமான நட்பு
நாவலரும் – கலைஞருக்குமான தொடக்க கால நட்பு அனைவரும் அறிந்தது. பிரிந்திருந்த காலத்தில் எத்தனை நட்புடன் இருந்திருக்-கிறார்கள் என்பதை அரசு வெளியிட்ட மலரில் பேராசிரியர் நாகநாதன் அவர்கள் எழுதிய கட்டுரை மூலமாக அறியலாம்.
1980 ஆம் ஆண்டுகளில் தி.மு.க. – அ.தி.மு.க. இணைப்புக்கான பேச்சு வார்த்தையை பிஜூ பட் நாயக் எடுத்தார். தலைவர் கலைஞருக்கும் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆருக்குமான பேச்சு வார்த்தையை அவர் நடத்தினார். அப்போது எம்.ஜி.ஆருடன் இருந்தவர் நாவலர். இந்த விவகாரத்தில் நாவலர் கருத்து என்ன என்று அறிந்து கொள்ள கலைஞர் அவர்கள் விரும்பி, நாகநாதனை அனுப்பி வைக்கிறார்கள். இந்த இணைப்பு பல குழப்பங்களை ஏற்படுத்தும்’ என்று அப்போது நாவலர் சொன்னதாகவும் _- ‘நாவலர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்’ என்று தலைவர் கலைஞர் சொன்னதாகவும் பேராசிரியர் நாகநாதன் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
2000ஆம் ஆண்டில் குமரி முனையில் வள்ளுவர்க்கு வானுயர சிலை அமைத்தார் முதல்வர் கலைஞர். அதில் நாவலர் உரையாற்ற வேண்டும் என்று கலைஞர் விரும்புகிறார். நாகநாதனை அழைத்து நாவலரிடம் சொல்லச் சொல்கிறார். இவர் செல்வதற்கு முன்னதாகவே நாவலரிடம் கலைஞரும் பேசி இருக்கிறார். ‘தி.மு.க.வில் இருந்து நான் விலகியது ஒரு விபத்து போன்றது. மீண்டும் தி.மு.க.வுக்கு வருவது சரியாக அமையாது’ என்று நாவலர் சொல்லி இருக்கிறார். இதுதான் கோபப் பிரிவுக்கும் கொள்கை நட்புக்குமான வேறுபாடு!
நாவலர் மறைந்தார் என்ற செய்தி கேட்டதும், முதல்வர் கலைஞரை அவர் வீடு நோக்கிச் செல்ல வைத்ததுமே கலைஞரின் நட்புக்கான அத்தாட்சி.
திசைதோறும் திராவிடக் கொள்கைகளை இளந்தாடிப் பருவம் முதல் பரப்பி வந்த அந்த அரிமா நிகர் ஆளுமைக்கு உண்மையான திராவிட இயக்க ஆட்சி செய்துள்ள மாபெரும் மரியாதை இது!
இறக்கும் போது அவர் மாற்று இயக்கத்தில் இருந்தார். ஆனால் திராவிடச் சிந்தனையில் மாற்றுக் குறையாதவராக மறைந்தார் என்பதால் அவருக்கான மரியாதையை திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கியது.
* நாவலர் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடி உள்ளது.
* நாவலர்க்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
* நாவலர் எழுதிய அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
* நாவலர் நூற்றாண்டு நிறைவு மலர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது இரா.நெடுஞ்செழியனுக்கு சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி அமைக்கப்பட்ட சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையடுத்து, நாட்டுடைமையாக்கப்பட்ட நெடுஞ்செழியனின் நூல்களுக்கான நூலுரிமை தொகை ரூ.20 லட்சத்தை அவரது குடும்பத்தினரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்த இருபெரும் தலைவர்களும் அரசியல் கட்சிக்குச் சென்றாலும், இறக்கும்வரை தந்தை பெரியாரிடமும், தமிழர் தலைவர் ஆசிரியரிடமும், பெரியார் திடலுடனும் நெருங்கிய தொடர்பில்தான் இருந்தார்கள்.
இந்து சனாதன ஆதிக்க எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு வளர்ப்பு, பெண்ணுரிமை மீட்பு, சமத்துவம் காத்தல், சமூக நீதி நிலை நாட்டல் போன்றவற்றிற்குப் பாடுபட்டதோடு, அவற்றில் உறுதியுடன் இருந்தனர்.
நாமும் அவர்களைப் பின்பற்றி, இப்பணி-களைச் செய்து சமத்துவத்தையும், சமூக-நீதியையும், தன்மானத்தையும் நிலைநாட்டுவதே அவர்கள் நூற்றாண்டில் அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.ஸீ