நூல் அறிமுகம்

பிப்ரவரி 01-15

நூல்           : தொப்பம்பட்டி
ஆசிரியர்   : உடுமலை வடிவேல்
வெளியீடு : அழகி பதிப்பகம், 2/701, சிறீலட்சுமி நாராயண நகர், ரங்க சமுத்திரம், சூளேஸ்வரன்பட்டி அஞ்சல், பொள்ளாச்சி- 642 006.

பக்கங்கள்: 96 விலை: ரூ. 50/-

சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்கு, விதி என்ற மடமைகளைத் தகர்த்தெறிந்து மறுமலர்ச்சி பெற்ற சமுதாயத்திற்கு வழிகாட்டியுள்ளார் நூலாசிரியர்.

படிப்பதற்கு நேரம் கிடைக்காத பரபரப்பான கணினி உலகிற்கேற்ற வகையில் புதுக்கவிதையில் ஒரு புதினத்தைப் படைத்து, படிப்பார்வலர்களின் நேரத்தினை மிச்சப்படுத்தியுள்ளார்.

பிரபஞ்சத் தோற்றத்தினை இனிய, எளிய முறையில் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து குடும்பத் தலைவன் மூலமாக விளக்கியுள்ள விதம் அருமை!

நெபுலா, விண்மீன் விளக்கம், பூமி தோன்றிய விதம், கடவுள் நம்பிக்கை வளர்ந்த கற்பனைத் தன்மை, பாதிரி சாத்தன் உரை-யாடல் ஆகியன குழந்தைகள் மூடநம்பிக்கையற்றவர்களாக. தன்னம்பிக்கை உள்ளவர்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதற்கான விளக்கங்கள்.

பூகம்பத்தினாலும்/புயலினாலும் / போர்களினாலும் / கொள்ளை நோய்களினாலும் /பசி பட்டினிகளாலும்/ஆழிப் பேரலைகளினாலும் / ஒரே நேரத்தில்/பல லட்சம் பேர் / செத்துப் போகிறார்களே / அத்தனை பேருக்குமா / ஒரே ஜாதகம் / சொல்லுங்கள் என்ற வினா அறிவுப் பொறியைத் தட்டி எழுப்பக்கூடியது.

2001இல் நேபாள இளவரசருக்கு ஜோதிடர் கூறிய கூற்றினையும், நடந்த முரணையும் கோடிட்டுக் காட்டியுள்ளது சிந்தனையைத் தூண்டி பகுத்தறிவுக்கு வித்திட வைப்பதாக உள்ளது.

செவ்வாய் தோஷம் என்ற மூடநம்பிக்கை, ஒரு பெண்ணின் வாழ்க்கையினை எப்படி-யெல்லாம் அலங்கோலப்படுத்துகிறது என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

மூடநம்பிக்கையில் மூழ்கி, இப்படித்தான் வாழ்வேன் என்று தனக்குள் குறுகிய எல்லை வகுப்பவர்கள், எப்படியெல்லாம் மாற வேண்டும் – தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெளிவுறுத்தி இருப்பதே தொப்பம்பட்டி.


நூல்           : ஹைக்கூ ஆற்றுப்படை
ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி
வெளியீடு : ஜெயசித்ரா, 21 வன்னியக் கோனார் சந்து, வடக்கு மாசி வீதி, மதுரை 625 001.
பக்கங்கள் : 96 விலை: ரூ. 50/-

சமுதாயத்தின் அன்றாட நிகழ்வுகள் – மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் சிந்தையில் துள்ளியோடித் தட்டி எழுப்பும் துளிப்பாக்கள். பலரது எண்ணங்களால் எழுத்துருவாக்கப்பட்ட ஹைக்கூ கவிதைகளைத் தேர்ந்தெடுத்து – விமர்சனம் செய்து நூலாக்கியுள்ளார் ஆசிரியர்.

விரலில் / மாட்டியிருந்தது / அதிட்டக்கல் மோதிரம் / துண்டிக்கப்பட்ட கை/ என்று மூடநம்பிக்கையினைச் சாடி, பாதையில் குடிசை/ பளிங்குக் கோயில்/பாருக்குள்ளே நல்ல நாடு? என நடுங்க வைக்கும் வினா.

தேள் கொட்டியது/ கணியனை/ குறி சொன்ன நேரம்/ என ஜோதிடத்தின் மீது ஆத்திரம் எழுப்பும் வரிகள். இன்னும் சில கிராமங்களில் இரட்டைக் குவளை முறை இரண்டறக் கலந்து தாண்டவமாடும் நிலையினை, தொடருது மனக்கவலை/ அறுபதாம் ஆண்டு விடுதலை நாளிலும்/ தொங்குது இரட்டைக் குவளை/ என கண்டித்து நின்று சிந்திக்க வைக்கும் பா.

காக்கியும் காவியும்/ ஜாதி மதம் பார்ப்பதில்லை / பாலியல் பலாத்காரத்தில்/ என்று சாடி நிற்கும் சமூகத்தின் அவல நிலை. கனமான பூட்டு/ கதவில் தொங்கியது/உள்ளே காவல் தெய்வம்/ என தன்னையே தற்காத்துக் கொள்ள முடியாத தெய்வத்தின் நிலை.

இன்றைய பிஞ்சுகளின் முதுகில் ஏற்றப்படும் புத்தகச் சுமையானது, வண்ணத்துப் பூச்சிகளின்மீது/ நத்தைக் கூடுகள்/ பள்ளிச் சிறார்கள்/என்ற வரிகளில் பிரதிபலித்து நிற்கிறது.
இருபத்தாறு அருவிகளில் குளித்து முடித்த புத்துணர்ச்சியினை மனதிற்குத் தந்து ஆற்றி நிற்பதே ஹைக்கூ ஆற்றுப்படை.

 


நூல்            : நையப்புடை
ஆசிரியர்    : பவகணேஷ்
வெளியீடு   : மின்னல் கலைக்கூடம்,
117, எல்டாம்ஸ் சாலை,
சென்னை 600018
பக்கங்கள்: 48 விலை: ரூ. 15/-

இன்றைய குழந்தைகளின் நிலையினை எடுத்துக் கூறி, பரபரப்பான உலகில் பெற்றோர்களின் நிலையானது, குழந்தைகள் மீது தன் கனவு திணித்து/பணம் வாரி வீசி முதலீடு செய்து / பகிர்தல் வார்த்தை பேசாது / கழியும் பெற்றோர்கள் / என்று கூறப்பட்டுள்ளது.

கல்வியின் அவசியமும், தோல்வியினை ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்ளும் முறையும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்றைய கல்வி முறையினைச் சாடி, எப்படிப்பட்ட கல்விமுறை தேவை என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

புகையில்லா பூமி –  புன்னகை பூக்கும் பூமி அமைவதற்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. குழந்தைத் தொழிலாளர்களின் கோர நிலையினை விளக்கியதோடு, மீட்பதற்கான வழியும் கூறப்பட்டுள்ளது.

நகைச்சுவை என்ற பெயரால் இன்றைய ஊடகங்களின் நிலையினை எடுத்துக்கூறி, நகைச் சுவையின் விளக்கத்தினை எளிய முறையில் கூறி கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரவாணிகளை மூன்றாம் பால் என்று குறிப்பிட்டு சமூகத்தில் அவர்களின் நிலையினை விளக்கி, சிந்தனைக்கு வித்திடப்பட்டுள்ளது.

இப்படி, சமூகத்தின் அவலங்களை – சீர்கேடுகளை நையப்புடைக்கும் கருத்துகள் பல இருப்பினும் கவிதை வரிகள் படித்தவுடன் மனதில் பதியவில்லையோ என்ற அய்யத்தினை ஏற்படுத்தியிருப்பதே நையப்புடை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *