கவிச்சிம்மன்
நால்வருணம் நாட்டில் நடமாட விட்டு
மேல்வருணம் நானென்றும் மீதமுள்ள வர்கள்
கீழ்வருணம் என்றும் கூறிவரும் எத்தரின்
கால் ஒடிக்க வந்த கனல்வீரர் பெரியார்!
மதம்பிடித்து மக்களை மடமையில் ஆழ்த்தும்
விதம்பிடித்து வாழ்ந்த வீணரின் கூட்டத்தைப்
பதம்பிடித்து நாட்டில் பகுத்தறிவுத் தன்மையால்
வதம்பிடித்து வாட்டிய மறவர் பெரியார்!
பலபள்ளி தனைமூடி பைந்தமிழ் மண்ணில்
குலக்கல்வி முறையைக் கொண்டுவந்து தமிழரின்
நலங்கொல்லி யான நயவஞ்சகச் சதியை
வலம் வந்து விரட்டிய வண்டமிழர் பெரியார்!
வேதத்தைக் காட்டி வேதியர் கூட்டம்
பேதத்தை நாட்டில் பேணலைக் கண்டு,
வாதத்தை வைத்து வாழ்பவர் ஒன்றெனும்
நாதத்தை முழக்கிய நாயகர் பெரியார்!
கண்மணியாம் பெண்மணியைக் காலம் காலமாய்
மண்மீதில் வதைக்கின்ற மடமையைக் கண்டு,
பெண்ணடிமை போக்க பெரும்புரட்சி செய்த
மண்ணின் மைந்தர் மாத்தமிழர் பெரியார்!
ஆண்டான் அடிமையென்று ஆட்டிப் படைக்கின்ற
தீண்டாமை உணர்வு தேசத்தில் எங்கும்
வேண்டா மெனஓதி வைக்கம் மாநகரில்
நீண்ட போராடி நீதிபெற்ற பெரியார்!
நற்பட்டம் பதவி நாடாளும் வாய்ப்பு
முற்படுத்தப்பட்டோர்க்கு மட்டுமே முறையா?
பிற்படுத்தப் பட்டோர்க்கும் தாழ்த்தப் பட்டோர்க்கும்
நற்திட்ட வகுப்புரிமை நல்கியவர் பெரியார்!
(கவிச்சிம்மன் கவிதைத் தொகுப்பிலிருந்து..)