ஆறு.கலைச்செல்வன்
புரட்டாசி மாதம் வந்தாலே மாதவன் வீட்டில் சண்டை சச்சரவுகளும் ஆரம்பமாகி-விடும். மாதவனின் துணைவி மல்லிகா புரட்டாசி மாதத்தில் அசைவ உணவு சாப்பிடமாட்டார். புரட்டாசி மாதம் முழுவதும் சுத்த சைவமாகி விடுவார். ஆனால், மாதவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்த மாதத்தில் தான் அதிகமாக மீன், ஆட்டுக்கறி, கோழிக்கறி என்று எல்லாவற்றையும் வாங்கி வருவார்.
“வருஷா வருஷம் வேணும்னே இப்படிப் செய்றீங்க என்னைப் பார்க்க வைச்சுக்கிட்டு சாப்பிடறதில் அப்படியென்ன உங்களுக்குச் சந்தோஷம்?’’ என்று ஒரு நாள் கேட்டார் மல்லிகா.
“மல்லி, புரட்டாசி மாசத்தில்தான் இறைச்சி விலையும், மீன் விலையும் குறைவாயிருக்கும். உன்னைப் போல் விவரம் தெரியாத பலர் இறைச்சி வாங்குவதில்லையல்லவா! அதனால் விலையும் குறைவு. கூட்டமில்லாமல் இருப்பதால் நல்ல மீனும், கறியும் பார்த்து வாங்கலாம்’’ என்றார் மாதவன். அன்று அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.
“ஒரு மாசம் கவுச்சி சாப்பிடாமல் இருந்தால்தான் என்ன?’’
“எதுக்காக மல்லி அப்படி இருக்கணும்! ஏதாவது உருப்படியான காரணம் இருக்கா? ஒரு மாசம் நம் உடலுக்குத் தேவையான சத்தைத் தராமல் இருக்கலாமா? மீன் எவ்வளவு சிறந்த உணவு தெரியுமா! இறைச்சியில் தானே புரோட்டின் சத்து அதிகம் இருக்கு.’’
“காய்கறியில் இல்லையா? காய்கறி சாப்பிட வேண்டியது தானே!’’
“சாப்பிடலாம்தான் மல்லி, ஆனால் எந்த வித காரணமும் இல்லாமல் ஒரு மாசம் ஏன் கறி, மீன் சாப்பிடாம இருக்கணும்? சரிவிகித உணவு நாள்தோறும் நமக்குத் தேவைதானே? மீனில் இல்லாத சத்தா? புரோட்டீன், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் எல்லாமே இருக்கு. கானாங் கெளுத்தி மீன் சாப்பிடுவது இருதயத்துக்கு ரொம்பவும் நல்லது. மீனில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் இருக்கு. இது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தம், மனச் சோர்வு எல்லாமே நீங்கும். அதனால் விடாமல் நாம் மீனையும் மற்ற இறைச்சிகளையும் சாப்பிடவேண்டும்.’’
“சரி, சரி வழக்கம்போல் நீங்க வாங்கிட்டு வாங்க, சமைச்சித் தர்ரேன். ஆனால், நான் மட்டும் சாப்பிடமாட்டேன்.’’
இவ்வாறு மல்லிகா கூறியதும், எப்படியும் ஒரு நாள் நீ திருந்துவாய் என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டு மீன் வாங்கிவர பையுடன் கிளம்பினார் மாதவன்.
புரட்டாசி மாதம் போய் அய்ப்பசி மாதம் வந்தது. புரட்டாசி மாதத்தில் நல்ல வகை வகையான அசைவ உணவுகளை உண்டு நலல் உடல் நலத்துடன் காணப்பட்டார் மாதவன். தேவையில்லாமல் வழக்கமான உணவைத் தவிர்த்த மல்லிகா சோர்வுடனே காணப்-பட்டார். அடுத்த ஆண்டு எப்படியும் தன் வழிக்கு மல்லிகா வருவார் என நம்பினார் மாதவன்.
அய்ப்பசி மாதம் ஆரம்பித்த உடனேயே கல்யாணப் பத்திரிகைகள் நிறைய வர ஆம்பித்துவிட்டன. தீபாவளிப் பண்டிகையும் நெருங்கிவிட்டது. செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சியிலும் வெடிவிபத்துகள், உயிரிழப்புகள் பற்றிய செய்திகள் நிறைய வந்தன. மாதவனுக்கு இந்தச் செய்திகள் எரிச்சலையும் மன வருத்தத்தையும் கொடுத்தன. பகுத்தறிவுக்கு ஒவ்வாத இத்தகைய மூடநம்பிக்கை விழாக்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என விரும்பினார். பலரிடம் இது பற்றிக் கூறி அறிவுத் தெளிவை ஏற்படுத்தியும் உள்ளார்.
ஒரு குறிப்பிட்ட தேதியில் நடைபெற உள்ளதாக திருமண அழைப்பிதழ்கள் பல வந்தன. எல்லாத் திருமணங்களுமே முக்கியமான-வையாகப்பட்டது. மாதவனுக்கு. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீட்டுத் திருமணங்-களாகவே அனைத்தும் இருந்தன.
“மல்லி, இப்படி ஒரே நாளில் நடக்க இருப்பதாகப் பல திருமண அழைப்பிதழ்கள் வந்திருக்க இன்னமும் வந்துகிட்டும் இருக்கு. நாம் எந்தத் திருமணத்திற்குச் செல்வது?’’ என்று ஒரு நாள் துணைவியாரிடம் கேட்டார் மாதவன்.
“நானும் அதுபற்றிதான் யோசிச்சிகிட்டு இருக்கேன்’’ என்று பதில் சொன்னார் மல்லிகா.
“இதுவரைக்கும் மொத்தம் ஒரே நாளில் அதாவது பத்தாம் தேதி நடைபெற உள்ளதாக பத்து அழைப்பிதழ்கள் வந்திருக்கு. அதோட இல்லாமல் ஒரே நேரத்திலேயும், வெவ்வேறு ஊர்களிலேயும் நடக்க இருக்கு. நீ ஒரு ஊர், நான் ஒரு ஊர் என்று போனாலும் ரெண்டு கல்யாணங்களில் மட்டுமே கலந்துக்க முடியும். ஏன் இப்படி ஒரே நாளில் ஒரே நேரத்தில் வைக்கிறாங்களோ?’’ என்று ஆதங்கப்பட்டார் மாதவன்.
“அன்னைக்குத்தாங்க சுபமுகூர்த்த நாள். அதைவிட்டா நல்ல நாள் கிடைக்காது. அதோடு வளர்பிறையிலும் வருகிறதல்லவா? அதனால்தான் ஒரே நாளில் கல்யாணம்’’ என்று பதில் சொன்னார் மல்லிகா.
“ஜோதிடம், நல்ல நாள் பார்ப்பது இதெல்லாம் முட்டாள் தனமான செயல்கள். எனக்கு எரிச்சலா வருது. என்ன பண்றது! இருபத்து நாலு மணி நேரமும் நல்ல நேரம்தான். பெரியார் எவ்வளவோ சொல்லி இருக்கார். அவர் சொன்னதைக் கேட்டு நிறைய பேர் நல்ல நேரம், ஜோதிடம் பார்க்கிறது இல்லை. ஆனாலும், இன்னும் பலரும் திருந்தி வரணும். உலகம் பூராவிலும் புத்தரின் போதனைகள் பரவி இருக்கு. அவர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?’’ என்று கேட்டு நிறுத்தினார் மாதவன்.
“என்ன சொன்னார்?’’ என்று ஆவலுடன் கேட்டார் மல்லிகா.
“சடங்கு, சம்பிரதாயம், யாகம், நாள், நட்சத்திரம், நேரம் பார்த்து உன் வாழ்வை நீ அமைத்துக் கொண்டால் உன்வாழ்வு மேம்படாது. அழிந்து போவாய், இப்படித்தான் மக்களுக்கு புத்தர் அறிவுரை சொல்லியிருக்கார்’’ என்றார் மாதவன்.
மல்லிகாவும் அதை ஆமோதித்தார்.
“நீங்க சொல்றதையெல்லாம் கேட்கும்போது எனக்கும் ஜோதிடம், நல்ல நேரம் பார்ப்பது இதிலெல்லாம் நம்பிக்கை குறையுதுங்க’’ என்ற மல்லிகா மேலும் தொடர்ந்து,
“சரிங்க, நாம் எந்தக் கல்யாணத்துக்குப் போறதுன்னு. அதை முடிவு பண்ணுங்க’’ என்றார்.
மாதவன் வந்திருந்த அழைப்பிதழ்களை எல்லாம் மீண்டும் எடுத்துப் பார்த்தார். ஒவ்வொன்றாகப் பார்த்த அவர் ஒரு அழைப்பிதழை மட்டும் எடுத்து மேசையின் மீது வைத்தார். மற்ற அழைப்பிதழ்களை அடுக்கி அலமாரியில் வைத்தார். மல்லிகா அவர் செய்வதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
“நாம் ரெண்டு பேருமே இந்த மணவிழா-விற்குச் செல்லலாம்’’ என்று கூறியபடியே மேசையின் மீது வைத்த அழைப்பிதழை எடுத்து மல்லிகாவிடம் கொடுத்தார் மாதவன்.
அதை வாங்கிப் பார்த்த மல்லிகா, “இந்த மாப்பிள்ளை நமக்கு அதிக அறிமுகம் இல்லாதவர் ஆயிற்றே! நெருக்கமான சொந்தக்காரங்க கல்யாணத்துக்குப் போகாமல் ஏன் இந்த கல்யாணத்துக்குப் போகணும்?’’ எனக் கேட்டார்.
“மல்லி, இந்த அழைப்பிதழைப் பார். வந்த அழைப்பிதழ்களில் இந்தத் திருமணம் மட்டும்தான் சுயமரியாதைத் திருமணம். மாப்பிள்ளையோட அப்பா என்னுடைய பழைய நண்பர். ஆனாலும், அவரைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. சுயமரியாதைக்காரர். மறக்காம அழைப்பிதழ் அனுப்பியிருக்கார். வெளியூரில் தான் திருமணம் இருந்தால்கூட நாம் இந்தத் திருமணத்திற்குப் போய் வருவோம். மற்ற திருமணங்களை, பிறகு ஒரு நாள் அவரவர்கள் வீடுகளுக்குப் போய் விசாரித்து வரலாம்.’’
“நெருங்கிய சொந்தக்காரங்க வருத்தப்பட மாட்டாங்களா? யோசிச்சிப் பாருங்க!’’
மல்லி, இந்தத் திருமணத்திற்குப் போனாத்தான் நாம் மணமக்களை நல்ல முறையில் வாழ்த்தலாம். நாமும் சுயமரியாதைத் திருமணம்தானே செஞ்சுக்கிட்டோம்! மற்ற திருமணங்களில் மணமக்களை எவ்வளவு இழிவுபடுத்த முடியுமோ அவ்வளவு இழிவுபடுத்துவார்கள். அதை நாம் கேட்க வேண்டுமா?’’
“எப்படி இழிவு படுத்துறாங்க? அதை கொஞ்சம் சொல்லுங்க.’’
“மல்லி, திருமணத்தின்போது நமக்குப் புரியாத மொழியில் மந்திரம் ஓதப்படுகிறது. அதன் பொருள் தெரியுமா?’’
“சரியாத் தெரியலையே, சொல்லுங்க!’’
நான் இந்தப் பெண்ணை முதலில் சோமனுக்கு மனைவியாக்கினேன்; அடுத்து கந்தர்வனுக்கு மனைவியாக்கினேன்; மூன்றாவதாக அக்னிக்கு மனைவியாக்கினேன். பிறகு எனக்கும் மனைவியாக்கினேன். கடைசியில் இந்த மணமகனுக்கு மனைவியாக்குகிறேன். இன்னும்…..’’
“போதும் போதும் நிறுத்துங்க! அசிங்கம், அசிங்கம்! இனிமே நாம் சுயமரியாதைத் திருமணங்களுக்கு மட்டும்தான் போக-வேண்டும்.’’
“இன்னும் எவ்வளவோ இருக்கு மல்லி. செந்தலை கவுதமனார் இதுபற்றி தெளிவாகப் பேசியிருக்கார். மஞ்சை வசந்தன் தனது அர்த்தமற்ற இந்து மதத்தில் தெளிவாக எழுதியிருக்கார்’’ என்றார் மாதவன்.
இதற்குப் பிறகு இருவரும் சுயமரியாதைத் திருமணத்திற்குச் செல்வதென முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். மேலும் ஒரு செய்தியையும் மல்லிகா தனது துணைவர் மாதவனிடம் சொன்னார்,
“அடுத்த ஆண்டு புரட்டாசி மாசம் நானும் கறி, மீன் சாப்பிடப் போறேன்’’ என்பதுதான் அந்தச் செய்தி.ஸீ