சமூக நீதியின் முன்களப் போராளி!
கோவி.லெனின்
அவரது அகவை 89. செயல்பாடோ இளமைக்குரிய பதின்பருவமான 19. சமூக நீதிக்கான களம் எதுவாக இருந்தாலும் அவர்தான் முன்கள வீரர். அவர் முழக்கமே, முதல் முழக்கம். அவர்தான் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்கள். தந்தை பெரியார் இப்போதுதான் முன்னிலும் அதிகமாக இந்தியாவுக்குத் தேவைப்படுகிறார் என்கிறார்-கள் அரசியல் பார்வையாளர்கள். பெரியாரை உலகமயமாக்கும் பெரும்பணியில் அயராது உழைக்கின்ற ஆசிரியர் அவர்களின் ஆலோசனை-களும் செயல்பாடுகளும் முன்பை-விட இப்போது மிக அதிகமாகத் தேவைப்-படுகிறது.
இந்திய ஒன்றியம் என்பது பன்முகத்தன்மை கொண்ட நிலப்பரப்பு. அந்த பன்முகத் தன்மையைச் சிதைத்து, ஒற்றை மதம்_ஒற்றை மொழி_ஒற்றைப் பண்பாடு என, மொத்தத்தில் சனாதன_வருணாசிரம_மனுநீதி ஆட்சியை நிலைநாட்டுவது என்ற எண்ணத்துடன் 7 ஆண்டுகாலமாக பா.ஜ.க அரசு முயன்று வருகிறது. ஆர்.எஸ்.எஸ் எனும் ஆக்டோபஸ் கரங்களே பா.ஜ.க.வை இயக்குகின்றன. பா.ஜ.க. அரசின் நிருவாகம் அதன் வழி இந்திய ஒன்றியத்தை இயக்குகிறது.
கோவில் சாமி சிலை கீழே விழுந்து-விட்டதால் பதறிப்போன அர்ச்சகர், அதனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அங்கிருந்த டாக்டர்கள் சாமி சிலைக்கு சிகிச்சை அளித்து, கட்டுப்போட்டு அனுப்பி-யிருக்-கிறார்கள். அர்ச்சகரை சமாதானப்-படுத்துவதற்காக சிலைக்கு சிகிச்சை அளித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது நடந்தது பா.ஜ.க ஆட்சி செய்கின்ற உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தில்தான். சாமி சிலைக்கு பேண்டேஜ் போட்டது பற்றி தலைமை மருத்துவர் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை.
சாமிக்கு ஏற்பட்டது என்ன வகையான எலும்பு முறிவு? எக்ஸ்_ரே, ஸ்கேன் எதுவும் எடுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டதா? என்று செய்தியாளர்கள் கேட்க முடியாது. அதற்கு டாக்டரால் பதில் சொல்லவும் முடியாது. எதைக் கேட்டாலும், என்ன பதிலைச் சொன்னாலும், இந்துக்களைப் புண்படுத்தி-விட்டார்கள் என்று குரல்கள் ஒலிக்கின்ற மாநிலம் அது. சாமிக்கே கூட பேண்டேஜ் போட முடியும். இந்த புண்பட்டவர்களுக்கு ஒரு போதும் மருந்து போட முடியாது.
இது உத்தரப்பிரதேசத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள நிலவரம்தான். மத்தியப் பிரதேசத்தில் ஒருவர் தன் பசுமாடு பால் கறக்கவில்லை என்று காவல் நிலையத்திற்குச் சென்று புகார் தெரிவித்-திருக்கிறார். காவல்துறையும் அதன் மீது கவனம் செலுத்தியிருக்கிறது. எஃப்.அய்.ஆர் அநேகமாக வைக்கோல் போர் மீதோ பருத்திக்கொட்டை மீதோ போடப்பட்டிருக்கலாம். இந்தியாவின் தொழில்வளர்ச்சியைப் பெருக்குவதற்கு பசுமாட்டுச் சாணத்தையும் கோமியத்தையும் ஏற்றுமதி செய்வது பற்றி அமைச்சர்கள் பேசுகின்ற நாட்டில், பசுமாடு பால் கறக்கவில்லை என்றால் போலீசிடம் புகார் கொடுக்கும் மக்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை.
கொரோனா நோய்த் தொற்றை விரட்ட, மணி அடியுங்கள்_விளக்கு ஏற்றுங்கள்_ ‘Go Go Corona’ என்று கைத்தட்டுங்கள் என அரிய வகை சிகிச்சை முறைகளை வழங்கியவர் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். இப்போது அவர் என்ன சொல்கிறார்? 100 கோடிக்கு மேல் தடுப்பூசி போட்டு, கொரோனாவைக் கட்டுப்படுத்தி, தனது அரசு சாதனை படைத்திருக்கிறது என்கிறார். கைத்தட்டி_விளக்கேற்றிய போது கட்டுப்படாத கொரோனா, தடுப்பூசிக்குப் பிறகு எப்படி கட்டுப்பட்டது? அதுதானே அறிவியல் சிந்தனை.
அறிவியலுக்குப் புறம்பானவற்றையே நாட்டின் பெருமிதமாக முன்னிறுத்துவது, புராண காலக் கதைகளை போலி அறிவியலாக முன்னெடுப்பது, ஜோதிடத்தையும் ஜாதகத்தையும் முழுமையான அறிவியல் என நிலைநிறுத்துவது, அவற்றை வியந்தோதும் சமஸ்கிருத மொழியையும் இந்தியையும் திணிப்பது, ஒவ்வொரு மாநிலத்திற்குமான பண்பாட்டுக் கூறுகளைப் புறக்கணிப்பது, ஓணம் பண்டிகையில் மாவலி மன்னனை கேரள மக்கள் போற்றுவதற்குப் பதில் வாமன திவஸ் கொண்டாட வேண்டும் எனக் கூப்பாடு போடுவது _ இவைதாம் 7 ஆண்டுகால ஆட்சியின் போக்காக இருக்கிறது.
இவற்றைத் துணிவுடன் எதிர்த்துக் குரல் கொடுக்கும் நரேந்திர தபோல்கர்களை_கௌரி லங்கேஷ்களை கொலை செய்யும் கூட்டத்துக்கு ஆட்சியின் பாதுகாப்பு இருக்கும்போது, இவற்றைச் சுட்டிக்காட்டவும்_தட்டிக்கேட்கவும் தமிழ்நாட்டிலிருந்து ஒலிக்கிறது ஆசிரியரின் குரல். அது, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கிறது.
மூடநம்பிக்கைகளைத் தகர்த்து_பகுத்தறிவை விதைத்து _ இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை முன்னெடுக்க வேண்டும் என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருபவர் ஆசிரியர் அவர்கள். அதற்கான ஆதரவுத் தளத்தை அவர் பெருக்கிக் கொண்டே வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் அறிவியல் தளமான இணையத்தின் வழியாக பல்வேறு மாநிலத்தவர் பங்கேற்ற கருத்தரங்குகளில் உரையாற்றி, மூடநம்பிக்கைக்கு எதிராக முழங்கியவர் அவர்.
சமூக நீதிக்குக் குழிதோண்டும் முயற்சிகள் எங்கேனும் தென்பட்டாலும் உடனே ஆசிரியரிடமிருந்துதான் முதல் குரல் ஒலிக்கும். இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்பதை எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலம் முதல் நரேந்திர மோடி ஆட்சிக்காலம் வரை தொடர்ச்சியாக எதிர்த்து_அதற்கான வலுவான வாதங்களை வைப்பவர் ஆசிரியரே! ஒன்றிய அரசின் பணியிடங்களில் இதரப் பிற்படுத்தப்-பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு எந்தெந்த வழியிலும் வகையிலும் பறிபோகிறது _ பறிக்கப்-படுகிறது என்பதற்கான குரலும் அவருடையதே! மாநில அரசின் இடஒதுக்கீட்டிலும் ஒன்றிய அரசு பெருச்சாளி போல நுழையும்போது அதனை சமூக நீதிப் பார்வை எனும் தடி கொண்டு தாக்குவதும் அவரது கரங்கள்தான்.
தெருவில் எந்த சந்து வழியாகவோ_வீட்டில் எந்த பொந்து வழியாகவோ காவிகள் தமிழ்நாட்டுக்குள் நுழைய முயன்றால் உடனே கண்டறிந்து எச்சரிக்கை மணி அடிப்பவரும் ஆசிரியர் வீரமணி அவர்கள்தான்.
தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.கழக ஆட்சியின் சமூக நீதி வழிகாட்டி அவர். திராவிடக் கொள்கைகள் நிலைநாட்டிட துணை நிற்கும் அதே நேரத்தில், எதிரிகளின் ஊடுருவலையும் சுட்டிக்காட்ட அவர் தயங்கியதேயில்லை. கல்வி நிலையங்கள், கோயில்கள், பொது நிகழ்ச்சிகள் எனக் காவி சித்தாந்தம் நுழையும் இடங்களை நுண்ணாடி கொண்டு கண்டறிந்து, அரசுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கிறார் ஆசிரியர். தாய்க் கழகத்தின் அறிவுரையை ஏற்று, அவற்றைச் சீர்படுத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சற்று அசந்தாலும் சளைக்காமல் அனைத்து இடங்களிலும் ஊடுருவத் தயாராக இருக்கின்ற மதவாத அரசியலுக்கு எதிரான போராளியாகத் திகழ்கிறார் ஆசிரியர். அவர் தொடங்கி வைக்கின்ற முழக்கம், இன்றைய தகவல் தொழில்நுட்ப வசதிகளின் காரணமாக அனைத்து இடங்களுக்கும் பரவுகிறது. குறிப்பாக, இளைய தலைமுறையிடம் சரியாகப் போய்ச் சேருகிறது.
தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும் என்பது போல இன்றைய இளைய சமுதாயம் மிகத் தெளிவாகப் பெரியாரை உள்வாங்கிக் கொண்டு, சனாதன_வருணாசிரம சக்திகளுக்கு எதிராகக் களமாடுகிறது. காவிக் கூட்டத்தை விரட்டியடிக்கிறது. அந்த உணர்வும் செயலும் தொடர்ந்திட அகவை நூறு கடந்தும் ஆசிரியரின் வழிகாட்டல் அவசியம்.