சமா.இளவரசன்
நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது ‘ஜெய் பீம்’. தீபாவளி அன்று திரையரங்குகளுக்கு வந்த திரைப்படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது இந்தப் படம் தான் என்றால் மிகையில்லை.
படத்தின் முக்கியத்துவம் கருதி திராவிடர் கழகத் தலைவர் முதல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் வரை திரைப்படத்தைப் பார்த்துப் பாராட்டியிருக்கிறார்கள். வெளியான முதல் வாரம் பெரும் வரவேற்பையும், அடுத்த வாரம் விவாதங்களையும் குவித்தது ‘ஜெய் பீம்’. இன்னும் கூட சிலர் இது பற்றிக் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படத்தின் ஆக்கம், கருத்து, கதாபாத்திரங்கள், பேசப்பட்ட செய்தி, நபர் அல்லது இயக்கத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், எப்படியெல்லாம் படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பவை குறித்-தெல்லாம் பேசித் தீர்த்திருக்கிறார்கள் சமூக ஊடகவாசிகள். அப்படிப் பேசுவதற்கு இப் படத்தில் என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பி யாரும் ஒதுக்கிவைக்க முடியாதபடி படம் ‘பேசாப் பொருளைப் பேசி’யிருக்கிறது.
1993-இல் கடலூர் மாவட்டத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதைக்கு, விறு-விறுப்பான திரைக்கதை எழுதி இயக்கியிருக்-கிறார் பத்திரிகையாளர் த.செ.ஞானவேல். படத்தை சூர்யா, ஜோதிகா இணையர் தயாரித்திருக்கிறார்கள்.
பாம்பு, எலிகளைப் பிடித்தும், கடுமையான உடல் உழைப்புத் தொழிலில் ஈடுபட்டும் வாழும் இருளர் என்ற பழங்குடியின மக்கள் படும் துயரங்களை ராசாக்கண்ணு _ செங்கேணி ஆகியோரின் கதை மூலம் கவனப்படுத்தி-யிருக்கிறது ஜெய்பீம். தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே பழங்குடியினர் வாழ்கின்றனர். அவர்களும் பல்வேறு சமூகத்தவராகவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்கிறவர்கள். அவர்களுக்கான அரசியல் உரிமையோ, பிரதிநிதித்துவமோ கிடைப்-பதற்கான வாய்ப்பற்ற மக்கள் சமூகம். மேலும் பழங்குடியினர் என்று பொருள் கொள்ளப்பட வேண்டிய Tribes என்னும் பெயர், மலைவாழ் மக்கள் என்று தவறாகப் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாலும், (காட்டு-வாசிகள் என்று பொருள்படும் வனவாசி என்றுதான் ஆர்.எஸ்.எஸ். கம்பெனிகள் குறிப்பிடுகின்றன) சமவெளிப் பகுதிகளில் வாழும் பழங்குடியினரின் நிலை மேலும் மோசமாகும்.
அங்கு இருப்போருக்கு தங்கள் இருப்பை உறுதி செய்து சான்றிதழ் பெறுவதே மிகவும் கடுமையான காரியமாக இருக்கும். ‘இருளர் என்றால் பாம்பு பிடிக்கத் தெரியுமா?’ என்பது சர்வசாதாரணமாகக் கேட்கப்படும் கேள்வி. “அதெல்லாம் வேண்டாம். படிக்கட்டும்னு தானே சார் சர்டிபிகேட் கேட்குறோம்’’ என்று பொட்டில் அறைந்தாற் போல் பதில் சொல்லுகிறது இப்படத்தின் ஒரு காட்சி.
படத்தின் மையக் கரு _ விசாரணையை முடிக்க முடியாத வழக்குகளில் நாடோடிகளும், பழங்குடியினரும் தொடர்பேயின்றி கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்படுதலும், ‘லாக் அப் டெத்’ எனப்படும் காவல் நிலைய விசாரணையின் கொடுமைகளும், கொலைகளும் பற்றியது. அதை தொடக்கம் முதலே அழுத்தம் குறையாமல் எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர்.
திருட்டு வழக்கு ஒன்றில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராசாக்கண்ணு மீது சந்தேகம் எழ, அவரது அக்கா உள்பட உறவினர்கள் இழுத்துச் செல்லப்பட்டு சித்திரவதைக்கும், வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்படுன்றனர். வெளியூர் வேலைக்குச் சென்றிருந்த ராசாக்கண்ணுவும் அகப்பட, அவர் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்களுக்கு மத்தியில், அவர்கள் கூட்டாக காவல்-நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்ற சூழலில் அறிவொளி இயக்கத் தோழர் மூலம், உள்ளூர் கம்யூனிஸ்ட் தோழர்களை அணுகி, பின்னர் வழக்குரைஞர் சந்துரு(சூர்யா)வின் சட்டப் போராட்டத்தினால் ராசாக்கண்ணுவுக்கு நடந்தது என்ன, அது எப்படி மறைக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடித்து உரிய நீதியைப் பெறுகிறார்.
ஒடுக்கப்பட்டவரினும் ஒடுக்கப்பட்டவர்-களாகவும், அடிப்படை மனித உரிமைகளும் மறுக்கப்பட்டவர்களாகவும் உள்ள மக்களை அடையாளப்படுத்தி, அவர்கள் மீது கவனம் குவித்திருப்பது இப்படத்தின் முதல் சாதனை. சமரசம் இன்றி பல பிரச்சினைகளைப் பேசியிருப்பதும், திரைப்படத்தின் தன்மை மாறாமல் எடுத்துச் சென்றிருப்பதும் பலம்.
படத்தைத் தயாரித்ததுடன், அதில் முக்கியப் பாத்திரமேற்று நடித்து, இக்கதை பேசப்படக் காரணமாக அமைந்திருக்கும் நடிகர் சூர்யா பாராட்டுக்குரியவர். தனது சமூக அக்கறைக்காக தான் எதிர்கொள்ளும் எதிர்ப்புகளையும், சில நேரம் குறிவைத்து ஆதிக்கவாதிகளால் ட்ரால் செய்யப்பட்டாலும் அவற்றைக் கவனமாகவும், சமரசமின்றியும் எதிர்கொள்கிறார்.
படத்தின் முக்கியப் பாத்திரமேற்று நடித்திருக்கும் மணிகண்டன், லீமாரோஸ், தமிழ் உள்ளிட்ட ஒவ்வொரு நடிகரும், சரியான ஒளிப்பதிவு, தேவையான இசை என்று இப்படத்தின் ஒவ்வொரு கலைஞரும் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ், லெனின் என்று படத்தின் பல இடங்களிலும் உரிமைக்காகப் போராடிய தலைவர்கள், நடக்கும் போராட்டத்தின் பின்புலமாக அடையாளப்படுத்தப்-பட்டிருக்கிறார்கள். படத்தின் ஒவ்வொரு காட்சியும் முக்கியமானது. சமூக நீதி இன்னும் ஆழமாகச் சென்று சேர வேண்டியதன் அவசியத்தைப் பலருக்குப் புரிய வைத்திருக்கிறது இப் படம். சமூகநீதிப் பணிகளில் தங்களை ஒப்படைத்துக் கொண்டோரைத் தவிர, ஏன் இன்னும் சமூகநீதிக்கான குரல் என்று புரியாமல் இருக்கும் மக்களுக்குக் கொஞ்சமேனும் இது போன்ற திரைப்படங்கள் உணரவைக்கும். படத்தின் போக்கில் எழும் விமர்சனங்கள் கூட படத்தின் நோக்கத்தைப் புரிந்துகொண்டுள்ளன.
சமூகத்தின் வளர்ச்சியில் கலைப் படைப்பு-களின் பங்களிப்பு முக்கியமானது. இத்தகைய குரல்களுக்கு நாம் தரும் ஆதரவு, இன்னும் கேட்கப்படாத குரல்களைக் கேட்கவைக்கும். உரிமைக்காக ‘ஜெய் பீம்! வாழ்க பெரியார்! லால் சலாம்!’ என முழங்க வைக்கும்.ஸீ