தற்போது தேசிய அளவில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய மின் தொகுப்பு அமைப்புகள் உள்ளன. இதேபோல் தேசிய நீர்த் தொகுப்பு (நேஷனல் வாட்டர் கிரிட்) என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தினால் நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும். அமெரிக்காவில் மிசிசிபி ஆறு 32 மாநிலங்கள் வழியாகப் பாய்ந்தோடுகிறது. நதிநீரைப் பங்கீடு செய்வது தொடர்பாக 1802இல் ஒப்பந்தம் போடப்பட்டது. மிசிசிபி நதியைப் பாதுகாக்கும் பணியை அமெரிக்கக் கடற்படை மேற்கொண்டு வருகிறது. இதேபோல் நம் நாட்டிலும் ஆறுகள் மற்றும் அணைகளைப் பாதுகாக்கும் பணியில் ராணுவமும் கடற்படையும் ஈடுபடுத்தப்பட வேண்டும். எந்தத் தனிநபரும் நாட்டைவிட மேலானவர்கள் அல்ல.
-அப்துல் கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்
சிறிய குழந்தைகளுக்குப் பெரிய புத்தகப் பை, எழுத்துகள், வாய்ப்பாடு கணக்கு போன்றவற் றைக் கற்பிப்பதை ஆட்சேபிக்கிறேன். அந்த வயது விளையாட்டுப் பருவ வயது. ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழக்கமான கல்வி போதிப்பதை அனுமதிக் கக் கூடாது. பல்வேறு மாநிலங்களில் 5 வயதில்தான் பள்ளிச் சேர்க்கைக்கு அனுமதிக்கின்றனர்.
கபில்சிபல், அமைச்சர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை
ஜனநாயகத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம்தான். ஆனால், நாங்கள் சொல்வதைத்தான் நாடாளுமன்றமும் அரசும் ஏற்றுக் கொண்டு சட்டமாக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே குழுவினர் கூறுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது. தாங்கள் சொல்வதை அப்படியே சட்டமாக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது.
– திக்விஜய் சிங், காங்கிரஸ் பொதுச்செயலாளர்
ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் 27 சதவிகித இடஒக்கீட்டை அதிகரித்து, அதில் முஸ்லிம்களுக்குத் தனியாக இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். அதற்கென்று இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரவேண்டும். இந்தச் சட்டதிருத்தம் நாடு முழுவதற்கும் ஒட்டு மொத்தமாகப் பொருந்தக்கூடிய வகையில் தேசியக் கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். –
– மாயாவதி,முதலமைச்சர், உத்தரபிரதேசம்
நாம் ஜனநாயக அமைப்பில் இருக்கிறோம். நாம் ஒரு அரசைத் தேர்ந்தெடுத்துள்ளோம். உங்கள் போராட்டம் நாடாளுமன்ற நடவடிக்கையில் தலையிடுவதுபோல் இல்லை யா? லோக்பால் மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்தில் நமது பிரதிநிதிகள் விவாதிக்க உள்ளனர். எந்தச் சட்டத்தின் அடிப்படையில் உங்கள் போராட்டத்துக்குக் கட்டண விலக்கு கேட்கிறீர்கள்? இந்தப் போராட்டம் உங்களுக்கு வேண்டுமானால் சத்யாகிரகப் போராட்டமாக இருக்கலாம். ஆனால், மற்றவர்களுக்கு இது தொல்லையாக இருக்கலாம். (அன்னா ஹசாரே குழுவிடம்….)
– மஜும்தார், நீதிபதி, மும்பை உயர் நீதிமன்றம்