Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஒருவரித் தகவல்கள்

 ஆப்பிள்களில் 25% காற்று இருப்பதால், அது தண்ணீரில் மிதக்கிறது.

 இந்தியாவில் மேகாலயாவிலுள்ள சிரபுஞ்சியில் 1100 செ.மீ. மழை பொழிந்தது, இது பழைய பதிவு. தற்போது சிரபுஞ்சிக்கு அருகேயுள்ள மாசின்ராம் (Mawsynram) ஆண்டுக்கு சராசரியாக 1186 செ.மீ. அதிக மழைப் பொழிவைப் பெறும் இடமாக மாறியுள்ளது.

 மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துகளில் அமேசான் காட்டின் செடிகள் 70 சதவிகிதம் பயன்படுத்தப்படுகின்றன.

 அட்டைகளை விட்டு ரத்தத்தை உறிஞ்சச் செய்வது ஒரு காலத்தில் மருத்துவப் பழக்கமாக இருந்தது. இந்த அட்டை கடித்ததன் காரணமாக இறந்து போனவர்தான் ஜார்ஜ் வாஷிங்டன்.

 கொசுக்கள் ‘ளி’ வகை இரத்தப் பிரிவை அதிகம் விரும்புகின்றன.

 


 

கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்தவில்லை என உறுதிமொழி

பாதாளச் சாக்கடைகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது என்னும் சட்டம் ஏற்கெனவே இருந்தாலும், அது முறையாகப் பின்பற்றப்படுவதில்லை எனப் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்துவதில்லை என மாநகராட்சி ஆணையர்கள் உறுதிமொழி அளித்து கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

 


 

முந்திரி

முந்திரி அல்லது மரமுந்திரி (Anacardium occidentale) என்பது Anacardiaceae குடும்பத்தைச் சேர்ந்த கஜூ என்று அழைக்கப்படும் முந்திரிக் கொட்டைகளைத் தரும் ஒரு மரம் ஆகும். அனகார்டியம் என்ற பெயர் முந்திரிப் பழத்தின் உருவத்தை விளக்குகிறது. ‘அன’ என்றால் மேல் நோக்கியது என பொருள். ‘கார்டியம்’ என்றால் இதயம் என பொருள். ஆங்கிலத்தில் CASHEW என பெயர் வரக் காரணம் போர்த்துகீசிய மொழியில் CAJU என்ற சொல்லில் இருந்து வந்தது. முந்திரி மரம் பிரேசிலுக்குச் சொந்த மானது. இந்தியாவுக்கு 16ஆம் நூற்றாண்டில் மொசாம்பிக் மற்றும் போர்த்துகீசியர்களால் கோவா கடற்கரையில் அரிப்புகளைத் தடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில், தோட்டங்களில் முந்திரி பயிர்ச் செய்கை ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள பிற நாடுகளுக்கும் பரவியது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தி லிருந்து, முந்திரிப் பருப்புகளைப் பதப்படுத்தும் மய்யமாக இந்தியா மாறியது.


 

கண்களுக்கு…  20-20

கண்களைச் சிமிட்டிக் கொண்டே இருந்தால்தான் கண்ணீர் உற்பத்தியாகி பார்வை தெளிவாகத் தெரியும். கேட்ஜெட் பயன்பாட்டின் தீவிரத்தால் நாம் கண் சிமிட்ட மறந்து தொடர்ச்சியாகத் திரையைப் பார்க்கிறோம். கண் மருத்துவத்தில் 20-20-20 விதியைப் பின்பற்றும்படி வலியுறுத்துவோம். அதாவது, தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் கம்ப்யூட்டர் / மொபைல் திரையைப் பார்க்கிறோம் என்றால் அதையடுத்து 20 நொடிகள், 20 அடி தொலைவிலுள்ள காட்சியைப் பார்க்க வேண்டும். தவிர அவ்வப்போது கைகள் இரண்டையும் சூடு பறக்கத் தேய்த்து கண்களை மூடியபடி வைத்துக் கொள்ளலாம் என கண் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


காந்தி படும் பாடு

பிரிட்டிஷ் அரசிடம் இந்து மகா சபை தலைவர் சாவர்க்கர் மன்னிப்புக் கடிதத்தை, காந்தி சொல்லித்தான் எழுதினார் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதற்கு பல ஆய்வாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்து ஆதாரங்களை வெளியிட்டனர். அதில், பிரிட்டிஷ் அரசால் அந்தமான் செல்லுலார் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டது 1911ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி. 6 மாதங்களில் மன்னிப்புக் கேட்டு கருணை மனு சமர்ப்பித்தார். நவம்பரில் இரண்டாவது முறையாக கருணை மனு சமர்ப்பித்தார். அப்போது மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தார். 1915 ஜனவரி 9ஆம் தேதிதான் அவர் இந்தியாவுக்கு வந்தார் என்கின்றனர் காந்தியவாதிகள்.


 

மொபைலை அதிக நேரம் பயன்படுத்தினால்!

“கேம் விளையாடுவது, டெக்ஸ்ட் செய்வது உள்ளிட்ட மொபைல் பயன்பாடுகள் எல்லாம் கைவிரல்கள், மணிக்கட்டு, மூட்டு, கழுத்து ஆகிய பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். வாட்ஸ்அப் மாதிரியான மெசேஜ் ஆப்களில் அதிக நேரம் டைப் செய்யும்போது விரல்களில் இயற்கையான அசைவுகளுக்கு மாறான அசைவுகளைப் பயன்படுத்துகிறோம். இதனால் கையில் உள்ள சின்னச் சின்ன தசைகள் வலுவிழந்து வீக்கம் அடையும். தொடர்ச்சியாக இப்படிச் செய்யும்போது மூட்டுத் தேய்மானம் ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.


 

மர்மக் கிணறு

ஏமன் நாட்டின் அல்மாரா பாலைவனத்தின் நடுவே, 367 அடி ஆழமும், 30 மீட்டர் அகலமும்கொண்ட மர்மக் கிணறு ஒன்று இருக்கிறது. சூரியஒளிகூட கிணற்றின் குறிப்பிட்ட அடி தூரம் வரை மட்டுமே பாய்வதால், இருள் சூழ்ந்தே காணப்படுகிறது இந்தக் கிணறு. அண்மைக்காலமாக, கிணற்றிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசவே… கிணற்றுக்குள் பேய், பிசாசுகள் உலவுகின்றன என்றெல்லாம் வதந்திகள் பரவின. இதையடுத்து 10 ஆராய்ச்சியாளர்கள், கிணற்றுக்குள் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அப்போதுதான் இது கிணறு அல்ல… கிணற்றை ஒத்த குகை என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. “இந்தக் கிணறு குகைபோல நீண்டுகொண்டே போகிறது. இது பல மில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். அண்மையில் கிணற்றுக்குள் பறவைகளும், பூச்சிகளும் அதிக அளவில் இறந்திருப்பதால்தான் துர்நாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இயற்கையான இந்தக் குகைக்குள் அழகான நீர்வீழ்ச்சியும் பாம்புகளும் இருக்கின்றன. இது ஏமன் நாட்டின் புதிய அதிசயம்.


 

கேரளாவில் புதிய வரதட்சணைத் தடை அமைப்புக்கு பலத்த வரவேற்பு!

கேரளாவில் தொடர் வரதட்சணைக் கொடுமை இறப்பினால், புதிய வரதட்சணைத் தடை அமைப்பை அம்மாநில அரசு உருவாக்கியிருந்தது. இதில் புதிதாகத் திருமணமானவர்களில் தொடங்கி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் திருமண வாழ்க்கையில் இருக்கும் பெண்களும் புகார் அளித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், பெண்கள் புகார் அளித்தவுடன் அவர்களின் புகார்கள் குறித்து விசாரிக்க தனிப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருதரப்பு வாதங்களையும் விசாரித்து, கணவர்மேல் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டால், அதன் பிறகு காவல்துறை தன் கடமையைச் செய்யும். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்குக் கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் முன்வந்து புகார் அளித்து வருகின்றனர்.