தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்-களில் சமூக நீதி முறையாக பின்பற்றப்படு-கின்றதா என்பதைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை-களை எடுத்திட ‘சமூக நீதி கண்காணிப்புக் குழு’ அமைக்கப்படுகிறது என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பு மிகவும் அவசியமானதும் வரவேற்கத்தக்கது-மான ஓர் அறிவிப்பாகும்.
மதிப்பிற்குரிய சுப.வீரபாண்டியன் அவர்களை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவில் என்னையும் உறுப்பினராக நியமனம் செய்தமைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது சார்பிலும், அகில இந்திய பிற்படுத்தப்-பட்டோர் கூட்டமைப்பின் சார்பிலும், கூட்டமைப்பில் பணியாற்றிடும் வாய்ப்பைத் தந்த யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இட ஒதுக்கீடு தொடர்பாக அரசமைப்புச் சட்டப்படி ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டங்களை நிறை-வேற்றி பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்கள் அரசின் கொள்கை முடிவு எடுக்கப்படும் அதிகார மய்யங்களில் உரிய பிரதிநிதித்துவம் (இடம்) பெற்றுள்ளார்கள் என்பதை உறுதி செய்வதே சமூகநீதிக்கான அளவுகோலாகும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு இல்லை. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரப் பகிர்வு இன்னமும் கவலைப்படத்தக்க நிலையில் தான் உள்ளது.
சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் துவங்கி தொடர்ந்து தமிழ்நாடு சமூகநீதிக்-கான முன்னோடி மாநிலம் என்பதை நாம் உறுதிப்படுத்தி வருகிறோம். ஆனால், இங்கேயும் சில துறைகளில் சமூகநீதி முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்ற செய்திகள் வருகின்றன. இந்த நிலை நீடிக்கக்கூடாது. அனைவர்க்கும் அனைத்தும் என்பதான நிலையை உருவாக்க வேண்டும் என்கிற சமூக உணர்வின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் ‘சமூக நீதி கண்காணிப்புக் குழுவை’ உருவாக்கியுள்ளார். அவரது எண்ணத்தை முழுமையாக நிறைவேற்றும் வகையில் எங்களது குழு திரு. சுப.வீரபாண்டியன் தலைமையில் பணியாற்றும் என உளமாரக் கருதுகிறேன். இந்திய அளவில் இடஒதுக்கீடு குறித்த பிரச்சினைகளை அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணப் பணியாற்றிய அனுபவம் தற்போதைய பணியில் எனக்கு உதவிகரமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
– கோ.கருணாநிதி