ஜப்பானியர்களுக்குத் தெரிகிறது – இங்குள்ள சனாதனிகளுக்குத் தெரியவில்லையே!
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
சமூகநீதி நாள் 17.9.2021 அன்று பெரியார் திடலில் ‘கற்போம் பெரியாரியம்’ நூலை வெளியிட்டு பேரா.சுப.வீ ஆற்றிய உரையிலிருந்து:
ஈ.வெ.ரா. பிறந்த நாளுக்கு ஏன் சமூகநீதி நாள் என்று பெயரிட்டார்கள் என்பது புரியவில்லை என்கின்றனர்.
ஜப்பானில் இருக்கின்றவர்களுக்குப் புரிகின்றது _ இந்த சனாதனிகளுக்குப் புரியவில்லை. இந்த விழாவிற்கு அவர்களை அழைத்திருக்கலாம். ஜப்பானியர்களுக்கே புரிகிறது; இவர்களுக்குப் புரியவில்லை. இவர்களுக்குப் புரிய வைப்பது நம்முடைய வேலையும் இல்லை. புரிய வேண்டியவர்களுக் கெல்லாம் புரிகிறது.
ஆசிரியர் அவர்களுக்கு இந்த மேடையில், நாம் அத்தனை பேரும் நன்றி சொல்ல வேண்டும். பெரியாரை உலகளாவிய ஒரு சிந்தனையோடு, உலகம் முழுவதும் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.
ஜப்பானிய மொழியில் தந்தை பெரியார் அவர்களின் நூல்கள் வந்திருக்கிறது என்றால், இங்கே உரையாற்றிய கமலக்கண்ணன் சொன்னார், “நான் பெரியாருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்’’ என்று.
நாங்கள் எல்லோரும் கமலக்கண்ணனுக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம். செந்தில்குமாருக்கும், அந்த நண்பர்களுக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம்.
ஆய்வு நூல் அன்று – அறிவு நூல்.
‘‘கற்போம் பெரியாரியம்’’ என்ற தலைப்பில் ஆசிரியர் அவர்கள் 352 பக்கங்களில் எழுதியிருக்கிறார். முழுமையாகப் படித்து முடித்துவிட்டேன்.
அந்தப் புத்தகம் ஆய்வு நூல் அன்று _ அறிவு நூல்.
யாருக்கான அறிவு நூல்?
யாருக்கான பாட நூல்?
நம் எல்லோருக்குமே பாட நூல்.
சுயமரியாதைக்காக ஓர் இயக்கம்
எங்கேயாவது உலகத்தில் சுயமரியாதைக்காக ஓர் இயக்கம் உருவான வரலாற்றைப் பார்த்திருக்கிறோமா என்று கேட்கிறார். உண்மையிலேயே இல்லை.
எங்கே தோன்றுகிறது அது?
ஓர் ஆளுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும்.
10 வயது சிறுவனாக பெரியார் இருக்கின்ற-பொழுது, பள்ளிக்கூடத்துக்குப் போகின்ற நேரத்தில், வீட்டில் சொல்லி அனுப்புகிறார்கள். ‘தாகம் எடுத்தால், நீ மேல்ஜாதிக்காரர்கள் வீட்டில்தான் குடிக்கவேண்டும்; வேறு எங்கும் குடிக்கக்கூடாது’’ என்று.
அவாள் வீட்டுக்குப் போய் தண்ணீர் கேட்கிறார், 10 வயது சிறுவனாக இருந்த பெரியார்.
அப்பொழுது அவர்கள் தண்ணீரைக் கொடுத்து விட்டு, ‘‘அண்ணாந்துதான் குடிக்கவேண்டும்; உதடு பட்டுடக்கூடாது’’ என்று சொன்னவுடன், இவருக்குச் சுருக்-கென்கிறது.
தண்ணீர் குடித்து முடித்தவுடன்,
‘‘அந்தச் சொம்பை கீழே வைத்துவிடு’’ என்று சொல்லி, உள்ளே இருந்து கொஞ்சம் ஜலம் எடுத்துண்டு வந்து, அதை அலம்பிண்டு அந்த சொம்பை எடுத்துக்கொண்டு போனார்களே, அந்த இடத்தில் அவருக்கு சுயமரியாதை பளிச்சென்று வந்தது.
சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் தொடங்கியபொழுது, வயது 46
தான் தொட்ட ஒரு பாத்திரத்தைத் தொடாமல், அதன் மீது தண்ணீர் தெளித்து எடுக்கிறார்கள் என்றால், இனி நாளையிலிருந்து தாகம் எடுத்தாலும், இந்த வீட்டுக்கு வரக்கூடாது; வேறு யாருடைய வீட்டுக்காவது போவது என்று பெரியார் முடிவெடுத்த-பொழுது வயது 10. அவர் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபொழுது, 46.
36 ஆண்டுகள் உள்ளே எரிந்த கனல், அந்த இயக்கமாக வெளிவந்தது என்பதை எழுதுகிறார்.
ஒவ்வொன்றையும் பிரித்துப் பிரித்து ஆசிரியர் அய்யா அவர்கள் எழுதியிருக்கிறார்
எல்லாத் தளங்களிலும் நமக்குத் தேவைப்-படுகிறது, ஒவ்வொன்றையும் பிரித்துப் பிரித்து ஆசிரியர் அய்யா அவர்கள் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
பெரியாரும் _ பகுத்தறிவும்!
பெரியாரும் _ பெண்ணுரிமைச் சிந்தனைகளும்!
பெரியாரும் _ சமூகநீதியும்!
பெரியாரின் அணுகுமுறை!
பெரியாரின் மனிதநேயம்!
அனைத்தையும் பிரித்துப் பிரித்து சின்னப் பிள்ளைகளுக்குச் சொல்வதைப்போல சொல்லியிருக்கிறார்.
இன்றைக்குச் சமூகநீதி நாள் என்பதற்காக நான் சொல்கிறேன், சமூகநீதிக்காகப் பெரியார் என்ன செய்து விட்டார் என்று பாவம், ‘தினமணி’க்குத் தெரியவேயில்லை.
இந்தப் புத்தகத்தையாவது படித்துத் தொலையுங்கள்.
பெரியாருடைய போராட்டங்கள்!
பெரியாருடைய போராட்டங்கள், 1920இல் கள்ளுக் கடை மறியலில் தொடங்கி, வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், திருவல்லிக்கேணியில் ‘பிராமணாள்’ பெயர் அழிப்புப் போராட்டம் எனத் தொடர்கிறது. பெயரை அழிக்க-வேண்டுமா என்று சிலர் கேட்கிறார்கள்.
பல பேருக்கு பல சந்தேகங்கள் இருக்கின்றன. இன்னும் சிலர் குழம்பிக் குழம்பி நாங்கள் தமிழரா? திராவிடரா? என்று தெருத் தெருவாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பாவம், நீங்கள் தமிழர்கள், நீங்கள் திராவிடர்கள் _ திராவிடக் கருத்தியலை ஏற்றுக்கொண்டிருந்தால், திராவிடர்கள்.
ஒரே ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லட்டுமா?
பெங்களூருவை நீக்கினால் தமிழர்கள்; அய்யங்காரை நீக்கினால் திராவிடர்கள்!
பெங்களூரு அய்யங்கார் பேக்கரியில், பெங்களூருவை மட்டும் நீக்கினால் போதும் என்றால், நீங்கள் தமிழர்கள்; நாங்களும் தமிழர்கள்.
அய்யங்காரை முதலில் நீக்கவேண்டும் என்றால், நீங்கள் திராவிடர்கள்.
வெறும் பெங்களூருவை மட்டும் நீக்கினால் மட்டும் போதாது _ அய்யங்காரை முதலில் நீக்கு.
‘பிராமணாள் கபே’ பெயர்ப் பலகை நீக்கப் போராட்டம்!
உங்களுக்கு அந்த சந்தேகம் போகாது. ஏனென்றால், அந்த சந்தேகம் உண்மை-யானதல்ல. யார் திராவிடர்? யார் தமிழர்? என்று திரும்பத் திரும்பக் குழம்பிக் கொண்டிருக்கின்றவர்கள் எல்லோருக்கும் சேர்த்துத்தான், அய்யா அவர்கள் ‘பிராமணாள் கபே’ என்கிற பெயரைக் கூட நீக்கவேண்டும் என்று ஒரு போராட்டத்தை எத்தனைக் காலம் நடத்தினார்? தினந்தோறும் ஒரு 5 பேர் சென்று, அந்த உணவகத்தின்முன்பு ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.
அதேபோலத்தான் வடநாட்டு சேட்டுகள் கடைக்கு முன்பாக தினந்தோறும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இவர்கள் என்ன 5 பேர், 6 பேர்தானே வந்து கொண்டிருக்-கிறார்கள், இதனால் என்ன நடக்கப் போகிறது என்று நினைத்தால், தினந்தோறும் வருவார்கள்.
அமைதியாக, கையெடுத்து வணங்கி, ‘‘இந்தக் கடைக்குள் போகாதீர்’’
ஆங்கிலத்தில் ‘நியூசன்ஸ்’ என்று சொல்வார்களே _ இதைவிட பெரிய தொல்லையை வேறு யாரும் கொடுக்கவே முடியாது. மாலை 5:00 மணிக்கு, 6:00 மணிக்கு கடைக்கு ஆள்கள் வரும்பொழுது, 6 பேர் எந்தவிதமான அடி தடியோ, ஆர்ப்பாட்டமோ செய்யாமல், அமைதியாக, கையெடுத்து வணங்கி, ‘‘இந்தக் கடைக்குள் போகாதீர்’’ என்று சொல்வார்கள்.
இதைவிட தொல்லை அந்தக் கடைக்-காரருக்கு வேறு என்ன இருக்க முடியும்?
எத்தனை விதமான போராட்டங்களை அய்யா நடத்தினார்; கடைசியாக 1957இல் மிக உச்சகட்டமான போராட்டம் சட்ட எரிப்புப் போராட்டம்; அதற்குப் பிறகும், 1960 இல் இராமர் பட எரிப்புப் போராட்டம், அதற்குப் பிறகு, தமிழ்நாடு நீங்கலாக, இந்திய வரைபட எரிப்புப் போராட்டம்.
இதை யாருக்காக நான் அழுத்திச் சொல்கிறேன் என்றால், நாம் திராவிடரா? தமிழரா? என்று குழப்பும், குழப்ப கோஷ்டிக்குத்தான்.
திராவிட நாடு நீங்கலாக என்று பெரியார் சொல்லவில்லை; தமிழ்நாடு நீங்கலாக இந்திய வரைபட எரிப்பு என்று தொடர்ச்சியான போராட்டங்களைப்பற்றிய செய்திகள்.
இந்திய அரசமைப்புச் சட்டம் முதன்-முதலாகத் திருத்தப்பட்டதே, நாம் இங்கு நடத்திய பெரியார் தலைமையிலான போராட்டங்கள்தான் அடிப்படை என்பதற் கான சான்று எங்கே இருக்கிறது?
1951 மே மாதம் 29ஆம் தேதி, பிரதமர் நேரு அவர்கள், நாடாளுமன்றத்தில் பேசிய உரையிலிருந்து அய்யா எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் உரை
நேரு என்ன பேசுகிறார், நேருவினுடைய சொற்களை ஆங்கிலத்தில் அப்படியே எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
You know what was the immediate cause for bringing the first Amendment.
நீங்கள் குறித்துக் கொள்ளவேண்டும். அது முதல் திருத்தம் இல்லை என்று சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
“You know what was the immediate cause for bringing the first Amendment to the constitution. You all know that there are certain happenings in Madras State, which have had us to make this amendment”
‘‘சென்னை மாகாணத்தில் நடந்த சில நிகழ்வுகள்தான் இந்தத் திருப்பத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு வேகத்தை, தேவையை நமக்குக் கொடுத்தன’’ என்கிறார் நேரு.
எனவே, இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தியது _ தன்னை சாதாரணமானவன் என்று சொல்லிக் கொண்டாரே, அய்யா பெரியார் அவர்கள்தான்.
அனைத்து செய்திகளையும் இப்படி வரிசையாக, ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லியிருக்கின்ற அந்தக் காட்சிகளை நாம் பார்க்கிறோம்.
எனவே, இந்தப் புத்தகம் புதிதாக இயக்கத்திற்குள் வருகின்ற ஒவ்வொருவருக்கும் படிப்பதற்குக் கொடுக்கப்படவேண்டிய புத்தகம்.
இங்கே நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால், சட்டத்தை மட்டும் திருத்தவில்லை _ உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் அய்யா பெரியாரின் கைத்தடி நொறுக்கிப் போட்டிருக்கிறது என்பது வரலாறு.
தென்கொரியாவிலிருந்து ஒரு தோழர்!
இரண்டு நாள்களுக்கு முன்பு வெளிநாட்டி-லிருந்து ஒரு தொலை பேசி வந்தது. அந்த நண்பர் என்னிடம் உரையாற்றும் பொழுது, ‘‘என்னுடைய பெயர் டாக்டர் சத்தியமூர்த்தி, ஜெனடிக் இன்ஜினியரிங் என்கிற துறையில், ஒரு பேராசிரியராக இருக்கிறேன், நான் தென்கொரியாவில் இருந்து பேசுகிறேன். 2008 ஆம் ஆண்டிலிருந்து நான் இங்கே இருக்கிறேன். சேலத்திற்குப் பக்கத்தில் ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்தவன் நான்.
நானும், என் மனைவியும் தென்கொரியாவில், பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக 2008ஆம் ஆண்டிலிருந்து பணியாற்று கின்றோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், எங்கள் முன்னால் ஒரு கேள்வி வைக்கப்பட்டது. இவ்வளவு சிறிய குக்கிராமத்திலிருந்து இவ்வளவு பெரிய பொறுப்புக்கு வெளிநாட்டில் நீங்கள் வந்திருக்கிறீர்களே _ இதற்குப் பின்னணியில் உங்கள் நாட்டில் ஏதேனும் ஓர் இயக்கம் இருந்த திருக்கிறதா? என்று கேட்டார்கள்.
எனக்குத் தெரியவில்லை, அதற்குப் பிறகுதான் தேடத் தொடங்கினேன். அதற்குப் பிறகுதான் தெரிந்து கொண்டேன், பெரியாரின் நூல்களையும், ஆசிரியரின் நூல்களையும் படித்தேன்; அதற்குப் பின்னால் என்னுடைய உரையையும், தோழர் அருள்மொழி உரையையும் தொடர்ந்து கேட்டதாக’’ அவர் சொன்னார்.
பெரியார்தான் என்னை கொரியாவுக்குக் கொண்டு வந்து சேர்த்தவர்
‘‘உங்கள் இரண்டு பேருடைய உரைகளும், பெரியார்தான் என்னை கொரியாவுக்குக் கொண்டு வந்து சேர்த்தவர் என்கிற உண்மையை எனக்குப் புரிய வைத்தது. இதை நான் பல்கலைக்கழகத்தில் சொன்னேன்.
இப்பொழுது எங்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள் என்றால், இப்படிப்-பட்ட ஒரு மனிதன் _ இப்படிப்பட்ட ஓர் இயக்கம் _ நீங்கள் பிறந்த மண்ணில் இருந்திருக்கிறது என்று சொன்னால், அந்த இயக்கத்தைப் பற்றியும், இன்றும் அதனுடைய நிலைபற்றியும் நீங்கள் ஒரு புத்தகத்தைக் கொண்டு வாருங்கள்; நாங்கள் கொரிய மொழியில் மொழிபெயர்த்து பல்கலைக்கழக வெளியீடாக வெளியிட விரும்புகிறோம் என்று சொன்னார்கள்’’ என்கிறார்.
ஜப்பான் ஆயிற்று. இப்பொழுது கொரியா!
எந்தப் புத்தகத்தை நான் மொழி பெயர்ப்-பதற்குப் பரிந்துரைக்கலாம் என்று அவர் கேட்டார்; இரண்டு நாள்களில் சொல்கிறேன் என்றேன்.
‘‘கற்போம் பெரியாரியம்‘’ என்ற இந்த நூலைவிட பொருத்தமான ஒன்று இருக்க முடியாது!
ஆசிரியர் அனுமதித்தால், ‘‘கற்போம் பெரியாரியம்’’ என்ற இந்த நூலைவிட பொருத்தமான ஒன்று இருக்க முடியாது. ஆசிரியரின் அனுமதி வேண்டி, விடை-பெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
_ இவ்வாறு திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரை-யாற்றினார்.