முகப்புக் கட்டுரை : சதிகளை முறியடிக்க வந்த சமூகநீதி கண்காணிப்புக் குழு இந்தியா முழுமைக்கும் வேண்டும்!

நவம்பர் 1-15,2021

மஞ்சை வசந்தன்

மனுநீதி நடைமுறைப்படுத்தப்பட்ட நாட்டில் மக்களுக்கான சமூகநீதிக் குரலை ஓங்கி ஒலித்தவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஆவர். சாகுமகராஜ், ஜோதிராவ் பூலே போன்றவர்கள் சமூகநீதிக் குரலை தொடங்கி வைத்த பெருமைக்கு உரியவர்கள்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்ற தமிழர் நீதிக்கு முற்றிலும் எதிரான மனுநீதி ஆரிய சனாதனவாதிகளால் உருவாக்கப்பட்டது. அயல் நாட்டிலிருந்து பிச்சையெடுத்துப் பிழைக்க வந்த ஆரியர்கள் எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையினர். ஆனால், சூழ்ச்சியால் பெரும்பான்மையினரான மண்ணின் மக்களை ஆதிக்கம் செலுத்தியவர்கள். அதற்கு அதிகார வர்க்கத்தை அண்டி, அவர்களைத் தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு தங்களுக்குச் சாதகமான, தங்கள் உயர்வுக்கு வழிவகுக்கும் சட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு ஆயிரக்-கணக்-கான ஆண்டுகளாக அதை நடைமுறைப்-படுத்தியவர்கள்.

பிறப்பால் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள். மற்றவர்களெல்லாம் தங்களுக்கு பணிவிடை செய்யப் பிறந்தவர்கள் என்றும், தங்களுக்கு மட்டுமே கல்வி, உயர்நிலை, வழிபாட்டுரிமை என்று சட்டம் செய்து மற்றவர்களுக்கு இவ்வுரிமைகள் இல்லை என்றும் மறுத்தனர். பெண்கள் எந்த ஜாதியினரானாலும் அவர்கள் இழிவானவர்கள், அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை; அவர்கள் ஆண்களைச் சார்ந்து வாழ வேண்டிய அடிமைகள் என்றனர். கணவன் ஆயுள்தான் மனைவியின் ஆயுள். அவள் கணவன் இறந்த பின் வாழக் கூடாது என்று கணவன் பிணத்தோடு சேர்த்துக் கொளுத்தினர்.

ஆரியப் பார்ப்பனர்களான தங்களைத் தவிர மற்றவர்களுக்குத் தீட்டு உண்டு. அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றனர். தங்களைத் தவிர மற்றவர்கள் படிக்கவோ, பதவி வகிக்கவோ கூடாது என்றனர்.

ஆட்சிகள் மாறினாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இந்த நிலையே நீடித்தது. நாடு விடுதலை அடைந்து மக்கள் ஆட்சி ஏற்பட்ட பின்னரும் பிறப்பால் கற்பிக்கப்பட்ட இந்த அநீதிகள் தொடர்ந்தன; இன்றளவும் தொடர்கின்றன.

சாகு மகராஜ் தொடங்கிய சமூகநீதி அடித்தளம், நீதிக்கட்சி ஆட்சியின் மூலம் மேலெழுப்பப்பட்டது. தந்தை பெரியாரின் வருகைக்குப் பின் சமூகநீதி இயக்கமாக மாற்றப்பட்டது.

சமூகநீதிக்கு எதிரான அனைத்தும் அகற்றப்பட வேண்டும். சாஸ்திரங்களின் பெயரால், மதத்தின் கோட்பாடுகளால், ஜாதியின் அடிப்படையில், பால் இன அடிப்படையில் பின்பற்றப்பட்ட அநீதிகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட வேண்டும். அநீதிகளுக்குக் காரணமானவை ஒழிக்கப்பட வேண்டும் என்று பெரியார் ஓங்கி ஒலித்து, அதற்கான போராட்டங்களை முன்னெடுத்தார்.

மக்களாட்சி வந்து அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட பின்னும் அடித்தட்டு மக்களுக்கான சமூகநீதி கிடைக்கவில்லை என்பதால் அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டும் என்று போராடி திருத்தும்படி செய்தார். பெரியாரின் பெரும் போராட்டத்தின் விளைவாய் அரசியல் சட்டம் முதன் முதலில் திருத்தப்பட்டு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி சட்டப்படி உருவாக்கப்பட்டது. அதன்பின் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்பட்டன.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஆதிக்கம் செலுத்தி, அனைத்தையும் தனதாக்கிக் கொண்டிருந்த ஆரியர்கள், மற்றவர்களும் கல்வி, வேலை, உயர்பதவி என்று பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாமல், நீதிமன்றத் தடை, எதிர்ப்பு போன்ற பலவற்றைச் செய்து வந்ததோடு, சூழ்ச்சிகள், சதிகள் செய்து மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை, உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வருவதோடு, பிறருக்குரியவற்றைத் தொடர்ந்து தாங்களே அனுபவித்தும் வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக பிற்படுத்தப்பட்-டோருக்கான 27% இடஒதுக்கீடு நமக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. அது ஒரு நீண்ட போராட்டத்தின் விளைவாய்க் கிடைத்தது.

அரசமைப்புச் சட்டத்தின் 340ஆம் பிரிவின்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆணையம் அமைத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை காண வேண்டும் என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒன்றிய அரசு அமைத்த முதல் ஆணையத்தின் அறிக்கையை அன்றைய அரசு குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தது. இரண்டாவது ஆணையம் _ மண்டல் தலைமையில் தனது அறிக்கையை 1980இல் அரசுக்குத் தந்தது. ஆனால், அதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கூட அரசு முன்வரவில்லை. இதற்காக திராவிடர் கழகம் 43 மாநாடுகள், 16 போராட்டங்கள் நடத்தி _ தில்லி வரை சென்று போராடி, தொண்டர்கள் திகார் சிறைக்கு செல்ல நேரிட்டது. பின்னர் 1990இல் மண்டல் குழுவின் ஒரு பரிந்துரை _ ஒன்றிய அரசுத் துறைகளில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவிகிதம் _ சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அரசால் இடஒதுக்கீடு ஆணை வெளியிடப்பட்டது. அதுவும் உச்ச நீதிமன்றத்தில் தடை செய்யப்பட்டு பின்னர் 1993இல்தான் நடைமுறைக்கு வந்தது.

தற்போது 28 ஆண்டுகள் கடந்த நிலையில், ஒன்றிய அரசின் செயலாளர் பதவிகளில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டோர் இல்லை என்ற நிலைதான் உள்ளது. அதே போன்று பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீடும் முழுமையாக நிறைவேற்றப்படாமல் பல துறைகளில் உள்ளது. குரூப் ‘ஏ’ பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி ஆகிய பிரிவுகள் 25 சதவிகிதம் கூட எட்டவில்லை. மக்கள் தொகையில் 90 விழுக்காடு உள்ள மக்கள், ஆட்சி அதிகாரத்தில் கொள்கை முடிவு எடுக்கும் இடத்தில் இல்லை என்பது மிகப் பெரிய சமூக அநீதி. அவர்களின் குறைகளைக் களைய நாடாளுமன்றக் குழு, ஆணையம் என அனைத்தும் உள்ளன; ஆனாலும் அதிகார வர்க்கம், சமூக நீதிக்கு எதிராகத்தான் உள்ளது.

2005இல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் குழு அமைத்து, ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீடு சட்டம் இயற்றிட அறிக்கையை அளித்தது. ஆனால் நடைமுறைக்கு வரவில்லை.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், 27 சதவிகித இடஒதுக்கீடு  நடைமுறைப்படுத்தப்பட்டு, 27 ஆண்டுகள் ஆகியும் ஒன்றிய அரசின் அதிகாரப் பகிர்வில் நாட்டின் பெரும்பான்மை மக்களான ஓ.பி.சி.   மக்களுக்கு அவல நிலை நீடிக்கிறது என்பதைக் கீழ்க்கண்ட பட்டியல் காட்டுகிறது. குரூப் ‘ஏ’ பதவிகள் 27 துறைகளில் ஓ.பி.சி. பிரிவினர் யாருமில்லை (Zero). குரூப் ‘பி’ பதவிகளில் கூட ஓ.பி.சி. பிரிவினர் 23 துறைகளில் யாருமில்லை (Zero).

பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 50% சதவிகிதத்துக்கும் அதிகமான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு இருப்பது, 27%. அந்த 27%மும் பிற்படுத்தப்பட்டோருக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதை கீழ்க்கண்ட அட்டவணைகள் தெளிவுபடுத்துகிறது.

மேலும், பல்வேறு துறைகளில் இடஒதுக்-கீட்டை நிறைவேற்றுவதில் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே இருந்தன. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் தமிழக அரசின் நிதியில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அனைத்து மருத்துவப் படிப்பு இடங்களுக்கும் தர முடியவில்லை. அகில இந்திய தொகுப்பு என்ற பெயரில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு முற்றிலும் மறுக்கப்படுகிறது. எஸ்.சி. பிரிவினர்க்கு தமிழ்நாட்டில் உள்ள 18 சதவிகிதத்திற்குப் பதில் 15 சதவிகிதம் எனத் தரப்படுகிறது.

இது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களின் சில முதுநிலை படிப்புகளில் ஒன்றிய அரசு நிதி அளிக்கிறோம் என்ற பெயரில் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராகச் செயல்பட நிர்பந்திக்கிறது ஒன்றிய அரசு.

இப்படிப்பட்ட சூழலில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் பெற வேண்டிய நியாயமான ஒதுக்கீட்டு  இடங்களைக் கூடப் பெற முடியாதபடி சதி செய்யப்படுவதால், அச்சதியை முறியடித்து, உரிய மக்களுக்கு உரிய சமூகநீதி கிடைத்திட சமூகநீதி கண்காணிப்புக் குழு வேண்டும் என்று திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

சமூகநீதியைக் காப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் அரசியல் அங்கமான தி.மு.கழகத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் சமூகநீதி கண்காணிப்புப் குழுவை, சமூகநீதிப் போராளி பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தலைமையில் அமைத்திருப்பது வரலாற்றில் நிலைத்து நிற்கும் சாதனை மட்டுமல்ல; மற்ற மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் வழிகாட்டும் செயலும் ஆகும்.

இந்த அறிவிப்பு வந்தவுடன், அளவு கடந்த மகிழ்வில் தமிழர் தலைவர் முதலமைச்சரைப் பாராட்டியதோடு, கீழ்க்கண்ட அறிக்கையையும் வெளியிட்டார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கை

இன்று சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  உருவாக்கியுள்ள ‘சமூகநீதி கண்காணிப்புக் குழு’ என்ற குழு, இந்திய வரலாற்றில் சமூகநீதிப் பயணத்தில் ஒரு சிறந்த மைல்கல். ஒரு வரலாற்று வழிகாட்டும் திருப்பம்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள முகப்புரை (Preamble) பற்றி அரசமைப்புச் சட்ட வல்லுநர்கள் குறிப்பிடும்போது,

‘‘Preamble of the Constitution has been framed with great care and deliberation. It reflects the high purpose and noble objective of the Constitution-makers. It is the Soul of the constitution”என்று குறிப்பிட்டுவிட்டு, “நீதிகளை மக்களுக்கு அளிப்பதே அதன் முதற்பணி. சமூகநீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி ஆகியவற்றை மக்களுக்குப் பெற்றுத் தருவதே இலக்கு” என்று குறிப்பிட்டுள்ளனர்.

எமது அரசு ‘சொல்வதோடு நிற்காது, செயலில் காட்டும்’ என்று உலகுக்கு நிரூபித்துவிட்டார்!

அதற்கு செயல்வடிவம் கொடுத்து, சமூகநீதி இனி வெறும் ஆணைகளாக, சட்டங்களாக _ ‘ஏட்டுச் சுரைக்காயாக’ இல்லாது, நடைமுறையில் அதைக் கிட்டும்படிச் செய்ய, அரசுத் துறைகளுக்கு வழிகாட்டி, கண்காணித்து, மேலும் சிறப்பாகச் செயல்பட வைக்கும் செயலூக்கியாகத் தகுந்த திறமையுள்ள அறிஞர்களை, சமூகநீதிப் போராளிகளை, ‘நுண்மாண் நுழைபுலம்’மிக்க கல்வியாளர்களை அடையாளம் கண்டு, ‘இதனை இதனால் இவர் முடிப்பார்’ என்று அறிந்து, பொறுப்பில் அமர்த்தி, எமது அரசு ‘சொல்வதோடு நிற்காது, செயலில் காட்டும்’ என்று உலகுக்கே இந்தக் குழு நியமனம்மூலம் நிரூபித்துவிட்டார் நமது ஆற்றல்மிகு முதலமைச்சர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களான பழங்குடியினர், சிறுபான்மையினர், அனைத்து சமூகப் பிரதிநிதிகளை, சமூகநீதியைப்பற்றி சரியாகப் புரிந்து களம் கண்டவர்களைக் கொண்ட சமூகநீதி கண்காணிப்புக் குழு அமைத்து _ அதன் மூலம் இடஒதுக்கீட்டைக் கண்காணித்து _ செயல்படுத்தி _ ஆணைகளை செம்மைப்படுத்தச் செய்துள்ள இந்த ஏற்பாடு அற்புதமான ஓர் ஏற்பாடாகும்.

சட்டத்தில், எழுத்தில் எத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு தந்தாலும், நடைமுறையில் ‘கைக்கெட்டியது வாய்க்கெட்டாத’ வண்ணம், செயல்உருக் கொள்வதில்லை. அதனை ஆராய்ந்து தீர்வு காண உதவிடும் குழு இந்தக் கண்காணிப்புக் குழு.

75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் செய்யப்படவில்லை

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு சிறந்த வழிகாட்டும் குழு _ 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் செய்யப்படவில்லை.

தமிழ்நாடும், நமது முதலமைச்சரும் இந்தச் சாதனையைச் செய்துள்ளார்கள்.

இதனை மற்ற மாநிலங்களும், ஒன்றிய அரசும் பின்பற்றவேண்டும்; அப்போதுதான் சமூகநீதி வெறும் கானல் நீராக இல்லாமல், மக்களுக்குப் பயன்படும் வகையில் அமையும்.

முதலமைச்சருக்கு வாழ்த்துகள் _ நெஞ்சம் குளிர்ந்த நன்றி! நன்றி!!

பாராட்ட வார்த்தைகளே இல்லை! என தனதறிக்கையில் அகமகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.

இடஒதுக்கீடு மட்டும் சமூகநீதியல்ல. அனைத்து மக்களும் சம உரிமையும், சம வாய்ப்பும் பெறுவதே சமூக நீதியாகும். குறிப்பாக, பெண்களுக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். எனவே, கல்வி, வேலைவாய்ப்பு, உயர் பதவி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பொறுப்புகள், சொத்துரிமை போன்ற அனைத்திலும் சம உரிமையும் சம வாய்ப்பும் கிடைக்கச் செய்வதே சமூகநீதி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *