சிந்தனை : கலைஞரின் கவிதை கூறும் வரலாற்றுச் செய்தி

அக்டோபர் 16-31,2021

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

கலைஞர் கடித இலக்கியத்தின் தலைமகன் அண்ணாவின் வழித்தோன்றல் என்பது போலவே புதுக்கவிதை இலக்கியத்தின் அவர் வழித்தோன்றல், இவர் வழித்தோன்றல் என்று கூறிவிட முடியாது. காரணம், தலைவர் தம் புதுக்கவிதைப் பெட்டகத்தில் ஏராளமான மணி, வைரம், முத்துகளோடு, வரலாற்றுச் செல்வங்கள் புதைந்திருக்கும்.

சில கவிதைகளில் பகுத்தறிவு பளிச்சிடும்.

சில கவிதைகள் சமூகநீதிச் சங்கு முழக்கமிடும்.

சில கவிதைகளில் பொதுவுடைமைப் புரட்சிப் பூக்கள் மலர்ந்து மணம் வீசும்.

சில கவிதைகளில் தந்தை பெரியாரின் தாள இசை முழங்கும்.

சில கவிதைகளில் அன்புத் தலைவர் அண்ணா பற்றிய இதயச் சிதறல்கள் எதிரொலிக்கும்.

சில கவிதைகளில் வரலாற்று அடிச்சுவடு வாழ்வோர்க்கு நினைவூட்டும்.

ஆனால், இந்தக் கவிதை ரகம் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை விஞ்சியே நிற்கும்.

புரட்சிக்கவிஞரின் புரட்சிப் பாடல்போல் ஒவ்வொன்றிலும் உள்ள வரிகள் ஒவ்வொருவர் உதடுகளிலும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்.

அந்த அளவிற்குப் பொற்குவை நிரம்பியவர் கலைஞர் என்பதால் நிதி என்று பெயரிலேயே வைத்துவிட்டனர் முத்துவேலரும், அன்னை அஞ்சுகத் தாயும். அஞ்சுகம் அம்மையாரைப் பற்றி அண்ணா எழுதிய வைர வரிகள் வரலாற்றில் காண்பதைக் காண்போம்.

அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது அழகுறத் தன் இரங்கலுரையில் அண்ணா தீட்டியவை.

“குறுநகை காட்டும் கண்கள்

பொக்கை வாயிலே ஒரு புன்னகை!

மூதாட்டி அஞ்சுகம் அவர்கள்

சருகு தளிர் ஆவது போலாகி விடுவார்கள்  –

தமது மக்களின் மகிழ்ச்சி கண்டு அல்ல –

               மாடு மனை கண்டு அல்ல –

உற்றார் உறவினர் கண்டு அல்ல –

இயக்கச் செய்திகளை, வெற்றிகளைக் கேட்டதும்.

*              மகன் வீட்டைக் கவனிப்பதில்லை, வேலையைக் கவனிப்பதில்லை, புத்திமதி சொல்லய்யா என்று முறையிட்ட தாய்மார்களைக் கண்டிருக்கிறேன்.

*             நான் பெற்ற மகனே என்னை அடித்த வெட்கம் கலந்த வேதனையை எப்படி வெளியே சொல்வேன் என்று கண்ணீரால் குமுறிடும் தாய்மார்களைக் கண்டிருக்கிறேன்.

*              வீடு வாங்கச்சொல், தோட்டம் வாங்கச் சொல் என்று சிபாரிசு செய்யச் சொல்லும் முறையில், மகன் பற்றிப் பேசிய தாய்மார்களைக் கண்டிருக்கிறேன்.

*              உடம்பு துரும்பாக இளைத்து விட்டது என் மகனுக்கு, ஊரூராக அலைகிறான்! எவ்வளவோ செல்லமாக வளர்த்தேன். இப்படிச் சீர்கெட்டுக் கிடக்கிறான் என்று உருக்கத்துடன் பேசிய தாய்மார்களைக் கண்டிருக்கிறேன்.

*              ஜெயிலிலே, மகனுக்கு என்ன சோறு போடுகிறார்களோ, என்ன கஷ்டப்படுத்து கிறார்களோ என்று கூறிக் கதறிய தாய்மார்களைக் கண்டிருக்கிறேன்.

*              அவன் நல்லவன்தான் கூடுவாருடன் கூடி இப்படிக் கெட்டுவிட்டான் என்று என்னையே மறைமுகமாக, இடித்துப் பேசிய தாய்மார்களைக் கண்டிருக்கிறேன்.

*              நமக்கென்ன தெரிகிறது; புரிகிறது என்று கூறிடும் அக்கறையற்ற தாய்மார்களைக் கண்டிருக்கிறேன்.’’

என்று வியக்கும் நாம், எப்படி, இத்தனை வகைத் தாய்மார்களை, புத்திமதி சொல்லும்படி முறையிட்ட தாய், கண்ணீரால் குமுறிடும் தாய், மகனுக்குப் பரிந்துரை செய்யும் தாய், சீர்கெட்டுவிட்டான் மகன் என்று உருகும் தாய், மகன் துயருறுவான் என்று கதறிய தாய், தம்மையே இடித்துப் பேசும் தாய், எனத் தாய்மார்கள் பலவகை கூறி அக்கறையற்ற தாய் வரை முடிக்கும் காஞ்சித் தலைவன் கடைசியில் ஒரு தாயைக் காட்டுகிறார். கடைசி வரியில் முடிச்சையும் அவிழ்க்கிறார்.

“ஆனால், கண்டவுடன் மேயர் நம்ம கட்சிதானே வரும்? அதை விடக்கூடாது! புதுசா சட்டம் வருதாமே, என்ன செய்யப் போறீங்க? விலைவாசி குறைய எப்ப நடக்கப் போறது கிளர்ச்சி? பேப்பர்லே இன்னைக்கி நம்ம கட்சி விஷயம் என்னென்ன வந்திருக்குது? நம்ம கட்சியைக் கேலி பண்ணிப் படம் போட்டாங்களாமே? பேப்பர்லே, பார்த்தீங்களா, என்ன செய்யப் போறீங்க? _ என்ற இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு ஆர்வத்தைப் பொழிந்த ஓர் அன்னையை நான் கண்டதில்லை. தம்பி கருணாநிதிக்கு இப்படிப்பட்ட தாய்ச் செல்வம் பெற்றிருந்த காரணத்தால்தான் _ நிதி என்ற பெயரிட்டார்கள் போலும்’’ என்கிறார்.

அப்படிப்பட்ட அன்னை பெற்றெடுத்த ஒரே அருந்தவப் புதல்வன் என்பதால் அவருடைய அந்த இயக்கப் பற்று, ஆர்வப் பெருக்கு, தலைவரிடம் அகலாது தங்கியிருக்கிறது.

கலைஞரிடத்தில் காணும் பண்புகள் பல நிரம்பிய பெட்டகம்தான் அவர்தம் அன்னை என்பதற்கும் அண்ணா கூறும் செய்தி இது.

“கருணாநிதி திருச்சி சிறையிலிருந்து விடுதலையானபோது நான் சென்றிருந்தேன். வரவேற்று மகிழ்ச்சிபெற அவர்கள் வரவில்லை.

சில நாள்களுக்குப் பிறகு ஒரு நாள் வீட்டிலே கண்டு கேட்டேன் _ வேடிக்கை பேசும் நினைப்புடன் _ மகன் ஜெயிலிலே இருந்து வருவதைப் பார்க்க வரவில்லையே _ ஏன்? என்று.

நான் வேறு அல்ல; அந்தக் குடும்பத்திலே ஒருவன் என்று என்னை உணர்ந்து கொள்ளச் செய்யும் விதமாக அமைந்தது அவர்கள் பதில்!

நீங்க போனிங்க இல்லே, அது போதாதா? என்ற கேட்டார்களே!!

எத்தகைய பண்பு! எத்தனை பரிவு! இந்தச் செய்திகள் எல்லாம் கலைஞரின் கவிதை இலக்கியம் ஒன்றைப் படித்த போது நினைவில் வந்து மோதியவை.

அது மட்டுமல்ல. தளபதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று ஆனபோது கலைஞரின் புதல்வர், கலைஞர் ஆட்சி என்றெல்லாம் குறிப்பிட்டார்கள்.

ஆனால், அஞ்சுகம் அம்மையார் அண்ணாவைத் தன் பிள்ளை _ மூத்த பிள்ளை என “நீங்க போனீங்க இல்லே அது போதாதா!’’ என்ற ஒற்றை வரி தளபதி ஸ்டாலின், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியின் தொடர்ச்சி.

இத்தகு பாசத்தாயை, அண்ணாவின் அழகு வர்ணனையில் கவர்ந்த அந்த அஞ்சுகத்தாய் பற்றித் தலைவர் கலைஞரின் வரலாற்றுப் பதிவு உள்ளதா என்ற தேடியபோது 13.2.1963 ‘முரசொலி’ இதழில் இடம்பெற்ற கவிதையின் சில வரிகள் இவை:

“அம்மா! அம்மா! அம்மா!

உன்னையும் நினைவையும் பிரிக்க முடியாது

எல்லா நினைவிலும் நீ நிற்கிறாய்.

தூய நினைவில் சிரிக்கிறாய்

தீய நினைவில் தடுக்கிறாய்

நினைவிலிருந்து நீ நீங்கிய நேரம் எது தாயே!

 “அம்மா’’ என்கிறேன் ஆனால், என் இதழ்களின்  அசைவு, நீ என்னைத் ‘தம்பீ’’ என்று அன்பு பொழிய அழைப்பாயே அதைப் போலத்தான் தோற்றமளிக்கிறது.

“இலைமுன் உட்கார்ந்து நான் உணவருந்தும் போதுகூட உன் இடுப்பில் இருந்து அம்புலி பார்க்கும் குழந்தையாகத்தானே என்னை நீ எண்ணிக் கொள்வாய்! உறங்கும்போது உன் இதயம் எனக்குத் தாலாட்டும்.

நான் உழைக்கும்போது உன் மூச்சு எனக்குத் தென்றல். இத்தனையும் நிறுத்திவிட்டு நீ எப்படியம்மா என்னைப் பிரிவாய்? பிரியவில்லை! நீ என்னோடு கலந்துவிட்டாய்.

“உன்னிடம் கற்றுக்கொண்ட கனிவு, கருணை, எளிமை, இனிமை, பண்பு, பழக்கம், பகைவரிடமும் பரிவு காட்டும் தன்மை, இவைகளை வளர்த்து வளர்த்து நான் முழுமை பெறுவதற்குத் துணையாக நீ என்னோடு கலந்துவிட்டாய் என்பதுதான் தாயே உண்மை.

‘நீ கடைசி மூச்சு விடுத்தபோது நீ என்னைப் பிரிந்து விட்டாய்’ என்றுதானே கதறினேன். அது கடைசி மூச்சல்ல! காலியாகிவிட்ட என் சுவாசப் பைக்கு நீ அளித்த உயிர் மூச்சு. அந்த  மூச்சை எனக்கு வழங்கி என்னை வாழ வைக்க நீயும் என்னோடு கலந்துவிட்டாய்.

அம்மா!

அம்மா!

நீ என்னைப் பிரியவில்லை

என்னோடுதான் இருக்கிறாய்!

அண்ணாவின் ஆட்சியைத் தொடர்ந்து நடத்திட வந்தவர் தளபதி ஸ்டாலின் என்பதே பொருத்தம், மிகப் பொருத்தம். ஆகா! என்ன பொருத்தம், இந்தப் பொருத்தம் எனக் கூவிடச் செய்கிறது.

சொல்ல வந்ததை விட்டுத் தொலைவு சென்று விட்டதாக எவரும் எண்ணிவிடக் கூடாது.

என் நினைவுகள் விரிந்தமைக்குப் பரந்தமைக்குக் கலைஞரின் தன்னைப் பற்றிய இந்தக் கவிதை வரிகளே ஆதாரம்.

கலைஞருடைய கவிதை வரிகளைச் சுவைக்கையில் ஒரு கவிஞர் என்ற நிலையில் தன்னைப் பற்றி என்ன கருதுகிறார், தன் வரலாறு என்ன கூறுகிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. தம்முடைய கவிதையை மரபு வழிக் கவிதை என்றோ இலக்கணச் செப்பமுடைய கவிதையென்றோ அவர் கூறிக் கொள்ளவில்லை.

“எனக்கிருக்கும் எத்தனையோ வேலைக்கிடை –

 இதுதான் கவிதை எனக் கிறுக்கும் எனை அழைத்து’’

இந்த வரிகள் “கவிதை என்ற பெயரில் கிறுக்குகிறேன்’’ எனும் பொருளையே தருகின்றது.

மேலும் அவர் மிகவும் அடக்கமுடன்,

“கம்பனும் கூத்தனும் இருந்த காலத்தில்

கண்டவர் எல்லாம்

கவிகள் எனத் திரிவதற்கு இடமேயில்லை – இந்தக்

கருணாநிதி முதலமைச்சராய் இருக்கின்ற  காரணத்தால்

ஒரு நாளும் என் கவிதை இடித்துரைக்க யாருமே  துணியவில்லை

அதுவரையில் லாபம்தான்!

அடியேனும் அதனாலே துணிந்துவிட்டேன்’’

தலைவர் கலைஞர், கவிஞர் கலைஞராக விடுதலை வீரர்களைப் பற்றிப் பாடியிருக்கும் தம் பாட்டொன்றில்,

“தளையறுந்த வீரர் கதை பாடுவதால்,

தளையகற்றிப் பாடுகிறேன் நானும் – அவர்

தொடை தட்டித் துரோகிகளை வீழ்த்தியதால்

தொடைதட்டும் என் பாட்டும் – என் கவிதை

யாப்பின்றிப் போனாலும் போகட்டுமே.

நம் நாடு மொழி மானம் உணர்வெல்லாம்

காப்பின்றிப் போதல் கூடாதெனும்  கொள்கையொன்றால்

வாய்ப்பின்றிப் போனாலும் செய்யுள் கற்க’’

எனப் பாடியுள்ளார்.

தன் பாட்டில் தளையும், தொடையும், நழுவிடற்கு அவர் பொருத்திக் காட்டும் காரணம் புதுமையாக இருக்கிறது. பிறிதோரிடத்தில்,

“தளை சீர் தொடை அணி யாப்பெல்லாம்

தடுக்கத்தான் செய்யுமய்யா என்பாட்டில்

அதற்கு விதிவிலக்கு

கொடுக்கத்தான் வேண்டும் நீங்கள்,  இல்லையானால் உமை விடுத்து

நடக்கத்தான் வேண்டுமென்று எழுந்திடுவேன்.”

கலைஞர் இவ்வாறு பேசுவது அவர்தம் அடக்கத்தையும், பண்பையும்தான் காட்டு-மேயன்றி அவருடைய கவியுள்ளத்தைக், கவிச்சிறப்பைக் குறைத்துக் காட்டாது.

தம் பாட்டு இலக்கணச் சிறைக்குள், இலக்கண வரம்புக்குள் அடைபடாது என்பது அறிந்தும், உணர்ந்தும், தெளிந்தும் ஏன் பாடினார்?

அதற்கும் அவர் தம் கவிதையில் விடை தராமல் இல்லை. அவர்,

“ஒரு பாட்டும் இலக்கணமுடன் ஒப்பிட்டு வாரா பிறவும் தான் தரும் பாட்டு தமிழ் உணர்வைக் கொல்லாதெனும் துணிவுடனே கரும்பாட்டும் ஆலையிலே வேம்பொன்று புகுந்ததுபோல் கவிக்கூட்ட மேடையிலே வேகமாய்ப் புகுந்துவிட்டேன்.’’

கலைஞர் தம் கவிதைச் சிற்பம் கண்ட நாம் ஓசை இன்பம் உடைய கவிதைகள் கற்பனை நிரம்பிய கவிதைகள் உவமை இன்பம், உருவகம் உடையவை சொல்லாட்சிச் சிறப்புடையவை சொற்சிலம்பமாடியவை என்பதுபோல் பலவற்றையும் எடுத்துக்காட்டின் இடம் போதாது.

எனவே, முனைவர் மெ.சுந்தரம் கூறும் கருத்தினைக் கூறி நிறைவு செய்வோம்

“பாலை வைக்கின்ற கிண்ணம் சதுரமாகவும் இருக்கலாம்; வட்டமாகவும் இருக்கலாம்; அறுகோணமாகவும் இருக்கலாம்; நாம் கவனிக்க வேண்டியதெல்லாம் பால் புளித்துப் போய்விடாமல் இருப்பதற்கு இந்தக் கிண்ணம் உதவுமா என்பதுதான். எனவே, கிண்ணத்தின் உலோக அமைப்புதான் நமது சிந்தனைக் குரியதேயன்றி வடிவ அமைப்பு அல்ல.

அதுபோலவே கவிதையில் கருத்தும், கற்பனையும், உணர்ச்சியும்தான் முக்கியமே தவிர, நாம் கலைஞரின் படைப்புகளைக் கணித்துப் பார்த்தால் அவை ஈடும் எடுப்பும் இல்லாத இலக்கியப் படைப்புகள் என்பதில் அய்யம் என்ன இருக்க முடியும்?’’

ஆக, கலைஞர் திரைப்பட வசனகர்த்தா, படைப்பாளி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், அரசியல் வானில் தோல்வியே காணாத வித்தகர், மனிதநேயர், ஆட்சியில் புதுமைத் தேர் ஓட்டிய சாரதி, பெண் உரிமைக் காவலர், பெரியார், அண்ணா வழித் தோன்றல் ஆகிய பலமுகமுடையவர் என்பதோடு அல்லாமல்,

தலைவர் கலைஞர் ஒரு புதிய வடிவு மரபின் மூல முதல்வர், தமிழ்க் கவித் தேரைப் புதிய திக்கில் ஓட்டிச் செல்லும் சாரதி, பின்னால் வரவுள்ள பெரும் படைகளுக்குத் தடம் அமைத்துக் கொடுக்கும் தூசிப்படை கலைஞர் மு.க. _ முத்தமிழறிஞர் கலைஞர்தாம்.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *