பாரதியின் இந்துமத வெறியும் மற்ற மத வெறுப்பும்!
நேயன்
பாரதி எல்லா மதங்களையும் சமமாக மதித்தவர் என்று பலரும் நம்பிக் கொண்டிருப்பது உண்மையல்ல. பாரதியின் படைப்புகளை முழுமையாக ஆய்வு செய்தால் அவர் ஓர் இந்து மதவெறியர் என்பதை எளிதில் தெளியலாம்.
இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் எந்த அளவுக்கு இந்து மதத்தின் மீது வெறியும் பிற மதத்தின் மீது வெறுப்பும், எதிர்ப்பும், பகையும் கொண்டுள்ளார்களோ அதற்குச் சற்றுங் குறையாத வெறியும், வெறுப்பும் பகையும் கொண்டவராகவே பாரதி இருந்தார்; தன் கருத்துகளை அந்த உணர்வுகளை வெளியிட்டார்.
உலகிலே உயர்ந்த மதம் இந்து மதம் மட்டுமே என்று அவர் பலமுறை கூறியுள்ளார். புத்த மதத்தைக் கடுமையாக வெறுத்தார். கிறித்துவ மதத்தையும், இஸ்லாம் மதத்தையும் வெறுத்துப் பேசினார்.
இந்து மதத்தை உயர்வாக எண்ணியதால்-தான் இந்து மதத்தின் வர்ணாஸ்ரமத்தை ஏற்றுப் போற்றி எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்றார்.
இந்து சாஸ்திரங்கள் எழுதப்பட்ட சமஸ்கிருதத்தை உலகின் உயர்மொழி, மூலமொழி என்று உண்மைக்கு மாறாய் உயர்த்திப் பேசினார்.
இந்து மதத்தின் முக்கிய செயல்முறையான ‘யாகம்’ செய்வதைக் கட்டாயக் கடமை என்றார். அதுவே இவ்வுலகை வாழ்விக்கும் என்றும் வலியுறுத்தினார். இதனால் யாகங்களை முற்றாக வெறுத்த புத்த மதத்தைக் கண்டித்தார்.
பாரதியின் பார்வையில் இந்துமதம் ஒன்றுதான் உலகிலேயே உயர்ந்த மதம், மற்றவையெல்லாம் தாழ்வான மதங்களே என்பது அவரின் கருத்து. முதலில் பவுத்த மதம் குறித்துப் பாரதியின் கருத்துகளைப் பார்ப்போம்:
“யாகங்களே பெரும்பாலும் பசுவதைகளும், குதிரைக் கொலைகளும், ஆட்டுக் கொலைகளும் முக்கியமாகப் பாராட்டிய கொலைச் சடங்குகள். இவ்விதமான கொலைகளைச் செய்தல் மோக்ஷத்துக்கு வழி என்ற போலி வைதிகரைப் பழிசூட்டி அந்தக் கொலைச் சடங்குகளால் மனிதன் நரகத்துக்குத்தான் போவான் என்பதை நிலைநாட்டிய புத்த பகவானும், அவருடைய மதத்தைத் தழுவிய அரசர்களும், இந்தியாவில் யாகத் தொழிலுக்கு மிகவும் இகழ்ச்சி ஏற்படுத்தி விட்டார்கள். அந்தத் தருணத்தில் புத்த மதத்தை வென்ற ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட சங்கராச்சாரியார் அவதரித்தார். அவர் புத்தமதக் கருத்துகளைப் பெரும்பாலும் ருசி கண்டு சுவைத்துத் தம்முடைய வேதாந்தத்துக்கு ஆதாரங்களாகச் சேர்த்துக் கொண்டார். அவர் ஹிந்து தர்மத்துக்குச் செய்த பேருபகாரத்துக்காக ஹிந்துக்களிலே பெரும்பாலோர் அவரைப் (ஆதிசங்கரனை) பரமசிவனுடைய அவதாரமாகக் கருதிப் போற்றினார்கள்.
பவுத்த மதமே துறவு நெறியை உலகில் புகுத்திற்று. அதற்கு முன் அங்கங்கே சில சில மனிதர் துறவிகளாகவும், சில சில இடங்களில் துறவிக் கூட்டத்தாராகவும், ஓரிரு இடங்களில் வல்லமை உடையவர்களாகவும் இருந்தனர். பவுத்த மதம்தான் எங்கு பார்த்தாலும் இந்தியாவை ஒரே சந்நியாசி வெள்ளமாக ஆக்கியது.
உலக வாழ்க்கையாகிய ஜகத்தின் ஒளி போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து, அவர்களுக்குக் கீழே மற்ற உலகத்தை அடக்கி வைத்தது. உலகமெல்லாம் பொய்மயம் என்றும், துக்கமயம் என்றும் பிதற்றிக் கொண்டு வாழ்நாள் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி, மனித நாகரிகத்தை நாசஞ் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்தமதத்துக்கு உண்டு. அதை நல்ல வேளையாக இந்தியா உதறித்தள்ளி விட்டது. பின்னிட்டு புத்த தருமத்தின் வாய்ப்பட்ட பர்மா முதலிய தேசங்களிலும் புத்தமதம் இங்ஙனமே மடத்தை வரம்பு மீறி உயர்த்தி மனித நாகரிகத்தை அழித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது.’’
1912இல் பகவத்கீதைக்கு முன்னுரை எழுதும்போது, பாரதியார் பவுத்த மதத்தின் மீது எவ்வளவு வெறுப்புக் கொண்டிருந்தார் என்பதை இதன் மூலம் அறியலாம்.
பவுத்த மதத் துறவிகளைக் கொலைகள் செய்தே அழித்து ஒழித்த ஆதிசங்கரனைப் பாரதியார், சிவபெருமானின் அவதாரமாகவே காண்கிறார். சோவியத்தில் புரட்சி என்றால் கொலைகள், கொள்ளைகள் அதை ஏற்க முடியாது என்பவர், ஆதிசங்கரனின் கொலைகளை மட்டும் ஆதரிக்கக் காரணம் என்ன?
பவுத்தத்தால் ஆட்டங்கண்ட நால்வருணத்-தையும் பார்ப்பனர்களின் உயர்வையும், மீண்டும் புத்துயிர் பெறச் செய்தவன் ஆதிசங்கரன் என்பதால்தானோ?’’
இஸ்லாமிய மதத்தை, அதன் கொள்கை-களை இழிவுபடுத்தினார். அவர் 22.5.1920 சுதேசமித்திரனில் எழுதிய கீழ்க்கண்ட “ரெயில்வே ஸ்தானம்’’ என்ற கதையே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
ஒரு நாள் தென்காசி இரயில்வே ஸ்டேஷன் வெளிப்புறத்தில் பலர் உட்கார்ந்து கொண்டு இருந்ததாகவும், பாரதியார் அங்குச் சென்றதாகவும், இரயில் வண்டி அன்று 1 மணி நேரம் தாமதமாக வருவதாகக் கூறினார்களாம். பாரதியார் தண்டவாளத்தின் ஓரமாகச் சிறிது தூரம் சென்றாராம். அங்கு ஒரு மரத்தடியில் ஒரு மகமதிய கனவான் உட்கார்ந்திருக்கக் கண்டாராம். அவன் கணகளிலிருந்து தாரைதாரையாகக் கண்ணிர் வந்து கொண்டிருந்ததாம். தம்பி ஏன் அழுகிறாய்? என்று பாரதியார் உருது மொழியில் அவனிடம் கேட்டதாகவும், அதற்கு அந்த முகமதிய வாலிபன் சொல்லியதாகப் பாரதி எழுதுகிறார்: எங்கள் ஜாதியில் சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார் மக்களை விவாகம் செய்து கொள்ளலாமென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்… என் தந்தை லாட்டரி சீட்டு வாங்கினார். அதில் ஒரு கோடி ரூபாய் விழுந்தது. அதை வைத்து வியாபாரம் செய்து ஏழு கோடி பணம் சேர்த்தார்.
என் தந்தைக்கு நான் ஒரே மகன். எனக்கு 15 வயது ஆகும்போது என் தந்தை இறந்துவிட்டார். அந்தச் சொத்து முழுவதும் எனக்கு வந்தது. என் வீட்டை மேற்பார்வை செய்ய என் சிறிய தகப்பனார் நியமிக்கப்-பட்டிருந்தார். என் தந்தை இறக்கும் தறுவாயில் என்னைப் பராமரித்து வரும் கடமையையும் அவருக்கே சார்த்தி விட்டுப் போனார். எனது சிறிய தகப்பனார் முதலாவது வேலையாக, தம்முடைய மூன்று குமாரத்திகளை எனக்கே மணம் புரிவித்தார். என் பிதா இறந்த இரண்டு வருஷங்கள் ஆகுமுன்னரே மேற்படி விவாகம் நடைபெற்றது. என் சிறிய தகப்பனாருக்கு ஆண் குழந்தை கிடையாது. மூன்று பெண் பிரஜைதான் அவருக்குண்டு. ஆகவே, என்னுடைய சொத்து வெளிக் குடும்பங்-களுக்குப் போய்விடக் கூடாதென்று உத்தேசித்து அவர் இங்ஙனம் செய்தார். இந்த விவாகம் என் தாயாருக்குச் சம்மதமில்லை. என் தாயாருக்கு எனக்கு ஒரே பெண்ணைத்தான் மணம் புரிவிக்க வேண்டும் என்று எண்ணம். அதனால் சிறிய தகப்பனார் என்னை வேறு ஊருக்கு அழைத்துப் போய் என் தாயாருக்குத் தெரியாமல் அவருடைய மூன்று பெண்-களையும் எனக்கு மணம் முடித்து வைத்துவிட்டார்.
சிறிது காலத்துக்கெல்லாம் என் தாயார் என் செய்கையால் ஏற்பட்ட துக்கத்தைப் பொறுக்க மாட்டாமலேயே உயிர் துறந்து விட்டாள். சிறிய தகப்பனார் இட்டதே என் வீட்டில் சட்டமாய் விட்டது…
(தொடரும்…)