சிறுநீரகக் கற்கள்
(KIDNEY STONES)
மரு.இரா.கவுதமன்
ஒவ்வோர் ஆண்டும், 5 லட்சத்திற்கும் அதிகமானோர் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதால் பாதிக்கப்படுகின்றனர். பத்தில் ஒருவர், தங்கள் வாழ்நாளில் ஏதாவதொரு சமயத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிப்படைகின்றனர். இந்நோயால் அதிகளவில் பாதிப்படைபவர்கள் ஆண்களே. 11 சதவிகிதம் ஆண்கள் பாதிக்கப்பட்டால், 8 சதவிகிதமே பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். மிகு இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பருத்த உடல் ஆகியவற்றால் இந்நோய் எளிதில் வரும் வாய்ப்பு ஏற்படும்.
சிறுநீரகக் கற்கள்: சிறுநீரில் உள்ள வேதிப் பொருள்கள், கடினப்படுவதால், கெட்டியான சிறுநீர்க் கல் தோன்றுகிறது. சிறுநீர்க் கற்கள் பொதுவாக நான்கு வகைப் பொருள்களால் உருவாகின்றன. பொதுவாக, கால்சியம் ஆக்ஸலேட் (Calcium Oxalate), யூரிக் ஆசிட் (Uric acid), ஸ்ட்ருவைட் (Cystine), சிஸ்டைன் (சிஹ்stவீஸீமீ) போன்ற வேதிப் பொருள்களே சிறுநீரகக் கற்கள் உண்டாகக் காரணமாகின்றன. சிறுநீரில் பல உடலின் கழிவுகள் வடிகட்டப்-படுகின்றன. சிறுநீரில் இவை கரைக்கப்பட்டு, சிறுநீராக வெளியேற்றப்படுகின்றன. சில நேரங்களில் அதிக அளவு கழிவுப் பொருள்கள் வடிகட்டப்பட்டு, அவை கரைந்து வெளியேறத் தேவையான அளவு நீர்மம் இல்லாத நிலை ஏற்படும். அதுபோன்ற நேரங்களில், கழிவுகள் சிறு, சிறு துகள்களாகப் படியத் துவங்கும். நாளடைவில் சிறு, சிறு படிகங்களாக (Crystals) உருப்பெரும் இத்துகள்கள்.
அந்நிலையில் வடிப்பான்களில் (Nephrons) வடிக்கப்படும் நீர்மங்கள் இவற்றைக் கரைத்து வெளியேற்ற, தங்களால் முடிந்தளவு சிறுநீரகங்கள் முயலும். சிறுநீரகங்கள் கழிவுப் பொருள்களை வெளியேற்ற முடியாத நிலையில் அவை அங்கு தேங்கும். அக்கழிவுகள் வேறு சில வேதிப் பொருள்களையும் கவரும். கால்சியம், ஆக்ஸலேட், யூரிக் ஆசிட், சிஸ்டைன், க்சேந்தைன் (Xanthine), பாஸ்பேட் போன்ற வேதிப் பொருள்கள், சிறுநீரகக் கழிவுகளுடன் சேர்ந்துவிடும். இவை அனைத்தும் இணைந்து, கடினமாகி கற்கள் போன்று உருமாறிவிடும். இயல்பான நிலையில் சிறிய படிவங்கள், அல்லது சிறு கடினப் பொருள்கள், சிறுநீரில் வெளியேறிவிடும். பெரிய கடினப் பொருள்கள் சிறுநீரகத்திலேயே, வெளியேற முடியாமல் தங்கி விடும். பெரும்பாலோருக்கு உடலில் தேவையான அளவு நீர்மச் சத்து இருக்கும். அவர்களுக்கு சிறுநீரகத்தில் அதிகமாக நீர்மங்கள் வெளியேற்றப்-பட்டு, வேதிப் பொருள்கள் படிவங்களாக மாறும் முன்பே கரைத்து வெளியேற்றப்பட்டுவிடும்.
தேவையான அளவு உடல் நீர்மங்கள் இல்லாதவர்களுககு சிறுநீர்க் கற்கள் எளிதாகத் தோன்றும். சிறுநீர்க் கற்கள் படிந்த உடன், அதன் பருமன் அதிகமாகி சிறுநீரகத்திலேயே நின்றுவிடும். சில நேரங்களில் சிறிய அளவு கற்கள், சிறுநீர்க் குழாய்களில் இறங்கி, சிறுநீர்க் குழாய்களை (Ureters) அடைத்துக் கொள்ளும் நிலை ஏற்படும். பல நேரங்களில் மிக மிகச் சிறிய கற்கள் சிறுநீரோடு வெளியேறிவிடும். சற்று பருமனான கற்களோ, பெரிய கற்களோ சிறுநீரில் வெளியேற முடியாத நிலை ஏற்படும். அத்தகைய கற்கள் சிறுநீரகம், சிறுநீர்க் குழாய்கள், சிறுநீர்ப்பை (Bladder), சிறுநீர்ப் புறவழி (Urethra) போன்ற பகுதிகளில் எங்கேயாவது அடைத்துக் கொள்ளும் நிலையேற்படும். அந்த நிலையில் கடுமையான வலி ஏற்படும்.
சிறுநீர்க் கற்கள் தோன்றக் காரணங்கள்:
* மிகக் குறைந்த அளவு தண்ணீர் பருகுதல். இதனால் உடலில் நீர்மம் குறைந்த அளவே இருக்கும்.
* உடற்பயிற்சி அதிக அளவில் செய்தல். இதனால் வியர்வை அதிக அளவில் வேளியேறி நீர்மக் குறைபாடு ஏற்படக் கூடும்.
* சிறிய அளவில் உடற்பயிற்சியும், கழிவுகள் வியர்வையாக வெளியேறாமல் உடலில் தேக்கமடையும் நிலையை உண்டாக்கும். பின் விளைவாக சிறுநீரகங்களில் இவை தங்கும்.
* உடல்பருமன் (Obesity)
* அறுவை மருத்துவத்திற்குப் பின் ஏற்படும் எடைக் குறைவு. கடுமையான நோய்களுக்குச் செய்யப்படும் பெரும் அறுவை மருத்துவத்தில் ஏற்படும் நீர்மக் குறைபாட்டை சரிவரக் கவனித்துச் சீராக்காவிட்டால் சிறுநீர்க் கற்கள் தோன்ற வாய்ப்பாகிவிடும்.
* அதிக அளவு உப்பு, சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்ளல்.
* சிறுநீரக, சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்று இப்பகுதிகளில் அழற்சியை உண்டாக்கும். அழற்சியின் காரணமாக உண்டாகும் வீக்கம், சிறுநீரகப் பணிகளைப் பாதிக்கும். சிறுநீர் சரியாக வெளியேறாத நிலை ஏற்படும். அதனால், கழிவுக் கரைசல்கள் கற்களாக மாறும் நிலை ஏற்படும்.
* பாரம்பரிய நோயாகவும் சிலருக்கு வரும் நிலையும் ஏற்படும்.
* ஃபிரக்டோஸ் மாவுச் சத்து அதிக அளவு உள்ள உணவுகள் சிறுநீரகக் கற்கள் ஏற்படக் காரணமாகக் கூடும். நாம் தினமும் எடுக்கும் சர்க்கரை, பழச்சாறுகளில் இந்த மாவுச் சத்து அதிக அளவில் இருக்கும்.
* ஏற்கெனவே சிறுநீரகக் கற்கள் வந்து குணமாகி இருந்தால் மீண்டும் வரும் வாய்ப்பு அதிகம்.
* வயிறு, குடல் நோய்களுக்கு அறுவை மருத்துவம் செய்திருந்தால் சிறுநீரகக் கற்கள் தோன்ற வாய்ப்பு அதிகம்.
* சிறுநீரக நீர்க்கட்டிகள் (Polycystic Kidney Disease)
* மூட்டு நோய்கள், குடல் நோய்களின் பின் விளைவாக சிறுநீரகக் கற்கள் தோன்றலாம்.
* கால்சியம் மாத்திரைகள், சிறுநீர்ப் பிரிப்பூக்கி (Diuretics) மருந்துகள் நீண்ட காலம் உண்பதால், சிறுநீர்க் கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.
(தொடரும்…)