இன்று கணினியும் இணைய தளமும் இல்லையென்றால் உலகமே இயங்காது என்ற அளவிற்கு அவற்றின் பயன்பாடு மனித வாழ்வோடு இணைந்துவிட்டது. நாற்பது வயதைத் தாண்டியவர்களுக்கு கணினியின் அறிமுகம் சற்று குறைவுதான். ஆனால், அவர்களின் குழந்தைகள் LKG வகுப்பிலேயே கணினியை பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள்.
எந்த அறிவியல் கருவிக்கும் உள்ளதைப் போலவே கணினிக்கும் நல்ல மற்றும் கெட்ட பக்கங்கள் உண்டு. அதாவது, அதைப் பயன்படுத்துபவர்களும் பயன்பாட்டைத் தருபவர்களும் கொண்டுள்ள நோக்கத்தைப் பொறுத்து அது அமையும்.
இன்று நன்றாகப் படிக்க வேண்டு-மென்றால் கணினி ஒன்று இணைய இணைப்புடன் ஒவ்வொரு வீட்டிலும் அவசியமாகிவிட்டது. அதனால்தான் தமிழக அரசு பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு ஒரு மடிக் கணினி வழங்கி ஊக்குவிக்கிறது.
உங்கள் குழந்தைகள் இணைய தளத்தைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்களா? அல்லது பயன்படுத்தும் வயதைத் தொடப்-போகிறார்களா? ஆம் என்றால் நீங்கள் கணினி மற்றும் இணையத்தைப்பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இணையம் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும் ஆராய்ச்சி செய்யவும், பள்ளிப் பாடத்திட்டம் (project) செய்யவும் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் மிகப் பயனுள்ள ஊடகமாகும். அதே நேரத்தில் மிக அபாயகரமானதும் கூட. பெற்றோராகிய உங்கள் கடமை, பொறுப்பு என்னவென்றால் உங்கள் குழந்தைகள் அந்த ஊடகத்தின் பாதுகாப்பு எல்லையைத் தாண்டாமல் இருக்கிறார்களா என கண்காணிக்க வேண்டியதுதான். அதற்கு உங்களுக்கு கணினி மற்றும் இணையம் பற்றிய அறிவு முக்கியமானதாகும்.
உங்களுடைய குழந்தையைவிட உங்களுக்கு இணையத்தைப் பற்றிய அறிவு அதிகமாக இருப்பது அவசியமாகும். குறைந்தது அவர்கள் அளவுக்காவது தெரிந்திருக்க வேண்டும்.உங்களுக்கு கணினி மற்றும் இணையத்தைப் பற்றிய அறிவு இல்லை-யென்றால் உடனே கற்றுக்கொள்ளத் துவங்குங்கள். அப்போதுதான் அவர்களைக் கண்காணிக்க முடியும். இணையங்களில் உள்ள ஆபத்துகளை அறிந்து தடுக்க முடியும். இணையம் எனும் ஆட்கொல்லி உங்கள் குழந்தைகளைத் தாக்காது என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகள் இணையத்தின் அரட்டை அறை (chat room) அல்லது சமூக வலைதளங்களைப் (social networking ) பயன்படுத்துகிறார்களா? அப்படியென்றால் போலியான முகவரி அடையாளங்களைப் பயன்படுத்தி அவர்-களை ஏமாற்றி சிக்கலில் மாட்டிவிடும் அபாயம் இருக்கிறது.
கணினி மற்றும் இணையத்தின் பயன்பாடு பற்றிய சரியான புரிதல் தெரிதல் உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கப் பயன்படும். internet explorer ஆகியவற்றில் பெற்றோர் கட்டுப்பாடு வாய்ப்பு (parental control option ) உள்ளது. அதைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். சில எளிமையான வழிமுறைகளால் குறிப்பிட்ட சில வலைதளங்-களுக்குள் குழந்தைகள் செல்லாதவாறு தடுக்க முடியும். கூடுதலான ஆன்லைன் பாதுகாப்புக் கருவிகளை வலைதளத்தின் மூலமே வாங்க முடியும்.
நீங்கள் கணினி மற்றும் வலைதளத்தைப் பற்றி சுயமாகவே அறிந்துகொள்ள முடியும். கணினியைத் திறந்து (switch on) உங்களுக்குத் தேவையானதை நீங்களே பார்த்துக் கண்டுபிடிக்க முடியும். புதியதாக தொடங்குபவர்கள் internet safety tools for parents என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள். உங்கள் குழந்தை பார்வையிட்ட வலைதளங்-களுக்குள் நீங்களும் சென்று பார்த்தால் அவர்கள் எதைத் தேடுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடியும். அவர்களின் இணைய முகப்பு (online profile) சமூக வலைதளங்களில் எப்படிக் கொடுக்கப்-பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். அவை உங்களைச் சங்கடப்படுத்துகிறதா? அவர்-களுடைய அரட்டை அறையில் உள்ள விவாதங்கள் ஆபாசமாக இருக்கிறதா? எனப் பாருங்கள்.
நம்பிக்கையான நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் உதவி கேளுங்கள். உங்கள் குழந்தையிடமோ அல்லது அவர்களையொத்த பதின்பருவத்தினரிடமோ கேட்காதீர்கள். நீங்கள் பெற்றோர் கட்டுப்பாடு முறையை இணையத்தில் பயன்படுத்துவதைத் தெரிந்து-கொண்டால் சில தகவல்களை மறைக்கக் கூடும். பதிலாக நம்பிக்கையானவர்கள் மூலமாக இணையத்தின் வழியாகப் பரிமாறப்-பட்டவைகளைப் பாருங்கள். இதற்கெனக் கொஞ்ச நேரம் ஒதுக்குவது வீணானதல்ல. இதற்கான வகுப்புகளுக்குச் செல்வது நல்லது.
இணைய ஆபத்து – 5 காரணங்கள்.
1. தவறான அடையாளங்களை உருவாக்க முடியும்
வலைதளங்கள் மூலம் புதிய நட்பு வட்டாரங்களை உருவாக்குவது எளிது. ஆனால், நேரில் பார்த்துப் பழகுவதற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. ஏனென்றால் எதிர் முனையில் இருப்பவர் யாரென்று பார்க்க முடியாது. ஒருவர் வேறொருவராக அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். உதாரணமாக, உங்கள் குழந்தை சமூக இணைய தளங்களைப் பயன்படுத்தும்போது அவர்கள் தங்கள் வயதை மாற்றிச் சொல்ல முடியும். இரு முனையில் இருப்பவர்களும் மாற்றி மாற்றிப் பொய் சொல்ல முடியும்.
2. இணையக் கொள்ளையர்
முன்பே கூறியது போல இணையத்தில் தவறான அடையாளங்களுடன் புதிய பல முகவரிகளை உருவாக்க முடியும் என்பதால் அவர்கள் பல பொய்கள் மூலம் உங்கள் குழந்தைகளை நேரிடையாகவும் அணுகக்-கூடும். இதனால் பல சிக்கல்களை குழந்தைகளும் பருவ வயதினரும் சந்திக்க நேரிடும்.
3. தேர்வு செய்ய பல வலைதளங்கள்
வலைதளத்தின் தனித்தன்மை என்ன-வென்றால் நீங்கள் தேர்ந்தெடுக்க பல ஆயிரம் தளங்கள் உள்ளன. பள்ளிப் பாடத்திட்டங்-களை ஆய்வு செய்ய இது நல்ல வாய்ப்பாகும். கூடவே கெட்ட வாய்ப்பும் ஆபத்தும் இருக்கிறது.உங்கள் குழந்தைகள் சமூக வலைதளங்கள், வயது வந்தோருக்கான (Adult) அரட்டை அறைகள், ஆபாச வலைதளங்கள் எல்லாவற்றையும் பார்க்கவும் தேர்வு செய்யவும் முடியும். நீங்கள் பெற்றோர் கட்டுப்பாடு முறையைக் கையாளவில்லை-என்றால் உங்கள் குழந்தை எளிதாக எந்த வலைதளத்துக்குள்ளும் சென்றுவிடக் (மாட்டிக்-கொள்ளக்) கூடும்.
4. எல்லாத் தகவல்களும் மறைக்கக் கூடியவையல்ல.
வலைதளத்தில் வெளியிடப்படும் எல்லாத்தகவல்களும் தனிப்பட்டவருக்கானது (private) என்று சொல்ல முடியாது. பெரும்பாலான இளைஞர்கள் பதிவு செய்யும் My Space profiles எல்லோரும் பார்க்கக்-கூடியதாகும். அதேபோல் இணைய தகவல் பலகை எனப்படுபவை தேடு பொறிகளால் பட்டியலிடப்படுகின்றன.இதன் மூலம் எவ்வளவு காலத்திற்குப் பிறகும் அவர்கள் பகிர்ந்துகொண்ட உரையாடல்களை யாரும் பார்க்கமுடியும்.
5. தேவை கண்காணிப்பு
உங்கள் பிள்ளைகள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் ஒரு கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.அவர்கள் ஓரளவிற்கு வயது முதிர்ச்சி மற்றும் மனமுதிர்ச்சி உள்ளவர்கள் என்றால் பரவாயில்லை. மற்றபடி அவர்களுடைய தொலைபேசி எண் முகவரி போன்றவற்றை புதிய இணைய ந(ண்)பர்-களிடம் கொடுக்க வேண்டாம், படங்-களையோ முக்கியமான குடும்பத் தகவல்-களையோ தெரிவிக்க-வேண்டாம் என்று சொல்லுங்கள். ஆனால், இதையெல்லாம் அவர்கள் பின்பற்றுவார்கள் என்பது நிச்சயமல்ல. அவர்களைக் கண்-காணியுங்கள்.
உங்கள் பருவ வயதுக் குழந்தைகள் சிக்கலில் இருக்கிறார்கள் என்பதற்கான 4 அறிகுறிகள்.
கீழ்க் காணும் நான்கு அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று உங்கள் குழந்தைகளிடம் தெரிந்தாலும் உடனே நீங்கள் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
1. குறிப்பிட்ட நேரத்தில் கணினியைத் திறப்பது
சில இணையக் கொள்ளையர்கள் அவர்கள் வேட்டையாட நினைக்கும் இலக்கை (நபரை) ஒத்த வயதினரைப் போல நடித்து அவர்களின் நம்பிக்கையைப் பெற முயற்சிப்-பார்கள். இது ஒரே நாளில் நடந்து விடுவதில்லை. இது ஒருசில வாரங்கள் வரை நடக்கும். குழந்தைகள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அதே நேரத்தில் கணினியைத் திறந்தால் அவர்கள் யாருடனோ நேரடியாகத் தொடர்பு கொள்கிறார்கள் என்று பொருள். மறுமுனையில் இருப்பவர்களுடைய நோக்கம் நிச்சயம் நல்லதாக இருக்காது.
2. கணினியைப் பயன்படுத்துவதை மறைக்கிறார்கள்
நீங்கள் பார்க்கும்போது கணினியைச் சட்டென்று நிறுத்தி விடுகிறார்கள் அல்லது எதாவது விளையாடுவதைப் போல திரையை மாற்றி விடுகிறார்கள் என்றால் நிச்சயம் அவர்கள் ஆன்லைனி-ல் செய்யக் கூடாததைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பொருள். யாராவது புதியவர்களுடன் ரகசியமான (personal) உரையாடலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம். அவர்கள் கண்டிப்பாக குழந்தைகளைக் கெடுப்பவர்களாக இருப்பார்கள்.
3. அதீத மகிழ்ச்சி
உங்கள் பதின் வயதுக் (teenagers) குழந்தை, கணினியில் உரையாடி முடித்த பின் மிக அதிக மகிழ்ச்சியாகக் காணப்பட்டால் அவர்கள் யாரோ ஒருவருடன் உறவைத் தொடங்கி தகவல் பரிமாற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். கெட்ட வாய்ப்பாக பதின் பருவத்தினர் புரிந்துகொள்ளாதது என்னவென்றால் தவறான நபர் யார் வேண்டுமானாலும் கணினியில் மறைந்து இருக்கலாம் என்-பதைத்தான். இந்த நேரத்தில் அவர்களிடம் கணினி வழிக் காதல் போன்றவற்றின் அபாயங்களைப்பற்றி எடுத்துச் சொல்லவேண்டும்.
4. மன அழுத்தம்
முன்பு கூறியது போல் கணினியைப் பயன்படுத்தியபின் மகிழ்ச்சியாக இருப்பது ஒரு அறிகுறி என்றால் கணினியை நிறுத்திய-பின் மிகவும் அழுத்தமான மன நிலையில் காணப்படுவதாகும். கணினி வழி நட்பு காரணமாக பரிமாறிக் கொண்ட சொந்த விஷயங்களைக் கொண்டு அவர்கள் மிரட்டப்-படலாம். சொல்ல முடியாது உங்கள் பருவ வயதுக் குழந்தையேகூட யாருக்காவது தொல்லைக் கொடுத்துக் கொண்டிருக்கலாம். இந்தக் காரணங்களால் அவர்கள் சோர்வாகவும் அழுத்தமாகவும் விலகியும் இருப்பார்கள்.
இது தவிர அவர்களின் வழக்கமான நிலையிலிருந்து நடவடிக்கைகள் மாறுபட்டிருந்தால் அவர்களிடம் பேசி ஏதாவது பிரச்சினை இருந்தால் அதைத் தீர்க்கும் வழியைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும்.
வலையில் மாட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?
தமிழில் கணிப்பொறி, வலை தளம் – ஆங்கிலத்தில் internet , website என்ற சொற்களே அவற்றில் உள்ள அபாயத்தை உணர்த்துகின்றன. நம்முடைய குழந்தைகள் வலைத்தளத்தைப் பாதுகாப்பாகத்தான் பயன்படுத்துகிறார்கள் என்று நம்பிக்-கொண்டிருக்கிறோம் – பிரச்சினை வரும் வரை. பெரும்பாலான மாணவர்கள் பள்ளிப் பாடத்தைத் தேடுவதைவிட நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும் புதிய நண்பர்களைத் தேடவுமே இண்டர்நெட்டைப் பயன்படுத்து-கிறார்கள். உங்கள் குழந்தைகள் வலைத்தளத்தில் பிரச்சினை என்று உணர்ந்து உங்களிடம் வந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
வலைதளத்தில் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய எண்ணற்ற சூழல்கள் உள்ளன.அதில் முக்கியமானது புதியவர்களுடன் தொலை-பேசி எண், முகவரி, ஈமெயில் முகவரி ஆகியவற்றைப் பரிமாறிக்கொள்வதுதான். அப்படி ஏதாவது நடந்திருந்தால் அந்த தொலைபேசி எண் ஈமெயில் முகவரி ஆகியவற்றை உடனே மாற்றி விடுங்கள். மேலும் கூடுதலான பாதுகாப்பு முயற்சி-களையும் எடுக்க வேண்டும். உங்கள் சுற்று வட்டாரத்தில் எப்போதும் கவனமாக இருங்கள். வீடு வாகனங்களைப் பூட்டி பாதுகாப்பாக வைத்திருங்கள்.உள்ளூர் அதிகாரிகள்,நிபுணர்களிடம் தொடர்புகொள்ளுங்கள்.
ஆன்லைனில் தகவல் பரிமாறிக்-கொள்வதால் ஏற்படும் அபாயத்தைப் பற்றி குழந்தைகளிடம் பேசுங்கள். இன்று தெரிந்தோ தெரியாமலோ உள்நோக்கத்துடனோ அறியாமையினாலோ பல பருவ வயதினர் பலர் தங்களுடைய சட்ட விரோதமான சமூக விரோதமான செயல்-களை செல்போன் அல்லது டிஜிட்டல் காமெராவில் படம் பிடித்து வலைதளங்களில் வெளியிடுகின்ற பழக்கம் வளர்ந்து வருகிறது. தமிழக மாணவர்களும் மாணவிகளுமா இதுபோல் நடந்துகொள்கிறார்கள் என்று வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இதனால் ஏற்படும், ஏற்பட்ட பின்-விளைவுகள் என்ன என்று யோசிக்கவே பயமாக இருக்கிறது.
ஒருவேளை இதுபோன்று உங்கள் குழந்தைகளுக்கு நடந்திருந்தால் உடனடியாக அந்த போட்டோ அல்லது வீடியோவை நீக்கி விடுங்கள். பள்ளி நிருவாகிகள் யாராவது பார்த்தால் அவர்களுடைய படிப்பும் எதிர்காலமும் பாதிக்கப்படும். சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு வழக்குரைஞரின் உதவியைக் கேட்க வேண்டும்.
அறிமுகமில்லாதவர்கள் மட்டுமல்லாமல் பள்ளி, பக்கத்துவீட்டு நண்பர்கள்கூட ஆன்லைன் மூலம் தொல்லை கொடுக்கலாம். மிரட்டலாம், புரளி ஏற்படுத்தலாம். கவனமாகப் பிரச்சினையைக் கையாள வேண்டும். உங்கள் குழந்தையின் பிரச்சினையில் நீங்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு எந்த வயதில் இணையத்தை அறிமுகப்படுத்துவது? பள்ளிகள் தாங்கள் தரும் கல்வித்தரம் சிறப்பானது என்பதை நிரூபிப்பதற்காக ஆரம்பப் பள்ளி நிலையிலேயே கணினியைக் கற்றுத்தருவதால் மாணவர்கள் கம்ப்யூட்டர் கேம்ஸ் என்று ஆரம்பித்து ஆன்லைனில் விளையாடும்போது அந்த வலைதளத்தில் உள்ள விளம்பரங்களைக் கிளிக் செய்வதால் தவறான வழியில் திசை மாற வாய்ப்பு உள்ளது. Nick Jr , PBS Kids , Play House Disney போன்ற வலைதளங்களில் உள்ள விளம்-பரங்களைத் தவறுதலாக கிளிக் செய்தால் கூட ஆபத்து ஏதுமில்லை. எல்லா வலைதளமும் அப்படி நம்பிக்கையானவை அல்ல.
உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பள்ளிப் பாடத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக பெற்-றோர்கள் மேற்பார்வையில் செய்ய வேண்டும். அவர்கள் ஆன்லைனில் சமூக வலைதளங்கள், அரட்டை அறைகள், ஆபாச வலைதளங்கள் ஆகியவற்றைத் தேடிச்சென்றுதான் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை. சில வலைதளங்கள் அவர்களின் விளம்பரங்களின் உள்ளடக்கம் பற்றி அவ்வளவாக அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. இதனால் குழந்தை-கள் தவறு செய்ய நேரிடலாம். அவர்களுக்கு அரட்டை அறை மற்றும் சமூக வலை-தளங்கள் பற்றியும் அதில் ஒளிந்திருக்கும் அபாயங்களைப் பற்றியும் கற்பிக்கப்பட வேண்டும். கட்டுப்பாடுகளையும் விதி-களையும் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
முதல் வேலையாக நீங்கள் கம்ப்யூட்டர் பாடம் படிப்பது நல்லது. இணையத்தில் நாம் பார்வையிட்ட தளங்களின் பெயர்களைத் தொகுத்து வைத்திருப்பது History எனப்படும் அதைத் தேடிப் பார்த்து உங்கள் குழந்தை தேடிய தளங்களைத் தெரிந்துகொள்ளலாம். மேலும் parental control என்பதைப் பற்றியும் மேலும் இணையத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள நினைக்கும் எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அதைப் பயன்படுத்தி குழந்தைகள் தவறான வழியில் செல்வதைத் தடுக்கலாம். மேலும் கணினியைத் தனியறையில் வைக்காமல் எல்லோரும் நடமாடும் கூடம் (ஹால்) போன்ற இடங்களில் வைக்கவும். அறிவியல் நாள்தோறும் வளர்ந்து கொண்டே வருகிறது. அதைக்கொண்டு அறிவிழக்கச் செய்யும் செயல்களும் நடந்து-கொண்டுதானிருக்கிறது. ‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’, ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’, என்பதையெல்லாம் மனதில் வைத்து நடந்தால் இளைய தலைமுறை சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் வளமுடனும் சுய மரியாதையுடனும் வாழலாம்.
– க. அருள்மொழி