தகவல்

அக்டோபர் 1-15,2021

கற்றல் ஆர்வம்

*           உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ராம்பூரில் கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்தக் கிராமத்தில் உள்ள 11ஆம் வகுப்பு மாணவி சந்தியா சாஹினி, வீட்டில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் உள்ள தனது பள்ளிக்குச் செல்ல தினமும் ஆற்றில் படகை ஓட்டிச் செல்கிறார்.

               “கொரோனா தொற்று பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் பள்ளி நீண்ட காலமாக மூடப்பட்டது. இப்போது வெள்ளத்தின் சவாலை எதிர்கொள்கிறோம். என்னிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால் என்னால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது கனமழையால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. எனது படிப்புக்காக நான் முழுமையாக பள்ளியை நம்பியே உள்ளேன். அதனால் நான் படகில் பள்ளியை அடைய முடிவு செய்தேன்…’’ என்கிறார் சந்தியா சாஹினி.


 

நுழைவுத் தேர்வு நடத்தியபோது…

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தார்.

எடுத்துக்காட்டாக 2004_2005ஆம் ஆண்டில் தேர்வு எழுதிய கிராமத்து மாணவர்கள் 1125. தேர்ச்சி பெற்றோர் வெறும் 227தான்.

இதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. அரசு எடுத்துக்காட்டியது. இதன் காரணமாக தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த நுழைவுத் தேர்வு ரத்து சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


 

சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்காக…

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு பள்ளிக் கல்வித் துறை பள்ளிகள்

2010ஆம் ஆண்டு 250 பள்ளிகள் (சி.பி.எஸ்.இ.)

2014ஆம் ஆண்டு 580 பள்ளிகள் (இரண்டு மடங்குக்கு மேல் அதிகரிப்பு)

2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 10,775.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை

2016ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் 8,00,033

மருத்துவக் கல்வி

2016ஆம் ஆண்டு தேசிய அளவில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிக்கான ஒதுக்கீடு: மருத்துவம் 383, பல் மருத்துவம் 15.

சி.பி.எஸ்.இ.யில் படிக்கும் 10 ஆயிரம் மாணவர்களுக்காக 8,000,33 சி.பி.எஸ்.இ. படிக்காத மாணவர்கள் பாதிக்கப்பட வேண்டுமா?


 

‘நீட்’ வழக்கு ந(க)டந்து வந்த பாதை

2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய மருத்துவக் கவுன்சில்(Medical Council of India – MCI) இந்திய கெசட்டில் ஓர் அறிவிப்பு வெளியிட்டது. மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளில்(Regulations on Graduate Medical Education, 1997) மாற்றம் செய்திருப்பதாகச் சொல்லி கெசட் ஒன்றை வெளியிட்டது.

அது எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவு மற்றும் தகுதித் தேர்வு நடத்துவது (Eligibility cum entrance test) நடத்துவது என்று நெறிமுறைகள் மாற்றப்பட்டன. இவை“Regulations on Graduate Medical Education, 2010” என்று அழைக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் மருத்துவக் கவுன்சில் 2012ஆம் ஆண்டு மே மாதம் நுழைவுத் தேர்வு நடத்தத் தயாரானது. இதனை முதன்முதலாக குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி கடுமையாக எதிர்த்தார்.

ஜூலை 18, 2013

இந்தத் தேர்விற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், விக்ரம்ஜித், சென், ஏ.ஆர்.தவே கொண்ட அமர்வு விசாரித்தது. அல்டாமஸ் கபீர் ஓய்வு பெறுகிற அன்று அவரது கடைசித் தீர்ப்பாக தீர்ப்பு வெளியானது. நீட் தேர்வு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வர்த்தகம் நடத்தும் உரிமையை மறுக்கிறது என்றும், இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் கபீர் தனது தீர்ப்பில் தெரிவித்தார். (18.7.2013)

2016ஆம் ஆண்டு ஏப்ரல் 11

அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சி முடிந்த பிறகு பா.ஜ.க. ஆட்சியில் அல்தாமஸ் கபீர் அளித்த தீர்ப்பை எதிர்த்து நீட் தேர்வை நடத்தக் கோரி மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீட் தேர்விற்கு ரத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த அனில் ஆர்.தவே தலைமை அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. (நண்டை சுட்டு நரியைக் காவலுக்கு வைத்த கதைதான்) அப்போது கபீர் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பைத் திரும்பப் பெற்றது. இதனை அடுத்து நீட் தேர்வு உடனடியாக அமலுக்கு வந்தது.

ஆனால், இந்தத் தேர்வு தமிழ்நாட்டில் நடத்தப்படாமல் இருக்க அப்போதைய மறைந்த முதல்வர் ஜெயலலிதா விலக்கு பெற்றிருந்தார். இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அக்டோபர் 2016ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

இதனை அடுத்து பல அரசியல் குழப்பங்களுக்கு இடையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் நிருவாகத்தின் கீழ் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதல்முறையாக 2017ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது.


 

இரட்டையர்கள் பிறந்த நாள்: 14.10.1887

உலகில் புகழ்பெற்ற இரட்டையர்கள் உண்டு. ஆனால், எவரும் நமது ஆர்க்காடு இரட்டையர்கள் ஏ.இராமசாமி (முதலியார்), ஏ.இலட்சுமணசாமி (முதலியார்) ஆகியோருக்கு ஒப்பாகவோ, இணையாகவோ கூறிட முடியாது.

1887ஆம் ஆண்டு அக்டோபர் 14இல் பிறந்தவர்கள் இவர்கள் இருவரும். ஒருவர் ஏ.இராமசாமி முதலியார் அரசியல் உலகிலும், தொழில் உலகிலும் கொடிகட்டி ஆண்டவர் என்றால், மருத்துவ உலகிலும், கல்வித் துறையிலும் பட்டொளி வீசிப் பறந்தவர் ஏ.லெட்சுமணசாமி முதலியார்.சென்னைப் பல்கலைக் கழகத்தில் 25 ஆண்டுகாலம் துணைவேந்தராக இருந்து வெள்ளி விழா கண்ட தங்கமனிதர் டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் இந்த இரட்டையர் இருவருக்குமே டாக்டர் பட்டம் அளித்துப் பாராட்டியது என்றால், இது என்ன சாதாரணமா!

1917இல் சர்.ஏ.இராமசாமி முதலியார் நீதிக்கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். நீதிக்கட்சி நடத்திய ‘ஜஸ்டிஸ்’ இதழின் கவுரவ ஆசிரியராக இருந்து (1927-35) சர்.ஏ.இராமசாமி முதலியார் எழுதிய தலையங்கங்கள் புகழ்பெற்றவை. அவற்றைத் தொகுத்து(Mirror of the Year) நூற்றாண்டு விழாவின்போது வெளியிட்டது திராவிடர் கழகமாகும்.

நூற்றாண்டு விழாவை நடத்தியதோடு, இரட்டையர்கள் பற்றிய நூற்றாண்டு விழா மலரையும் வெளியிட்ட கடமையைத் திராவிடர் கழகம் வரலாற்றில் ஆற்றியுள்ளது.அம்மலரின் முகவுரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு  கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்: “இவர்கள் மட்டும் பார்ப்பனக் குலத்திலே பிறந்திருந்தால் திருஞான சம்பந்தனுக்குப் பார்வதி தேவியார் ஞானப்பால் கொடுத்ததாகக் கதை கட்டியதுபோல, புதிய சரடு ஒன்றைக் கிளப்பிப் புராணம் எழுதியிருப்பார்கள்’’ என்று எழுதியுள்ளார்.

இரட்டையர்கள் இருவரும் தந்தை பெரியாரின் பேரன்புக்குப் பாத்திரமானவர்கள். தந்தை பெரியாரை மிகவும் மதித்தவர்கள். “தமிழ்நாட்டின் ரூசோ’’ என்று தந்தை பெரியார் அவர்களைக் குறிப்பிட்டவர் சர்.ஏ.இராமசாமி முதலியார் ஆவார்.

வாழ்க ஆர்க்காடு இரட்டையர்கள்!


 எலும்பினை வலுவாக்கும் சேம்பு!

சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானக் கோளாறுகள்  ஏற்படாமல் தடுக்கும். மேலும், குடல் புண்களை விரைவில் குணமாக்கும். நரம்புத் தளர்ச்சி மற்றும் ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் இதனை உட்கொண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இதன் கிழங்கு மட்டுமல்ல, தண்டு மற்றும் இலையையும்கூட சமைத்து உண்ணலாம். புளி சேர்க்காமல் சமைக்கக் கூடாது. புளிக்குழம்பு வைப்பவர்கள் இந்தத் தண்டினை அதனுடன் சேர்த்துச் சமைக்கலாம். உண்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

சேப்பங்கிழங்கு வழவழப்பான தன்மை கொண்டது. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலுவைச் சேர்க்கும்.

சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் ‘சி’ மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட்டுகள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்து உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. 


 

சுய விமர்சனம்

1937-இல் ‘த மாடர்ன் ரிவ்யூ ஆஃப் கல்கத்தா’ என்னும் இதழில், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்த நேருவை விமர்சித்து சாணக்யா என்பவர் எழுதிய ஒரு கட்டுரை வெளியானது. “நேரு போன்றவர்கள் ஜனநாயகத்தில் ஆபத்தானவர்கள். ஒரு சிறு திருப்பமும் இவரை சர்வாதிகாரி ஆக்கிவிடலாம். ஒரு சர்வாதிகாரிக்கு வேண்டிய புகழ், மன உறுதி, செயல்திறன், கர்வம் எல்லாமே அவரிடம் இருக்கின்றன. இவரது முன்கோபம் எல்லோருக்கும் தெரிந்தது. இவருடைய தற்பெருமை ஏற்கெனவே பயங்கரமானது. அதை அடக்க வேண்டும்!’’ என்பது உள்ளிட்ட கடுமையான விமர்சனங்களை நேருமீது வைத்திருந்தார் சாணக்யா.

அடுத்து சில இதழ்களுக்குப் பிறகுதான் அந்தக் கட்டுரையை எழுதிய ‘சாணக்யா’ வேறு யாருமல்ல… நேருதான் என்பதைப் பத்திரிகை குறிப்பிட்டது. மக்கள் தன்னைப் பற்றி நினைப்பதை உண்மையாக அறியவேண்டி, ‘சாணக்யா’ என்கிற புனைப் பெயரில் அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார் நேரு. 


 

192 இடங்கள் எங்கே எங்கே?

உயர்சிறப்புக் கல்வி (SUPER SPECIALITY) தமிழ்நாட்டைப் பொறுத்த வரை மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்கள் 196. இந்தியாவில் 10 மாநிலங்களில் அறவே கிடையாது. மீதி மாநிலங்களிலும் ஒற்றைப்படை வரிசையில்தான் இடங்கள் உள்ளன.

ஒன்றிய அரசு கொண்டுவரும் அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் நமது இடங்கள் முற்றிலும் களவாடப்படுகின்றன. எடுத்துக் காட்டாக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிறப்புப் படிப்பான DM-NEON NATOLOGY யில் உள்ள இடங்கள் 8, இவை கடந்த ஆண்டு 6 இடங்கள் வெளிமாநிலங்களுக்குப் பறிபோயின _ நமக்குக் கிடைத்தவை இரண்டே இரண்டுதான்.

நம் மாநில அரசின் பணம் _ கட்டுமானம் யாருக்கோ தாரை வார்க்கப்பட வேண்டுமா? இதனை நாம் அனுமதிக்கலாமா?


 

கலைஞர் ஆட்சியில் நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்ட நிலையில்…

மருத்துவக் கல்வி 2015-2016இல்,

திறந்த போட்டிக்குரிய இடங்கள் 884

வெற்றி பெற்றவர்கள் விவரம்:

பிற்படுத்தப்பட்டோர் _ 599

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் _ 159

முசுலிம் (பிற்படுத்தப்பட்டோர்) _ 32

தாழ்த்தப்பட்டோர் _ 23

மலைவாழ் மக்கள் _ 1

அருந்ததியர் _ 2

முற்பட்டோர் _ 68

நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால்

இது தலைகீழானது ஆகாதா?


குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியின் நிலைப்பாடு என்ன?

மருத்துவக் கழகத்துக்கு (MCI) மோடி ஆண்ட குஜராத் மாநில அரசு எழுதிய கடிதம் என்ன?

இதோ… கண்களைக் கொஞ்சம் விளக்கிக் கொண்டு பார்க்கட்டும்.

மாநில அரசு நீட் தேர்வை அனுமதிக்காது என்று குஜராத் அரசு மருத்துவக் கழகத்திடம் வலியுறுத்தி உள்ளது.

குஜராத்தி மொழியில் நீட் தேர்வு இல்லை. அதேபோல் மாநிலப் பாடத்திட்டத்திலும் கேள்விகள் இல்லை என்பதால் குஜராத் மாநிலத்தின் பல பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பொதுநல வழக்கை குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது குஜராத் அரசின் சார்பில் நீதிமன்றத்தில் பதில் கூறிய குஜராத் மாநில முதன்மை சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் கிசோர் மாணவர்களின் நலன் கருதி மருத்துவக் கழகம் நல்ல முடிவு எடுக்கும் என்று நினைக்கிறேன். அதுவரை குஜராத்தில் நீட்டை அனுமதிக்க முடியாது என்று மருத்துவக் கழகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்று கூறி அக்கடிதத்தின் நகலை விசாரணையின்போது நீதிபதிகளிடம் கொடுத்தார். (23.1.2013)


 

துணுக்குகள்

*           கண்தானம் செய்யும்போது சிலர் நினைப்பதுபோல கண்களையே அகற்றி எடுக்க மாட்டார்கள். மாறாக, ‘கார்னியா’ எனப்படும் பார்வைப் படலத்தைத்தான் பிரித்தெடுத்துக் கொள்வார்கள். அதுவும் ஒருவர் இறந்த சில மணி நேரங்களுக்குள் இதைச் செய்ய வேண்டும்.

*           நாக்கால் காதைச் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகச்சிவிங்கி.

*           நான்கு மூக்குகளை உடைய உயிரினம் நத்தை.

*           நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம் டால்பின்.

*           நம் உடலில் உள்ள இரண்டு நுரையீரல்களில் வலது நுரையீரல்தான் பெரியது.

*           உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *