கே1: உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத ஒன்றிய அரசு மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ள என்ன தடை?
– கல.சங்கத்தமிழன், செங்கை
ப1: மில்லியன் டாலர் கேள்வி இது! என்றாலும், உச்சநீதிமன்றம் அவ்வளவு வேகமாகப் பாய்ந்துவிட முடியாதே. ஏனெனில், ஒதுக்கப்பட்ட அதிகாரப் பகிர்வின்படி ( Separation of Legislature, Administration and Judiciary – நீதித்துறை, நிருவாகத்துறை, சட்டத்துறை) மோதல்கள் விரும்பத்தக்கவை அல்ல என்கின்றது. யோசிப்பார்கள் அல்லவா?
கே2: பெரியாருக்கு 95 அடியில் சிலை தேவையா? என்போருக்குத் தங்கள் பதில் என்ன?
– மா.அடைக்கலம், பல்லாவரம்
ப2: வரலாற்றின் சிறப்புகளை அறியாத நிர்மூடர்களை வரலாறு மன்னிக்காது! நாளைய தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு அச்சிலை மாத்திரம் அல்ல _ அந்த உலகத்தைச் சுற்றி அமையவிருப்பவை. அறிவியல் _ மின்னணுவியல் _ திராவிட இயக்க வரலாற்று அதிசயங்கள் _ இனிவரும் உலகம் கண்டு வியந்து பாராட்டுவது உறுதி! வாழ்க வயிற்றெரிச்சல்காரர்கள்!
கே3: “சமூகநீதிகாத்த வீராங்கனை’’க்கு எந்த நாள் கொண்டாடுவது? என்ற ‘தினமலர்’ ஏட்டின் ஏளனம் குறித்து…?
– தா.ஞானசம்பந்தன், திருவையாறு
ப3: ஆவணி அவிட்டத்திற்கு அடுத்த நாளை ‘இனமலர்’ கூட்டம் தேர்ந்தெடுத்துக் கொண்டாடினால் நாம் தடுக்க மாட்டோம்!
கே4: தாலிபன்கள் ஆட்சியில் பெண் உரிமை பறிக்கப்படுவதை அய்.நா.மன்றம் தடுக்க முடியுமா?
– சி.வீரபாண்டியன், மதுரை
ப4: அய்.நா.மன்றம் ஒரு பல்லில்லாத மன்றம் -_ விவாத சத்த சபை _ அவ்வளவே!
கே5: தாயின் பெயரையும் தலைப்பெழுத்தில் போட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தங்கள் கருத்து என்ன?
– கி.மாசிலாமணி, மதுராந்தகம்
ப5: வரவேற்க வேண்டியதாகும்!
கே6: ‘தினமலர்’ நடுநிலை நாளிதழாம்! தலைப்பில் போட்டுள்ளார்களே, அதுபற்றி…?
– மூ.கார்த்திகேயன், திருச்சி
ப6: நடுநிலை ஏடல்ல அது _ கெடுநிலை (மக்களுக்கு) ஏடு அது என்பதே பச்சை உண்மையாகும்!
கே7: கருத்துக் கணிப்பை மம்தா பொய்யாக்கியதைப் போல, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் பொய்யாக்க, நீங்களும் தமிழ்நாடு முதலமைச்சரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
– து.தீபா, புதுக்கோட்டை
ப7: உ.பி.யில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பு _ பா.ஜ.க.வின் பம்மாத்து வேலைகளில் முதல் ‘பூஜை’ (அவாள் கண்ணோட்டமே). அதற்கு முக்கியத்துவம் தராதீர்கள். உண்மை பிறகே இறுதியில் சிரிக்கும்!
கே8: பெரியார் உலகம் உருவாக்கத்திற்கு உலக அளவிலான பங்களிப்பு இருக்க திட்டமிடுவீர்களா?
– ர.மகேஸ்வரி, திருவரங்கம்
ப8: உலகம் பெரியார் மயமாகி வருவதால் நம் நம்பிக்கை _ உங்கள் நம்பிக்கை _ பொய்க்காது!
கே9: பெரியார் பிறந்த நாள் ‘சமூகநீதி நாள்’ என்றதன் மூலம் பெரியார் என்றால் சமூகநீதி என்ற உண்மை உலகுக்கு உணர்த்தப்பட்டுவிட்டது அல்லவா?
– வே.ஆறுமுகம், வியாசர்பாடி
ப9: அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் காலம் மலருவதும் உறுதி! எதிலும் பெரியார் சற்று காலதாமதத்துடன் பெரு வெற்றி பெறுவதுதான் அவரது வரலாறு!