கட்டுரை : ‘திராவிடர்’ என்னும் சொல் தேர்வு ஏன்?

செப்டம்பர் 16-30,2021

ப.திருமாவேலன்

மீண்டும் மீண்டும் ‘திராவிடர்’ என்னும் சொல்லுக்கு விளக்கம் அளித்து விரல் தேய்ந்து விட்டது. ‘திராவிடம்’ என்பதற்கு வாய்க்கு வந்தபடி பொருள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் திராவிட எதிரிகள்!

‘திராவிடம்’ என்றால் ஆரியம்!

‘திராவிடம்’ என்றால் பார்ப்பனர்கள்! _ என்று தமிழ்த்தேசியம் என்ற பெயரால் அலையும் சிலர் சொல்லித் திரிகிறார்கள். ‘திராவிடர்கள்’ என்று யாரும் கிடையாது என்றும் இவர்கள் சொல்கிறார்கள். இதையே, ‘ஆரியர்களும் இல்லை, அதனால் திராவிடர்களுக்கும் இல்லை’ _ என்று ஆரியச் சக்திகளே சொல்கிறது!

ஆரிய சக்திகளும் _ தமிழ்த்தேசியம் என்று சொல்லிக் கொள்பவர்களும் சொல்வது ஒன்றுதான். ஆரிய சக்திகளுக்காவது 100 சதவிகித நேர்மை உண்டு. அவர்கள் தங்கள் இனத்துக்கு உண்மையாக இருக்கிறார்கள். ஆனால், தமிழ்த்தேசியம் என்கிற பெயரால் பேசுபவர்கள் தமிழினத்தின் துரோகிகள். அந்தத் துரோகத்தை மறைப்பதற்காக, ‘திராவிடம்’ என்னும் சொல்லுக்கு எதிராக யுத்தம் செய்கிறார்கள்.

‘திராவிடம்’ என்னும் சொல் ஒரு காலத்தில் இடப்பெயராக _ அதன் பிறகு மொழிப் பெயராக _ சில காலத்தில் இனப்பெயராக இருந்தது என்பதை திராவிட மொழியியல் ஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் தனது நூல்களில் பல இடங்களில் எழுதி இருக்கிறார். ‘திராவிடம்’ என்பது இன்று ஒரு தத்துவத்தின் சொல்லாக இருக்கிறது. அந்தத் தத்துவத்தை அயோத்திதாசர், இரட்டமலை சீனிவாசன், எம்.சி.ராஜா ஆகியோர் முன்மொழிந்து அரசியல் களத்தில் போராடினார்கள். இன்னொரு பக்கத்தில் தந்தை பெரியார் பயன்படுத்திப் போராடினார். ‘திராவிடத்தை’  பேசிய பெரியாரை, தெலுங்கர் என்று சொல்பவர்கள், அயோத்திதாசரை, இரட்டமலையாரை, எம்.சி.ராஜாவை நோக்கி உள்நோக்கம் கற்பிக்க முடியாமல் போனது ஏன்? திராவிடம் பேசுபவர்கள் அனைவரும் தெலுங்கர்கள் என்றால் இவர்கள் யார்?

பெரியார் கேட்டுவந்த ‘திராவிட நாடு’ என்பது அன்றைய சென்னை மாகாணம். இதில் தமிழர்களோடு தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் வாழ்ந்து வந்தார்கள். இதில் முதன்முதலாக தெலுங்கர்கள் தனி மாகாணம் கேட்டார்கள். இது பெரியாருக்கு சிக்கலை உணர்த்தியது. நாம் ஒன்றாக இருக்கலாம் என்று முதலில் சொன்னார். தான் கேட்டு வந்த திராவிடநாட்டுக்கு மொழிவாரி மாகாணப் பிரிவினை என்பது தடை போடும் தந்திரமாக அரசியல் ரீதியாகவும் பார்த்தார். ஆனால், தெலுங்கர்கள் சென்னை மாகாணத்தையும் தங்களுக்குக் கேட்க ஆரம்பித்தும் தான் பெரியாருக்குள் இருந்த ‘தமிழன்’ விழித்தான். ‘தெலுங்கர் பேராசை’ என்ற தலையங்கம் தீட்டினார். நான்கு மொழிக்காரர்களையும் திராவிடர்கள் என்று அழைத்து வந்தவர்களை, தமிழர்களைப் பிரித்து ‘தமிழ்த்திராவிடர்கள்’ என்று சொல்ல ஆரம்பித்தார். சென்னை நகர், தமிழ்த் திராவிடனிடமிருந்து பறித்துக் கொள்ளப்படுவதை எந்த ஒரு திராவிடனும் ஒப்புக்கொள்ளவே முடியாது’’ என்று எழுதினார். (‘குடிஅரசு’ 27.8.1949) இதிலிருந்தே தமிழர்களுக்கு மட்டுமான அரசியல் தொடங்கிவிட்டது.

ஆந்திரர்களின் தனி மாகாணமாகப் பிரிந்து செல்வதை ஆதரித்த பெரியார், அவர்கள் சென்னையைக் கேட்டதைக் கண்டித்தார். ஆந்திரர்களுக்குச் சென்னை கிடையாது _ கிடைக்காது என்று எழுதினார். ம.பொ.சி. சென்னை மாநகராட்சியில் கொண்டுவந்த தீர்மானத்தை முழுமையாக ஆதரித்தார். ஆந்திர ராஜ்யத்துக்கு சென்னை நகர் தற்காலிகத் தலைநகராகவும் இருக்கக் கூடாது என்பதை திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு தீர்மானமாக நிறைவேற்றியது. (‘விடுதலை’ 11.1.1953)

சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய பெரியார், ‘தமிழ் பேசும் மக்கள் நாட்டில் தெலுங்கு பேசும் மக்கள் ஆட்சி இருப்பதா?’ என்று கேட்டார். மலையாளிகளுக்கு எதிராக தென் திருவிதாங்கூரில் நடக்கும் தமிழர் போராட்டத்தை பெரியார் ஆதரித்தார். வடக்கில் தெலுங்கர், தெற்கில் மலையாளிகள் தமிழர்களுக்கு எதிராக நடத்தும் அனைத்து ஆர்ப்பாட்டங்களையும் கண்டித்தார். தென்னிந்தியப் பகுதிகள் இணைந்த தட்சிணப் பிரதேசம் திட்டத்தை எதிர்த்தார். இதனை மலையாளிகளின் சூழ்ச்சி என்றார். (‘விடுதலை’ 11.10.1955) தமிழர் பேசும் பகுதிகளை மட்டும் கொண்ட தமிழ்ப்பகுதிகளை இணைத்து தமிழ்நாடு உருவாக்கச் சொன்னார்.

1956ஆம் ஆண்டு மொழிவாரியாக மாகாணங்கள் பிரிந்துவிட்டன. வடநாட்டான் சுரண்டலில் இருந்து முழுமையாக விடுதலையடைய முன்வராத ஆந்திரமும் கேரளாவும் கன்னடமும் பிரிந்து போய்விட்டதால் இனி தமிழ்நாடு முழு விடுதலையடைய போராட வேண்டியதுதான் என்றார். இன்றிருப்பது தனித் தமிழ்நாடுதான் என்றார். தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள தெலுங்கர், மலையாளிகள் அவரவர் மாநிலத்துக்கு போய்விட வேண்டியதுதான் என்றார். ஆந்திர, கேரள, கன்னட மொழிக்காரர்கள் தொல்லை நீங்கிவிட்டது என்றார்.

அப்படியானால் திராவிடர் என்பதற்குப் பதிலாக தமிழர் என்றே இனி கூறலாமே என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்ட பெரியார், “திராவிடர் என்றால் ஆரியருக்கு எதிரிகள் என்ற பொருளிருப்பதனால் ஆரியர்களை அறவே ஒதுக்க முடிகிறது’’ என்றார். (‘விடுதலை’ 8.11.1956) அதுவரை கேட்டு வந்த ‘திராவிடநாடு’ இனி ‘தமிழ்நாடு’ ஆகிறது.

24.8.1958 அன்று வேலூரில் நடந்த சுதந்திரத் தமிழ்நாடு மாநாட்டில் பேசும் போது, “’இன்று மற்றவர்கள் எல்லோரும் பிரிந்து தனித்-தனியே நாடுகளாகப் போய்விட்டார்கள். இன்று தமிழ்நாடு என்று தெளிவாகச் சொல்ல முடிகிறது’’ என்று பேசினார் பெரியார். (‘விடுதலை’ 30.8.1958) திடீரென்று குரல் மாற்றிப் பேச ஆரம்பித்துள்ளார் பெரியார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதுதான், ‘சூழ்நிலைக்கேற்ப நமது குரல் மாறலாம். கொள்கை அணுவளவும் மாறாது’ என்று சென்னையில் பேசினார். ‘இனம் நோக்கில் திராவிடமும் மொழி அடிப்படையில் தமிழ்நாடும் அடைவதே நமது இலட்சியம்’ என்றார். தமிழ்நாடு கேட்கிறாயே உன் திராவிட நாடு என்ன ஆயிற்று என்று கேட்பவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார்.

“திராவிட நாடு என்று சொன்னாலும் தமிழ்நாடு என்று சொன்னாலும் இரண்டும் ஒன்றுதான். அகராதியில் எடுத்துப்பார். இலக்கியத்தைப் படித்துப் பார். அதிலிருக்கிறது தமிழ்நாடு என்றால் திராவிடநாடு. திராவிடநாடு என்றாலும் தமிழ்நாடுதான். இரண்டுக்கும் பெயர்தான் வேறே தவிர மற்றபடி காரியங்கள் எல்லாம் ஒன்றுதான். … இனத்தால் நாம் திராவிடர்கள். மொழியால் நாம் தமிழர்கள்’’ என்று விளக்கம் அளித்தார். (‘விடுதலை’ 13.8.1958)

‘திராவிடன்’ என்று சொல்வது ஏன் என்ற  இந்த விவாதங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் “மர மண்டைகளுக்கு மீண்டும் கூறுகிறோம்’’ என்ற தலையங்கம் தீட்டப்பட்டது.

திராவிடன் என்னும் சொல்லை ஏன் பயன்படுத்துகிறோம் என்பதற்கான விளக்கம் சொல்லப்பட்டது.

“திராவிடம் என்ற சொல்லை விடக்கூடாது என்று சொல்லி வருகிறோம். திராவிடன் என்ற சொல்லுக்கு அஞ்சுவது போல் தமிழன் என்ற சொல்லுக்கு அக்கிரகாரத்தான் அஞ்சுவதில்லை. தமிழன் என்றால், ஆமாம் சார் நாமெல்லாம் தமிழன்னோ என்று உடனே உறவு கொண்டாடுகிறான். இதைக் கேட்கும் தமிழன் (‘திராவிடன்’) பல்லை இளிக்கிறான். ‘அல்ல சார் அல்ல! நீர் ஆரியர்! நான் தமிழர்’ என்று கூறக்கூடியவன் கருஞ்சட்டைக்காரன் ஒருவன் தானே? தேவநேயப்பாவாணர், சுப்புரெத்தினம், வை.பொன்னம்பலனார் போன்ற அரை டஜன் புலவர்கள் தானே? மற்ற எல்லாத் தமிழ்ப் புலவர்களும் எல்லா அரசியல் கட்சிக்காரர்களும் எல்லாத் தலைவர்களும் ஆரியனையும் தமிழன் என்றுதானே கூறுகிறார்கள்? தென் ஆர்க்காடு கிராமவாசியான ஒரு தற்குறித் தமிழனுக்கு இருக்கிற அறிவுகூட இவர்களுக்கெல்லாம் இல்லையே? கிராமவாசித் தமிழன் படிப்பு எழுத்து வாசனை இல்லாதிருந்தாலும் ‘அதோ போகிறவன் பார்ப்பான், இதோ வருகிறான் தமிழன்’ என்று பிரித்துக் கூறத் தெரிகின்ற அடிப்படை இன உணர்ச்சி அறிவாவது இருக்கிறதே!

அந்த அறிவு எல்லாத் தமிழர்களுக்கும் வருகின்ற வரையிலும் தமிழர் என்ற சொல்லுக்குப் பதிலாக திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டியிருப்பது இன்றியமையாததாகிறது’’ (‘விடுதலை’ 22.11.1958) என்று எழுதினார்.

திராவிடநாடு முழக்கத்தை சுதந்திரத் தமிழ்நாடு முழக்கமாக பெரியார் மாற்றினார். திராவிடநாடு என்று சொல்லக் கூடாது என்று கூறினார். திராவிட நாடு என்பதை எதிர்க்கும் திராவிடர் கழகத்தவர் ‘தமிழர் கழகம்’ என்று பெயர் வைத்துக் கொள்ள வேண்டியது தானே என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ‘இது திராவிடர் கழகம், ஆரியர்கள் சேர முடியாத கழகம்’ என்று விளக்கம் அளித்தது ‘விடுதலை’. பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட கழகம், எந்தப் பிரச்னையையும் ஆரியர் _ திராவிடர் என்ற பூதக்கண்ணாடி போட்டு சோதிக்கிறது இக்கழகம் என்றது அத்தலையங்கம். (‘விடுதலை’ 22.6.1961)

1955ஆம் ஆண்டு பிறந்து அப்போதே கொல்லப்பட்ட தட்சிணப்பிரதேசம் உருவாக்கம் மீண்டும் 1963ஆம் ஆண்டு வேறொரு வடிவத்தில் வந்தது. தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்க வேண்டும் என்று அப்போது சொல்லப்பட்டது. ‘முளையிலேயே இதனைக் கிள்ளி எறியவேண்டும்’ (‘விடுதலை’ 9.2.1963) என்று எழுதினார். சுரண்டல் கொடுமை, மலையாளிகள் தொல்லை என்று கண்டித்தார். மலையாளிகளை பசுத்தோல் போர்த்திய புலிகள் என்று கண்டித்து தலையங்கம். (‘விடுதலை’ 10.1.1964)

இப்படி 1956 முதல் ‘திராவிடநாடு’ என்பதைக் கைவிட்டு, ‘தமிழ்நாடு’ என்பதை உச்சரித்தார் பெரியார்! இந்த நிலைப்பாட்டை முழுமையாக விளக்கி ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் ‘தமிழ்நாடா? திராவிட நாடா?’ என்னும் குறுநூல் எழுதி 4.8.1961 அன்று வெளியிடப்பட்டது. அதில் பெரியாரின் அறிக்கை ஒன்றை ஆசிரியர் அவர்கள் மேற்கோள் காட்டுகிறார். அதில் ‘திராவிடம்’ என்னும் சொல்லை தான் எதற்காகப் பயன்படுத்த வேண்டி உள்ளது என்பதை பெரியார் சொல்கிறார்.

“நம் நாட்டுக்கு சமுதாயத்திற்கு இனத்திற்கு திராவிடம் என்று இருந்த பெயர், அது தமிழல்ல என்பதானாலும் நமக்கு அது ஒரு பொதுக்குறிப்புச் சொல்லும் ஆரிய எதிர்ப்பு உணர்ச்சிச் சொல்லுமானதாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன்’’ என்கிறார் பெரியார். (தமிழ்நாடா? திராவிடநாடா? பக்கம் 13) திராவிடன் என்ற சொல்லை விட்டு விட்டு தமிழன் என்று சொன்னால் பார்ப்பான் (ஆரியன்) நானும் தமிழன் தான் என்று உள்ளே புகுந்து விடுகிறான்’’ என்கிறார் பெரியார்.

திராவிடன் என்னும் சொல் தேர்வின் காரணம், ஆரியம் என்பதன் எதிர்ப்-புணர்ச்சிக்காகவே!

தமிழன் என்னும் சொல்லைப் பயன்-படுத்தாமல் இருந்ததற்குக் காரணம், ஆரியப் பார்ப்பனரும் தாங்களும் தமிழர்கள் என்று உள்ளே நுழைந்து விடுவார்கள் என்பதற்-காகத்தான். அதனால்தான் தமிழன் என்று அவர் பேசுவதை விடவில்லை. ‘தமிழா எழுச்சி கொள்’ என்றே சொன்னார்.

திராவிடர் கழகம் என்று பெயர் வைக்காமல் போயிருந்தால், சூத்திரர் கழகம் என்பதே தான் வைக்கப் பொருத்தமான பெயர் என்று சொன்னதன் காரணம், பார்ப்பனரல்லாதார் _ சூத்திரர் _ திராவிடர் என்ற சொல்லுக்குள் பார்ப்பனர் நுழைய முடியாது என்பதால் தான்.

மற்றபடி அதற்கு வடுகர், பார்ப்பனர் என்று தமிழ்த்தேசியர்கள் சொல்வது அவர்களது அறிவுப் பலவீனத்தின் கனமான கற்பனையே தவிர வேறல்ல.

திராவிடர் கழகத்தின் கொள்கையை எதிர்க்க முடியாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் குறை கண்டுபிடிக்க முடியாத நிலையில் தனது கையறு நிலையில் கனைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதைப் பற்றிக் கவலை இல்லை. இவை காலம் காலமாகப் பார்த்த கனைப்புகள்தாம்!ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *