மஞ்சை வசந்தன்
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் அசல் கொள்கை வாரிசான தமிழ்நாடு முதலமைச்சர் மானமும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் 14.8.2021 அன்று சாதித்தது ஒரு வரலாற்றுச் சாதனை.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆணை பிறப்பித்த அந்த நாள், வரலாற்றில் நிலைத்து நின்று பேசப்படப் போகும் நாள். இச்சாதனை 2021இல் நிகழ்த்தப்பட்டாலும் இதன் முதல் முயற்சி தந்தை பெரியாரால் தொடங்கப்பட்டு, கலைஞரால் முன்னெடுக்கப்பட்டு, பல்வேறு போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகளைக் கடந்து சாதிக்கப்பட்ட ஒன்றாகும்.
பெரியாரின் முதன்மைச் செயல் திட்டம் ஜாதி ஒழிப்பு. அதை ஒழிக்கப் பல்வேறு செயல் திட்டங்களை உருவாக்கி, அவற்றைச் செயல்படுத்தி சாதித்தார். இடஒதுக்கீடு, ஜாதி மறுப்பு மணம், தெருக்களில், கோயில்களுக்குள் செல்லும் உரிமை போன்றவைஅவற்றுள் முதன்மையானவை.
இறுதியில் ஜாதி அடைக்கலம் புகுந்தது கோயில் கருவறையில். அங்கிருந்தும் அதை அப்புறப்படுத்த அவர் பெரிதும் முயன்றார். அவர் இறக்கும் வரை அது நிறைவேறவில்லை. அனைத்து ஜாதியினரும் கருவறையுள் நுழைய முடியாத ஏக்கம் அவர் நெஞ்சில் தைத்த முள்ளாக அவரை உறுத்தியது. அந்த முள்தான் தற்போது முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் அகற்றப்பட்டுள்ளது. அந்த முள் அகற்றப்பட்ட வரலாற்றைச் சற்றே பின்னோக்குவோம்.
அனைத்து ஜாதியினர் அர்ச்சகரான வரலாறு
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டுமென்று 1937ஆம் ஆண்டிலேயே கீழ்க்கண்டவாறு போர்க்குரல் கொடுத்தார் தந்தை பெரியார்:
“இன்று கனம் டாக்டர் ராஜன் அய்யங்கார் தேவஸ்தான இலாகா மந்திரியாயிருக்கிறார். அவர் ஆதீனத்தில்தான் இந்நாட்டுக் கோவில்களின் தலையெழுத்து பூராவும் இருக்கின்றன. சட்டசபையும் கனம் டாக்டர் ராஜன் காலாட்டினால் மற்றவர்கள் தலையை ஆட்டும்படியான மெஜாரிட்டியாய் இருக்கிறது. சர்க்காரோ _ காங்கிரசே சர்க்கார் _- சர்க்காரே காங்கிரஸ் என்று கனம் ராஜனே சொல்லிக் கொள்ளும்படியான நிலைமையில் இருக்கிறது. இந்நிலையில் இந்த கோவில்களுக்கெல்லாம் பார்ப்பானே மணி அடிக்க வேண்டும். பார்ப்பானே சோறு பொங்க வேண்டும். பார்ப்பானே வேதம் ஓத வேண்டும் என்பவை ஆன பார்ப்பானே செய்ய வேண்டும் என்கின்ற காரியங்களை மாற்றி, வகுப்புவாதம் புரிகின்ற ஜஸ்டிஸ் கட்சியார் உள்பட தனித் தொகுதி கேட்பதும் இந்து மதத்தை விட்டுப் போவதும், ஆபத்து என்று கூறி தடுக்கப்படும் ஷெட்யூல் வகுப்பார் வரை உள்ள எல்லா இந்துக்களும் செய்யலாம் என்று ஒரு சட்டமோ உத்தரவோ செய்து வகுப்புவாத ஆதிக்கத்தை ஒழிப்பாரா? என்று வணக்கமாய் கேட்கின்றோம்.
இதாவது நாளைக்குச் செய்யட்டும். இன்றைக்கு எல்லா இந்துக்களும் வகுப்பு _ ஜாதி என்கின்ற வித்தியாச முறை இல்லாமல் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும், சர்வதயாபரமும் உள்ளவரான பகவானைத் தரிசிக்க சர்வ சுதந்திரமாய் அனுமதிக்கப்படும் என்று உத்தரவு போடட்டுமே என்றுதான் கேட்கிறோம். “
(‘குடிஅரசு’ – தலையங்கம் – 08.08.1937)
இவ்வாறு அனைத்து ஜாதியினரும் கோயில் கருவறைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று கூறிவந்த தந்தை பெரியார், 1970ஆம் ஆண்டு ‘குடியரசு’ தினத்தன்று இதற்காக கிளர்ச்சி ஒன்றை அறிவித்தார்.
இந்த அறிவிப்பையடுத்து, அப்போதைய தமிழ்நாட்டு முதல்வர் கலைஞர், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும், பெரியார் தன் போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதன்படி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
எல்லோரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் இந்தச் சட்டம், ஏற்கனவே இருந்த இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை சட்டத்தின் பிரிவு 55, 56, 116 ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்த சட்டம்தான். இதற்கான மசோதா 2.12.1970 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதன் முக்கியக் கூறு, இந்துக் கோயில்களின் எல்லா பகுதிகளின் நியமனத்திலும் பாரம்பரிய (வாரிசு அடிப்படையில் நியமனம்) கொள்கையை நீக்குவது (பிரிவு 55இல் செய்யப்பட்ட திருத்தம்).
இந்தச் சட்டத்தை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்தில் எஸ்.எம்.சிக்ரி, ஏ.என்.குரோவர், ஏ.என்.ரே, டி.ஜி.பாலேகர், எம்.எச்.பெக் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து 1972 மார்ச் 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கினர்.
ஒரு கோயிலில் அர்ச்சகரை நியமனம் செய்யும்போது, ஆகமங்களை மீறி அறங்காவலர் நியமனங்களை மேற்கொள்ள மாட்டார் என்று அரசு கூறியதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குறிப்பிட்ட இனம், உட்பிரிவு, குழுவிலிருந்தே அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியது. ஆனாலும் மனுதாரரின் அச்சத்திற்கு இப்போது அவசியமில்லை என்று கூறி சேஷம்மாளின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
சட்டத்தை எதிர்த்தவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தோன்றினாலும் ஆகமத்திற்கு உட்பட்டே நியமனங்களைச் செய்ய வேண்டும் என்பதை இந்த உத்தரவு வலியுறுத்தியது.
இந்த நீதிமன்ற உத்தரவை பெரியார் கடுமையாக விமர்சித்தார். 1973 டிசம்பர் 8 _ 9இல் பெரியார் திடலில் நடந்த தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் பேசிய பெரியார், ‘நண்பர் கருணாநிதி கொண்டுவந்த சட்டத்தை நீதிமன்றம் செல்லாது என்று ஆக்கியதால் ஆத்திரம் அதிகமாகிவிட்டதாகக்’ குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் அரசியல் சாசனப் பிரிவு 25அய்ப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கு வதற்கு ஏதுவாக அந்தப் பிரிவை நீக்க வேண்டுமென கலைஞர் ஒன்றிய அரசை வலியுறுத்த ஆரம்பித்தார். பிரதமருக்கு கடிதங்களை எழுதினார். ஆனால், பிரிவு திருத்தப்பட வில்லை.
எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பிறகு 1982இல் நீதியரசர் மகாராஜன் தலைமையில் கோயில் வழக்கங்களில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவும் அனைத்து ஜாதியினரும் உரிய பயிற்சிக்குப் பிறகு அர்ச்சகராக நியமிக்கப்படலாம் என்று கூறியது.
ஆனால், அதற்கு முன்பாக அரசியல் சாசன சட்டப்பிரிவு 25(2)இல் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கூறியது. இதற்குப் பிறகு பல ஆண்டுகள் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
அய்யாவின் மறைவுக்குப் பின், திராவிடர் கழகம் அன்னை மணியம்மையார் தலைமையில் மீண்டும் போராட்டம் தொடங்கியது. 1974 ஏப்ரல் 3 அன்று அஞ்சலகங்கள் முன் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு வரும் ஒன்றிய அமைச்சர்களுக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் 2002இல் ஆதித்யன் Vs கேரள அரசு என்கிற வழக்கில் தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதின்றம், ‘ஆகமங்கள், மதப் பழக்க வழக்கங்கள் போன்றவை ‘எல்லோரும் சமம்’ என்ற இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக இருந்தால், அவை சட்ட ரீதியாக செல்லாது’ என்று கூறி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியும் என்று தீர்ப்பளித்தது.
2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முழுதும் நடந்த அறப்போரில் 10,000 தோழர்கள் கைதாயினர். தொடர்ந்து, அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் கொண்டு வருமாறு தி.மு.க. அரசை திராவிடர் கழகம் வலியுறுத்தியது.
இதற்குப் பிறகு, 2006ஆம் ஆண்டில், மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க., அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான அரசாணையை வெளியிட்டது. இதற்கான சட்டமும் இயற்றப்பட்டது.
அந்த அரசாணையின் அடிப்படையில், நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத் திட்டம், பயிற்சிக் காலம், கோயில்களில் நடைபெறும் பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பரிந்துரைகளை அளித்தது.
இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை பார்த்தசாரதி கோயில், திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்-களுக்கான பயிற்சிப் பள்ளிகளும்; மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் உருவாக்கப்பட்டன.
இந்தப் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக அரசு விளம்பரம் வெளியிட்டு, நேர்காணல் செய்தபோது ஒவ்வொரு நாளும் நேர்காணலுக்கு 300 பேருக்கு மேல் வந்தனர். இவர்களில் இருந்து ஒவ்வொரு மய்யத்திற்கும் 40 பேர் வீதம் ஆறு மய்யங்களுக்குமாக சேர்த்து 240 பேர் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் 33 பேர் பயிற்சிக் காலத்தில் விலகிவிட, 207 பேர் முழுமையாகப் பயிற்சியை முடித்தார்கள். இந்த 240 பேரில் எல்லா ஜாதியினரும் இடம் பெற்றிருந்தனர்.
2011இல் புதிதாகப் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதற்குப் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. “தமிழகக் கோயில்களில் ஆகமவிதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும், ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும்’’ உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெரிவித்தது.
தமிழ்நாடு அரசும் இது தொடர்பாக தன்னுடைய நிலைப்பாடு எதையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டில் மதுரையில் அழகர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய அய்யப்பன் கோவிலில் மாரிமுத்து என்ற பயிற்சிபெற்ற மாணவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். ஆனால், இது தொடர்பான அறிவிப்பு எதையும் இந்து சமய அறநிலையத் துறை வெளியிடவில்லை.
இதற்குப் பிறகு 2020ஆம் ஆண்டில் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோயில் ஒன்றில் தியாகராஜன் என்ற பயிற்சி பெற்ற மாணவர் நியமிக்கப்பட்டார்.
2008ஆம் ஆண்டு தீட்சை பெற்ற பிறகு, அரசு அர்ச்சகர் பணிவாய்ப்பு எதையும் வழங்காத நிலையில், சிறிய தனியார் கோயில்களில் பணியாற்றுவது, வேறு வேலைகளைச் செய்வது என்றே இந்த பயிற்சி மாணவர்கள் வாழ்க்கையைக் கழித்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 35 வயதை எட்டிவிட்டனர்.
இந்த நிலையில், தி.மு.க. அரசு பதவியேற்றபிறகு அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் பி.கே.சேகர்பாபு, ‘பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் 100 நாள்களுக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்’ என்று சொல்லியிருந்தார். அதன்படி தி.மு.க. அரசு பதவியேற்ற நூறாவது நாள் அன்று இவர்களுக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டிருக்கின்றன!
பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த 28 பேர் தமிழ் நாட்டில் உள்ள வெவ்வேறு திருக்கோயில்களில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 24 பேர் அர்ச்சகர்களாகவும், 4 பேர் மடப் பள்ளியிலும் பணிகளைப் பெற்றனர். அர்ச்சகராகப் பணி நியமனம் செய்யப்-பட்டுள்ள 24 பேரில் 5 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்!
இதுதவிர, ஓதுவார், வாத்தியங்களை இசைப்போர் உள்பட திருக்கோயில் பணிகளுக்குத் தேவைப்படும் பல்வேறு பணியிடங்களுக்கான நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 14 அன்று வழங்கியிருக்கிறார். ஓதுவார்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
“14.8.2021 அன்று காலை ஒரு பொற்கால ஆட்சியின் புதியதோர் புரட்சி பூபாள இசை எம் காதுகளில் தேனிசையாகப் பாய்ந்து பரவசப்படுத்துகிறது!
கோவில் கருவறைக்குள் பதுங்கிய ஜாதி _ தீண்டாமைப் பாம்பு!
உழைப்பின் மறு உருவமாம் ‘மானமிகு சுயமரியாதைக்காரரான’ எமது மூத்த சகோதரர் மதிப்புமிகு கலைஞர் _ தமது ஆசானான அறிவுத் தந்தையின் அன்புக் கட்டளையாக, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி, அதன்மூலம் கருவறைக்குள் ஒளிந்துகொண்ட ஜாதி _ தீண்டாமைப் பாம்பை அடித்து விரட்ட முயன்றபோது, அதை ஆட்சியின் சட்டங்கள் மூலமே சாதித்துக் காட்டி சரித்திரம் படைப்போம் என்றார்.
அரை நூற்றாண்டுகால நீதிமன்ற _ வீதிமன்ற அறப்போர்கள் தொடர்ந்தன. இன்று வெற்றிக்கனி பறித்துள்ளோம்!
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்!
தந்தை பெரியாரின் உடலுக்கு அரசு மரியாதை செய்த துணிச்சல்கார முதலமைச்சர் கலைஞர், அதன் பிறகு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தத் தவறவில்லை.
‘‘தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை கொடுத்த எங்கள் அரசு, அவருடைய ‘‘நெஞ்சில் தைத்த முள்ளை’’ அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தைச் செயலாக்கப்படுத்தி _ அகற்ற முடியவில்லையே என்பதே எனது அந்த ஆதங்கம் _ மனவருத்தம்’’ என்றார்.
கடந்த 99 நாள்களுக்குமுன் கலைஞரின் கொள்கை வாரிசு, செயல்மிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தந்தையின் ஆதங்கத்தைப் போக்கிய தனயனாக _ திராவிடர் ஆட்சி முதலமைச்சராக அமர்ந்து முள்ளை அகற்றி, ஜாதி ஒழிப்பு _ தீண்டாமை அழிப்பு வரலாற்றில் ஒரு புதிய பொன்-னேட்டை இணைத்துள்ளார்.
மயிலை கபாலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் 58 பேருக்கு (அனைத்து ஜாதியினருக்கும்) அர்ச்சகர் நியமனம் ஆணை அளிப்பு!
அதுவும் முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி செயத்தக்க வகையில் சிறப்புடன் செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முத்தாய்ப்பாய் 14.8.2021 அன்று மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் மண்டபத்தில் அனைத்து ஜாதியினர் பயிற்சி பெற்றவர்களில் ஒரு பகுதியினருக்கு (58 பேருக்கு) நியமன ஆணைகளை வழங்கி, துளி ரத்தம்கூட சிந்தாத அமைதிப் புரட்சியாக _ அறிவுப் புரட்சியாக அகிலம் பாராட்டும் வண்ணம் ஒரு சமூகப் புரட்சியை, தக்க சான்றோர்கள், ஆதீனங்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அனைவர் முன்னிலையிலும் சாதித்துக் காட்டியுள்ளார். பாராட்ட வார்த்தைகளே இல்லை!
முதலமைச்சரின் ‘பேசாது செய்த புரட்சி’ விழாவை மேலும் பெருமைக்குரியதாக்கியது!
சட்டத்தைச் செயலாக்கிய சாதனை!
அன்று தந்தை பெரியார் விரும்பினார்; தனயன் (கலைஞர்) ஆட்சியில் சட்டங்கள் செய்தார் _ சலிக்காமல். இன்று தனது தந்தை விட்டுச் சென்ற பணியை தனயன் (முதலமைச்சர்) முடித்து வைத்தார்.
அறிஞர் அண்ணா, ‘‘பெரியாருக்கு ஆட்சியைக் காணிக்கையாக்கினார்’’ _ கலைஞர் அவர் விரும்பிய சட்டம் செய்தார் _ கலைஞரின் தனயன் முதலமைச்சராகி சட்டத்தினைச் செயலாக்கி சாதனைச் சரித்திரம் படைத்திருக்கிறார்.
இது ஆட்சி மட்டுமல்ல _ மீட்சியும் அல்லவா!’’ என அறிக்கையில் குறிப்பிட்டார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து
தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100ஆவது நாளில் அனைத்து ஜாதியினரும், இந்து மத ஆலயங்களில் அர்ச்சகராக நியமனம் செய்யும் ஆணையை தமிழ்நாட்டு மக்களுக்கு சமத்துவப் பரிசாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். பெரியார் மறைந்தபோது, “இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரவில்லையே என்ற கவலை அவரின் நெஞ்சில் முள்ளாய்க் குத்தியது. அந்த முள்ளோடுதான் பெரியாரைப் புதைத்திருக்கிறோம்’’ என்று கண்ணீர்மல்க கருணாநிதி குறிப்பிட்டார். அந்த முள்ளை அகற்றும் அரும்பெரும் சாதனையைத்தான் இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்றுச் சாதனையாக நிகழ்த்திக் காட்டி இருக்கிறார். முதல்-அமைச்சருக்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும், அதிகாரிகள் முதலான அனைவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சொல்வது சமூகநீதி: கே.எஸ்.அழகிரி
இறைவனை பிரார்த்திக்க வேண்டிய இடத்தில் ஒரு சிலர் உள்ளே செல்ல முடியாது என்பது மிகப் பெரிய அநீதி. சிதம்பரம் நடராஜர் கோயிலே அதற்குச் சான்று. இன்றைக்கு நந்தனாரை நாம் வணங்குகிறோம். ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நந்தனாருடைய நிலைமை என்ன? அவரால் உள்ளே நுழைய முடியவில்லை. எனவே, இந்தச் சமூக சீர்திருத்தம் வேண்டும் என்பதற்காகத்தான், அதற்கான கல்வி கற்று, வேதங்களைக் கற்று, அதற்கான பயிற்சி அளித்து, அதன்பிறகு அவர்களை அர்ச்சகர்களாக இந்த அரசு நியமித்திருக்கிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
குன்றக்குடி அடிகளார் :
கடவுளும் ஏற்றுக்கொள்ளும் வகையில், கலைஞரைப் போல் செயல்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டுமென்பது அப்பர் பெருமான் மற்றும் ராமானுஜரின் எண்ணம் என குன்றக்குடி அடிகளார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கே.பாலகிருஷ்ணன் :
“தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும் என்பதற்கு வழிவகுக்கும் முறையில் அர்ச்சகர் பயிற்சி முடித்த பட்டியல் பிரிவு 5 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 6 பேர், பிற்படுத்தப்பட்டோர் 12 பேர், பொதுப் பிரிவைச் சேர்ந்தவர் ஒருவர், பெண் ஓதுவார் ஒருவர் என 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு பாராட்டி வரவேற்கிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்
2006ஆம் ஆண்டு கருணாநிதியின் முயற்சியால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின்படி அடுத்த 100 நாள்களில் பணி நியமனம் வழங்கப்படும் என அறநிலையத்துறை கூறியபடி, அரசு நிறைவேற்றியதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமாவளவன் :
“’அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர். ஆயிரங்காலத்துக் கனவு நனவாகியது. இது வேலை வாய்ப்புக்கானது அல்லது கடவுளுக்குத் தொண்டு செய்வது என்பதைவிட, மனிதரில் உயர்வு- _ தாழ்வு எனும் கற்பிதத்தின் மீது _- சனாதனக் கருத்தியல் மேலாதிக்கத்தின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள அறவழித் தாக்குதல். இதுவே_சமூகநீதி’’ என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாக்டர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாம் பெற்ற சமூகநீதிகள் ஒவ்வொன்றும் எளிதில் கிடைத்தவையல்ல. இடஒதுக்கீட்டுக்கு எத்தனை எத்தனை தடைகள், இன்றும் அதைத் தகர்ப்பதற்கான முயற்சிகள்; சுயமரியாதைத் திருமணச் சட்டத்திற்கு எத்தனை தடைகள், எத்தனை வழக்குகள்; பெண்ணுரிமைக்கு எண்ணிடலங்காப் போராட்டங்கள், பரப்புரைகள்.
கல்வியுரிமை பெற நாம் கண்ட களங்கள் கொஞ்சமா?- இருபத்தி ஓராம் நூற்றாண்டில்கூட உண்ணும் உரிமை, உடுத்தும் உரிமை, பேசும் மொழி உரிமை இவற்றுக்குப் போராடக்கூடிய அவலம்; அநீதி!
இன்றைக்கு ‘நீட்’ போன்ற, வேளாண் சட்டம் போன்ற சமூக நீதிக்கு எதிரான தாக்குதல்கள். அவற்றிற்கு எதிரான அயராப் போராட்டங்கள்!
ஒவ்வொருவருக்கும் முறைப்படி கிடைக்க வேண்டிய உரிமைப்படியான வாய்ப்புகளைப் பெறவே போராட வேண்டிய கொடும் நிலைக்கு இவையெல்லாம் அடையாளங்கள்.
என்றாலும், தந்தை பெரியார் கொளுத்திச் சென்ற நெருப்பு இன்றும் நமக்கு ஒளியூட்டி, வழிகாட்டி, உணர்வூட்டி, நம்மை எழுச்சி கொள்ளச் செய்து அதன்வழி இந்திய மக்கள் அனைவருக்குமே உரிய உரிமைகள் கிடைக்கச் செய்கிறது. அப்படிப் பெறப்பட்டதுதான் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கிய அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகும் உரிமை. எதிர்காலத்தில் இது இந்தியா எங்கும் நடைமுறைக்கு வரும். மனித உரிமை மீட்டெடுக்கப்படும். ஜாதியின் வேர் களையப் படும். இது உறுதி!