ஒன்றியமென் றுரைத்ததுமே இமய உச்சி
உறைந்தாராய் ஆர்ப்பரித்தே குதிக்கின் றார்கள்;
பன்னரிய குற்றமிதாம்; காவிக் கூட்டம்
பதைக்கிறது; நகைக்கிறது அறிஞர் கூட்டம்
ஒன்றினையே நன்கறிவர்; ஏழாண் டாக
உருப்படியாய் இங்கெதுவும் நடக்க வில்லை !
இன்றைக்கு நம்நாட்டின் நடப்பை நன்றாய்
எல்லாரும் எளிதாக விளங்கிக் கொள்வர்!
ஊடகங்கள் குரல்வளையை நெறித்தார்; நாளும்
உண்மைக்குப் புறம்பாக உளறு கின்றார்!
நாடகங்கள் மெய்யென்றே நம்பு வோரும்
நஞ்சனையார் செய்கின்ற கூத்து யாவும்
பீடன்று; பெருமையுமே நல்கா என்பார்;
பேதைமையின் வயப்பட்டோர் உணர மாட்டார்;
சூடான அரசியலில் நேர்மை இன்றிச்
சூதாட்டத் தீங்குகளில் இறங்கி விட்டார்!
எரிபொருளின் விலை இந்நாள் நூறைத் தாண்டி
எங்கேயோ பறக்கிறது; மக்கள் நெஞ்சம்
எரிமலையாய்க் குமுறுவதை அறியார் போலும்;
இடஒதுக்கீ டெல்லாமே பறிக்க லானார்!
அரியேறாம் தமிழ்நாட்டின் முதல்வர் தம்மின்
அருவினைகள் ஆற்றலினைப் பொறுக்கா ராகிப்
பிரித்தாளும் சூழ்ச்சியிலே கனவு கண்டு
பிதற்றுவதை வழக்கமெனக் கொண்டு விட்டார்!
மறுபடியும் வென்றிங்கே ஆளும் எண்ணம்
மனத்தினிலே சுமந்தவர்கள் மண்ணைக் கவ்விக்
கிறுக்கரெனப் பிதற்றுவதைக் கேளார் நல்லோர்!
கிழக்கினையே மேற்கென்பார் நோக்கில் என்றும்
வெறுப்பான அரசியலை முன்னெடுப்போர்
வேகாத சோறனையர்; பயன்கள் நல்கார்;
வருகின்ற நாடாளு மன்றத் தேர்தல்
வரலாற்றைப் பதியமிடும்; புகட்டும் பாடம்!