கட்டை வண்டி ஏறுகிறவன் இரயிலை வெறுப்பான். பின் இரயிலின் அவசியத்தை உணர்ந்து இரயிலில் ஏறிப் பயணம் செய்வான். நெய் விளக்கைத் தவிர வேறு எந்த விளக்கும் கூடாது, மண்ணெண்ணெய் கூடாது என்று கூறியவர்கள் கூட இன்று மின்சார விளக்குகளைப் பொருத்தி இருக்கிறார்கள். அனுபவத்தைப் பெறுவதும், மற்றவர்கள் செய்வதை _ -சொல்வதைப் பற்றி சிந்திக்கும் சக்தி பெற்றிருப்பதும் மனித இனம். எனவே, மனித இனம் வாழ்வில் வளர்ச்சியடைந்து வருகிறது” என்றார் தந்தை பெரியார். “மாறுதல் என்ற வார்த்தையைத் தவிர மற்ற எல்லாம் மாறும்“ என்றார் தோழர் காரல் மார்க்ஸ். அறிவியல் முன்னேற்றத்தால் ஏற்படும் பலவித மாற்றங்களை நம்மைப் போன்றோர், நினைத்து நினைத்து மகிழும்வண்ணம் பல்வேறு நிகழ்வுகள் உலகில் நடக்கின்றன.
கட்டை வண்டியை மட்டுமே பயணத்திற்கு நம்பிய மனிதன் இன்றைக்கு விமானத்தில் பறக்கிறான். காலையில் ஒரு நாடு, மாலையில் ஒரு நாடு என்பதெல்லாம் இன்று மிக இயல்பாக நடக்கும் பயணங்கள். ஆகாய விமானத்தால் நமக்கு கிடைத்த பயன் இது. ஒரு மனிதன் முதன் முதலில் விமானத்தில் செல்லும் பயண அனுபவம் தனித்தன்மையானது. நிறைய விமானப் பயணங்கள் செல்பவர்கள் கூடத் தங்கள் முதல் விமானப் பயண அனுபவத்தை, ஒருவித மகிழ்ச்சியோடு மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதைப் பார்க்க முடியும். ஒரு நாட்டில் பிறந்த மனிதன், இன்னொரு நாட்டுக்குச் செல்வதும், அங்கேயே சில ஆண்டுகளில் குடியுரிமை பெற்று வாழ்வதுமாக மானுட வாழ்க்கை என்பது பயண வளர்ச்சியால் மகத்துவம் பெற்றிருக்கிறது.
மனிதர்களின் அடுத்த கட்டப் பயணப் பாய்ச்சல் நிகழ்ந்திருக்கிறது. விமானத்தில் பறந்து அடுத்த நாடுகளுக்குச் செல்வதுபோல, மனிதன் ராக்கெட்டில் விண்வெளிப் பயணம் செல்வதற்கான முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. இதுவரை ராக்கெட்டில் மனிதர்கள் செல்லவில்லையா என்றால், சென்றார்கள், சரி. இப்போது என்ன வேறுபாடு என்று கேட்டால், இதுவரை சென்றவர்கள் எல்லாம் விண்வெளியில் ஆராய்ச்சி செய்ய அறிவியல் அறிஞர்களால், நாடுகளால் அனுப்பப்பட்டவர்கள். இப்போது சென்றவர்கள், ராக்கெட்டில் உல்லாசப் பயணம் போல, சுற்றிப் பார்க்கப் போனவர்கள். இராக்கெட்டில் சென்றார்கள், பார்த்தார்கள், திரும்பினார்கள், எவ்வளவு நேரப் பயணம், 10 நிமிடங்கள், 10 நொடிகள். இந்த 10 நிமிடங்கள், பத்து நொடிப் பயணம் என்பது ஜூலை 20, 2021ஆம் நாளை வரலாற்றில் மகத்தான நாளாக மாற்றியிருக்கிறது.
இந்த ராக்கெட்டில் விண்வெளிப் பயணம் செய்தவர்கள் 4 பேர். அதில் ஒருவர் உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ். இவர் பயணம் மேற்கொண்ட ராக்கெட்டின் பெயர் நியூ ஷெப்பர்ட். 10 – 11 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜெஃப் பெசோஸும் அவருடன் பயணம் சென்ற மேலும் மூவரும் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். இந்தப் பயணத்தில் ஒரு வயதானவர் கலந்திருக்கின்றார்; பறந்திருக்கின்றார்; பத்திரமாக பூமிக்குத் திரும்பியிருக்கிறார். அவர் பெயர் வேலி ஃபங்க். அவருக்கு வயது வெறும் 82தான். 60 வயதிலேயே வயது அதிகமாகிவிட்டது என்று மனதளவில் முடங்கிக் கொள்ளும் மனிதர்கள் கவனிக்க வேண்டியவர் வேலி ஃபங்க். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்னால்,1960களில் விண்வெளிப் பயணத்திற்கான பயிற்சியை எடுத்திருக்கிறார். 20 வயதில் பயிற்சி எடுத்த அவர் 80 வயதில் பறந்து ,திரும்பியிருக்கிறார். அதிலும் வேலி ஃபங்க் ஒரு பெண். 18 வயது ஆலிவர் டேமன் என்பவரும், ஜெஃப் பெசோஸின் சகோதரர் மார்க் பெசோஸும் இந்த விண்வெளிப் பயணத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.
இந்த விண்வெளிப் பயணம் பற்றி விரிவான செய்திகளை பி.பி.சி. தமிழ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. தனது செய்தியில் மிகப் பெரிய ஜன்னல்களுடன் கூடிய விண்கலன் பூமியில் இருந்து விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்தது. அதில் இருந்தபடி பூமியின் கண்கொள்ளாக் காட்சியை அனுபவித்த இந்தக் குழுவினர் பின்னர் பூமிக்குத் திரும்பினர். நியூ ஷெப்பர்ட் ராக்கெட், பெசோஸின் சொந்த நிறுவனமான ப்ளூ ஆரிஜின் என்பதன் தயாரிப்பாகும். எதிர்கால விண்வெளிச் சுற்றுலாவை நோக்கமாகக் கொண்டு இந்த விண்கலன் மற்றும் மறு பயன்பாட்டுக்கு உகந்த ராக்கெட் (உந்துபொறி) வடிவமைக்கப் பட்டுள்ளன.
டெக்சாஸின் வான் ஹார்னுக்கு அருகே உள்ள தனியார் ராக்கெட் ஏவுதளத்தில் பிரிட்டன் நேரப்படி பிற்பகல் 2 மணி 12 நிமிடங்களுக்கு இவர்களின் விண்கலனைச் சுமந்தவாறு ராக்கெட் விண்ணை நோக்கிப் புறப்பட்டது. இந்த விண்கலன் வெற்றிகரமாக பூமியில் தரையிறங்கியதும், “ஆஸ்ட்ரனாட் பெசோஸ், “இதுவரை இல்லாத மிகச் சிறந்த தினம் இது’’ என்று அழைத்து பெருமிதப் பட்டுக் கொண்டார் என்று குறிப்பிட்டு மிகச் சிறப்பாக பி.பி.சி. செய்தி வெளியிட்டிருக்கிறது. யாரோ நாலு பேர், விண்வெளிக்குச் சென்று வந்த பயணம் என்று நாம் நினைக்கவில்லை. மனிதர்கள் பெறப் போகும் மகத்தான அனுபவத்தின் தொடக்கம் இந்தப் பயணம் என்று கருதுகிறோம். கிராமத்திற்குச் சென்றதும், பழைய நண்பர்களைப் பார்த்தவுடன், “வாடா, கொஞ்ச நேரம் காலார நடந்து வருவோம்“ என்று அழைத்து நடந்து கொண்டே பேசி மகிழ்வதைப் போல, மனிதர்கள் எதிர்காலத்தில், நாம் வசிக்கும் பூமியை விண்வெளியில் இருந்து பார்க்கும் அனுபவத்திற்காக, ராக்கெட்டில் பறக்கும் அனுபவத்தைப் பெறுவதற்காக, உளம் மகிழும் ஓர் உல்லாசப் பயணமாக இந்த விண்வெளி ராக்கெட் பறக்கும் அனுபவம் அமையக் கூடும்.
பூமியிலிருந்து விண்ணைப் பார்ப்பது ஒருவகை. விண்ணிலிருந்து பூமியைப் பார்ப்பது… எப்படிப்பட்ட அனுபவம்! “கண்ணாடி வில்லைகளையும், ஆடிகளையும் கொண்ட ஒளியியல் தொலை நோக்கிகளைப் பயன்படுத்தி, விண்மீன்களிடமிருந்து வரும் அலைமாலையின் கட்புலனாகும் குறுகிய பட்டையின் வாயிலாக வரும் ஒளிக் கதிர்களைக் கொண்டே, விண்ணை ஆய்ந்து வந்தோம். இப்பொழுது வேறுவகையான தொலைநோக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைக் கொண்டு -கதிர்கள் அல்லது குறையாற்றல் மின்காந்த அலைகளின் ஊடாகக் காண இயலும்; அப்படிக் காணும்பொழுது இரவு வானத்தின் மாற்று எழில் கோலம் ஒன்றைப் பார்க்க முடிகிறது. (கு.வெ.கி.ஆசான் _ ரிச்சர்டு டாக்கின்ஸின் “கடவுள் ஒரு பொய் நம்பிக்கை” புத்தகத்தில்). புதிய தொலைநோக்கிகள் கண்டுபிடிப்பே, நமக்குப் புரியாத பல புதிர்களைப் புரிய வைக்கிறது என்று அந்த நூலில் ரிச்சர்டு டாக்கின்ஸ் விவரிப்பதைப் பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட புதிய தொலை நோக்கிகளோடு விண்ணிலிருந்து, பூமியைப் பார்ப்பது எவ்வளவு புதிய செய்திகளை அறிவியல் அடிப்படையில் தரும் புது அனுபவம் என்பது மட்டுமல்ல, புதிய கோணத்தில் பூமியைப் பார்க்கவும், ஆராயவும், அறிந்து கொள்ளவும் இந்த விண்வெளிப் பயணங்கள் உதவும்.
பயணங்கள் எப்போதும் மனிதர்களைப் பண்படுத்துகின்றன. பரந்த மனப்பான்மையை ஏற்படுத்துகின்றன. கிணற்றுத் தவளையாய் ஒரு கிராமத்தில் அமர்ந்து, ஜாதி, மதப் பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கும் மனிதன் உலகம் முழுவதும் சுற்றி வரும் வாய்ப்புக் கிடைக்கும்போது, மனிதர்களைப் பிரித்து வைக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளே ஜாதி, மதங்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு பெண்ணுக்கு உலகம் முழுவதும் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போது அவர், அவரளவில் உயர்வு அடைவது மட்டுமல்ல, அவரைப் போன்ற பெண்கள் மதங்களின் அடிப்படையில் பயணம் செய்வதற்காக விதிக்கப்பட்ட தடைகள் எல்லாம் நொறுங்குகின்றன. பயணம் பல பழமைகளை உடைத்து, புதுமைகளை உண்டாக்குகிறது.
‘அறிவியல் தொழில் நுட்பம் வேகமாக வளரும் இந்நாள்களில் சராசரி ஆயுளும் முன்பைவிட இரண்டு மூன்று மடங்கு கூடுதலாகவே பெருகியுள்ளது. அதுபோலவே புதுப்புது வகை தொற்று நோய்களும் ஒரு நாட்டிலிருந்து கிளம்பி, மற்ற நாடுகளுக்குப் பரவி, எளிதில் படையெடுப்பை வெற்றிகரமாக ஆக்கி மருத்துவ உலகுக்கே சவால் விடுகிறது. முன்பு காற்று, நீர், நிலவெளி எல்லாம் தூய்மையாக இருந்தன. சுற்றுச்சூழல் மாசுபடவில்லை; இன்றோ வெப்பச் சலனம் ஒரு பக்கம்; காடுகளை அழித்த மனிதர்களின் கொடுஞ்செயல் ஒரு பக்கம்! இவற்றால் புதிய நோய்களும் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன (வாழ்வியல் சிந்தனைகள்-கட்டுரை 1073) என்பார் ஆசிரியர் கி.வீரமணி. அறிவியல் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி, விண்வெளிப் பயணம் எதுவாக இருந்தாலும் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு நன்மை விளைவிப்பதாக அமைய வேண்டும். உலகில் ஒரு பக்கம் அடுத்த வேளை உணவுக்காக பசித்து, காத்திருந்து ஏங்கியே சாகும் மக்கள்; உல்லாசத்தில் திளைக்கும் மக்கள் இன்னொரு பக்கம் என்று இரு வேறு உலகமாக இன்று நாம் வாழும் உலகம் இருக்கிறது. பூமியை விட்டு விலகி, மேலே விண்வெளிக்குச் சென்று பூமியைப் பார்க்கும் மனிதர்கள் வெறும் அழகியல் நோக்கில் மட்டும் பூமியைப் பார்க்காது ,அனைத்து மக்களின் வாழ்க்கை மேம்பாட்டு நோக்கிலும் பார்க்கும் பயனுள்ள பயணங்களாக இந்த விண்வெளிப் பயணங்கள் அமையட்டும்.