“பெண்கள் அர்ச்சகராகிறதுல எனக்கொன்றும் ஆட்சேபணையில்ல… ஆனா அந்த மூனு நாள் தீட்டாயிடுமே’’ எனக் கேட்ட பால்ய நண்பனிடம்…
“அந்த மூனு நாளோட 2 நாள் சேத்து 5 நாள் அவங்களுக்கு லீவு குடுத்திடலாம். ரொட்டேசன்ல வேறொரு அர்ச்சகியை பூஜை பண்ண வைக்கலாம்’’ என்றேன்!
சரிடா ஒத்துக்கிறேன்…
இதெல்லாம் சொல்லிண்டு வர்றதில்லையே! திடுதிப்னு வந்துண்டா என்ன பண்றது? என்றவனிடம்…
கோவிலுக்கு வருபவர்கள் யாருக்கும் வந்ததில்லையா?
கோவிலுக்குள் பூப்பெய்திய பெண் இவ்வுலகத்தில் எவருமில்லையா? என்றேன்!
தெரியாமல் வருவது வேறு; தெரிந்தே செய்வது தவறு என மேலும் தொடர்ந்தவனிடம்…
எது தவறு?
பாலும், நெய்யும் பசுவின் உதிரமில்லையா?
பஞ்சாமிர்த பழரசம் தாவரத்தின் ரத்தமில்லையா?
தேனென்பது பூக்களின் குருதியில்லையா?
அதிலெல்லாம் அபிசேகம் செய்யவில்லையா? என்றேன்!
நீ நாத்திகம் பேசுகிறாய் என்றான்!
இல்லை; அறிவியல் பேசுகிறேன்…
விந்தணுவிற்காக கருவறையில் தவமிருந்து கிடைக்கப் பெறாமல் உடைந்து போன கருமுட்டைகளின் உதிரமது! அது மாதந்தோறும் இயல்பாகவே வெளிப்படும் ஒன்றாகும். அதன் தமிழ்ப் பெயர் தூமை! சொல்லப்போனால் அது குழந்தையின் திரவவடிவம்! குழந்தை கடவுளுக்குத் தீட்டா? என்றேன்.
நீ வியாக்யானம் பேசுகிறாய்… விதண்டாவாதம் செய்கிறாய் என்றவன்… பெண்கள் அர்ச்சகரானால் பக்தர்கள் பார்வையே வேறு மாதிரியிருக்குமென்றான்!
கட்டிய மனைவியைத் தவிர வேறு எவரையும் பார்க்காத தெய்வநாதன்களுமுண்டு… கருவறையைக் கலங்கப்படுத்தும் காஞ்சிபுரம் தேவநாதன்களுமுண்டு என்றேன்!
கோயிலுக்கு வெளியே செருப்பைத் திருடும் பக்தனும் உண்டு… கருவறைக்குள்ளே உள்ள சிலையைத் திருடும் அர்ச்சகனும் உண்டு என்றேன்!
யாரோ எவரோ செய்வது எல்லோருக்கும் எப்படிப் பொருந்தும் என மழுப்பினான்.
கருவறைக்குள்ளிருந்து தவறு செய்பவனைக் காட்டிலும் பெரிய கடவுள் நம்பிக்கையற்றவன் எவனுமில்லை என்றேன்!
“அதெப்படி மாதவிடாய் ரத்தத்தை புனிதமென்பாய்?’’ எனக் கடிந்தான்!
புனிதம்தான்…
மாதவிலக்கின் புனித திரவத்திற்கு மட்டும் பற்றியெரியும் சக்தி இருந்திருந்தால் எண்ணெய்க்குப் பதிலாய் தூமை ஊற்றி விளக்கேற்றியிருப்பீர்கள்தானே! என்றேன்.
நீ கொச்சையாகப் பேசுகிறாய் என்றான்!
இல்லை; உள்ளதைப் பேசுகிறேன் என்றேன்!
அதெப்படி? பெரும்பாலும் ஆண் கடவுள்கள்… ஒருபெண் எப்படி அபிஷேகம் செய்ய முடியுமென்றான்!
உன் வாயாலேயே ஒத்துக் கொண்டாய்… அதெப்படி பெரும்பாலும் ஆண் தெய்வங்கள் வந்தது? என்று அடுத்த அம்பை வீசினேன்!
பெண் தெய்வங்களும் சரிசமமாக இருக்கிறார்களெனப் பல்டியடித்தான்!
யார் யாரெல்லாம் என்றேன்?
சக்தி, சரஸ்வதி, லட்சுமி மேலும் கிராமங்கள் தோறும் பல அம்மன்கள் இல்லையா? என்றான்!
அவர்களுக்கெல்லாம் அர்ச்சனை அபிஷேகம் நடக்கவில்லையா? என்றான்!
சக்தி, சரஸ்வதி, லட்சுமி தவிர்த்து மற்றவர்களெல்லாம் கிராம தேவதைகள்! சாமான்ய மக்களின் குலம் காத்த மூதாதையர்கள்!
குடிகாத்த மூத்த குடிகள்!
இனம் காத்த இறைவிகள்!
அவர்களுக்கு அபிஷேகம் செய்ய, கிடாவெட்டி பொங்க வைக்க குலபூசாரிகள் இருக்கிறார்கள்!
சரி இருக்கட்டும்…
சக்தி, சரஸ்வதி, லட்சுமிக்கு எத்தனை பெண் பிள்ளைகள்? என அடுத்த கணையை எய்தேன்.
ம்ம்ம்ம்…. என்றபடி விட்டத்தைப் பார்த்தான்!
சிவன், பிரம்மன், விஷ்ணு மூவருக்கும் ஆண் பிள்ளைகளாய்ப் பெற்றுப் போட படைக்கப்பட்டவர்கள்தான் சக்தி, சரஸ்வதி, லட்சுமியா? என்றேன்.
விநாயகன், முருகன், நாரதன், சனகன், சந்தனன், சனாதனன் மேலும் பல…
என மும்மூர்த்திகளின் அடுத்த தலைமுறையில்கூட பெண் தெய்வங்கள் இல்லையே?
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு ஜோடியாக முப்பத்து முக்கோடி தேவிகள் இல்லையே?
ரம்பா, ஊர்வசி, மேனகா மட்டும் போதுமா?
ஆணாதிக்கத்தின் உச்சமென்றேன்! இதிகாசங்களுக்குப் போவோமா? என்றேன்.
முழித்தான்!
மகாபாரதத்தில் எத்தனை முக்கிய பெண் பாத்திரங்களென்றேன்?
கங்கா, சத்யவதி, அம்பை, அம்பிகை, அம்பாலிகை, குந்தி, காந்தாரி, திரவுபதி என்றான்.
இவர்களெல்லாம் யார் என்றேன்?
விழி பிதுங்கினான்!
விளக்குகிறேன் கேள் என்றேன்!
அஸ்தினாபுர மன்னன் சந்தனுவிற்கும் கங்கா தேவிக்கும் (ஆற்றில் மூழ்கடித்த குழந்தைகள் உள்பட) பிறந்த குழந்தைகளில் ஏன் ஒரு பெண் சிசு கூட இல்லை?
சந்தனுவின் இரண்டாவது மனைவி சத்யவதிக்கு வியாசர், சித்ராங்கதன், விசித்திரவீரியன் தவிர்த்து வேறு பெண் குழந்தையாகப் பிறக்கவில்லையா?
அடுத்த தலைமுறையில் பாண்டு, விதுரர், திருதராஷ்டிரன் இவர்களுக்கு உடன்பிறந்த சகோதரிகள் எவருமில்லையா?
ராஜமாதா சத்யவதியின் கொல்லுப் பேரன்களாக பஞ்ச பாண்டவர்களும் ஆண்கள்தானா? பெண்களே இல்லையா?
அதுகூடப் பரவாயில்லை. கவுரவர்கள் 100 பேரில் ஒருவர்கூடவா பெண்ணில்லை!
எப்பேர்ப்பட்ட ஆணாதிக்கம்! அய்ந்தாறு தலைமுறைக்கு அவர்களுடன் படுக்கையைப் பகிர மட்டும் பெண்கள் தேவையா?
அவர்கள் பெண் பிள்ளைகளையே பெற்றுக் கொள்ள மாட்டார்களா?
கடவுளைத்தான் ஆணாதிக்க மனோபாவத்தோடு படைத்தீர்களென்றால்… கட்டுக்கதைகளில்கூட ஆணாதிக்கமா?
கடவுளைக் கண்டறிந்தவன் ஆண்! அதனால்தான் கர்ப்பக்கிரகம் வரை தொடர்கிறான் என்றேன். இதுகூடப் பரவாயில்லை. பாண்டவரின் புதல்வர்களான உபபாண்டவர்களில் ஒருவர்கூட பெண்ணில்லையே? என்றேன்.
நீ எந்த மகாபாரதத்தைப் படித்தாய்? என்றான்.
நீங்கள் எத்தனை பாரதத்தைத்தான் படைத்திருக்கிறீர்கள்? ஏனெனில், இப்போது ஆட்சி செய்பவர்கள் வரை புதிதாகப் பாரதத்தை பெற்றுப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றேன்!
தற்போதைய அரசியல் வேண்டாம் என்றான்!
சரி… அப்போதும் இப்போதும் இதிகாசங்களும், புளுகுணி புராணங்களும் தர்மங்களையும், ஞாயங்களையும் எழுதுபவர்க்குச் சாதகமாய் எழுதிக் கொள்வதுதானே என்றேன்.
அதைவிடு…
பெண்கள் எப்படி அர்ச்சனை செய்ய முடியும்? அவர்கள் எப்படி வேதம் பயில முடியும்? என்றான்.
நான்: கடவுளுக்கு என்ன தெரியும்?
அவன்: எல்லாம் தெரியும்!
நான்: தமிழ் தெரியுமா?
அவன்: ஓஓஓ… பேஷா தெரியும்!
நான்: அப்புறம் எதுக்கு சமஸ்கிருதத்துல மந்திரம் ஓதுறீங்கோ!
சரி… அதைவிடு! எதார்த்தமாய் ஒன்று கேட்கிறேன்.
நீ எதார்த்தமாய்க் கேட்பதாய் விஷமுள் தைக்கிறாய் என்றான்!
அது தேவபாஷை. எல்லோரும் கற்க முடியாதென்றான்.
அர்ச்சனை, அபிஷேகம், தட்சணை வரை சமஸ்கிருதத்தில் தேவபாஷை பேசிவிட்டு, “தட்சணை போடுங்கோ’’ என எதார்த்த பாஷைக்கு தாவுவதேன்? (வயிறு பசிக்கும்ல) என்றேன்.
நாங்கள் கேட்கவில்லை. அவர்கள்தான் போடுகிறார்கள் என மழுப்பினான்.
ஆம். அவர்கள்தான் போடுகிறார்கள்.
கோயில் வாசலிலுள்ள திருவோட்டிலிருந்து கர்ப்பக் கிரகத்திலிருந்து வரும் அர்ச்சனைத் தட்டுவரை அவர்களாகவேதான் போடுகிறார்கள் என்றேன்!
எல்லாம் பகவானோடது… பகவான்தான் படியளக்கிறார் என்றான்!
“ஆம். கடவுள்தான் படியளக்கிறார்… பிச்சைக்காரனுக்கு டம்ளரிலும் அர்ச்சகனுக்கு அண்டாவிலும் படியளக்கிறார்!’’ என்றேன்.
பகடி செய்யாதே… கருட புராணத்தின்படி தண்டிக்கப்படுவாய் என்றான்!
உண்டியல் காசை கொள்ளையடித்துத் தொந்தி வளர்த்தவனுக்கு…
இலவசக் கட்டணத்தில் வருபவனுக்கு விபூதியும், ஸ்பெஷல் தரிசனத்தில் வருபவனுக்கு மாலையும் போடும் அர்ச்சகனுக்கு…
கருவறையை, காமக் களியாட்டமாடும் கூடாரமாக்கிய கயவனுக்கு…
கருட புராணத்தின்படி என்ன தண்டனை என்றேன்!
நீ பெரியாரிஸ்டா? என்றான்!
ஆம். பெரியாரைப் படித்து நான் நாத்திகனாகவில்லை! மகாபாரதத்தை படித்ததால் நாத்திகனானவன்!
என் போன்றோரின் இன்றைய சிந்தனையை சென்ற நூற்றாண்டிலேயே சிந்தித்த பகுத்தறிவு விருட்சத்தின் விழுதுகள் நாங்கள்… என்றேன்!
இனி உன்னிடம் பேசிப் பயனில்லை என்றான்!
என்னிடம் பேச அருகதை இல்லை என்று சொல் என்றேன்.
நீ எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்! பெண்கள் அர்ச்சகரானால் லோகம் அழிந்துவிடும் என்றான்!
இப்போது மட்டும் என்ன அழிவின் விளிம்பில்தானே இருக்கிறது! இதற்குக் காரணம் நீங்கள் மட்டுமே அர்ச்சனை செய்வதால்தான் என எடுத்துக் கொள்ளலாமா என்றேன்!
ஸ்திரீகள் அர்ச்சகரானால் ஆபத்தென வேதம் சொல்லுது என்றான்!
இது வேதம் புதிது! என்றேன்.
அந்த மூன்று நாள்களில் கோவிலுக்குள் நுழைவது தீட்டாகவே இருக்கட்டும். அந்த மூன்று நாள்கள் கருவறைப் பெண் தெய்வங்கள் என்ன செய்யும் என்பதையாவது கேட்டுச் சொல்லுங்கள்…
படித்ததில் பிடித்தது.