கலைஞர் மு.கருணாநிதி
டாக்டர் பிச்சுமூர்த்தி நல்வழிப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே, ‘வில்ஸ்’ சிகரெட்டின் புகையை அறையெங்கும் பரப்பிக் கொண்டிருந்தார். கம்பவுண்டர் கந்தசாமி நாயுடு மருந்து பாட்டில்களை ஒழுங்காக அடுக்கி வைத்து பீரோவைப் பூட்டினார். தன் நீலக் கோட்டை ஒருமுறை சரி பார்த்துவிட்டு ஆபரேஷன் ரூம் பக்கம் சென்று அங்கு எரிந்து கொண்டிருந்த ‘அய்நூறு பவர்’ மின்சார விளக்கை நிறுத்திவிட்டு ஒரு கனைப்புக் கனைத்தபடி பொடி டப்பாவைத் தட்டினார். கெடிகாரம் ‘டாண் டாண்’ என்று அடித்தது; மணி ஒன்பது. “சீக்கிரம், பூட்டி விட்டு கிளம்புங் காணும்“ என்று சொல்லிக் கொண்டே சிகரெட்டை எறிந்துவிட்டுப் புத்தகத்தையும் மேஜை மேல் போட்டபடி டாக்டர் எழுந்தார்.
தெருப் பக்கமாகத் தம்பட்ட ஒலியும் அதைத் தொடர்ந்து ஓர் ஆண் குரலும் கிளம்பின. “நாளைக் காலை எட்டு மணிக்கு வினை தீர்த்த ஸ்வாமி கோயிலில் அரிஜன ஆலயப் பிரவேசம் அதிவிமரிசையாக நடைபெறும். பக்தர்கள் வருக… வருக” ஆலயப் பிரவேச விளம்பரமது. “என்ன கம்பவுண்டர்! ஊர் ரகளைப்படுதே – உமக்கெல்லாம் சம்மதந்தானே?” டாக்டர் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு நாயுடுவின் முகத்தை ஆவலோடு நோக்கினார்.
“நமக்கென்னாங்க… தினை விதைச்சவுங்க… தினை அறுப்பாங்க உம்… உலகம் பெரளப்போகிறது போங்க” என்று ஆயாசமாகக் கூறியபடி சாவிக் கொத்தை எடுத்து விரலில் சுழற்றிக்கொண்டே நகர ஆரம்பித்தார் நாயுடுகாரு. ஆபீஸ் லைட்டையும் அணைத்து விட்டு டாக்டர் பிச்சுமூர்த்தி வெளியே வந்தார்.
இருவரும் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். அந்த இருளில், வாயிற் பக்கத்து விளக்கின் ஒளி மட்டும் மங்கலாகத் தெரிந்தது. ஆஸ்பத்திரியின் வாசற்படியண்டை ஒரு உருவம் ஆடியசைந்து வந்து கொண்டிருந்தது. “ஆ…. அய்யோ… அப்பா சாமி…” அது இன்னும் கொஞ்சம் வேகமாக வந்து ஆஸ்பத்திரியின் படியில் ஏறிற்று.
டாக்டர் கையிலிருந்த டார்ச் விளக்கை அடித்தார். முப்பது வயதுக்குட்பட்ட ஒரு பெண். கிழிந்து போன ஒரு சிவப்புச்சேலை. வறண்டு, காற்றில் பறந்து கொண்டிருக்கும் அலங்கோலமான கூந்தல் வெளிச்சத்தில் கண்களை மூடிக் கொண்டாள். பூரண கர்ப்பவதி பிரசவ வேதனையில் எவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்பதைத் துடித்துக் கொண்டிருந்த அவளது கை கால்கள் காட்டின. நிற்க முடியவில்லை. வாயிற் கதவின் முகப்பைப் பிடித்துக் கொண்டு குனிந்து கொண்டாள். “ஆ….. அய்யோ…… கடவுளே சாமி, என்னைக் காப்பாத்துங்கோ. கோடி புண்யமுண்டு. அவள் பேசவில்லை; கதறினாள்.
“ஏதடா சனியன்’’! டாக்டர் முணுமுணுத்துக் கொண்டார்.
“உன் ஆம்படையான் எங்கே? ஒருத்தருமில்லாமல் வந்து ஒபத்திரவம் பண்றே?’’…. கம்பவுண்டர் அலுத்துக் கொண்டே தெரு விளக்கையும் அணைத்தார். “எனக்கு ஒருத்தருமில்லிங்க.. நீங்க தான் கடவுள் மாதிரி என்னைக் காப்பாத்தனும்’’ ஆ , அய்யோ, அப்பா…’’மீண்டும் கதற ஆரம்பித்தாள் கர்ப்பவதி.
“உம்.. சீக்கிரம் கேட்டைப் பூட்டு’’ டாக்டர் கம்பவுண்டருக்கு உத்தரவிட்டு விட்டு அந்தப் பெண்ணின் முகத்தில் மீண்டும் ஒரு தடவை டார்ச்சை அடித்து அனாதையாம் அனாதை! அனாதைக்குப் பிள்ளை ஆசை! என்று கிண்டல் செய்தார். “எல்லாம் காசுக்குத்தான்’’.
கம்பவுண்டர் சிரித்துக் கொண்டே இந்த வார்த்தைகளை டாக்டரின் முன்னே சமர்ப்பித்து, ஏதோ மேதாவித்தனமாகப் பேசிவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார்.
“ஏ, நீ என்ன ஜாதி? டாக்டருக்குக் கொடுக்கப் பணம் இருக்கா? ’’ நாயுடுகாரு மீசையை முறுக்கிக் கொண்டே அவளைப் பார்த்தார்.
நான் பறைச்சி சாமி எங்கிட்ட ஏதுங்க பணம்? இதை அவள் முடிக்கவில்லை “தூ பற நாயே துரத்து கழுதையை. உம் ஒத்தி நில்லு! “டாக்டர் பிச்சுமூர்த்தி அவசரமாகக் கீழே இறங்கினார். கம்பவுண்டர் கனல் தெறிக்கும் படியாக ஒரு கோரச் சிரிப்பு சிரித்து விட்டு, “அரிஜன மங்கையா?… ஆஸ்பத்திரியில் பிரசவமாக்கும், அர்த்த ராத்திரியிலே! காலையிலே ஆலயப் பிரவேசம் பண்ணு போ!’’ என்று குட்டி உபதேசமும் செய்து முடித்து. ‘போர்டுலைட்’டையும் நிறுத்தினார்.
வினைதீர்த்தவூர் கிராம தர்ம ஆஸ்பத்திரி. “எந்த நேரமும் சிகிச்சை செய்யப்படும்’’ என்ற விளம்பர போர்டு இருட்டில் மறைந்து கொண்டது.
டாக்டருக்கு கம்பவுண்டரும் வேகமாக நடக்கத் துவங்கினர். “அட கடவுளே! தயவில்லிங்களா?’’ பறைச்சி உரக்கக் கதறினாள்; ஏமாற்றத்தோடு கலந்த அந்த மொழிகள் ஆஸ்பத்திரியின் அருகேயுள்ள வினை தீர்த்த ஆண்டவன் கோயில் சுவரில் மோதி எதிரொலித்தன.
‘கிர்’ரென்று ஒரு மோட்டர் கார் வந்து நின்றது. “டாக்டர் சார்! பண்ணையிலே அய்யாவுக்குத் தலைவலியாம். அவசரமாகக் கூப்பிட்டு வரச் சொன்னார்” டிரைவர் இதைச் சொல்லி முடித்தான்.
“கம்பவுண்டர்! கைப்பெட்டி இருக்கிறதா?’’ என்று கேட்டுக் கொண்டே காரில் ஏறி அமர்ந்து கொண்டார் டாக்டர். “இருக்கிறது” நாயுடுகாரு தலையசைத்துக் கொண்டே முன் சீட்டில் உட்கார்ந்தார். “ரொம்ப சீரியஸோ!’’ பிச்சுமூர்த்தி டிரைவரிடம் வெகு அவசரமாகப் பதிலை எதிர்பார்த்தார். மோட்டார் கார் பறந்துவிட்டது.
இங்கே வாயிற்படியைப் பிடித்துக் கொண்டு, வேதனையால் வாடிய பறைச்சி, ஆ! அம்மாடி அய்யோ கடவுளே! சப்தம் ஓயவில்லை. ஆனால், அந்த வார்த்தைகள் அவள் நெஞ்சத்தில் சவுக்கடிகளாக இன்னும் விழுந்து கொண்டிருந்தன. சம்மட்டியால் தாக்கப்பட்ட வைரத்தைப் போல அவள் நினைவு சிதறியது.
கம்பவுண்டர் கிண்டலாகக் கேட்ட கேள்வி – உன் ஆம்படையான் எங்கே?… ஆம்படையா….. அவதி தாங்க மாட்டாமல் அனலிடைப் புழுப்போல் துடித்த அவள் வாய் இந்த வார்த்தையை முணுமுணுத்தது; ஆனால், சற்று ஆத்திரமாக.
“ஆம்படையான்’ அழவில்லை அவள்! அப்படியே மரமாக நின்றாள். அவள் இதயத்தின் முன் ஓர் ஏடு புரண்டது. மூன்று வருட வரலாறு!
கருப்பாயி காத்தமுத்துவின் பெண்சாதி. காத்தமுத்து சோலையூர்க் கிராமத்துப் பெரிய பண்ணையில் ஒரு பண்ணையாள். பண்ணைக்கார அண்ணாமலை முதலியார் தருமதுரை என்று பெயர் வாங்கின ஆசாமி. கோயில்கள் கட்டுவது, கும்பாபிஷேகங்கள் செய்வது என்றால் அமோகப் பிரியமுள்ளவர் அண்ணாமலை முதலியார். “அடடா! எத்தனை தர்மம்? எத்தனை சத்திரம்? தர்மமே உருவாக வந்த உத்தமரய்யா அவர்!’’ பண்ணை முதலாளியின் பகுதி மனையில் குடியிருக்கும் பார்த்தசாரதி அய்யங்காரின் நாமாவளி இது.
“அண்ணாமலை முதலியார் கட்டிய கோயிலய்யா அது. அவர் ஆட்டினபடி ஆடணுமாக்கும்; ஆமா! ஆலயப்பிரவேசமாவது மண்ணாவது! பள்ளு பறைகளை உள்ளே விடறதுக்கு, அரிஜனங்களை உள்ளே விடறதுக்கு அவர் சம்மதிக்க மாட்டார்தான். அக்கிரம விஷயத்திலே அவர் இணங்க மாட்டாராக்கும், தெரியுமா?’’ பண்ணையில் கணக்கு வேலை பார்க்கும் கண்ணாயிரம் பிள்ளையின் கர்ஜனை இது!
மூன்று வருடங்களுக்கு முன் மூஷிக விநாயகர் கோயில் திருப்பணி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்பொழுது உலவும் ஆலயப்பிரவேச சீசனில் அதில் அரிஜனங்களை நுழைய விடுவதற்குப் பகீரதப் பிரயத்தனங்கள் நடைபெறுகின்றன. கோயில் கட்டும் பொழுது கர்ப்பக் கிரகத்திற்கு ஏற்றப்பட்ட கருங்கல் விழுந்து கருப்பாயி புருஷன் காத்தமுத்து உயிர் விட்டான்.
உருண்டு திரண்டு ஒய்யாரமாக இருந்த காத்தமுத்து நசுங்கி நாசமானான். மகா கணபதியின் கோயிலுக்கு மண்டையைத் தேங்காயாக உடைத்து, இரத்தத்தால் முதல் கும்பாபிஷேகம் நடத்தி வைத்தான். உயிருக்கு உயிரான கருப்பாயியை விட்டுவிட்டு அவன் ஆண்டவன் ஆலயத்திலேயே பலியானான். காத்தமுத்துவைக் காவு கொடுத்து, கணபதி ஆலயத்தைக் கட்டி முடித்தார் அண்ணாமலை முதலியார். ஆண்டு நகர்ந்தது.
கருப்பாயி உயிர் வாழ்ந்தாள். ஒரு நாள் கருப்பாயி பண்ணையாரின் மாட்டுத் தொழுவத்தில் சாணம் எடுத்துக் கொண்டிருந்தாள். அண்ணாமலை முதலியார் என்ன வேலை முடிந்ததா? என்று கேட்டுக் கொண்டே நுழைந்தார். முதலியாரின் என்றுமில்லாத பிரவேசம் கண்ட கருப்பாயி திடுக்கிட்டாள் முதலியாரின் காம வெறி தலைவிரித்தாடியது. பாவம்! கருப்பாயி பலி ஆனாள்.
நாள்கள் உருண்டோடின. கருப்பாயி கசந்த வாழ்வில் கற்கண்டின் சுவையைக் கண்டாள். எஜமானனின் தயவு யாருக்குக் கிடைக்கும்? கருப்பாயி கர்ப்பவதி. வெளியே தலை நீட்ட வெட்கம். ஊரிலிருந்தால் தலையை வெட்டி விடுவேன் என்று முதலியார் இறுதி எச்சரிக்கை விடுத்தார். அவசரச் சட்டம்; அந்த அபலைப் பறைச்சியால் அதைத் தாங்க முடியுமா? எஜமான் உத்தரவல்லவா? கருப்பாயி தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டாள்.
மாட்டுத் தொழுவத்திலே ஆவலாக நுழைந்த அதே முதலியார், “எங்காவது காட்டுப் பக்கம் ஓடி விடு!: என்று தன் காதலிக்குக் கட்டளையிட்டார். முதலாளியின் கருணை, ஜாதி பேதம் பாராட்டாத பரந்த மனப்பான்மை, ஏழையிடம் அன்பு காட்டும் பொதுவுடைமைத் தத்துவம் இவைகளை நினைத்து மகிழ்ந்ததோடல்லாமல் தன் கட்டுமஸ்தான தேகத்தின் அழகு பற்றியும் இறுமாந்திருந்தாள். இழந்த வாழ்க்கையை முதலியாரின் தயவால் ஓரளவு செப்பனிட்டுத் தன் குழந்தையையாவது வளர்க்கலாம் என்று கனவு கண்ட கருப்பாயி, கடைசியில் தேச சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தாள். தேச சஞ்சாரத்தின் முடிவு? வினை தீர்த்தவூர் தர்ம ஆஸ்பத்திரியின் வாசற்படியில், வேதனையோடு நிற்கின்றாள்.
காலை வந்தது. ஆலயப் பிரவேசத்துக்கான ஏற்பாடுகள் ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தன. டாக்டர் பிச்சுமூர்த்தி ஒரு கதர்த்தொப்பி சகிதம் கோயில் டிரஸ்டியோடு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.
கோயிற் குளக்கரையில் ஒரே கூட்டம்.
“தூக்கு , தூக்கு! மெள்ள மெள்ள மெதுவாகத் தூக்கு!
ஹாங். அப்படித்தான்..
ஏய்.. நீயுங் கூடப்போடா..
படி வழுக்கப்போறது; மெதுவா ஏறுங்க. குளத்தில் இறங்கியிருந்த ஆள்களிடம் கரையில் நின்ற கும்பல் இப்படி எச்சரிக்கை செய்துகொண்டு இருந்தது.
“சண்டாளனைக் கோயிலில் விடுகிறதுன்னா சாமிக்கே அடுக்கவில்லை.. சகுனத்தடை ஏற்பட்டுவிட்டது’’. இப்படி ஒருவர் பீடிகை போட்டுப் பிரசங்கம் செய்தார்.
“தலைமுறை தலைமுறையாய்க் காணாத பழக்கம். இந்த அக்கிரமத்தை ஆண்டவன் சகிப்பாரா? திருக்குளத்தையே தீட்டாக்கி விட்டாளப்பா’’ மற்றுமிருவரின் உரையாடல் இவ்விதம்.
“போயும் போயும் இன்னைக்கா விழுந்து சாகணும்? அடப் பரிதாபமே!’’ ஒரு இரக்க ஜீவன் இப்படிப் பேசிற்று.
“கர்ப்பவதியப்பா! ஒரு கிழவி அனுதபப்பட்டாள்.
“இரண்டு ஆத்மா இன்னைக்குக் கங்காதேவி ஆட்கொண்டாள்’’. ஒரு ஆத்ம ஞானியின் சொற்பொழிவு இது!
குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட கருப்பாயியின் பிரேதம் கரைக்குக் கொண்டுவரப்பட்டது. போலீசார் பிரேதத்தைப் பார்வையிட்டனர். பிரேத விசாரணைக்கு ஏற்படாயிற்று. எந்த ஆஸ்பத்திரியில் பறைச்சிக்கு இடமில்லையென்று முதல் நாளிரவு விரட்டியடித்தார்களோ, அதே ஆஸ்பத்திரியில் அந்தப் பறைச்சியின் பிரேதம் தாராளமாக அனுமதிக்கப்பட்டது. பிச்சுமூர்த்தி பிரேத விசாரணைக்கு உதவியாகத் தன் வேலையைத் தொடங்கினார். அவருக்கும் அவருடைய கம்பவுண்டருக்கும் கருப்பாயி இறந்த காரணம்?…
ஊர் கூறிற்று, கடவுளின் திருவிளையாடல் என்று. டாக்டர் நடித்தார் காரணம் கண்டுபிடிப்பதாக! உலகத்துக்குத் தெரியுமா சமுதாய அமைப்பிலே, நாட்டு நடப்பிலே உள்ள கோளாறு நஞ்சாக மாறிக் கருப்பாயியைக் கொன்று விட்டது என்ற உண்மை? யாருக்குத் தெரியும்? அது தெரிந்தால்தானே பிரேத விசாரணையில் வெற்றியடைந்ததாக அர்த்தம்?