முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி
கழகம் என்பது தமிழரின் காவல் அரணாகும்
காலைக் கதிரை வாழ்த்தும் சேவல் குரலாகும்
பாட்டாளித் தோழரின் பாதம் கழுவும் கடல் அலையாகும்
படைபல வரினும் பயந்து நடுங்கிடா இமய மலையாகும்
பசித்திடும் ஏழை மக்கள் பட்டினி களைந்து
புசித்து மகிழ்ந்திடப் பொங்கிடும் உலையாகும்
பழமைக்குப் பரிவட்டம் கட்டி வரவேற்று
புதுமைக்கு வாசல் கதவடைக்கும் வஞ்சகரின்
அறிவுக்குத் தெளிவேற்றி ஒளியேற்றி
அய்யன் வள்ளுவரின் நெறி போற்றி
அகழ்ந்திட அகழ்ந்திட நிறைந்து வழிந்திடும்
அன்பின் ஊற்றாகும்; அமுதப் பெருக்காகும்
உலகெங்கும் தமிழர்க்குப் பாதுகாப்புக் கோட்டை
உடன்பிறப்புகள் நடைபோடும் பகுத்தறிவுப் பாட்டை
பெண்ணின் உரிமைக்குக் கலங்கரை விளக்கம்
மண்ணின் பெருமைக்கு இளைஞர்களின் எக்காள முழக்கம்
எனவே,
கழகம் என்பது தமிழரின் காவல் அரணாகும்
காலைக் கதிரை வாழ்த்தும் சேவல் குரலாகும்.