தந்தை பெரியார்
கோடை காலங்களில் தமிழ்நாட்டில் எங்கும் மாரியம்மன் திருவிழா என்று ஒன்று நடந்து வருகிறது. இந்த மாரியம்மன் கடவுள் கிராம தேவதை என்று பெயர் இருந்தாலும், அது ஆரியக் கதைப்படி ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகாதேவி மாரி ஆகிவிட்டாள் என்பதாகும். இந்த மாரி இல்லாத கிராமமே கிடையாது. ஆகவே, இவள் கிராம தேவதை ஆகி கிராம மக்கள் எல்லோருக்கும் கடவுள் ஆகிவிட்டாள்.
இந்த ரேணுகை என்னும் மாரியம்மனின் சரித்திரம் மிகவும் இழிவாகக் கருதத்தக்கதாகும்.
இந்த ரேணுகை எனும் மாரி ஜமதக்கினி முனிவரின் மனைவி. அவள் ஒரு அந்நிய புருஷன் மீது இச்சைப்பட்டு, அதாவது, அவள் நீராடக் கங்கைக்குச் சென்றபோது எதிர்ப்பட்ட சித்ரசேனனைக் கண்டு மோகித்துக் கற்புக் கெட்டாள். அதனை அறிந்த அவளது கணவன் ஜமதக்கினி அவளைக் கொன்றுவிடும் படியாகத் தனது மகன் பரசுராமனிடம் கட்டளை யிட்டார். பரசுராமன், ரேணுகையை யார் தடுத்தும் கேளாமல் கொன்று விட்டான். கொன்றுவிட்டு வந்து, தாயைக் கொன்று விட்டோமே என்று துக்கப்பட்டுக் கொண்டு இருக்கும்போது தகப்பன் ஜமதக்கினி அதை அறிந்து, மகனுக்காக மாரியை பிழைப்பிக்கச் செய்து இசைந்து, மந்திர நீர் தந்து எழுப்பி வரும்படி மகனை அனுப்பினான்.
தாயைப் பிழைப்பிக்கச் சென்ற பரசுராமன் கொலைக் களத்துக்குச் சென்று, தாயின் தலையை எடுத்து முண்டத்துடன் ஒட்டவைக்கையில், கொலைக் களத்தில் பல முண்டங்கள் வெட்டப்பட்டு இருந்ததால் அடையாளம் சரிவரத் தெரிந்து கொள்ளாமல் ஏதோ ஒரு முண்டமாகக் கிடந்த உடலை எடுத்து தலையுடன் ஒட்டவைத்து, அழைத்து வந்து தகப்பனிடம் விட்டான். கணவன் அவளைப் பார்த்து, நீ இங்கு இருக்க வேண்டாம். கிராமங்களுக்குச் சென்று நீ அங்கேயே போய் அங்கு வாசம் செய்து கிராம மக்களுக்கு நோய் வந்தால் பரிகாரம் செய்து கொண்டு இரு எனக் கூறி அனுப்பினான். அது முதல் மாரி கிராமங்களில் வசிக்கத் தொடங்கினாள். கிராமவாசிகள் இந்த விஷயம் அறிந்து, தலையை மாத்திரம் வணங்கிப் பயன் அடைய முன் வந்து, தங்கள் ஊர்களில் மாரிக்குக் கோயில் கட்டி, மாரியின் தலையை வைத்து வணங்கி வருகின்றார்கள். இது ஒரு புராணம்.
சிவபுராணத்தில் மாரியானவள் கார்த்தவீரியனை மோகித்துச் சாபமடைந்தாள் என்று காணப்படுகிறது.
மற்றொரு புராணத்தில் –
அவள் கணவன் ஜமதக்கினி கொல்லப்பட்டதால் அவள் அவனுடன் உடன்கட்டை ஏறினாள். இதை இந்திரன் ஒப்புக் கொள்ளாமல் மழை பெய்யச் செய்ததும், அவளது உடல் அரைவேக்காட்டுடன் நின்று விட்டது. அதனால் அவள் எழுந்து பக்கத்தில் உள்ள பஞ்சமத் தெருவில் நிர்வாணத்தோடு வேப்பிலையால் மானத்தை மறைத்துக் கொண்டு ஓடினாள்.
அதைக் கண்ட பஞ்சமர்கள், பச்சை மாவும், பழமும், இளநீரும் கொடுத்து உபசரித்தார்கள்; ஒரு வண்ணாத்தி சேலை கொடுத்து ஆதரித்தாள். இந்த அய்தீகம்தான் இன்று மாரியம்மன் பூசையாக நடத்தப்படுகின்றது. பூசை உருவம், உணவு முதலியவை எப்படி இருந்தாலும் இந்த மாரியம்மன் மீது இரண்டு விபசாரக் குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.
(1) சித்திரசேனனை மோகித்துக் கற்பு இழந்தது.
(2) கார்த்தவீரியனை மோகித்துக் கற்பு இழந்தது.
இரண்டிலும் அவளது கணவன் ஜமதக்கினியால் கண்டுபிடிக்கப்பட்டு, அவள் தண்டிக்கப்பட்டு இருக்கிறாள். இதற்குப் புராண ஆதாரங்கள் இருக்கின்றன.
நமது கடவுள் நம்பிக்கையிலும், கடவுளை வணங்குவதிலும் நமக்குள் எவ்வளவு மடமை இருந்தாலும், நாம் வணங்கும் கடவுள்களை இவ்வளவு மோசமான, நாணயம், ஒழுக்கம், நாகரிகம் என்பவை இல்லாமல் இவை யாவும் காட்டுமிராண்டித்தனமாக இருப்பது பற்றிக் கவலைப்பட வேண்டாமா? என்றுதான் கவலைப்படுகின்றேன்.
(‘இந்துமதப் பண்டிகைகள்’ நூலிலிருந்து…)