முனைவர் .வா. நேரு
“முதலாளி _ தொழிலாளி இருவரும் ஒன்று சேர்ந்தால்தான் உற்பத்தி செய்ய முடியும். உற்பத்தி நடக்க வேண்டுமென்றால் பணம் _ தொழில் இரண்டும் தேவை. உற்பத்தி, மக்கள் நலனுக்கு _ உலக நலனுக்கு அவசியம் ஆகும் என்றாலும் முதல் (பணம்) இருந்தால்தான் உற்பத்தி தலைகாட்ட முடியும்’’ என்றார் தந்தை பெரியார். எந்தப் பொருளை உற்பத்தி செய்ய வேண்டுமென்றாலும் பணம் தேவை. அதற்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்தவைதான் பங்குச் சந்தைகள்.
இப்போது, 2021இல் ஒருவர், ‘திராவிடன் சாப்ட்வேர் கம்பெனி’ எனும் ஒரு மென்பொருள் ஏற்றுமதி நிறுவனத்தை மதுரையில் ஆரம்பிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் ஒரு கோடி ரூபாய் இருக்கிறது. அதனை வைத்து ஆரம்பிக்கிறார். நூறு சதவிகிதம் அவர் மட்டுமே முதல் போட்டிருக்கிறார் என்றால், 100 சதவிகிதம் பங்கும் அவரிடத்தில் இருக்கிறது என்று பொருள். ஆரம்பித்து கொஞ்ச நாள்களில் அவரது நிறுவனத்தை விரிவுபடுத்த நினைக்கிறார். அப்போது அவரது நிறுவனத்தை பங்குச் சந்தையில் பதிவு செய்கிறார். ‘செபி’ என்று சொல்லப்படும் அந்தப் பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தும் நிறுவனத்திடம் முறையான அவருடைய ஆவணங்களை எல்லாம் கொடுத்து, அவரது நிறுவனத்தை பதிவு செய்கிறார். பதிவு செய்யப்பட்ட பின்பு, அவருடைய 25 சதவிகித முதலீட்டை, அதாவது 25 இலட்சத்தை 25,000 பங்குகளாகப் பிரிக்கிறார். ஒவ்வொரு பங்கும் 100 ரூபாய் என்று மதிப்பிட்டு, பங்குச் சந்தையில் வெளியிடுகின்றார். அவரது நிறுவனத்தைத் தெரிந்தவர்கள் _ இந்த நிறுவனம் மிக நல்ல நிறுவனம் என்று புரிந்து கொண்டவர்கள் அந்தப் பங்குகளை இணையத்தின் மூலமாக வாங்குகிறார்கள். அதன் மூலமாக அவர் போட்ட முதலில் கொஞ்ச பணம் திரும்பக் கிடைக்கிறது. அதை வைத்து தொழிலை இன்னும் விரிவு செய்கின்றார். விரிவடைந்த பின்பு அவரது நிறுவனத்தின் இலாபம் பெருகுகிறது. முதன்முதலில் அவரை நம்பி அவரது நிறுவனத்தின் பங்குகளை வாங்கியவர்களுக்கு போனஸ் பங்குகளை கொடுக்கின்றார். அவரது நிறுவனம் ஒரு பத்து வருடத்தில் மிகப் பெரிய வளர்ச்சி அடைகிறது. இன்றைய சந்தை மதிப்பின்படி 100 ரூபாய்க்கு அவருடைய 1 பங்கினை வாங்கியவர், பத்து வருடம் கழித்து 1,00,000 ரூபாய் பெறுகின்றார். இதுதான் பங்குச்சந்தையின் அடிப்படை. சில நேரங்களில் நிறுவனம் நட்டமடைந்தால், 100 ரூபாய்க்கு வாங்கிய 1 பங்கு 50 ரூபாய்க்கு மட்டுமே போகும் நிலையும் உண்டு. ஒரு நிறுவனம் வளருமா? வளராதா? என்று யூகிப்பதுதான் இதில் மிகப் பெரிய சவால். கோடிக்கணக்கில் இதில் முதல் போட்டு இழந்தவர்களும் உண்டு. 10,000 அல்லது 20,000 மட்டும் முதல் போட்டு இலட்சக்கணக்கில் பணம் பெற்றவர்களும் உண்டு.
நாடுகளின் சுவர்கள், புதிய புதிய தொழில் நுட்பங்களால் உடைக்கப்படுகின்றன. உலகின் பல பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள், இணையத்தின் வழியாக நமது வீட்டுக் கதவைத் தட்டுகின்றன. உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் முதலாளிகளும், முதல்(பணம்) வேண்டும் என்று பங்குச் சந்தையின் வழியாக நமக்கு வேண்டுகோள் வைக்கிறார்கள். பணத்தை வைத்திருப்பவர்கள், அந்த வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கிறார்கள். ஆனால், அதற்கு முன்னால் வேண்டுகோள் வைப்பவர் நடத்தும் தொழிற்சாலை எப்படிப்பட்டது? அந்தத் தொழிற்சாலையை நம்பகமானவர்கள் நடத்துகிறார்களா? அல்லது ஏமாற்றுக் காரர்களா எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்கான உறுதிமொழியை பங்குச் சந்தையை நடத்தும் சுதந்திரமான அமைப்பு _ செபி தருகிறது. தான் பட்டியிலிடும் ஒவ்வொரு நிறுவனத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் செபி என்று சொல்லப்படுகின்ற அமைப்பு வாங்குகிறது. அந்த விவரங்களை உறுதிப்படுத்துகிறது. அதன் பின்னரே பங்குச் சந்தையில் அந்த நிறுவனத்தைப் பட்டியல் இடுகின்றார்கள். உலகம் முழுவதும் இருக்கும் முதலீட்டாளர்கள், தாங்கள் வைத்திருக்கும் பணத்தை ஏதாவது ஒரு நாட்டில், ஏதாவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு இணைய வழி பங்குச் சந்தைகள் உதவுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 6,000 நிறுவனங்கள் இவ்வாறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்காகப் பட்டியல் இடப்பட்டிருக்கின்றன.
பங்குச் சந்தை நல்லதா _ கெட்டதா என்றால் நல்லதும் இருக்கிறது; கெட்டதும் இருக்கிறது. கெட்டது இருக்கிறது என்று சொல்லி ஒரு நாடு பங்குச் சந்தை வேண்டாம் என்று ஒதுங்கிவிட முடியாது. ஏனெனில், பங்குச் சந்தை என்பது இன்றைய உலகில் தவிர்க்க இயலாதது. அமெரிக்க டாலர் மதிப்பாலும், தங்கத்தின் மதிப்பாலும்தான் இன்றைய உலகத்தின் பொருளாதாரம் இயங்குகிறது. அமெரிக்காவின் டாலர் மதிப்பை அமெரிக்காவின் பங்குச் சந்தைதான் தீர்மானிக்கிறது. ஒரு நிறுவனத்தில் ஒருவர், தனது பணத்தை பங்குச் சந்தையின் மூலமாக முதலீடு செய்கிறார் என்றால், அவரின் நோக்கம் பணத்தைப் பெருக்குவதுதான். இலாபம் பார்ப்பதுதான். 1960இல் பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. பஜாஜ் நிறுவனம் 1960இல் பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 10 பங்குகளை 1000 ரூபாய்க்கு என்று அன்று (1960இல்) விற்பனை செய்திருக்கிறார்கள். ஒருவர் 1960இல் அந்த பஜாஜ் நிறுவனத்தின் 10 பங்குகளை மட்டும் ஒருவர் வாங்கி வைத்திருக்கின்றார். உழைத்து, சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார். வேறு சேமிப்பு இல்லை. கவலை இல்லை. அந்தப் பங்குகளை மட்டும் கவனமாக வைத்திருந்து இன்று விற்றால் 30 கோடி ரூபாய் அவருக்கு கிடைக்கும் (நன்றி: பங்கு தமிழ் இணையதளம். திரு.சொக்கலிங்கம்).
இப்படி பங்குச் சந்தையில் கோடி, கோடியாகச் சம்பாதித்த மனிதர்கள் இருக்கின்றார்கள். அப்படிச் சம்பாதித்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் வாரன் எட்வர்ட் பஃபெட் (Warren Edward Buffett,, பிறப்பு: ஆகஸ்ட் 30, 1930) என்பவர். பங்குச் சந்தையின் மூலமாக, மிக எளிய குடும்பத்தில் பிறந்த இவர், 2008இல் உலகின் முதல் பணக்காரர் ஆனவர். அய்க்கிய அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளர், தொழிலதிபர் எனப் பெயர் பெற்ற இவர் மிகப் பெரிய பொதுக் கொடையாளரும் ஆவார். 50 ஆண்டுகளுக்கு முன்னால், தான் வசித்த சாதாரண வீட்டிலேயே இருந்து கொண்டு, தன்னுடைய சொத்துகளின் பெரும்பகுதியை (99 சதவிகித சொத்துகளை) பொது நன்மைக்காக, அறக்கட்டளைகளுக்குக் கொடுத்து விட்டவர். பங்குச் சந்தையின் மூலமாகக் கிடைத்த பணத்தை மக்களுக்கே அறக்கட்டளைகளின் மூலமாகக் கொடுத்து விட்டவர். இந்தியாவில் இருக்கும் முகேசு அம்பானி போல 15,000 கோடிக்கு வீடு கட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை என்பது ஒரு நிறுவனத்தின் இலாபத்தையோ நட்டத்தையோ பலரும் பங்கிட்டுக் கொள்வதுதான். தந்தை பெரியார் பற்றி பெரியார் பேருரையாளர் அய்யா கு.வெ.கி.ஆசான் அவர்கள் குறிப்பிட்டதை திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தான் தொகுத்த ‘அய்ரோப்பாவில் பெரியார்’ என்னும் நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“தடையின்றிச் சிந்தித்து நடு நிலையில் முடிவு எடுத்த தந்தை பெரியாரின் தன்மை, காலப்போக்கில் அவரை சமனியச் சமுதாயத்தையும் பொது உடைமைப் பொருளாதாரத்தையும் அறிவதற்கான கருவை 1900ஆம் ஆண்டிலேயே _ அதாவது அவரது 21ஆம் வயதிலேயே காண முடிகிறது. தனது குடும்ப வாணிகத்தை 49 பகுதிகளாக்கி, ஒரு பகுதியை “சாமிக்கு’’ எனப் பொதுவில் வைத்து, மீதி 48 பகுதிகளைத் தொழிலைத் தொடங்கித் தொடர்வோர், முதலீட்டாளர், உழைக்கும் கூட்டாளிகள் என்போரிடையே சம அளவில் மூன்றாகப் பங்கிட்டார்.’’ தந்தை பெரியாரின் முன்னோக்குச் சிந்தனையை எவ்வாறு பாராட்டுவது என்றே தெரியவில்லை. இன்று பங்குச் சந்தையில் தொழிலைத் தொடங்கி நடத்துவோர், முதலீட்டாளர்கள் பயன் பெறுகின்றார்கள். நிறுவனத்தில் உழைப்பவர் களுக்கு பெரும்பான்மையான நிறுவனங்கள் தங்கள் பங்குகளைத் தருவதில்லை. அப்படிக் கொடுத்தால் நிறுவனங்கள் பயன்பெறும், வளரும் என்பதனைத் தனது செயலால், 120 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தனது செயலால் எடுத்துக் காட்டியிருக்கிறார் தந்தை பெரியார். இந்திய தேசிய பங்குச்சந்தை 1933ஆம் ஆண்டுதான் இந்தியாவில் செயல்படத் தொடங்கியிருக்கிறது. ஒரு 33 ஆண்டுகளுக்கு முன்னாலே இதற்கான ஒரு செயல்திட்டத்தை தனது வணிகம் மூலமாகவே நடத்திக் காட்டியிருக்கிறார்.
சில நிறுவனங்களுக்கு, மனிதர்களுக்கு ஆளும் அரசு சாதகமாக இருக்கிறது என்று வெளிப்படையாகத் தெரிகிறபோது, அந்த நிறுவனங்கள் வளர்கின்றன. அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் இருக்கும் போது நமது நாட்டின் பிரதமர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தொலைதொடர்பு நிறுவனத்தில் விளம்பரதாரர் போல செயல்பட்டார். இதன் விளைவாக ஜியோவின் பங்குகள் கிடுகிடுவென உயர்ந்தன. பல ஆயிரம் கோடி இலாபம் என்பது அந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேசு அம்பானிக்கு கிடைத்தது.
இரண்டு நாள்களுக்கு முன்னால் ஒரு செய்தியை பி.பி.சி.தமிழ் வெளியிட்டிருந்தது. அதானி குழும நிறுவனங்களின் பங்கு வீழ்ச்சி என்ற செய்தியாகும் அது. அதானியின் 6 நிறுவனங்களின் பங்குகளும் 5 முதல் 25 சதவிகிதம் வரை சரிந்தன. அதே நேரத்தில் அதானியின் மொத்த சொத்துகள் சுமார் 55,692 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்தன. நினைத்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய நிறுவனம் என்றாலும், ஒரே நாளில் 55,692 கோடி இழப்பு என்றால் எவ்வளவு பெரிய இழப்பு. என்ன நிகழ்ந்தது என்பது பற்றி பி.பி.சி. விரிவான செய்தி வெளியிட்டிருந்தது. அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய மூன்று வெளி நாட்டு நிதி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் (வெளி நாட்டு போர்ட்போலியோ முதலீடு) முடக்கப்பட்டுள்ளதாக ‘எகானாமிக்ஸ் டைம்ஸ்’ தெரிவித்தவுடன் அதானி குழுமத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்து இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதானி குழுமம் ஏமாற்றி யிருக்கிறார்கள் எனத் தெரிந்தவுடன் பங்குகள் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. பங்குச் சந்தைக்குள் பல தில்லுமுல்லுகள் நடை பெறுகின்றன. அறியாமல் அப்பாவிகள் பலர் தங்கள் பணத்தை இழக்கும் நிலைமையும் ஏற்படுகிறது. ஒரு வெளிப்படைத் தன்மை இல்லை.
இப்பொழுது இந்திய ஒன்றிய அரசாங்கம் சமூகப் பங்குச் சந்தை அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. பங்குச் சந்தையில் நிறுவனங்களின் பட்டியல் இடப்படுகின்றன. பல ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இருக்கும் போது, இலாபத்தை நோக்கமாகக் கொண்டு, முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை, தங்களுக்கு இந்த நிறுவனம் இலாபம் தரும் என்று நினைக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்கின்றார்கள். இதைப் போல சமூகப் பங்குச் சந்தையில் சமூக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பட்டியல் இடப்படும். இந்த நிறுவனங்களின் நோக்கம் இலாபம் பார்ப்பது இல்லை. மக்களுக்குச் சேவை செய்வது. இதில் தங்களுக்கு விருப்பமான சமூக நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் பணத்தை முதலீடு செய்யலாம். மிகப் பெரிய இலாபம் இந்த நிறுவனங்கள் மூலம் கிடைக்காது. இருந்தாலும் தாங்கள் கொடுக்கும் பணம், முறையாக சமூகத்திற்குக் கொடுக்கப்படுகிறதா என்பதனை முதலீட்டாளர்கள் அறிந்து கொள்ள முடியும். முதலீட்டாளர்களுக்கு மிகக் குறைந்த இலாபமும், திருப்தியும் கிடைக்கும். இந்தச் சமூக பங்குச் சந்தைகள் சிங்கப்பூர், கனடா, பிரிட்டன் போன்ற பல நாடுகளில் இருக்கின்றன. அந்த நாடுகள் சுகாதாரம், சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் சமூகப் பங்குச் சந்தைக்கு அனுமதி அளித்து ஊக்கம் அளிக்கின்றன. ஆனால், இந்திய ஒன்றியத்தைப் பொறுத்த அளவில், ஆர்.எஸ்.எஸ். கொள்கை அடிப்படையில் இயங்கும் அரசாங்கம், எவ்வளவு தூரம் சமூகப் பங்குச் சந்தை என்பதை முறையாக நடத்த அனுமதிக்கும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. அமெரிக்கா போன்ற நாடுகளில் பங்குச் சந்தை, சமூக பங்குச் சந்தை விவகாரங்களில் அரசாங்கம் தலையிடுவதில்லை. தனிப்பட்ட அமைப்பாக, சுதந்திரமாகச் செயல்பட முடிகிறது. ஆனால், இந்தியாவில் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தனி அமைப்புகள் படும் பாட்டை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் சமூகப் பங்குச் சந்தை எப்படி சுதந்திரமாக அமையும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. நிறைய விவாதிக்கப்பட வேண்டியதாக இந்த சமூகப் பங்குச் சந்தை இருக்கிறது. இதைப் பற்றிய கருத்துகளை, 2021 ஜூலை 20க்குள் தெரிவிக்கும்படி இந்திய அரசாங்கம் கேட்டிருக்கிறது.
பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்ட நிறுவனங்கள் ஏறத்தாழ 6,000 என்றாலும், சில நூறு நிறுவனங்களே கொழுத்த இலாபத்தை ஈட்டுகின்றன. பார்ப்பனர்களும், பனியாக்களுமே இந்த பங்குச் சந்தை வர்த்தகத்திற்குள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஏன் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பங்குச் சந்தையின் மூலம் பணம் திரட்ட முடியவில்லை? சட்டப்படி என்ன இடையூறு ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டியது அவசியம் ஆகும். திராவிட இயக்கத்தைச் சார்ந்த தோழர்கள், தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டிய பகுதி பங்குச் சந்தைகள் ஆகும். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்னும் திராவிட தத்துவத்தைக் கொண்ட நாம், பங்குச் சந்தைக்குள் நாம் பணத்தை முதலீடு செய்யவில்லை என்றாலும் கூட, அதில் என்ன நிகழ்கிறது என்பதனை தினந்தோறும் கவனிப்பதோடு, அது எளிய கிராமத்து மனிதனை எப்படிப் பாதிக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஏதாவது ஒரு வகையில் ஒருங்கிணைந்து ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறுவதற்கு, பொருளாதார நிலையில் உயர்வதற்கு பங்குச் சந்தைகளையும் பயன்படுத்த முடியுமா என்பதனை யோசிக்க வேண்டும். கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் கொண்டு வரப்பட்டு, மகளிரின் பெரும் உயர்வுக்குக் காரணமாக அமைந்த சுய உதவிக் குழுக்கள் போல, சில குழுக்களை அமைத்து, ஒன்றிணைந்து முதலீடு செய்து உயர்வதற்கான முயற்சிகள் எடுக்கலாமா என்ற நோக்கிலும் பங்குச் சந்தைகளைப் பற்றிச் சிந்திக்கலாம்.