சிந்தனை : தமிழ்நாடு சமூகநீதியின் பிறப்பிடம்

ஜுலை 1-15,2021

எஸ்.பூபாலன் ,திண்டிவனம்

 

ஆண்டாண்டுக்காலமாக மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடந்த பாமர மக்கள் கல்வி _ வேலைவாய்ப்பை எட்டிப் பிடிக்க ஏதுவாக சமூகநீதிக் கொள்கையை தனது உயிர்மூச்சுக் கொள்கையாகக் கொண்டு இரவு பகல் பாராமல் அயராது பாடுபட்டவர் தந்தை பெரியார் அவர்கள் ஆவார். இதன் காரணமாக 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இருந்து வெளியேறி ‘சுயமரியாதை இயக்கம்‘ கண்டார் பெரியார்.

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை கைதூக்கி விடுவதற்காகவும், சமூகநீதியை வென்றெடுக்கவும் களம் பல கண்டார் தந்தை பெரியார். மய்ய அரசில் பண்டித ஜவகர்லால் நேரு பிரதமராகவும், டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சராகவும் இருந்த நிலையில், தந்தை பெரியார் பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தியதன் பயனாய் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் (Socially and Educationally) பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு கல்வி _ வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக 1950_1951ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் முதன்முதலாகத் திருத்தி அமைக்கப்பட்டது.

இதன் பயனாய் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு இடையே கல்வி கற்று அதன் மூலம் வேலை வாய்ப்பைப் பெற்று தற்போதுதான் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டியுள்ளனர். ஆனால் அதனை பொறுத்துக் கொள்ள முடியாத இன எதிரிகள் சமூகநீதி இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பல்வேறு நிலைகளில் செயலாற்றி வருகின்றனர். அதன் காரணமாக ஒடுக்கப்பட்ட மாணவர்கள் எந்த நிலையிலும் உயர்க்கல்வியை தொட்டுவிடக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு ‘நீட்’ தேர்வு, தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு உள்ளிட்டவற்றை மாணவர்கள் மீது திணித்து அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதின் வாயிலாக அவர்களாகவே உயர்கல்வியை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பதே இன எதிரிகளின் நயவஞ்சகச் சூழ்ச்சியாகும்.

இச்சூழலில், மகாராட்டிர மாநிலத்தில் மராத்தா மக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு செல்லாது என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக ‘துக்ளக்’ எனும் இதழ் (26.5.2021) தனது நப்பாசையை கட்டுரை வாயிலாக வெளியிட்டு மகிழ்ச்சி அடைகிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் 69 விழுக்காடு இடஒதுக்கிடு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கும் அவை சட்டப் பாதுகாப்புடன் 9ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதற்கும் முக்கியக் காரணமாகத் திகழ்பவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களே ஆவார்.

1993ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாடு முதல் அமைச்சராக இருந்த நிலையில், தமிழர் தலைவர் அவர்களின் அரிய முயற்சியால் 31(சி) எனும் சட்ட முன்வடிவை உருவாக்கி, அதனை ஜெயலலிதா அவர்களிடம் 17.11.1993 அன்று அளித்ததின் அடிப்படையில்  அச்சட்ட வடிவு ஜெயலலிதா அரசால் 31.12.1993 அன்று சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்ட 31(சி) சட்டவடிவை நாடாளுமன்ற மக்களவையும், மாநிலங்கள் அவையும் ஏற்றுக் கொண்டதின் விளைவாக குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அவர்கள் 19.7.1994 அன்று கையொப்பமிட்டார்கள்.

ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அயராத உழைப்பால், முயற்சியால் குடியரசுத் தலைவரால் கையொப்பமிடப்பட்ட அச்சட்டம், சட்டப் பாதுகாப்பு கருதி 24.8.1994 அன்று 9ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்டது எனும் கற்கண்டுச் செய்தி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை இன்பத்தில் ஆழ்த்தியது. இதன் பயனாய் 1993_1994ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் கல்வி _ அரசு வேலை வாய்ப்புகளில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது சமூகநீதி வரலாற்றில் ஓர் சரித்திரச் சாதனையாகும்.

ஆனால், இவற்றை எல்லாம் சிறிதும் கருத்தில் கொள்ளாமல், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் 31(சி) 9ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்டிருந்தாலும் அதனால் பெரிய சட்டப் பாதுகாப்பு கிடைத்துவிடும் எனக் கருதுவது சிறுபிள்ளைத்தனமானதே என்று 26.5.2021 நாளிட்ட சிறப்புக் கட்டுரையில் தமது ஆசையை வெளியிட்டு இருக்கிறது ‘துக்ளக்’ இதழ்.

சமூகத்தில் பெரும்பான்மை மக்களாக உள்ள ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை எப்படியாவது அழித்தொழிக்க வேண்டும் என்ற தனது கெடுநோக்கை சிறப்புக் கட்டுரையாகத் தீட்டியுள்ளது ‘துக்ளக்’ எனும் பார்ப்பன இதழ்.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை அவசர அவசரமாக மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்தபோது ‘துக்ளக்’ உள்ளிட்ட பார்ப்பன ஏடுகள் வாய்மூடி மவுனியாக இருந்தது ஏன்? பொருளாதாரத்தில் இட ஒதுக்கீடு என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, விரோதமானது என்பதை ‘துக்ளக்’ இதழ் சுட்டிக்காட்டத் தவறியது பூணூல் பாசத்தினாலா?

சட்டமன்றத்திற்கோ,  நாடாளுமன்றத்திற்கோ போகாத தந்தை பெரியார் _ தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோரால் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை அவ்வப்போது எதிர்ப்பதும், எக்காளமிடுவதும், ஏளனம் பேசுவதும், கொச்சைப்படுத்துவதும் ‘துக்ளக்’ போன்ற பார்ப்பன ஏடுகளுக்கு வழமையான ஒன்றாகும். எனவே, பார்ப்பன இதழ்கள் _ ஏடுகள் உள்ளிட்டவை இட ஒதுக்கீட்டிற்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை இனியேனும் மாற்றிக்கொள்ள முன்வர வேண்டியது அவசியமாகும்.

சமூகநீதிக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும், செயல்பட்டாலும் தமிழ்மண் ஒருபோதும் அதனை ஏற்காது என்பதை இன எதிரிகள் உணர்ந்து கொள்வது நல்லது. தமிழ்நாடு சமூகநீதியின்  பிறப்பிடம், தந்தை பெரியார் பிறந்த மண் என்பதை இன எதிரிகளுக்கு உணர்த்தும் வகையில் சமூகநீதியை _ இட ஒதுக்கீட்டை வென்றெடுப்போம்! சமூகநீதிக் கொடியை வானளாவ உயர்த்திப் பிடிப்போம்!

வாழ்க பெரியார்! வெல்க சமூகநீதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *